SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நம்பிக்கைதான் முதல் சிகிச்சை!

2019-10-17@ 11:43:18

நன்றி குங்குமம் டாக்டர்

பயந்தாங்கொள்ளி என்ற வார்த்தையின் பொருள் என்ன தெரியுமா? பயந்தால் ‘கொள்ளி’தான் என்பதே. இதையே கிராமத்தில் வேறுவிதமாக, ‘புல் தடுக்கி மாண்டவரும் உண்டு. பாம்பு கடித்து மீண்டவரும் உண்டு’ என்று சொலவடையாக கூறுவார்கள்.

ஆமாம்... நம்பிக்கையினாலே பல போராட்டங்களிலிருந்தும், நோய்களிலிருந்தும் மீண்டவர்கள் உண்டு. சின்னச்சின்ன விஷயங்களுக்குக் கூட பயந்து பயந்து வீணாய் போனவர்களும் உண்டு.

நம்பிக்கையே நம் பெரும்பாலான பிரச்னைகளுக்கும் நோய்களுக்கும் தீர்வு. நம்முடைய நோய்க்கான தீர்வு நம்மிடமே உண்டு. மனதில் தோன்றும் எண்ணங்களின் சக்தியை உணர்ந்துகொள்ள ஒரு மருத்துவ ஆய்வு ஒன்றை மேற்கொண்டார்கள். ஒரே நோய்க்கு பாதி பேருக்கு அசல் மருந்தையும், பாதி பேருக்கு மருந்து என்று பெயரில் வெறும் தண்ணீரையும் கொடுத்து பரிசோதித்ததில் தண்ணீரை மருந்தென்று சாப்பிட்டவர்களில் 60 சதவிகிதத்தினருக்கு மேல் நோய் சரியாகி இருந்ததாம்.

நம்பிக்கை என்ற சொல்லின் அற்புதம் இது என்றுதானே சொல்ல முடியும்? ‘ததாஸ்து தேவதைகள்’ என்று நம் இந்தியாவில் ஒரு விஷயம் உண்டு. அதாவது நாம் நல்லது நினைத்தால் அந்த தேவதைகள், ‘ததாஸ்து’(அப்படியே ஆகட்டும்) என்று சொல்வார்களாம். தீயது நினைத்தாலும் அப்படியேதான். அதாவது நாம் எப்போதும் நல்லதையே நினைக்க வேண்டும் என்பதை உணர்த்துவதே இக்கதையின் நோக்கம். இந்த கதையில் எல்லாருக்கும் நம்பிக்கை உண்டோ இல்லையோ...

ஆனால், இந்த கதை உணர்த்தும் விஷயம் உண்மை. நாம் நல்லது நினைததால் நல்லதே நடக்கும். நாம் தொடர்ந்து ஒரு விஷயத்தை நினைக்கும்போது, நம் ஆழ்மனது அதனை நம்ப ஆரம்பித்துவிடும். நம் நோய் சரியாகிவிடும் என்று நம் ஆழ்மனது நம்ப ஆரம்பித்துவிட்டால் நம் மனதும் உடலும் நம் நோயை சரிப்படுத்தும் வேலையில் இறங்கிவிடும். சரியாகாது என்று நினைத்தாலும் அப்படியேதான்.

இந்த கோயிலுக்குப் போனால் இந்த நோய் சரியாகிவிடும், அந்த கோயிலுக்குப் போனால் குழந்தை பிறக்கும் போன்ற நம்பிக்கைகளும் இப்படித்தான். கடவுளால் நம் நோய் சரியாகிறதோ இல்லையோ குணமாகிவிடும் என்ற நம்பிக்கை நம்முடைய பாதி நோயை சரி செய்துவிடும். ஆழ்மனது எது ஒன்றை தீவிரமாக நினைக்கிறதோ அது நிச்சயமாக நடக்கும்.

இந்தக் கருத்தையே 1970-களில் வெளிவந்த Heal your Life என்ற புத்தகத்தில் வலியுறுத்துகிறார் நூல் ஆசிரியரான லூயிஸ் ஹே என்ற பெண்மணி. உங்களை நீங்களே குணப்படுத்தலாம். உங்கள் மனமே பல பிரச்னைகளுக்கு காரணம் என்பதைத்தான் நூல் ஆசிரியரான லூயிஸ் ஹே வலியுறுத்துகிறார்.

