SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேலம் அரசு மருத்துவமனை

2019-07-31@ 12:44:19

நன்றி குங்குமம் டாக்டர்

‘‘மலைகளும் மலைகள் சார்ந்த பகுதியும்’ என்று சொல்லுமளவுக்கு மலைகளால் சூழப்பட்ட இயற்கை எழில் கொஞ்சும் பகுதி சேலம் மாவட்டம். மாங்கனியின் சுவையாலும் சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றது சேலம். இங்கு விளையும் மல்கோவா ரக மாம்பழத்துக்கு எல்லா நாடுகளிலும் ரசிகர்கள் உண்டு. உருக்காலை, வெள்ளிப் பொருட்கள்,  ஜவுளி உற்பத்தி என தொழில்துறை வளர்ச்சியிலும் முக்கியத்துவம் கொண்டது சேலம் மாவட்டம்.

இத்தகையை பெருமை கொண்ட சேலம் மாநகரின் முக்கிய அடையாளமாகவும், மக்களின் நம்பிக்கையைப் பெற்ற மருத்துவமனையாகவும் பெயர் பெற்றிருக்கிறது மோகன் குமாரமங்கலம் அரசு பொது மருத்துவமனை. ‘குங்குமம் டாக்டர்’ ரவுண்ட்ஸ்க்காக சென்றபோது நம்மை வரவேற்ற மருத்துவமனையின் டீன் திருமால் பாபு, மருத்துவமனை பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘பிரிட்டிஷ் இந்தியாவில் சேலத்தில் செயல்பட்டு வந்த டிஸ்பென்சரி 1917-ம் ஆண்டு மாவட்ட மருத்துவமனையாக மாற்றப்பட்டது. அந்த மருத்துவமனை சேலம், சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு அலோபதி சிகிச்சை அளித்து வந்தது. சுதந்திரத்துக்கு பின் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கான மருத்துவமனையாக சேலம் மாவட்ட மருத்துவமனை வளர்ந்திருந்தது.

சேலம் மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளுக்கென ஒரு மருத்துவக்கல்லூரி தேவை என்று உணர்ந்த மத்திய அமைச்சர் மோகன் குமாரமங்கலம் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார். இதன் பலனாக, 1986-ம் ஆண்டு சேலத்தில் மருத்துவக்கல்லூரி தொடங்க அனுமதி கிடைத்தது. முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த மோகன் குமாரமங்கலம் பெயர் சூட்ட முடிவெடுக்கப்பட்டது.

1986 ஏப்ரல் 23-ம் தேதி அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டது. 1988-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி புதிய மருத்துவக்கல்லூரிக்கு இரும்பாலை ரோட்டில் 150 ஏக்கர் பரப்பளவில் இடத்தில் அடிக்கல் நாட்டினார்.

1986-ம் ஆண்டு முதல் தற்காலிகமாக அரசு கட்டிடம் ஒன்றில் இயங்கி வந்த மருத்துவக்கல்லூரி 1993-ம் ஆண்டு புதிய மருத்துவக்கல்லூரி வளாகத்துக்கு மாற்றப்பட்டது என்று மருத்துவமனையின் வரலாற்றை பகிர்ந்துகொண்ட முதல்வர் மருத்துவமனையின் தற்போதைய செயல்பாடுகள் தொடர்பாக
விளக்கினார்.

தொடக்கத்தில் ஆண்டுக்கு 75 எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், 2015-ம் ஆண்டுதான் இந்த எண்ணிக்கை 100 ஆக உயர்த்தப்பட்டது. அதற்கு முன்னரே, 2010-ம் ஆண்டு தமிழகத்திலேயே முதன்முறையாக, 145 கோடி செலவில் மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து, 7 துறைகளில் 14 முதுநிலை மருத்துவ இடங்களுக்கு அனுமதி கிடைத்தது. இது தவிர, மருத்துவமனையின் 17 துறைகளில் 100 முதுநிலை மருத்துவ இடங்கள் உள்ளன. பி.எஸ்சி நர்சிங் 100 இடங்கள், டிப்ளமோ நர்சிங் 100 இடங்கள், மருத்துவம் சார்ந்த பிற டிப்ளமோ படிப்புகளில் 175 இடங்கள், சான்றிதழ் படிப்புகளில் 265 இடங்களும் உள்ளன.

பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, இதயம், மகப்பேறு, குழந்தைகள் நலம், எலும்பு முறிவு, கண் சிகிச்சை, தீவிர சிகிச்சை என 37 துறைகளின் கீழ் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம்.எங்கள் மருத்துவமனையில் 250 டாக்டர்கள் பணியில் உள்ளோம். எங்களுடன் 300 நர்சுகள், பல்வேறு துறையின்கீழ் 200 மருத்துவ பணியாளர்களும் உள்ளனர். உள்நோயாளிகளுக்கென 1,642 படுக்கை வசதிகள் உள்ளது. கடந்த மே மாத நிலவரப்படி மாதத்துக்கு 1,30,695 பேர் புற நோயாளிகளாகவும், 50,366 பேர் உள்நோயாளியாகவும் சிகிச்சை பெற்றுள்ளனர்.

தற்போது கட்டப்பட்டு வரும் 3.38 கோடி மதிப்பிலான தீக்காய பிரிவு, 3.50 கோடி மதிப்பிலான அதிநவீன கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை மையம் 50 லட்சம் மதிப்பிலான மனநலப் பிரிவு ஆகியவை விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.’’ மருத்துவமனையின் கண்காணிப்பாளர் தனபால்‘‘தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் முழு உடல் பரிசோதனை திட்டம், தாய் திட்டம் (விபத்து மற்றும் அவசர சிகிச்சை), பிரசவத்தின்போது தாய், சேய் இறப்பை குறைக்கும் `லக்‌ஷயா’ திட்டம், முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. இவற்றால் பலர் பயன்பெற்றுள்ளனர். இதுதவிர யோகா, சித்தா, ஹோமியோபதிக்கு என பிரத்யேக மருத்துவர்களும் உள்ளனர்.

பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பெத்தாலஜி, ஏஆர்டி மற்றும் ரத்த வங்கி என மருத்துவமனையில் 5 ஆய்வகங்கள் உள்ளன. ரத்தம், சிறுநீரகம் என மாதத்திற்கு சராசரியாக 2 லட்சம் மாதிரிகளை பரிசோதனை மேற்கொள்கிறோம். இதேபோல் சிறுநீரகவியல் துறையில் மே மாதத்தில் 371 டயாலிசிஸ் மேற்கொள்ளப்பட்டது.

பொது அறுவை சிகிச்சை துறையை பொறுத்தவரை, 12 பட்டமேற்படிப்பு மருத்துவர்களுடன் 6 யூனிட்டாக செயல்பாட்டில் உள்ளது. எண்டாஸ்கோபி, லேப்ராஸ்கோபிக்கு பல்வேறு உபகரணங்கள் மூலம் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்கிறோம். கடந்த மே மாதத்தில் மட்டும் பொது அறுவை சிகிச்சை பிரிவில், சிறிய அளவில் 180, பெரிய அளவில் 463 என மொத்தம் 643 அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டுள்ளோம்’’.

டாக்டர் புகழேந்தி (சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்)

‘‘அரசு மருத்துவமனையில் 20 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் எங்கள் துறையில், தற்போது 8 மருத்துவர்கள் பணிபுரிந்து வருகிறோம். மாதத்திற்கு சராசரியாக ஆயிரத்திற்கும் அதிகமான புறநோயாளிகளுக்கு பரிசோதனையும், 100-க்கும் அதிகமான அறுவை சிகிச்சையும் மேற்கொண்டுள்ளோம்.

அதிநவீன லேப்ராஸ்கோபி மூலம், லேசர் சிகிச்சை அளித்து சிறுநீரக கற்களை உடைத்து வெளியேற்றுதல், சிறுநீரக கட்டி, அடைப்பு நீக்கம் உள்ளிட்ட அனைத்து அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்கிறோம். இவை அனைத்திற்கும் மேலாக, சில மாதங்களுக்கு முன்பு எங்கள் மருத்துவமனை முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டோம். தற்போது அவர் முழு ஆரோக்கியமாக உள்ளார்’’.

டாக்டர் கண்ணன் (இதய சிகிச்சைத்துறை தலைவர்)

‘‘எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனையாக இருந்தபோதே, இதய சிகிச்சைப்பிரிவு தொடங்கிய முதல் மருத்துவமனை எங்கள் மருத்துவமனை. ஒரு மாதத்தில் 100 ஆஞ்சியோகிராம், 40 ஆஞ்சியோ பிளாஸ்டி, 150 எக்கோ கார்டியோகிராம் மேற்கொள்கிறோம்.

