SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனநலனுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்!

2019-05-20@ 16:26:43

நன்றி குங்குமம் டாக்டர்

உடலும், உள்ளமும் நலமாயிருப்பதே முழுமையான ஆரோக்கியத்திற்கான அறிகுறி. நீண்டநாள் கழித்து ஒருவரைப் பார்க்கும்போது கேட்கும் முதல் கேள்வி நலமாக இருக்கிறீர்களா என்பதுதான். சிலர் முகம் மலர சிரித்தபடி ‘நலம்தான்... நீங்கள் நலமா?’ என்பார்கள். சிலரோ ‘ஏதோ இருக்கேன் என்றோ, உடம்புக்கென்ன மனசுதான் சரியில்லை’ என்றோ வாடிய முகத்தோடு சொல்வார்கள்.

முந்தைய தலைமுறையைக் காட்டிலும் தொழில்நுட்பம் பொருளாதாரம் என முன்னேற்றம் அடைந்திருந்தாலும், இந்த தலைமுறைக்கு அதற்கு ஈடாக, ஏராளமான மனச்சிக்கல்களுக்கும் குறைவில்லை. முன்பெல்லாம் ஐந்தாறு பிள்ளைகளுக்கு குறைவில்லாமல் இருந்த குடும்பங்களில் கூட கணவன் மனைவி இருவரும் கடுமையான உடல் உழைப்பிற்கு பிறகும் மன அழுத்தம் குறித்து பேசியதே இல்லை.

ஆனால், இன்று ஏசி அறையில் அமர்ந்து வேலை பார்க்கிறோம். மாதமானால் கை நிறைய சம்பளம் வாங்கியும் யார் முகத்திலும் சந்தோஷமேயில்லை . பிள்ளைகள் சேர்ந்தாற்போல் பத்து அடி கூட நடக்காதபடி பார்த்து கொள்கிறோம்; கேட்டதெல்லாம் இரட்டிப்பாய் வாங்கிக் கொடுத்தாலும் எதிலும் அவர்களுக்கு திருப்தியேயில்லை.

யாரைப் பார்த்தாலும் ‘ஒரே ஸ்ட்ரெஸ்’ என்கிறார்கள். மருத்துவர்களும் ‘கொஞ்சம் ஸ்ட்ரெஸ்ஸை குறைங்க’ என்று அறிவுறுத்துகிறார்கள். UKG படிக்கும் குழந்தைக்குக்கூட ஸ்ட்ரெஸ் அதிகரித்துவிட்டதாக மனநல சிகிச்சைக்கு வருகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? குழந்தைக்கு பெயர் சூட்டுவதுபோல் உளவியலாளர்கள் புதிது புதிதாக மன நோய்களை அடையாளப்படுத்துகிறார்கள். எதிர்காலத்தில் நீரிழிவு, இதயநோய் போல மனநல மருத்துவத்தின் தேவை பல மடங்கு பெருகப்போவதாக அறிஞர்கள் கூறுகிறார்கள்.

இந்த நிலை, இவர்களின் வேலையின் தரத்தையும், வேலை செய்யும் திறனையும் பாதிக்கின்றன. உலக அளவில், முப்பது கோடிக்கு மேற்பட்ட மக்கள் மனச்சோர்வாலும், 26 கோடிக்கு மேற்பட்டவர்கள் பதற்ற நிலை பிரச்னைகளாலும் வாழ்கின்றனர்.  தூக்க மாத்திரை எடுத்தால்தான் தூக்கம் வரும் என்ற நிலை பலருக்கு. WHO நிறுவனம் அண்மையில் எடுத்த ஆய்வின்படி, மனச்சோர்வு மற்றும் பதற்றநிலை காரணமாக, ஒவ்வோர் ஆண்டும் உலகப் பொருளாதாரத்தில் நூறாயிரம் கோடி இழப்பு ஏற்படுவதாகவும், இந்தியாவில், நான்கில் ஒருவருக்கு மனநலப் பிரச்சனை உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பணியிடத்திலும், சமூகத்திலும் மனநலம் காக்கப்படுவதன் அவசியத்தை ஐ.நாவும் வலியுறுத்தியுள்ளது. மன நலத்தின் மீதான இந்த திடீர் மாற்றத்திற்கான உளவியல் காரணிகள் மற்றும் மனநலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை மனநல மருத்துவர் லீனா ஜஸ்டின்
விளக்குகிறார்…

