SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தடுப்பூசி நம்பிக்கைளும் உண்மைகளும்!

2019-08-19@ 13:04:33

தடுப்பூசிகளைத் தடுக்காதீர்கள்!

குழந்தைகளுக்கு  இரண்டு வயது முடியும்போது, முறைப்படி தரவேண்டிய தடுப்பூசிகளைப் போட்டுவிட்டால், அந்தக் குழந்தைக்கு 15 வகைப்பட்ட கடுமையான குழந்தைப்பருவ நோய்கள் ஏற்படுவது இல்லை. மேலும், குழந்தையின் வயதுக்கு ஏற்ற வளர்ச்சியும் சரியாக உள்ளது. மேலும்,
குழந்தைகள் மட்டும் இன்றி இளைய வயதினரும் முதியோரும்கூட தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டியது கட்டாயம் என்றும், ஆண், பெண் இருபாலரும் ஹெச்.ஐ.வி. தடுப்பூசிகளையும், 65 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் சின்னம்மை, அக்கி அம்மை, நிமோனியா, டிப்தீரியா, ஃப்ளு, கக்குவான் இருமல், டெட்டனஸ் ஆகிய நோய்களுக்கான தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்றும் ‘உலக சுகாதார நிறுவனம்’ (World Health Organisation) கூறுகிறது. முகம் அல்லது தோல் சிவத்தல்,  லேசான காய்ச்சல், சோர்வு,  ஊசி போட்ட இடத்தில் வலி, ஒரு நாள் பசியின்மை என்பதைத் தவிர பிற பக்கவிளைவுகள் இருக்காது. எனவே, தடுப்பூசிகளைத் தடுக்காதீர்கள்.

பலன் கிடையாதா?


சில நோய்களுக்குத் தடுப்பூசி போடுவதில் எந்தப் பலனும் இல்லை என்கிறார்களே? அப்படிச் சொல்பவர்களின் மருத்துவ அறிவை சந்தேகப்படுங்கள். அம்மை, போலியோ போன்ற நோய்கள் வருவது குறைவு என்றாலும் அதற்கான தடுப்பூசிகளையும், தடுப்பு மருந்துகளையும் எடுத்துக்கொண்டால்தான் அவற்றை முற்றிலுமாக ஒழிக்க முடியும். எனவே, சில நோய்களுக்குத் தடுப்பூசி வேண்டாம் என்று சொல்வது முழுதான உண்மை இல்லை.

பாதரசத்துக்கு பயப்படாதே!

தடுப்பூசிகள் பாதரசத்தைக் கொண்டுள்ளன. எனவே, அவை ஆபத்தானவை என்கிறார்கள். பாதரசத்தால் நம் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது உண்மைதான். அதுபோலவே சில தடுப்பூசிகளில் பாதரசம் உள்ளது என்பதும் உண்மைதான். ஆனால் இவை நம் உடலுக்கு எவ்வித பாதிப்பும் அற்ற அளவிலேயே இருக்கும். எனவே, பாதரசம் கலந்துள்ளது என அச்சப்படத் தேவை இல்லை.

குழந்தைகளுக்கு தடுப்பூசி!

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். எனவே, ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளைப் போடக் கூடாது என்று பயமுறுத்துவார்கள். குழந்தை வளர்ப்பு தொடர்பான கவலைகள் அனைவருக்கும் உண்டு என்பதால் யோசிக்காமல் அச்சப்பட்டுவிடுவீர்கள். பொதுவாக, குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் பலதரப்பட்ட தடுப்பு மருந்துகள் கலவையாகவோ, ஒன்றன்பின் ஒன்றாகவோ கொடுக்கக் கூடாது. ஏனெனில், தடுப்பு மருந்துகள் உடலுடன் சேர்ந்து செயல்பட நேரம் எடுக்கும். மேலும், நோய் எதிர்ப்பு மண்டலத்தைச் சீராக செயல்படுத்தி நோய் எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்கச்செய்வதற்கு தொடர்ச்சியான தடுப்பு மருந்துகள் தவிர்க்கப்பட வேண்டும். ஆனால், சில நோய்களுக்கு முத்தடுப்பூசிகள் போன்றவை உள்ளன. இவற்றை ஒரே ஊசியாகப் போடுவதால் பிரச்னை ஏதும் இல்லை.

தடுப்பூசி போட்ட பிறகும் பாதிப்பு வருமா?

தடுப்பூசிகள் நோய்களை 100 சதவிகிதம் தடுப்பது இல்லை என்பது உண்மைதான். ஆனால், இது ஒவ்வொருவரின் உடல் நிலையைப் பொறுத்து மாறுபடுகிறது. பொதுவாக, தடுப்பூசிகள் சிறப்பாகவே செயல்படுகின்றன. மிகச்சிலருக்கு மட்டுமே தடுப்பூசி போட்ட பிறகும் பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால், இது மிகமிகக் குறைவானவர்களுக்கே நேர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால், தடுப்பூசியை தவிர்க்காதீர்கள்.

காய்ச்சலைத் தடுக்க முடியுமா?

காய்ச்சலுக்காகத் தடுப்பூசிகள் எடுத்துக்கொள்வது தேவையற்றது என்று சொல்வார்கள். காய்ச்சல் குறித்த தெளிவு அவர்களுக்கு இல்லை என்று அர்த்தம். காய்ச்சலை உருவாக்கும் வைரஸ்கள் பலவகையானவை. எளிய சளிக் காய்ச்சல் போன்றவற்றுக்கு மாத்திரை, மருந்துகள் எடுத்துக்கொள்வதே போதுமானது. ஆனால், மோசமான வைரஸ் காய்ச்சல்கள் நம் உடல் நலத்தின் ஆணிவேரையே அசைத்துப் பார்ப்பவை என்பதால், இவற்றுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகவும் அவசியம்.

சுத்தம் சுகம் தரும்!

சுற்றுச்சூழல் சுகாதாரமாக இருந்தாலே போதும். தடுப்பூசிகள் ஏதும் தேவையே இல்லை என்று சிலர் வாதிடுகிறார்கள். சுற்றுச்சூழல் மீதான அவர்களது அக்கறை பாராட்டப்பட வேண்டியது. அதற்காக சுற்றுச்சூழல் ஆர்வத்தையே அவர்கள் மூடநம்பிக்கைகளாக்கிக் கொள்வது கண்டிக்கத்தக்கது. பொதுவாக, பல நோய்கள் சுற்றுபுறச்சூழலின் சுகாதாரமின்மையால்தான் ஏற்படுகின்றன என்பது உண்மைதான். நமது சூழலை சுத்தமாக வைத்திருக்காமல் இருப்பதே நோய்வருவதற்கான எளிய காரணமாகும். ஆனால், அதற்காக தடுப்பூசிகளைத் தவிர்க்க வேண்டும் என்பது மிகவும் தவறான கருத்து. ஆரோக்கியமான சுற்றுபுறச் சூழல் இருந்தாலும் தடுப்பூசிகள் போடுவதைத் தவிர்க்கக் கூடாது.

-இளங்கோ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • porkappal1

  முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

 • france_elizabeth

  30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

 • assam-rain-17

  அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

 • ramnjamaiii

  ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

 • pudha_purnima

  உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்