SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தினம் ஒரு கீரை

2019-09-03@ 10:32:18

நன்றி குங்குமம் டாக்டர்

உணவே மருந்து


‘உணவில் தினமும் ஒரு கீரையை சேர்த்துக் கொள்ளுங்கள்’ என்று மருத்துவர்கள் அடிக்கடி அறிவுறுத்துகிறார்கள். கீரைகளில் நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்களும், தாது உப்புக்களும் அபரிமிதமாக நிறைந்து இருக்கின்றன என்றும் கேள்விப்படுகிறோம். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, நம் உணவுப்பட்டியலில் இடம் பெற வேண்டிய சில கீரைகள் பற்றியும், அவற்றின் பயன்கள் பற்றியும் யோகா மற்றும் இயற்கை மருத்துவர் தீபா நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

கீரையைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

கீரைகள் குறுகிய காலப் பயிர் வகை என்பதால் ஆர்கானிக் முறையில் வளர்க்கப்படும் கீரைகளைத் தேர்ந்தெடுக்கலாம். அது புதிதாகவும், சுத்தமானதாகவும் இருக்க வேண்டும். வாடி வதங்கி இருக்கக்கூடாது. பூச்சிகள் அரித்த கீரையைத் தவிர்த்துவிட வேண்டும்.

எப்படி பயன்படுத்துவது?

கீரைகளை வாங்கியபின் 10  நிமிடங்கள் வரை நீரில் ஊறவிட்டு அலசினால் அதில் உள்ள மண்துகள்கள் போகும், பூச்சிக்கொல்லியின் வீரியம் குறையும். பூச்சிகள், கிருமிகள், பூச்சிக்கொல்லிகள், மாசு போன்றவற்றால் கீரைகள் பாதிக்கப்பட்டு வளர்வதால் அவற்றை சமைப்பதற்கு முன் நீரில் நன்றாகக் கழுவுவது அவசியம்.

கீரைகளைப் பொரிக்கவோ, நீண்ட நேரம் வேக வைக்கவோ கூடாது. அதே நேரம் போதுமான அளவு வெந்திருக்க வேண்டும். கீரைகளை வேக வைக்க சிறிதளவு நீர் ஊற்றினாலே போதும். மழை, வெயில் என அனைத்துக் காலங்களிலும் கீரைகளை சாப்பிடலாம். ஆனால், அதன் இயல்பைப் பொறுத்து கீரைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

சாப்பிடுவதற்கும் முறை உண்டுகீரையில் நார்ச்சத்துக்கள் மிகுதியாக இருப்பதால் எளிதில் செரிமானம் ஆகாது. இதனால்தான் இரவில் கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்று சொல்கிறார்கள். அதேபோல் கீரையுடன் முட்டை, பால், தயிர், அசைவம் போன்றவற்றை சேர்த்து சமைக்கக்கூடாது. கீரையுடன் சேர்த்து சாப்பிடவும் கூடாது.

கீரை சாத்வீக உணவு என்பதால் இவை ஒன்றாக சேர்ந்தால் மலச்சிக்கலையும், வயிற்றுப் பிரச்னைகளையும் உருவாக்கும். கீரையுடன் பருப்பு சேர்த்து சமைக்கும்போது அதில் பருப்பின் அளவு குறைவாக இருப்பதே நல்லது. சமமாகவோ, அதிகமாகவோ இருக்கக்கூடாது.இனி சில கீரைகளைப் பற்றியும் அதன் மருத்துவ பயன்கள் குறித்தும் பார்ப்போம்...

உடல் வலிமைக்கு அரைக்கீரை

அரைக்கீரை மிகவும் குளிர்ச்சித்தன்மை வாய்ந்தது. இது எந்த வகை நோயாளிகளுக்கும் ஏற்றது. இதன் இலைகளுடன் தண்டுகளையும் சேர்த்து சாப்பிடலாம். இதில் புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைவாக உள்ளது. இந்தக் கீரையை குழந்தைகள், பெரியவர்கள், நோயாளிகள் என அனைவருமே சாப்பிடலாம்.

