SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அசைக்க முடியாத நெட்வொர்க்!

2019-10-16@ 11:40:11

நன்றி குங்குமம் டாக்டர்

நரம்புகள் நலமாக இருக்கட்டும்!


நம் உடலிலுள்ள நரம்பு மண்டலத்தை மைய நரம்பு மண்டலம் (Central nervous system), புற நரம்பு மண்டலம் (Peripheral nervous system) என இருபெரும் வகைகளாக பிரிக்கலாம். மைய நரம்பு மண்டலம் என்பது மூளை, தண்டுவடம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது. புற நரம்பு மண்டலம் என்பது தண்டுவடத்தில் இருந்து வெளிவரும் நரம்புகள் உடலிலுள்ள அனைத்து பகுதி களுக்கும் பரவி தசைவரை சென்றடைவது. இந்த இரண்டு நரம்பு மண்டலங்களிலும், பொதுவாக ஒவ்வொரு நரம்புகளையும் சுற்றி மயலின் என்று சொல்லக்கூடிய உறைகள் காணப்படும். நோட்டுக்கு அட்டை இருப்பது போன்று மயலின் உறை ஒவ்வொரு நரம்புக்கும் அரணாக இருக்கும்.

இந்த மயலின் நரம்புகளை பாதுகாப்பாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் நரம்புகளில் தகவல் சமிக்ஞைகளை வேகமாக பரிமாற்றம் செய்யவும் உதவும். எப்படி கங்காரு ஒரு இடத்திற்கு தாவித்தாவிச் செல்கிறதோ அவ்வாறே நரம்புகளின் தகவல் பரிமாற்றம் ஒவ்வொரு மயலின் முகடுகளையும் தாவித்தாவிச் செல்லும். இதற்கு சால்டேட்டரி கண்டக்‌ஷன்(Saltatory conduction) என்று பெயர். இவ்வாறு இருப்பதால்தான் நரம்புகளின் தகவல் பரிமாற்றம் மின்னல் வேகத்தில் மைக்ரோ வினாடிகளில் நடைபெறுகிறது. அசைக்க முடியாத நெட்வொர்க்!

இந்த மயலின் உறை பற்றியும், அது இல்லையென்றால் உண்டாகும் நோய்களைப் பற்றியும் ஒரு சில எடுத்துக்காட்டுகளுடன் புரிய வைப்பதே இந்த அத்தியாயத்தின் நோக்கம். மயலின் உறையானது 60% தண்ணீராலும், 40% கொழுப்பு மற்றும் புரதத்தினாலும் உண்டானது. மூளை நரம்புகளை சுற்றியுள்ள மயலின் உறை ஆலிகோடென்ட்ரோசைட்(Oligodendrocyte) என்று சொல்லக்கூடிய செல்லிலிருந்தும், புற நரம்பு மண்டலத்தில் உள்ள மயலின் உறை சுவான்செல்(Schwann cell) என்ற செல்லில் இருந்தும் உருவாகிறது.

குழந்தை தாயின் கருவறையில் வளரும்போதே, 28 வாரங்களில் இருந்தே மூளை நரம்புகளைச்சுற்றி மயலின் உருவாகத் தொடங்குகிறது. பிறக்கும்போது சிறிதளவே இருந்தாலும் முதல் ஒரு வருடத்தில் பெருமளவு மயலின் உற்பத்தியாகி நரம்புகளோடு பின்னிப்பிணைய தொடங்குகிறது. குழந்தைகளின் வளர்ச்சிப்படி நிலைகள் அதாவது குப்புறுவது, தவழ்வது, நிற்பது, நடப்பது ஆகியவற்றுக்கு இந்த மயலின் உறைகள் பெரும் பங்காற்றுகிறது. மூளையில் உள்ள மயலின் குறைபாடுகளை கண்டறிவதற்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் ஆய்வு உதவுகிறது.

கேள்வி : டாக்டர் எனது குழந்தைக்கு இப்போது 5 வயதாகிறது. முன்னைப்போல் அவனால் தற்போது படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. சிறு விஷயத்திற்கும் கோபப்படுகிறான். நடக்கும்போது தடுமாற்றம் உள்ளது, பேசும்போதும் குளறிப் பேசுகிறான். ஸ்கூலில் இருக்கும்போதே யூரின் வருவதை அவனால் சமயத்தில் கட்டுப்படுத்த முடியவில்லை என்ன செய்வது?