இந்த புத்தகம் ஒரு உண்மைக்கதை. முழுக்க முழுக்க பெரும் நம்பிக்கையினாலே புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த பெண் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஒருவரின் கதை. மகிழ்ச்சியாய் ஓடிக் கொண்டிருந்த குடும்ப வாழ்க்கை, அவருக்கு இந்த நோய் என்று தெரிந்த உடன் பெரிதளவில் தடுமாற, நம்பிக்கையால் மட்டும் அதிலிருந்து மீண்டு வந்த அந்த ஆச்சரியம் நடந்தது என்கிறார் அந்த பெண்.

மனதை சரி செய்துவிட்டால், நம் எண்ணிய வாழ்வு நம் கையில் வந்துவிடும். நம் வாழ்வுக்கான அங்குசத்தை நாம் மீட்டு எடுக்கிறோம் நம் எண்ணங்களை வடிவமைப்பதன் மூலம் என்ற இதே கருத்தைத்தான். பல பிரச்னைகளுக்கு ஒரு வேர் இருக்கும். அதன் வேர் எது  என்று தேடும் ஆசிரியர், கடைசியில் ‘சுய அன்பு’ என்ற ஒரு விஷயத்தை முன்னிறுத்துகிறார்.

நம் ஆழ்மனது எதை தீவிரமாக நம்புகிறதோ அது நடக்கும் என்பதுதான் Affirmations. 6 மாதத்தில்தான் 10 லட்சம் சம்பாதிப்பேன் என்று உங்கள் மனது நம்பினால் நிச்சயம் உங்களால் சம்பாதிக்க முடியும். அதுதான் Affirmations. எனவே, முதலில்  நம்மை நாம் நம்ப வேண்டும்/காதலிக்க வேண்டும். பெரும்பாலான மனப்பிரச்னைகளுக்கு காரணம் நம்மை நாம் அன்பாக வைத்துக் கொள்ளாமல் இருப்பதுதான்.

இத்தனை பணம் சம்பாதிக்கும் அளவுக்கு எனக்கு திறமையோ, தகுதியோ இல்லை என்று தன்னை குறைத்து மதிப்பிடுதல், என்னை யாரும் விரும்பவில்லை, எப்போதும் நான் நினைப்பது எதுவும் நடக்காது. இப்படி நம்மைப் பற்றி நமக்கிருக்கும் அவநம்பிக்கைகள் குறித்துச் சொல்லிக்கொண்டே போகலாம். இப்படியான நம்பிக்கையின்மைகள் எல்லாம் நம் வளர்ப்பில் நாம் கற்றுக்கொள்வதுதான்.

நமது நம்பிக்கைகளும் சரி... நம்பிக்கையின்மையும் சரி... குழந்தைப் பருவத்தில் பெரும்பாலும் தொடங்கி விடுகிறது.  ஏனென்றால் நம்மை வளர்க்கும் தாய் தந்தையர்களும் சரி, சமூகமும் சரி... எந்த நம்பிக்கையில் இருக்கிறதோ அதைத்தான் நமக்குச் சொல்லி வளர்க்கும். நாம் அந்த நம்பிக்கையின் அடிப்படையில் நம் வாழ்வை அமைத்துக் கொள்வோம்.  

அதனால் அவர்களுக்கு என்ன பிரச்னைகள் இருந்ததோ அதெல்லாம் நமக்கும் வரும் என்கிறது Heal your life. எனவே, ‘என்னால் முடியாது’, ‘எனக்கு தகுதி இல்லை’ என்ற வார்த்தைகளுக்குப் பதிலாக, ‘நான் செய்வேன்’ என்னால் முடியும் என்ற வார்த்தைகளை மனதுக்கு உபயோகப்படுத்தச் சொல்கிறார். நமது நம்பிக்கைகளை அதற்கேற்ப மாற்றியமைக்க வேண்டும்.

