SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுவால் மட்டுமே கல்லீரல் கெடுவதில்லை...

2019-07-22@ 15:09:48

நன்றி குங்குமம் டாக்டர்

எச்சரிக்கை

கட்டுப்பாடற்ற மதுப்பழக்கம் கல்லீரலை பாதிக்கும் என்று பரவலாகப் பலரும் அறிந்திருக்கிறார்கள். ஆனால், கல்லீரல் கெடுவதற்கு மதுப்பழக்கம் மட்டுமே காரணம் இல்லை. இன்றைய தவறான வாழ்வியல்முறை காரணமாகவும் கல்லீரல் நோய்கள் ஏற்படுவது அதிகரித்திருக்கிறது என்கின்றன புதிய ஆய்வுகள். கல்லீரல் மாற்று சிகிச்சை மருத்துவரான ஹரிக்குமாரிடம் இது பற்றி பேசினோம்...

‘‘கல்லீரல் பாதிப்பு அதிகளவு மதுப்பழக்கத்தால் ஏற்படுகிறது என்றே நம் மக்கள் நம்புகின்றனர். ஆனால், மதுப்பழக்கமே இல்லாதவர்களையும் கல்லீரல் வீக்க நோய் தாக்குகிறது. இந்த நோயை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளாமல் விட்டு விட்டால் Liver cirrhosis என்ற கல்லீரலின் இழைநார் வளர்ச்சியில் கொண்டு போய் விட்டுவிடும். எனவே கவனம் அவசியம். ஏனெனில், கல்லீரல் நோய்கள் உடனடியாக தனது அறிகுறியை வெளிப்படுத்துவதில்லை.

மிகவும் அமைதியாகவே வெளிப்படுகிறது. வீங்கிய கல்லீரல், வீக்கமான ஹெப்படைட்டிஸ், கல்லீரல் வடு மற்றும் புண்கள் என அடுத்தடுத்து கல்லீரலில் பாதிக்கப்படும்போதும் அது சகித்துக் கொண்டு முடிந்தளவு தனது வேலையைத் தொடர்கிறது.

இந்த நோய் பாதிப்பு அளவு கடந்து அதிகரித்து கல்லீரலின் செயல்பாடு குறையும்போதுதான் மெல்ல கல்லீரலின் பாதிப்புக்களை அறிகுறிகள் மூலம் தெரிந்துகொள்கிறோம். இந்த பாதிப்பு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை கூட அமைதியாக நிகழலாம் என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி.

இந்தியாவில் பெரும்பாலான நேரங்களில் நோயின் தன்மையைத் தெரிந்து கொள்வதற்கான ஸ்கிரீனிங் திட்டங்கள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதில்லை. கல்லீரல் இழைநார் வளர்ச்சி கண்டறியப்படும்போது நோயாளியின் உயிரைக் காப்பாற்ற அவருக்கு மாற்றுக் கல்லீரல் பொறுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்படும்.

அமைதியாக அதே சமயம் உயிருக்கே பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இதுபோன்ற நோய்களைத் தெரிந்துகொள்ள குறிப்பிட்ட கால இடைவெளியில் ஸ்கிரீனிங் செய்ய வேண்டியது அவசியமாகிறது.

கல்லீரல் பாதிப்பு கல்லீரல் வடுக்கள் மற்றும் கல்லீரல் புற்றுநோயாக வளர்ச்சியடைவதைத் தடுக்க முடியும். கல்லீரல் வடுக்கள் பாதிப்பு மற்றும் கல்லீரல் இழை நார் வளர்ச்சி வலுவாக இருக்கும் பட்சத்தில் சிகிச்சை மூலம் கல்லீரலை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கு எந்த உத்திரவாதமும் அளிக்க முடியாது.’’

கல்லீரல் பாதிப்புகளை வரும் முன் தடுப்பது எப்படி?

‘‘கல்லீரலில் நோய் ஏற்பட்ட பிறகு சிகிச்சை என்பதை விட, கல்லீரல் நோய் வராமல் தடுப்பதே மிகச் சிறந்தது. கல்லீரல் நோய் கண்டறிவது, நோய்க்கான அறிகுறிகள் எல்லாம் பெரியளவு சேதத்தின் பின்னரே வெளிப்படும் என்பதால் கண்டிப்பாக நோயை ஆரம்பத்தில் கண்டறிந்து அதிகளவு சேதம் ஏற்படாமல் கல்லீரலைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

இன்றைய இளம் தலைமுறையினர் பள்ளி, கல்லூரி வயதில் மதுவுக்கு அடிமையாகின்றனர். மரபணு ரீதியாக தொடர்புள்ள வாழ்க்கை முறை கல்லீரல் நோயுடன் இணைந்து பெரியளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் 30 வயதிலேயே கல்லீரல் இழைநார் பாதிப்புக்கு ஆளாகும் வாய்ப்பும் ஏற்படுகிறது.