பதில்: உங்கள் குழந்தையை ஆராய்ந்த பிறகு குழந்தையின் கைகளும் கால்களும் இறுக்கமாக(Stiffness) உள்ளதை அறிய முடிகிறது. உங்கள் குழந்தையின் ஞாபகத்திறன் சற்று குறைவாக உள்ளது, இவற்றோடு எம்.ஆர்.ஐ ஸ்கேனில் உள்ள மாற்றங்களையும் வைத்துப் பார்த்தால் குழந்தைக்கு லியூகோடிஸ்ட்ராபி(Leucodystrophy) என்று சொல்லக்கூடிய மூளையில் உள்ள நரம்புகளை சுற்றியிருக்கும் மயலின் குறைபாட்டால் ஏற்படக்கூடிய நோய் உள்ளது.

இது பெரும்பாலும் மரபணு மாற்றத்தால் ஏற்படுவது. மரபணுக்களின் குறைபாட்டால் மயலின் உறை உருவாவதில் சிக்கல் ஏற்பட்டு மூளை நரம்புகளின் செயல்திறன் குறைந்து இவ்வாறு ஏற்படுகிறது. இவ்வகையான நோய்களில் சிலவற்றுக்கு மட்டுமே சிகிச்சை பலனளிக்கும். எனவே, இன்னும் சில ஆய்வுகள் செய்து, முறையாக நோயின் தன்மையை கண்டறிந்த பின்பு சிகிச்சை மேற்கொள்ளலாம்.

கேள்வி: எனது குழந்தைக்கு 9 மாதங்கள். அதற்கு தலை சற்று பெரிதாக உள்ளது, வலிப்பு வருகிறது, சாப்பிட கொடுக்கும்போது புரை ஏறுகிறது, பலகீனமாக அழுகிறது என்ன செய்வது?

பதில் : இவ்வாறு இருப்பதற்கு மருத்துவரீதியாக பல காரணங்கள் இருந்தாலும் உங்களது குழந்தையின் மூளையை ஸ்கேன் செய்து பார்த்ததில் முன்பகுதி மூளையில் மயலின் உறை குறைபாடு உள்ளது. மரபணுக்களால் இவ்வாறு ஏற்படும் மயலின் குறைபாடுகளை லியூகோடிஸ்ட்ராபி(Leucodystrophy) / டிஸ்மைலினேசன் (Dysmyelination) என்று சொல்லுவோம். இதற்கு மேலும் சில ஆய்வுகள் செய்து நோயின் தன்மையை முழுமையாக அறிந்த பிறகு சிகிச்சை தொடங்கலாம்.

இவ்வாறு பிறந்த குழந்தைகளின் வளர்ச்சி படிநிலைகளில் பின்னடைவு ஏற்பட்டாலோ, படிக்கும் திறன் குறைந்தாலோ, பேசுவதில் நடப்பதில் தடுமாற்றம் இருந்தாலோ கை கால்களில் விறைப்புத் தன்மை(Stiffness) அதிகரித்தாலோ, கண் பார்வை மற்றும் காது கேட்கும் திறன் குறைந்தாலோ, குழந்தைகளின் குணாதிசயங்களில் மாற்றம் ஏற்பட்டாலோ, மூளை நரம்புகளை சுற்றியுள்ள மயலின் உறைகளில் ஏற்படும் பாதிப்பினால் இவ்வாறு வரக்கூடும் என்பதை புரிந்து கொள்ளுதல் அவசியம்.

கேள்வி: எனது பெண்ணுக்கு 21 வயது ஆகிறது. காலேஜ் செல்கிறாள். கடந்த வாரம் திடீரென்று ஒரு நாள் தனக்கு வலது கண் சரியாகத் தெரியவில்லை என்று கூறினாள். அதனைத்தொடர்ந்து இரண்டொரு நாட்களிலேயே அவளால் நடக்க முடியாமல் போய்விட்டது. அவளுக்கு என்ன தொந்தரவு?

