SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதலுதவி செய்ய கற்றுக்கொள்!

2018-06-11@ 14:29:03

இந்தியாவில் சாலை விபத்து என்பது நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே போகும் துயரமாக மாறியுள்ளது. ஆண்டுதோறும் மொத்தம் ஐந்து லட்சம் சாலை விபத்துகள் வரை நடக்கின்றன என்றும் அதில் சுமார் ஒன்றரை லட்சம் விபத்துகளில் உயிர் பலி நேர்கிறது என்றும் சொல்கிறது ஒரு புள்ளிவிவரம். ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஐம்பத்தைந்து விபத்துகள். அதனால் பதினேழு உயிர் பலிகள் நேர்கின்றனவாம். விபத்துகளில் சரியான நேரத்தில் சிகிச்சை கொடுத்தால் உயிர் பலியைத் தவிர்க்கலாம் என்கிறார்கள். சிலருக்கு விபத்து நடந்ததுமே சிகிச்சை தர வேண்டியது அவசியம்.

இப்படியான சூழ்நிலைகளில் முதலுதவிகளே பல உயிர்களைக் காத்திருக்கின்றன. இங்கு பலருக்கும் விபத்து நேரத்தில் உதவ வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் எப்படி முதலுதவி செய்வது எனத் தெரியாமல் குழம்பி அதைத் தவிர்க்கிறார்கள். சிலர், தவறான முதலுதவிகள் செய்து பிரச்சனையை மேலும் சிக்கலாக்குகிறார்கள். இதனால் அநியாயமாக உயிரே போய்விடவும் நேர்கிறது. விபத்து காலத்தில் என்ன மாதிரியான முதலுதவி செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு இன்று அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. இதோ இங்கு சில உயிர் காக்கும் முதலுதவிகள்…

விபத்தில் ஏற்படும் ரத்தப்பெருக்கு

விபத்துகளில் ரத்தப் பெருக்குதான் பெரிய பிரச்சனை. ரத்தம் பெருகும்போது பாதிக்கப்பட்டவர், முதலுதவி செய்பவர் இருவருக்குமே பதற்றம் அதிகமாகிவிடுகிறது. விபத்துகளில் காயம் ஏற்பட்டு ரத்தம் நிற்காமல் கொட்டும்போது, முதலில் காயம் எந்த பகுதியில் என்று கண்டறிய வேண்டும். அந்த பகுதி ஆடையால் மூடி இருந்தால் அதனை முதலில் அகற்ற வேண்டும். பிறகு ரத்தத்தை சுத்தமான பஞ்சு அல்லது துணியினால் துடைத்துவிட வேண்டும்.ரத்தத்தைத் துடைத்த பிறகு, வேறொரு பஞ்சு அல்லது மென்மையான சுத்தமான துணியை ரத்தம் பெருகும் இடத்தின் மேல் நேரடியாக வைத்து சில நிமிடங்களுக்கு அழுத்திப் பிடிக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதால், காயம்பட்ட இடத்தில் உள்ள பிளாஸ்மாக்கள் ரத்த உறைதலை ஏற்படுத்தி, ரத்தப்பெருக்கைக் கட்டுப்படுத்தும். சிலருக்கு, காயத்தின் தன்மையைப் பொருத்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வரை ரத்தப்பெருக்கு நிற்காது. சிலர், சில விநாடிகள் மட்டும் அழுத்திப்பிடித்துவிட்டு ரத்தம் வருகிறதா என எடுத்துப்பார்ப்பார்கள் இது தவறு. தொடர்ந்து சில நிமிடங்களோ அல்லது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வரையோ இப்படி அழுத்திப் பிடித்துச் செல்ல வேண்டியது இருக்கும். ரத்தப் பெருக்குக்கு முறையான முதலுதவி செய்தாலே பல உயிர் பலிகளை நாம் தடுத்துவிட முடியும்.