செயற்கை இதய துடிப்பிற்கு பேஸ் மேக்கர், படபடப்பை பரிசோதிக்க ஹோல்டர் மானிட்டர் போன்ற அதி
நவீன கருவிகள், ஸ்டெமி இந்தியா திட்டம் மூலம் இறப்பு விகிதத்தை 2 சதவீதமாக குறைத்துள்ளோம். இதய சிகிச்சைக்கு வந்தவர்கள் இறப்பு இல்லை என்ற நிலையை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம்’’.

டாக்டர் சுபா (மகப்பேறு சிகிச்சைத்துறை தலைவர்)

‘‘சேலம் அரசு மருத்துவமனைக்கு வரும் ஒட்டுமொத்த நோயாளிகளில், 50 சதவீதம் பேர் நாடுவது மகப்பேறு துறையைத்தான். மதுரை மருத்துவக்
கல்லூரிக்கு அடுத்தபடியாக, 450 படுக்கைகளுடன் `சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்’ என்ற பெயரில் 4 மாடி கட்டிடத்தில் எங்கள் துறை செயல்பட்டு வருகிறது. மாதத்திற்கு சராசரியாக ஆயிரம் பிரசவங்கள் மேற்கொள்கிறோம். அதில் 60 சதவீதம் சுகப்பிரசவமாக நடப்பதால் பெருந்துறை, ஓசூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் இருந்து கூட சேலம் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.

கடந்த மே மாதத்தில் 14,183 பெண்கள் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, 591 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த மாதத்தில் பிறந்த 1,015 குழந்தைகளில், 573 குழந்தைகள் சுகப்பிரசவம் மூலம் பிறந்துள்ளனர்.கர்ப்பிணிகளுக்கென தனி தீவிர சிகிச்சை பிரிவு (ஐசியூ) அமைக்கப்பட்டு, வலிப்பு நோய், மஞ்சள் காமாலை, இதய நோய், நுரையீரல் பிரச்னை, சீறுநீரக கோளாறு, ரத்தசோகை உள்ள அதிதீவிர தாக்கத்துடன் வரும் கர்ப்பிணிகளுக்கும் சிறப்பாக சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பியுள்ளனர்.

வீட்டிற்கு செல்ல ரெட்கிராஸ் மூலம் இலவச ஆம்புலன்ஸ் வசதியும்உள்ளது. லக்‌ஷயா திட்டம் மூலம், பிரசவத்தின் போது ஏற்படும் தாய்,சேய் இறப்பு விகிதம் பெருமளவில்குறைக்கப்பட்டுள்ளது. கர்ப்பப்பைவாய் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்வதுடன், என்.ஹெச்.எம் மூலம் மாதந்தோறும் 9-ம் தேதிகளில், கர்ப்பிணிகளுக்கான ரத்தக்கொதிப்பு பரிசோதனை முகாம் நடத்தி வருகிறோம்.’’

 புவனேஸ்வரி (தலைமை நர்ஸ்)

‘‘ஒரு மருத்துவமனையில், நோயாளிகள் ஆம்புலன்சில் இருந்து இறங்கி, முதலுதவி, தொடர்சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சைமுடிந்து, முழுமையான குணமடைந்து வீட்டிற்கு திரும்புவது வரை நர்சுகளின் பணி இன்றியமையாதது. அதன்படி சேலம் அரசு மருத்துவமனையில் 300 நர்சுகள் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். அவசரசிகிச்சை, தீவிர சிகிச்சை, பிரசவம், ரத்த மாதிரி சேகரிப்பு, ஊசிபோடுதல், மருந்து வழங்குதல், உள்நோயாளியாக சேர்த்தல், டிஸ்சார்ஜ் செய்வது என அனைத்தும் நர்சுகளின் கண்காணிப்பில் நடைபெறக்கூடியது.