பதில் : உங்களது பெண்ணின் மூளை, தண்டுவட ஸ்கேன் மற்றும் அவரது முதுகுத்தண்டுவடத்தில் இருந்து நீரெடுத்து செய்த ஆய்வு ஆகியவற்றை ஒருங்கிணைந்து பார்த்ததில் அவருக்கு மல்டிபிள் ஸ்கிலிரோசிஸ்(Multiple sclerosis) என்னும் நோய் தாக்கியுள்ளது. இது பெரும்பாலும் ஆண்களைவிட பெண்களுக்கே வரக்கூடியது. 20 முதல் 40 வயதில் உள்ளவர்களுக்கே பெரும்பாலும் வரும். இந்நோயில் முக்கியமாக பாதிக்கப்படுவது கண் மற்றும் தண்டுவடம்தான். கண் மற்றும் தண்டுவடத்தில் இருக்கும் நரம்புகளை சுற்றியுள்ள மயலின் உரைகளில் ஏற்படும் கோளாறினால் இவ்வாறு உண்டாகிறது.

ஆட்டோ இம்யூனிடி(Autoimmunity). நம் உடலில் உள்ள உறுப்புக்களுக்கு எதிராகவே அணுக்கள் தோன்றி நமது உடல் உறுப்புகளை சேதப்படுத்துவது. அதாவது ‘என் வீட்டு கண்ணுக்குட்டி... என்னோட மல்லுக்கட்டி என் மார்பில் முட்டுதடி கண்மணி’ என்று ரஜினி பாடுவாரே... அப்படி நமது நரம்புகளைச் சுற்றியுள்ள மயலின் உறைகளுக்கு எதிராக நமது உடலிலேயே அணுக்கள் உற்பத்தியாகி அதனை தாக்குவதினால் இந்நோய் ஏற்படுகிறது.  மல்டிபிள் ஸ்கிலிரோசிஸ் நோய்க்கு தற்போது தகுந்த சிகிச்சைமுறைகள் உள்ளன. கவலை வேண்டாம். இத்துறையில் அறிவியல் ஆயிரம் மடங்கு வளர்ந்துள்ளது.

உங்களது பெண்ணை முழுமையாக குணப்படுத்தலாம். இவற்றைப் போல் இன்னொரு முக்கியத் தகவலும் உள்ளது. அறம் என்கிற நல்ல மனிதரைப் பற்றியது. அறம் என்ற பெயரில் ஒரு மனிதரா என்ற கேள்வி எழுகிறதா? அதற்கு காரணம் கடைசியில் இருக்கிறது. 21 வயதான மாணவர் அறம் குன்றத்தூரில் இருக்கும் ஒரு கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். அவருக்கு திடீரென்று ஒரு நாள் நிற்பதிலும் நடப்பதிலும் சிரமம் ஏற்படுகிறது. ஒருவரை பிடித்துக் கொண்டு மெதுவாக நடந்து கல்லூரி செல்கிறார். அதற்கு அடுத்த நாள் அவரால் படுக்கையை விட்டு எழ முடியவில்லை, கைகளையும் அசைக்க முடியவில்லை.

மிக ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தந்தை செக்யூரிட்டியாக ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார். பதைபதைப்போடு டாக்டரிடம் அழைத்து வருகின்றனர். அவரைப் பரிசோதித்த நாங்கள் அவருக்கு கை, கால்கள் செயலிலிருந்து போனது மட்டுமல்லாமல் கண்ணிமைகளை மூட இயலவில்லை, உதடுகளை குவிக்க முடியவில்லை, கழுத்தை மற்றும் தலையை படுக்கையிலிருந்து உயர்த்த முடியவில்லை. மூச்சை சீராக விட முடியவில்லை, செயற்கை சுவாசம் தேவையாக உள்ளது என்பதை அவரது பெற்றோரிடம் தெரிவித்தோம்.

10 நாட்களுக்கு முன்பு அறத்திற்கு காய்ச்சல் வந்தது, அதற்கு மருந்து மாத்திரைகள் உட்கொண்ட பிறகு சரியானது என்று அவரது அம்மா கூறினார். கை, கால்களில் உள்ள நரம்புகளுக்கான பரிசோதனை, முதுகு தண்டுவடத்தில் இருந்து நீரெடுத்து பரிசோதனை ஆகியவை மேற்கொள்ளப்பட்டன. மருத்துவரீதியாகவும் ஆய்வுகளைக் கொண்டும் ஒருங்கிணைத்து பார்த்ததில் அறத்திற்கு குல்லியன் பாரிசிண்ரோம் என்னும் நோய் தாக்கியுள்ளது தெரிய வந்தது. இது நமது புற நரம்பு மண்டலத்தில் உள்ள நரம்புகளைச் சுற்றி இருக்கும் மயலின் என்ற பாதுகாப்பு உறை தாக்கப்படுவதினால் ஏற்படுவது.