முன்கை உடைதல் (Forearm fracture)


முன்கை உடைவு ஏற்பட்டால், அதன் அறிகுறியாக கை பெரிதாக வீங்கும், தாங்க முடியாத வலியால் துடிப்பார்கள். கையை அசைக்கக்கூட முடியாது. கைவீங்கி இருந்தால் அது உடைவாக இருக்கலாம். எனவே, கையை உதறவோ அமுக்கிப் பார்க்கவோ கூடாது. உடைந்த கையின் அடிப்பாகத்தை கட்டுப்போடும் வரை, மற்றொரு கையால் தாங்கிப் பிடிக்க வேண்டும்.உடைந்த கையின் அடிப்பாகத்தில் அடிஸ்கேல் அல்லது பட்டையான கம்பை வைக்க வேண்டும். பிறகு, கைக்குட்டை அல்லது துணியால் இரண்டு பக்கமும் கட்ட வேண்டும்.

பிறகு, சட்டையின் நெஞ்சுப்பகுதியில் உள்ள பட்டனைக் கழற்றி, கட்டுப்போட்ட கையைச் சட்டைக்குள்வைத்து, மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். தொட்டில் கட்டு போடுவதற்குப் பதிலாக இந்த முறை உதவும்.இன்னொரு முறையிலும் தொட்டில் கட்டு போடலாம். அதாவது, உடைந்த கையின் கீழ்புறம் அடிஸ்கேல் அல்லது பட்டையான குச்சியை வைத்து இரு புறமும் கட்டிய பிறகு, சட்டையின் கீழ் பகுதி பட்டன்களைக் கழற்ற வேண்டும். பிறகு கட்டுப்போட்ட கையை நெஞ்சின் மீது வைத்து, சட்டையின் பட்டன் துளையுள்ள நுனியைத் தூக்கி, நெஞ்சுப் பகுதியில் உள்ள பட்டனில் பொருத்த வேண்டும். அதன் மேல் வைத்து, சட்டையின் கீழ் பட்டன் துளையை நெஞ்சுப்பகுதியில் உள்ள பட்டனோடு சேர்த்துப் பொருத்த வேண்டும்.

முழங்கை உடைதல்

விபத்தினால், கை மூட்டுகள் விலகுவதையும், மூட்டுகளின் லிகமென்ட் கிழிவதையும் முழங்கை உடைதல் என்கிறார்கள். முழங்கை உடைந்திருப்பதன் அறிகுறி, அந்தப் பகுதி வேகமாக வீங்குவதுதான். மேலும், கையைத் தூக்க முடியாதபடிக்கு வலி மிக மோசமாக இருக்கும். முழுங்கை கை வீங்கி இருந்தாலும் கையை உதறுவது போன்றவற்றை செய்ய முயலக் கூடாது. மறுகையால் முழங்கையை தாங்கிக்கொள்ள வேண்டும்.

கையை மடித்து அளவுகோல்  அல்லது பட்டையான குச்சியின் ஒரு நுனியை புஜத்திலும் மற்றொரு நுனியை மணிக்கட்டிலும் வைத்து, இரு நுனிகளையும் கைக்குட்டை அல்லது துணியால் கட்ட வேண்டும்.பெல்டைக் கழுத்தில் மாட்டி கட்டப்பட்ட அடிஸ்கேல் அல்லது குச்சியை பெல்டுடன் சேர்த்து கட்ட வேண்டும். இதைத் தொட்டில் கட்டு என்பார்கள். தொட்டில் கட்டு கட்டியபின் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

கழுத்து முறிவு (Cervical injury)

விபத்துகளில், கழுத்துமுறிவு ஏற்படுவது உயிருக்கே ஆபத்தாகவும் முடியக்கூடும். பெரிய விபத்துகளில் சிக்கியவர்களுக்கு, கழுத்துமுறிவு ஏற்பட்டிருக்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே, அவர்களுக்கு தகுந்த
முதலுதவி அளிப்பது மிகவும் முக்கியம்.கழுத்து முறிவு ஏற்பட்டவர்களை முதலில் மல்லாக்கப் படுக்க வைத்து, தலையை நேராக வைக்க வேண்டும். நமது கை விரல்களை அடிபட்டிருப்பவரின் கழுத்தின் அருகே வைத்து, விரித்துப்பார்த்து கழுத்தின் நீளத்தை தோராயமாக அளந்துகொள்ள வேண்டும்.