இந்தக் கீரையைச் சாப்பிடுவதால் உடல் வலுப்பெறும், ரத்தத்தை அதிகரிக்கும், பிரசவித்த பெண்களுக்கு உடனடி ஊட்டத்தை அளிப்பதோடு பால் அதிகம் சுரக்கச் செய்யும், நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். சோர்வு மற்றும் உடல் வலியைப் போக்கி புத்துணர்வு தரும். ரத்த நாளங்கள் நன்கு  செயல்படும். வாயு பிரச்னையைப் போக்கும். சின்ன வெங்காயம், தக்காளியை வதக்கி. கீரை சேர்த்து வெந்ததும் உப்பு, புளி சேர்த்துக் கொள்ளவும். உளுந்தம்பருப்பு, காய்ந்த  மிளகாயை வறுத்து எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து அரைக்கீரையை துவையலாக அரைத்து சாப்பிடலாம்.

புற்றுநோயைத் தடுக்கும் பாலக்கீரை

பாலக்கீரை குளிர்ச்சித்தன்மை கொண்டது. இது பெரிய பெரிய இலைகளைக் கொண்டது என்பதால் கழுவுவதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இதில் வைட்டமின் கே, ஏ, பி, சி மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம், தாமிரம், காப்பர், இரும்பு, அயோடின், ஃபோலிக் அமிலம், பீட்டா கரோட்டின், ரிபோஃபிளேவின் உள்ளிட்ட சத்துக்கள் நிறைவாக உள்ளது.

சைனஸ், ஆஸ்துமா, நோயாளிகள் மழைக் காலங்களில் இக்கீரையை சாப்பிடக்கூடாது. இந்தக் கீரை உடல் சூட்டைத் தணிக்கும், மூளை வளர்ச்சிக்கு உதவும், சிறுநீரைப் பெருக்கி உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும், ரத்த உற்பத்திக்கு உதவுவதோடு புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கிறது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

இதில் ஃபோலிக் அமிலம் (Folic acid) இருப்பதால் கர்ப்பிணிகளுக்கு நல்லது. இந்தக் கீரையை பருப்புடன் சேர்க்காமல் தனியாக சமைத்து சாப்பிடுவது நல்லது. 10 கிராம் பாலக்கீரையுடன் சீரகம் அரை டீஸ்பூன், பூண்டு 2 பல் சேர்த்து தண்ணீர்விட்டு, கொதித்ததும் வடிகட்டி குடித்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

உடலுக்கு ஊட்டமளிக்கும் முளைக்கீரை

எளிதில் கிடைக்கக்கூடிய கீரை இது. இது பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கின்றன. இந்த இரண்டு வகை கீரைகளும் உடலுக்கு நல்லதுதான். இந்தக் கீரை குளிர்ச்சித் தன்மையுடையது. இதில் நமது உடலுக்கு ஊட்டமளிக்கும் சத்துகள் மிகுதியாக உள்ளன. கால்சியம், புரதம்,  வைட்டமின் ஏ,பி, மற்றும் இரும்பு, சோடியம், பொட்டாசியம் உள்ளிட்ட தாது உப்புக்கள், ஆக்சாலிக் அமிலம் போன்ற சத்துக்கள் இதில் நிறைவாக உள்ளன.

இந்தக் கீரை கண்களுக்கு குளிர்ச்சியூட்டி பார்வையைத் தெளிவாக்கும். இது மாலைக்கண் நோய்க்கு சிறந்த மருந்தாக இருப்பதோடு மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது. இது சருமத்துக்கு கவசமாக திகழ்வதோடு பசியைத் தூண்டுகிறது. பலவீனமாக இருப்பவர்கள், அதிக உடல்சூடு கொண்டவர்கள் மற்றும் பித்த உடல் உள்ளவர்கள் இந்தக் கீரையை தாராளமாகச் சாப்பிடலாம்.