அளவுக்கதிகமான ஊட்டச்சத்து, உரிய உடற்பயிற்சியின்மை, அளவுக்கு அதிகமான மதுப்பழக்கம் ஆகியவற்றால் மோசமான கல்லீரல் பாதிப்புகள் உண்டாகிறது. இது குறித்து இளம் தலைமுறையினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது. கல்லீரல் நோயைக் கட்டுப்படுத்த இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியம்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது அதிகளவு பாதிப்புக்களை உண்டாக்கும் வாழ்க்கைமுறை சார்ந்த நோய்களையும் பரிசாகக் கொடுத்துள்ளது. வளர்ந்து வரும் வருவாய், வசதிகள், வாழ்க்கைமுறை மாற்றங்கள், குப்பை உணவுகளை உண்ணும் வழக்கம், உடற்பருமன், அதிகரித்து வரும் சர்க்கரை நோய் பாதிப்புகள் என அனைத்தும், வாழ்க்கைமுறை சுகாதார அவசர நிலைக்கு தேவையை உருவாக்கியுள்ளது.

உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி அல்லாத சோம்பேறித்தனமான வாழ்க்கை முறையோடு அதிகளவில் மது அருந்தும் பழக்கமும் சேர்ந்து நகர்ப்புற சூழலில் ஒரு பிரச்னையாக மாறியுள்ளது. வளர்சிதை சமச்சீர் இன்மையையும், சர்க்கரை நோய் மற்றும் உடலின் உள்ளுறுப்புகளில் கடும் சேதத்தையும் ஏற்படுத்துகிறது.

வீக்கமடைந்த கல்லீரல் பாதிப்புள்ள நோயாளிகளில் 10 சதவீதத்தினரிடம் காணப்படும் மது அருந்துதல் சாராத Steatohepatitis என்பது வீக்கமடைந்த கல்லீரல் நோயின் மிக மோசமான வடிவம். NASH என்று குறிப்பிடப்படும், இது படிப்படியாக நோயை அதிகப்படுத்தும் வளர்ச்சி நிலையாகும்.

கல்லீரல் அழற்சி அல்லது வீக்கம் ஏற்பட்டு செல்களின் உயிரிழப்புக்கு காரணமாகிறது. நீண்டகாலமாக கண்டுகொள்ளப்படாமல் உள்ள கல்லீரல் அழற்சி நோயானது மோசமான விளைவுகளை உண்டாக்கி கல்லீரல் இழைநார் வளர்ச்சியை ஏற்படுத்தி கல்லீரல் புற்றுநோய் செல்கள் உருவாவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்துகிறது.’’

கல்லீரல் வீக்கம் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறிகள் என்னென்ன?

‘‘பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரியளவில் வளர்ந்து வரும் சமீபத்திய சுகாதாரப் பிரச்னையே கல்லீரல் வீக்க நோய்தான். சராசரியாக 30 சதவீதம் நபர்களுக்கு மது அருந்துதல் சாராத கல்லீரல் வீக்க நோய் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இது பெரும் அச்சத்தையே ஏற்படுத்துகிறது. நம் சமூகத்தில் இயல்புக்கு மாறான கல்லீரல் பரிசோதனை முடிவுகள் வெளிவருவதற்கு உடற்பருமன், டைப் 2 சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய வளர்சிதை மாற்ற நோயுடன் இதற்கு நெருக்கமான தொடர்புள்ளது.

டைப் 2 சர்க்கரை நோயாளிகளிடம் குறைந்தபட்சம் 50 முதல் 70 சதவீதம் நபர்கள் மத்தியில் கல்லீரல் வீக்க நோய் இருக்க வாய்ப்புள்ளது. உலகளவில் சர்க்கரை நோயின் தலைநகரமாக இந்தியா இருப்பதால் கல்லீரல் வீக்க நோய் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்நோய் பாதிப்புள்ள நோயாளிகளில் 40 சதவீதத்தினரிடம் வளர்சிதை மாற்ற நோய்த்தாக்குதலும் உள்ளது.

டைப் 2 சர்க்கரை நோய் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் இறப்பிற்கான அபாயத்தை கல்லீரல் வீக்கம் அதிகரிக்கிறது. வயது வந்த நபர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் இது கவலைக்குரிய சூழலை ஏற்படுத்தி வருகிறது.

கல்லீரல் வீக்கம் மற்றும் வளர்சிதை மாற்ற நோய் ஆகியவற்றுக்கான மரபணு ரீதியிலான இன அடிப்படையிலான மற்றும் சுற்றுச்சூழல் ரீதியிலான காரணங்களைக் கண்டறிய கல்லீரல் சிகிச்சை மையங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.’’

கல்லீரல் வீக்கம் நோய்க்கான காரணம் என்ன?