மருத்துவ கவுன்சில் விதிப்படி, பொது வார்டில் 8 நோயாளிக்கு ஒரு நர்சும் தீவிர சிகிச்சை பிரிவில் ஒரு நோயாளிக்கு ஒரு நர்சும் இருக்க வேண்டும். அதன்படி பார்த்தால் சேலம் அரசு மருத்துவமனையில் 828 நர்சுகள் தேவைப்படுகின்றனர். ஆனால், தற்போது 300-க்கும் குறைவானவர்களே பணிபுரிந்து வருகிறோம்.’’

ராதிகா(உள்நோயாளி - கொண்டலாம்பட்டி)

‘‘ஒரு வாரத்திற்கு முன்பு 3-வது குழந்தையை பெற்றெடுப்பதற்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். இங்குள்ள மருத்துவர்களும், செவிலியர்களும் அனைத்து விதத்திலும் சிறப்பான முறையில் சிகிச்சை அளித்தனர். இதனால், சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே, எனக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இருவருமே சேலம் அரசு மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில்தான் பிறந்தார்கள். அந்த நம்பிக்கையில்தான் மூன்றாவதாகவும் அட்மிட் ஆனேன். நினைத்தது போலவே சுகப்பிரசவமாக முடிந்ததில் மகிழ்ச்சி.’’

சுப்ரமணி(உள்நோயாளி - ஓமலூர்)

‘‘கடந்த 4-ம் தேதி காமலாபுரம் அருகே டூவீலரில் சென்ற போது கீழே தவறி விழுந்துவிட்டேன். இதனால், தலையில் அடிபட்டதுடன், கண் பார்வையும் மங்கலானது. அதனால் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். கண் மற்றும் தலைக்கு தனித்தனியாக சிடி ஸ்கேன் எடுத்தார்கள். தொடர் சிகிச்சையால் குணமாகி வருகிறேன். மருத்துவ சிகிச்சைகள் அனைத்தும் நன்றாகவே மேற்கொள்ளப்படுகிறது.’’

அரசின் கவனத்துக்கு...

மருத்துவமனையில் இருக்கும் பிரச்னைகள், குறைகள் பற்றி பரவலாகப் பொதுமக்கள் நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல்களில் முக்கியமானவற்றை இங்கே தொகுத்திருக்கிறோம். கீழ்க்கண்ட இந்தக்குறைகளையும் சரி செய்துகொண்டால், சேலம் அரசு பொது மருத்துவமனை மேலும் சிறப்பாக பொலிவு பெற்று தனியார் மருத்துவமனைகளுக்கும் மேலாக விளங்கும்.

* சேலம் அரசு மருத்துவமனையில் பெரிய அளவிலான அறுவைசிகிச்சைகள் கூட எளிதாக பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை இருப்பது பாராட்டுக்குரியது. ஆனால், ஆரம்ப கால மற்றும் அவசர சிகிச்சைகள் பெறுவதற்கு சரியான வழிகாட்டுதல் இல்லாமல்
திண்டாடுகிறோம் என்கின்றனர் சேலம் வாழ் பொதுமக்கள்.

* நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்லும் இடத்தில், அவர்களுக்கு போதுமான குடிநீர் வசதியும், கழிப்பறை வசதியும் செய்யப்படாதது பெரும்குறையாக உள்ளது.

* சேலம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு பிறகு தொடங்கப்பட்ட பல கல்லூரிகளில், முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்ஸில் 150 மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, 30 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் சேலம் மருத்துவக்கல்லூரியிலும்
வருடத்திற்கு, 150 மாணவர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* போதுமான வரைபடம் மற்றும் வழிகாட்டும் பலகைகள் இல்லாததால், மருத்துவமனையின் ஒவ்வொரு பிரிவையும்
கண்டுபிடித்து சிகிச்சை பெறுவதற்குள் நோயாளிகள் கடும் சிரமங்களை சந்திக்கின்றனர்.

* ஒப்பந்த பணியாளர்கள் நோயாளிகளிடம் பெறும் கையூட்டு, உபகரணங்கள் பற்றாக்குறை, சிகிச்சை அளிக்க தாமதம் ஏற்படுவதையும் சரி செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

- சுந்தர் பார்த்தசாரதி, என்.கார்த்திக்.

படங்கள்: கே.ஜெகன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • award20

  விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

 • tenish2020

  டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

 • america20201

  இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

 • mumbai fire20

  மும்பையில் ஜிஎஸ்டி பவனில் 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

 • 18-02-2020

  18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்