பிறகு, இரண்டு மூன்று பக்க செய்தித் தாள்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றை ஒன்றன் மீது ஒன்றாக வைத்து, கழுத்து அகலத்துக்கு மடிக்க வேண்டும்.மடிக்கப்பட்ட செய்தித்தாளை ஒரு அகலமான துணி அல்லது போர்வையில் வைத்து, போர்வையை அதே அகலத்துக்கு மடித்துக்கொள்ள வேண்டும். காகிதம் உள்ளே வைத்துச் சுற்றப்பட்ட இந்தப் போர்வை நெக் பேண்ட் போல செயல்படும்.அடிபட்டிருப்பவரின் தலையைத் தூக்கி, மடிக்கப்பட்ட போர்வையை கழுத்தின் அடிபாகத்தில் வைத்து, போர்வையால் கழுத்தை நெக்பேண்ட் போல சுற்ற வேண்டும். மருத்துவமனை செல்லும் வரை இந்த நெக்பேண்டை அவிழ்க்க முயலக் கூடாது.

முதுகெலும்பில் அடிபடுதல் (Spinal injury)


கழுத்து முறிவைப் போலவே முதுகெலும்பில் அடிபடுவதும் மிகவும் சிக்கலான விபத்துதான். முதுகெலும்பில் அடிபட்டிருப்பவரால், எழுந்து அமரக்கூட முடியாது, வலி மோசமாக இருக்கும். வீக்கம் தெரியாது என்றாலும் எழுந்து, அமரவே சிரமப்படுகிறார்கள் எனில் முதுகெலும்பு பாதிக்கப்பட்டிருக்கிறது எனப் புரிந்துகொள்ளலாம். முதுகெலும்பு பாதிக்கப்பட்டிருப்பவர்களை, சிரமப்படுத்தி அமரச்செய்யவோ, அப்படியே கைகளாலோ, தோளில் போட்டோ தூக்கிக்கொண்டு வரக் கூடாது. இதனால், பாதிப்பு மேலும் மோசமாகி உயிருக்கே ஆபத்தாகவும் மாறக்கூடும்.
முதுகெலும்பு பாதிக்கப்பட்டவரை சமதளமான பலகை அல்லது ஸ்ட்ரெச்சர் ஒன்றில் மல்லாக்கப் படுக்கவைத்துதான் கொண்டுவர வேண்டும். முதுகெலும்பு பாதிக்கப்பட்டவருக்கு, இரண்டு மூன்று பேராகத்தான் உதவி செய்ய முடியும். கொஞ்சம் பருமனானவர்களுக்கு நான்கு பேர் தேவைப்படும்.

அடிபட்டவரை நேராகப் படுக்கவைக்க வேண்டும். பிறகு, அடிபட்டவரின் தோளை ஒருவர் பிடித்துக்கொண்டும், கால் பகுதியை இன்னொருவர் பிடித்துக்கொண்டும் அவரை ஒருபுறமாகச் சாய்க்க வேண்டும். அப்போது மற்றொருவர் பலகையை அடிபட்டவருக்கு கீழ்புறம் செருகி, அதில் அடிபட்டவரை சாய்த்து பலகையின் மீது படுக்கும்படி செய்ய வேண்டும். இப்போது, தலைப்பகுதியை ஒருவர் கால்பகுதியை ஒருவர் என பலகையோடு தூக்கியபடி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

கால்முறிவு (Leg injury)