‘‘கல்லீரல் வீக்க நோய் உள்ள நபர்களிடம் வயிறு, இடுப்பு மற்றும் கல்லீரல் கொழுப்பு செல்களில் சிக்கலான வளர்சிதை சீரின்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மாவுச்சத்து மற்றும் பழ சர்க்கரையை உள்ளடக்கிய உணவை அதிகளவு உட்கொள்வதால் அதிக ரத்த சர்க்கரை அளவுகள் ஏற்படுகிறது.

இது சர்க்கரையைக் குறைப்பதில்லை. உயர் கொழுப்பு அளவுகள் மற்றும் கல்லீரல் ஸ்டெதோஹெபடைடிஸ், கல்லீரல் அழற்சியை ஏற்படுத்துகிறது. இதனால் NASH, இழைமப் பெருக்கம் மற்றும் கல்லீரல் இழைநார் வளர்ச்சி ஆகியவற்றுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது.’’

இதற்கான சிகிச்சை முறைகள்?

‘‘NASH ஐக் குறைப்பதற்கென்று நிரூபிக்கப்பட்ட மருந்துகள் இப்போதைக்கு எதுவுமில்லை. வாழ்க்கை முறையில் திருத்தங்கள், உடல் எடைக்குறைப்பு, உணவுமுறை வழக்கத்தில் மாற்றம், உடற்பயிற்சி பலவிதமானவற்றையும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஆறு மாத கால அளவில் 5 முதல் 10 சதவீதம் உடல் எடையைக் குறைப்பது, கல்லீரல் வீக்க நோய் மற்றும் உடல் பருமன் பாதிப்புக்கான சிகிச்சைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.’’’

உணவுமுறைகளில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் என்ன?

‘‘அதிக கலோரிகள் கொண்ட உணவுகள் எடுத்துக் கொள்வது, மாவுச்சத்து மற்றும் நிறைவுற்ற கொழுப்பு செறிவாக இருக்கும் உணவுகள் எடுத்துக் கொள்வதையும் தவிர்க்க வேண்டும். துரித உணவு வகைகளில் கல்லீரல் சேதத்தை மோசமாக்கும். கல்லீரலில் ட்ரைகிளிசரைடுகளை அதிகப்படுத்தும் டிரான்ஸ்ஃபேட்டைக் கொண்டுள்ளன. இவைகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

பல நிறைசெறிவிலா கொழுப்பு அமிலம், கல்லீரல் என்சைம்களை மேம்படுத்துகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அவை பரிந்துரைக்கப்படுகின்றன. பல மென்பானங்கள் / குளிர்பானங்கள் கொழுப்பாக்கலையும், இன்சுலின் எதிர்ப்புத் திறனையும் மற்றும் கல்லீரல் வீக்க நோயை அதிகரிக்கச் செய்யும் பழ சர்க்கரையைக் கொண்டுள்ளன. இவற்றையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.’’உடற்பயிற்சிகளின் முக்கியத்துவம் பற்றி சொல்லுங்கள்...

‘‘உடற்பயிற்சி உடல் எடையைக் குறைப்பதுடன், கல்லீரல் என்சைம்களின் மேம்பாட்டுக்கும் உதவுகிறது. இதனால் டைப் 2 சர்க்கரை நோய்க்கான அபாயம் குறையும். ஒரு வாரத்தில் 3 முதல் 4 நாட்கள் வரை, குறைந்தபட்சம் 400 கலோரிகளை செலவிடும்படி முறை செய்யப்படும் மிதமான உடற்பயிற்சி கல்லீரல் வீக்கப் பிரச்னைக்கான சிகிச்சையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய சூழலில் இளம் வயதிலேயே கல்லீரல் வீக்கம் மற்றும் வளர்சிதை மாற்றப் பிரச்னையானது அதிகரித்து வருகிறது. இயல்புக்கு மாறான கல்லீரல் என்சைம்கள் உருவாகவும் பொதுவான காரணமாக மாறியுள்ளது. டைப் 2 சர்க்கரை நோய் கல்லீரல் வீக்கத்துக்கான வாய்ப்புக்களை அதிகரிக்கிறது, கல்லீரல் வீக்க நார் டைப் 2 சர்க்கரை நோய்க்கான சூழலை உடலில் உருவாக்குகிறது.

அடையாளம் தெரியாத வகையில் கல்லீரல் செல்களில் கொழுப்பு உட்புகுவதால் இதன் தொடர்ச்சியாக கல்லீரல் இழைநார் வளர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. இப்பிரச்னை இளம் வயதினரை அதிகளவில் பாதிப்பதால் இதற்கான காரணங்களைக் கண்டறிந்து தீர்வு காணவேண்டிய அவசரத் தேவை உருவாகியுள்ளது.’’
 
- யாழ் ஸ்ரீதேவி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-02-2020

  23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • theepam2020

  மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

 • 22-02-2020

  22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • UkraineCoronaProtest

  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

 • puthu2020

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்