வாழ்வியல் மாற்றம் மற்றும் பணியிட சூழல் காரணமாக இந்த தலைமுறைக்கு மன நலத்தின் மீதான அக்கறையும் தேவையும் அதிகரித்துள்ளது. அதேவேளையில், ஏறத்தாழ எல்லோரும் நன்கு படித்திருக்கிற சூழலில், இயல்பாகவே மனநலம் குறித்த புரிதல், சுய மதிப்பீடு, இந்த தலைமுறைக்கு இருந்தாலும், உளவியல் ரீதியான ஆலோசனையோ, மருத்துவமோ பெறுவதில் சில தடைகள் இல்லாமல் இல்லை.

சரி... இவர்களின் இன்றைய மனச்சிக்கல்களுக்கு என்னதான் காரணம்?


முன்பு பெற்றோரின் கடமை வேலை செய்வது, பிள்ளைகளை பராமரிப்பது என்றிருந்தது. குடும்பத்துடன் செலவழிக்க நிறைய நேரம் அவர்களுக்கிருந்தது. ஆனால், இன்றோ பெற்றோரும் தங்கள் தொழில்சார்ந்த அறிவில் அப்டேட்டாக இருக்க நிறைய கற்றுக் கொள்ள வேண்டியிருப்பதுடன், பணியிடத்தில் சாதனைகள் செய்ய வேண்டிய தேவையும் அவர்களுக்கிருக்கிறது. பிள்ளைகளும் கடும் போட்டிக்கு நடுவே படிக்க வேண்டியுள்ளது. அவரவர் போராட்டமே பெரிதாக தோன்றுவதால், ஒருவருக்கொருவர் உரையாடுதலும் இல்லை, உறவாடுதலும் இல்லை. விளைவு மன நோய்கள்.

பிள்ளைகள் பள்ளியிலும் பெற்றோர் அலுவலகத்திலும் நேர மேலாண்மையை பாடமாக படித்தும், கையாள முடியாமல் அவசர அவசரமாய் ஓடிக்கொண்டிருக்கிறோம். காரணம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சவால். சவால்களில் தோற்கும் ஒவ்வொரு முறையும் மன அழுத்தம். நீ பிறந்ததே மற்றவர்களை ஜெயிக்கத்தான் என்பதைதான் உலகம் நமக்கு அழுத்தமாக சொல்கிறது. நாம் ஜெயிக்கப் பிறக்கவில்லை வாழப்பிறந்தோமென மறந்து போனோம். வெற்றியை நோக்கி ஓட ஓட எல்லாவற்றிலும் ஒரு பதற்றம் பிறகு மனபதற்ற நோய்
வராமல் எப்படியிருக்கும்?

மனநலம் உடல்நலத்தைப் போல முக்கியமானதா?

கண்டிப்பாக மனநலம் உடல் நலத்தைப் போல முக்கியமானதே. ஏனெனில், உடலும் மனமும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை. உடலுக்கு
ஏதாவது ஏற்பட்டால், உடனே மனதை பாதிக்கும்; அதே போல் மனதுக்கு ஏதாவது ஏற்பட்டால் அது உடலை பாதிக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு விஷயத்தை பார்த்து பயந்தால் உடனே கைகால் நடுக்கம், வியர்வை என உடலில் வெளிப்படுவதுபோல் மனப்பதற்றத்தில் இருப்பவர், யார் கண்ணையும் நேருக்கு நேராக பார்த்து பேச தயங்குவார், வியர்த்தல், இதயத்துடிப்பு அதிகரித்தல், மூச்சின் வேகம் அதிகரித்தல், மல ஜலம் கழிக்க உந்துதல் போன்ற பல விளைவுகள் மனதில் ஏற்படும் பதட்டத்தால் வருபவை. ஒவ்வொரு உடல் உறுப்பும் ஒவ்வொரு மனநலம் சார்ந்த பிரச்னையால் பாதிக்கும். இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள விஷயம்.