நம்முடைய எண்ண அமைப்பை நன்றாக படித்துவிட்டால் அதற்கு ஏற்ப நம் வழிமுறைகளை மாற்றிக்கொள்ள முடியும். நம்முடைய எண்ண அமைப்பே நம்மை செயல்பட வைக்கிறது. நம்மால் நம்மை, நம் சூழலை கட்டாயம் மாற்றிக்கொள்ள முடியும். அதற்கான சக்தி நம்மிடம்தான் இருக்கிறது, இந்த நிமிடத்தில் இருந்து அதை ஆரம்பிக்கலாம். அதற்கு, முதலில் முடிவு எடுக்க வேண்டும். ‘என் வாழ்வு என் கையில்’ நான் என் வாழ்வை மாற்றி அமைப்பேன் என்ற நம்பிக்கையை நம் மேல் வைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

1. மாற்றத்தை விளைவிக்க தயார் ஆகுங்கள். (உள் எதிர்ப்பை மனதை சமாளிக்க, ஆயத்தம் ஆக வேண்டும், எண்ண உலகை சுத்தப்படுத்த
வேண்டும்)

2. எண்ணம், மனம் இரண்டையும் கட்டுப்படுத்த பழக வேண்டும்.

3. நம்மையும், பிறரையும் மன்னிக்கப் பழக வேண்டும்.

நேர்மறை எண்ணங்களை வளருங்கள். ‘நான் குண்டாக இருப்பது பிடிக்கவில்லை’ ‘எனக்கு இந்த நோய் வந்துவிடுமோ’ போன்ற எதிர்மறை எண்ணங்களை விட்டு விட்டு, நேர்மறை எண்ணங்களை சிந்தித்து அதிகம் பழக வேண்டும். நான் மகிழ்வாக இருக்கிறேன், நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று நிகழ்காலத்தில் பேசச் சொல்கிறார்.

பேசும் வார்த்தைகளில் கவனம் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாது உட்கொள்ளும் உணவு, உடற்பயிற்சி, மனதின் எண்ணங்கள் என அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும். மனம் அடுத்த நிலைக்கு பயணிக்க வேண்டும். அதற்கான பயிற்சிகள் எடுக்கலாம். தியானம். நன்றி சொல்லுதல், பிடித்த
விஷயத்தில் தீவிரமாக ஈடுபடுதல், மனதை கட்டுப்படுத்தல், உறுதி ஏற்றல், புதிதாய் கற்றுக்கொள்ளல் போன்றவை.  ஆத்மாவிற்கு தியானம். பிரார்த்தனை, எல்லாரையும் மன்னித்தல், எல்லாரிடமும் அன்பாய் இருத்தல் போன்றவற்றை பயிற்சி செய்யலாம்.

குற்ற உணர்வில் இருப்பது, பழிவாங்கல், சோகம், குறை சொல்லுதல், துயரங்களை மனதிற்குள் அழுத்தி வைப்பது இதுபோன்ற எதிர்மறை எண்ணங்கள்தான் நம் பல பிரச்னைகளுக்குக் காரணம். இவற்றை நம் நல்ல எண்ணங்களால் சரி செய்ய முடியும். ஒவ்வொரு  உடல்நல கோளாறுக்கும் ஒவ்வொரு உறுதி ஏற்றல்(Affirmations) சொல்ல வேண்டும்.

விதை விதைத்து, மண் கிளறி, முளை வந்து, நீர் ஊற்றி, வளம் சேர்த்து, பொறுமை காத்து, பத்திரமாய் வளர்க்க  நல்ல பயிராகும் இல்லையா? அப்படிதான்.. எண்ணங்களை சீர் அமைப்பதற்கும் மிக மிக பொறுமை அவசியம். இது ஆராய்ச்சி ஹீலிங் எனப்படும் மருத்துவ வகை. அல்லது ஆற்றுப்படுத்தல் வகை எனவும் சொல்லலாம். இந்த வழிமுறை கண்டிப்பாக நமக்கு பெரும் நம்பிக்கை தரும். பிரச்னைகளில் இருந்து தீர்வு தரும். இதனை மருத்துவத்தில் Placebo effect (நம்பிக்கை மருத்துவம்) என்பார்கள். நம்பிக்கை இருந்தால் தண்ணீர் கூட மருந்தாகி பிரச்னை சரியாகிவிடும். ஆம்… நம்பிக்கைதான் மன நலம், நம்பிக்கைதான் உடல் நலம், நம்பிக்கைதான் எல்லாம்!

தொகுப்பு: கீர்த்திகா தரன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்