இது உடல் எடை அதிகரிக்க உதவுகிறது. வாய்ப்புண்ணால் அவதிப்படுபவர்களுக்கு இது நல்ல பலனைக் கொடுக்கிறது. முளைக்கீரையின் ஐந்து இலைகளை 100 மில்லி நீரில் கொதிக்க வைத்து, நீர் பாதியாக சுண்டவிட வேண்டும். அந்த நீரில் வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் குணமாகிவிடும்.

குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் சிறுகீரை

இதன் பெயர்தான் சிறுகீரை. ஆனால், பலன்களோ ஏராளம். இதன் தண்டுகள் பெரியதாக இருக்கும். ஆனால், இலைகள் சிறியதாக இருக்கும். இந்தக்கீரை சூடு என்பதால் குளிர்ச்சித்தன்மை உள்ள காய்களுடன் சேர்த்து சமைக்கக்கூடாது. இந்தக் கீரையில் புரதம், பாஸ்பரஸ், நார்ச்சத்து போன்றவை உள்ளன. மேலும் இரும்பு, கால்சியம் உள்ளிட்ட தாது உப்புக்கள் அதிக அளவில் உள்ளன.

இந்தக் கீரை மலமிளக்கியாக செயல்படுகிறது. இது குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. அவர்களுக்கு இந்தக் கீரையை தினமும் கொடுத்து வரலாம். கூடவே ஸ்கிப்பிங் மற்றும் யோகா போன்ற உடற்பயிற்சியும் செய்து வந்தால் அவர்களின் உயரம் அதிகரிக்க உதவும்.

இதில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. இது உடலிலுள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். மெனோபாஸ்(Menopause) நிலையை அடைய இருக்கும் பெண்களுக்கு இந்தக் கீரை மிகவும் நல்லது. இது கல்லீரலுக்கும் நல்லது. இதன் இலையுடன் மிளகைச் சேர்த்து சாப்பிட்டுவர சரும அலர்ஜி  
குணமாகும்.

புண்களை ஆற்றும் பருப்புக்கீரை

இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாட்டில்கூட இந்தக்கீரை மிகவும் பிரபலம். இந்தக் கீரையில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, தாது உப்புக்கள், வைட்டமின் சி போன்ற சத்துக்கள் உள்ளன. இந்தக் கீரை அனைவரும் சாப்பிட ஏற்றது.இந்தக் கீரை வயிற்றுப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும். இதன் சாறை புண்களின் மீது தடவினால் புண் குணமாகும்.

வியர்க்குரு, சருமப்பிரச்னைகளுக்கு இந்தக் கீரையின் சாறு அருமருந்தாக இருப்பதோடு, உடல் உஷ்ணம் குறைய உதவுகிறது. இது எரிச்சல், நீர்க்கடுப்பு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகளுக்கு மிகச் சிறந்த தீர்வாகத் திகழ்கிறது. இந்தக் கீரையுடன் பாசிப் பருப்பை வேக வைத்து கடைந்து தக்காளி, பூண்டு, வெங்காயம் சேர்த்து கூட்டு போல செய்து சாப்பிடலாம்.

சோர்வைப் போக்கும் தவசிக்கீரை


இதை ஹார்லிக்ஸ் கீரை, மல்டி வைட்டமின் கீரை என்றும் சொல்வார்கள். இரும்புச்சத்து, மல்ட்டி வைட்டமின்கள் இதில் அதிக அளவு இருக்கிறது. இந்தக் கீரை ரத்த சோகையைப் போக்கும். சோர்வாக இருக்கும் உடல் புத்துணர்வு பெறவும், ஆண்மைக் குறைபாடு நீங்கவும் இந்தக் கீரை உதவுகிறது. சாம்பாரில் இந்தக் கீரையை சேர்த்து சாப்பிட்டால் சுவை அலாதியாக இருக்கும்.

- க.கதிரவன்

படங்கள் : ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்