நமது மனநலத்தைச் சார்ந்தே,  நமது செயல்திறன் மேம்படும். நமது தினசரி வேலைகளை கவனமுடன் சிறப்பாக செய்ய நல்ல மனநலம் அவசியம். மனநலம் முக்கியமானது என தெரிந்தும், உடலுக்கு ஏதாவது வந்தால், உடனே ஓடிச்சென்று மருத்துவரை பார்ப்பது போல் நாம் ஏன் மன நலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை? மனநல மருத்துவர்களை அணுகுவதில்லை? இதற்குக் காரணம் பைத்தியக்கார்கள்தான் மன நல மருத்துவர்களிடம் செல்வார்கள் என்ற தவறான கருத்து நம் சமுதாயத்தில் பரவலாக உள்ளது.

எப்படி பற்களை பராமரிக்க பல் மருத்துவரையும், இதயப் பிரச்னைகளுக்கு இதய நிபுணரையும் ஒவ்வொரு உறுப்புக்கும் அதைச்சார்ந்த சிறப்பு நிபுணர்களை சந்திக்கிறோமோ, மனதை பராமரிக்க மனநல ஆலோசகர்களையோ, மருத்துவர்களையோ சந்திப்பதில் தவறொன்றும் இல்லை. உண்மையில் அவர்களைச் சந்திப்பது, உங்கள் மன நலம் பற்றி உங்களுக்கிருக்கும் அக்கறையைத்தான் காண்பிக்கிறது. மற்றவர்கள் உங்களை கேலி செய்தால், ‘நான் நன்றாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன்’ என்று தைரியமாக சொல்லுங்கள்.

உளவியல் ஆலோசனை என்றால் என்ன?

உளவியல் ஆலோசனை என்பது ஒரு கலந்துரையாடல் போன்றது. முன்பெல்லாம் வீட்டிலுள்ள பெரியவர்கள் கலந்தாலோசிப்பார்கள். நாமும் பெரியவர்களிடம் நம் பிரச்னையைப்பற்றி பேசுவதும் இல்லை. அவர்கள் நம் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிப்பதும் இல்லை. இதனால் உள்ளுக்குள்ளேயே அடக்கி, அடக்கி சண்டை சச்சரவுகள் அல்லது பிரிவு என பூதாகரமாகிவிடுகிறது.

ஒவ்வொரு மனிதனும் அவரவர் பிரச்சனைகளை எதிர்கொள்ள வலிமையுள்ளவர்களாக இருந்தாலும், அந்த வலிமையை மேலும் பலப்படுத்துவதே உளவியல் ஆலோசனையின் குறிக்கோள்.  உளவியல் ஆலோசனையின் போது, அறிவுரைகள் வழங்கப்படுவதில்லை; மாறாக, உங்களின் வாழ்வை மேலும் சிறப்பாக வாழ, உங்கள் பிரச்சனைகளை நீங்களே தீர்த்துக்கொள்ள வழி ஏற்படுத்தித்தரும் உளவியல் பூர்வமான உதவியே உளவியல் ஆலோசனை.

உளவியல் ஆலோசகர் என்பவர் யார்?

உளவியல் (Psychology), சமூகப்பணி (Socialwork), ஆற்றுப்படுத்துதல் & வழிகாட்டுதல் (Counselling & Guidance) ஆகியவற்றில் நிபுணத்துவம் உள்ள ஒருவர் எந்த பாகுபாடும், நிபந்தனையுமின்றி, உங்கள் பிரச்னைகளை வைத்து உங்களை தவறாக நினைக்காமல், உங்களை அப்படியே ஏற்றுக்கொண்டு, குறிப்பிட்ட சில உளவியல் முறைகளை பயன்படுத்தி உங்களை மேம்படுத்தவும், உங்கள் பிரச்னைகளை தீர்க்கவும், பின்னால் வரக்கூடும். பிரச்னைகளை தடுத்துக் கொள்ளவும் உதவி செய்பவர்.