10 நாட்களுக்கு முன்பாக இருந்த காய்ச்சலினால் அறத்தின் உடம்பில் உற்பத்தியான எதிர் அணுக்கள் நரம்புகளை சுற்றியுள்ள மயிலின் உறைக்கு எதிராக திருப்பப்பட்டுள்ளது என்பதை புரியும்படி கூறினோம். இதற்கு புதிய வைத்திய முறைகள் உள்ளன. அதில் முதன்மையானது இம்யுனோகுளோபுளின்(Immunoglobulin) என்னும் மருந்து. அதனை 5 நாட்கள் தொடர்ச்சியாக உடலில் செலுத்தினால், அவரது உடலில் உள்ள எதிர் அணுக்களை முறிக்க முடியும். ஆனால், இச்சிகிச்சையின் விலை 2 லட்சத்தை தாண்டும் என்பதையும் கூறினோம்.

அறத்தின் பெற்றோர் இடிந்து போயினர். வெகு நிச்சயமாக அவர்களால் அம்மருந்தை வாங்க இயலாது. பணம் இல்லாமல் ஓர் உயிரை இழக்கக்கூடாது என்பதை மனதில் கொண்டு டாக்டர் குழு, அறத்தின் நண்பர்கள் அனைவரும் களத்தில் இறங்கினோம். டெல்லியில் உள்ள இம்யுனோகுளோபுளின் தயாரிக்கும் மருந்து கம்பெனியின் தலைமை அதிகாரிக்கே டாக்டர் குழு தொடர்பு கொண்டது. நிலைமை அறிந்து அவர்களும் மருந்தின் விலையை குறைக்க உதவ முன் வந்தனர். விலையை குறைத்த பின்பும், 1.5 லட்ச ரூபாய் தேவைப்பட்டது. டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை தங்களுக்கென ஃபீஸ் எதுவும் வாங்கிக் கொள்ளவில்லை.

தமிழக அரசின் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கதவு தட்டப்பட்டது. அவர்கள் முறைப்படி கோப்புகளை ஆய்வு செய்தபின், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வழங்கினர். அறத்தின் உயிர் நண்பர்கள் பல நல்ல உள்ளங்களின் உதவியால் 73 ஆயிரம் ரூபாய் திரட்டினர். மருந்துகளின் தேவைக்கேற்ற பணத்தைவிட அதிகமாக நிதி உதவி கிடைத்தது. இதற்கிடையே அறத்தின் உடல்நிலை மோசமாகி செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டது. பின் தொடர்ச்சியாக 5 நாட்கள் மருந்துகள் அறத்தின் உடலில் செலுத்தப்பட்டன.

ஒரு வாரத்தில் உடலில் சிறிது சிறிதாக முன்னேற்றம் ஏற்பட்டது. செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டது. இரண்டாவது வாரம் நிற்க ஆரம்பித்தார், மூன்றாவது வாரம் நடக்க ஆரம்பித்தார், 4-வது வாரம் கல்லூரி சென்றார். என்னே அறிவியலின் வளர்ச்சி?! இச்சிகிச்சையில் சம்பந்தப்பட்ட டாக்டர்கள், உடனிருந்த செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், நண்பர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. சொல்ல முடியாத ஆனந்தம்.

இனிதான் திருப்பமே... அறத்திற்கு கிடைத்த தொகையில் மீதமிருந்த 30 ஆயிரம் ரூபாய் அவருக்கே கொடுக்கப்பட்டது. அவர் என்னை பார்த்து ஐயா, இந்தத் தொகையை நீங்களே, இந்த மருத்துவமனையே வைத்துக் கொள்ளுங்கள். என்னைப்போல் வரும் ஏழை எளியோருக்கு இத்தொகையை பயன்படுத்துங்கள் என்று திருப்பிக் கொடுத்துவிட்டு சிரித்த முகத்தோடு சென்றார். ஏழ்மையிலும் நேர்மை... அவரை அறம் என்று பெயர் மாற்றி நான் குறிப்பிட்டிருந்தது தற்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

( நலம் பெறுவோம்! )

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்