உளவியல் ஆலோசனையின் தேவை என்ன?

நாம் ஒவ்வொருவரும், வாழ்க்கையின் சவால்களை யாருடைய துணையுமின்றி, நாமே எதிர்கொள்ளும் சக்தி உடையவர்கள் என நம்பினாலும், சில நேரங்களில் மற்றவரிடம் உதவி பெறுவது என்பது நடைமுறை அவசியமாகிறது. இன்னும் சொல்லப்போனால், ‘தன்னால் முடியாத போது அதை ஒப்புக்கொண்டு மற்றவரிடம் உதவி கேட்பது’ ஒரு தனிமனிதனின் பலம் என்றே சொல்லலாம்.எப்போதெல்லாம் ஒருவருக்கு உளவியல் ஆலோசனை தேவைப்படும்?

* அளவுக்கு அதிகமான மன உளைச்சல் இருந்து, அது தினசரி வாழ்க்கையை பாதிக்கும் போது

* மனதை சூழ்ந்து கொண்டு கட்டாயப்படுத்தும் எதிர்மறையான, ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் முறையற்ற எண்ணங்கள் எழும்போது

* மன அழுத்தத்துடன் சமாளிக்க இயலாமை

* மண வாழ்க்கை, குடும்பம், நண்பர்கள், அலுவலகம் ஆகியவற்றில் உள்ள உறவுகளில் பிரச்சனைகள், விரிசல்கள் ஏற்படும்போது

* படிப்பு/ வேலையில் பிரச்சனைகள்/குழப்பம் வரும்போது

* நீடித்த மனச்சோர்வு, பயம்/கவலை

* தூக்கமின்மை/அதிக தூக்கத்தால் வேலைத் திறன் பாதிக்கப்படும்போது

* வாழ விருப்பம் குறையும்போது  சொல்ல நினைத்ததை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதில் பிரச்னை ஏற்படும்போது

* பிடித்த விஷயத்தை செய்யாமல் இருப்பது, திறன் குறைவது, நியாயமில்லாமல் நடந்து கொள்ள முற்படும்போது

* தற்கொலை எண்ணம், தன்னைத்தானே காயப்படுத்தும் எண்ணங்கள் ஏற்படும்போது

என்னால் எழுந்து சாப்பிடக்கூட முடியவில்லை. எதையும் சிந்திக்க முடியவில்லை, என்னுடைய தினசரி வேலையை பாதிக்கிறது. என்ற நிலை வரும்போது ஒருவர் கண்டிப்பாக மனநல ஆலோசனை பெறுவது முக்கியம்.

உளவியல் ஆலோசகரிடம் ஆலோசனை பெறவேண்டிய அவசியம் என்ன?

நண்பர்கள், நலன் விரும்பிகள், உங்கள் வாழ்க்கையின் முக்கிய நபர்களுடன் பேசுவது உங்கள் பிரச்னைகளை தீர்க்கவும், வாழ்வை மேம்படுத்தவும் உதவ முடியும், என்றாலும், அதில் சில பிரச்னைகள் உள்ளன. அவர்களால் உங்கள் பிரச்சனைகளை நடுநிலையுடன் பார்க்க முடியாமல் போகலாம்.

உங்களை வெகு காலமாக அவர்களுக்கு தெரியும் என்பதால், நீங்கள் எப்படிப்பட்டவர்? என்பது போன்ற எண்ணங்கள் அவர்களுக்கு இருக்கலாம் என்பதால், அவர்களின் சொந்தக் கருத்துக்களை, அனுபவங்களை உங்கள் வாழ்க்கை பிரச்னைகளுக்கு தீர்வாக சொல்ல வாய்ப்பு அதிகம்.

உளவியல் ஆலோசகரிடம் செல்லும்போது, முதலில் நீங்கள் எவ்விதமான ஆளுமை உடையவர் என்பதை கண்டறிந்து, உங்களுக்கேற்ற சிகிச்சை முறையை தேர்ந்தெடுத்து கொடுப்பார். உங்களையும் உங்கள் பிரச்சனைகளையும் உளவியல் ரீதியான, நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை அடிப்படையாய் வைத்து, ஒரு மாறுபட்ட கண்ணோட்டத்தோடும், நடுநிலைமையுடன் உங்களுக்கு உதவுவார். அப்போது, நீங்கள் புதிய மாறுபட்ட  முறையில் சிந்தித்தும், சரியான முறையில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தியும், உங்கள் தினசரி வாழ்வின் பிரச்சனைகள், இழப்புகள், கருத்து வேறுபாடுகளை சரி செய்ய முடியும்.

மனநல மருத்துவருக்கும், உளவியல் ஆலோசகருக்கும் என்ன வேறுபாடு?

மனநல மருத்துவர்(Psychiatrist) என்பவர் மனநோய்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடியவர். மருத்துவத்தோடு, மனநல மருத்துவத்தையும் படித்தவர்கள். நரம்பு உளவியலை (Neuro Psychology)யை மூளை அறிவியலாக படித்தவர். ஒருவர் மனஅழுத்தம் என்று வரும்போது, மூளை நரம்பு மண்டலத்தில் எந்தெந்த செல்கள்தூண்டுகிறது என்பதை கண்டுபிடித்து அதை மருந்து செயலிழக்கச் செய்பவர். மனம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு மருந்து மூலம் சிகிச்சை அளிப்பவர்.

உளவியல் ஆலோசகர் என்பவர் மனதில் ஏற்படும் சலனங்களை, தினசரி பிரச்சனைகளை தீர்க்க உதவுபவர். சில நேரங்களில் மனநல மருத்துவரும், உளவியல் ஆலோசகரும் ஒரே மாதிரியான பிரச்சனைகளை கையாண்டாலும்,  இருவரின் சிகிச்சை முறைகளும் வேறுபட்டவை. உளவியல் ஆலோசகர் என்பவர் உங்களின் பிரச்சனைகளை வரையறுத்து, உங்களை தெளிவாக சிந்திப்பதைத் தடுக்கும் தடைகளை கண்டுபிடிக்கக் கூடியவர்.

அந்த குறிப்பிட்ட தடைகளை போக்க, உங்களுடனும், தேவைப்பட்டால் குடும்ப உறுப்பினர்களுடனும், இணைந்து, நடைமுறைக்கு ஒத்துவரும் உளவியல் பூர்வமான தீர்வுகளை கண்டுபிடிக்க உதவுபவர். மனச்சிதைவு, மனச்சோர்வு, அடிமைப் பழக்கங்கள் போன்ற சில மனப்பிரச்னைகளுக்கு மனநல மருத்துவரும், உளவியல் ஆலோசகரும் இணைந்து சிகிச்சை அளிப்பதுண்டு.

பிரச்னைகள் தொடர்ந்து தீர்க்கப்படாமல் இருந்தால், உங்களுக்குத் தெரியாமலேயே பிரச்னைகள் விஸ்வரூபம் எடுத்து, உங்கள் அன்பிற்குரியவர்களையும், உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களையும் பாதிக்கக்கூடும். அந்த பாதிப்பு உங்கள் வாழ்க்கையில் பெரிய விளைவை ஏற்படுத்தக்கூடும். உரிய நேரத்தில், மனநல ஆலோசகரின் ஆலோசனைகளையும், மனநல மருத்துவரிடம் சிகிச்சையும் எடுத்துக் கொள்ளும்போது பேராபத்திலிருந்து உங்களை காத்துக் கொள்ளலாம்.

- என்.ஹரிஹரன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்