கால் முறிவு ஏற்பட்டவர்களுக்கு, அந்தப் பகுதி சட்டென வீங்கிவிடும். கால்முறிவு ஏற்பட்டிருப்பவர்களை நாற்காலியில் உட்கார வைக்கக் கூடாது. அவர்களை தரையில் படுக்கவைத்தே முதலுதவிகள் செய்ய வேண்டும்.
அடிபட்டவரை மல்லாக்கப் படுக்க வைக்க வேண்டும். நீளமான தட்டையான கம்பு ஒன்றை, அடிபட்ட காலோடு சேர்த்துவைத்து, கைக்குட்டை அல்லது துணியால் மூன்று இடங்களில் கட்ட வேண்டும். கம்பு கிடைக்கவில்லை என்றால், அடிபட்ட காலை மற்றொரு காலோடு சேர்த்தும் கட்டலாம். கட்டுப்போட்ட பின்பு அடிபட்டவரை படுக்கவைத்த நிலையிலேயே மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். கைகளால் தூக்கிக்கொண்டு வரக் கூடாது. ஸ்ட்ரெச்சர் அல்லது மரப்பலகையில் படுக்கவைத்துக் கொண்டு செல்வது நல்லது.

கணுக்கால் மூட்டு முறிவு

கணுக்கால் மூட்டு முறிவு ஏற்பட்டவர்களை முதலில் படுக்க வைக்க வேண்டும். பிறகு, கணுக்காலுக்கு அடியில் தலையணை ஒன்றை வைக்க வேண்டும். பிறகு, அந்தத் தலையணையைக் கணுக்காலோடு சேர்த்து கட்ட வேண்டும். இவர்களை நடக்க வைக்கக் கூடாது. ஏதேனும் ஒரு வண்டியில் அமரவைத்தோ, படுக்க வைத்தோ மருத்துவமனைக்குக் கொண்டு வரலாம். அடிபட்ட பாதத்தை ஊன்றாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

சிறிய விபத்துகள், பிரச்சனைகளுக்கான
முதலுதவிகள்


சாலை விபத்துகள் போலவே வேறு சின்ன விபத்துகளும் சிக்கலானவைதான். சில சமயங்களில் இதுவே பெரிய பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கக்கூடும் என்பதால் அப்படியான சமயங்களில் என்ன மாதிரியான முதலுதவி செய்வது என்பதையும் பார்த்துவிடுவோம்.

பூச்சிக்கடி, தேனீ கொட்டுதல்


பூச்சிக்கடியால் வலி மற்றும் அலர்ஜி ஏற்படும். தேனீ கடித்தால், கடித்த இடத்தில் தேனீயின் கொடுக்கைப் பிய்க்கக் கூடாது. அந்த இடத்தில் அழுத்தக் கூடாது. ஏனெனில், தேனீயின் கொடுக்கு வளைந்து இருக்கும், பிய்த்தெடுக்க முயலும்போது, கொடுக்கின் நுனி உடைந்து உள்ளே சென்றுவிட வாய்ப்பு உள்ளது. இதனால்,  தேனீயின் விஷம்
உடலுக்குள் சென்றுவிடும். எனவே, ஒரு மெல்லிய அட்டையை (விசிட்டிங் கார்டு, சீட்டுக் கட்டு அட்டை)  எடுத்து தேனீயின் கொடுக்கு இருக்கும் இடத்தில் வழித்துவிட  (ஸ்க்ரேப்)  வேண்டும்.

தேனீ கடித்து வலி இருந்தால் வலி மாத்திரை சாப்பிடலாம். கடித்த இடத்தில் ஐஸ் பேக் வைக்க வேண்டும். தேனீ கடித்து வெகு சிலருக்கு அலர்ஜி காரணமாக மூச்சுக்குழாய் வீக்கம் ஏற்படலாம், மூச்சுக்குழாய் வீக்கம் ஏற்பட்டால், திடீர் இதயத் துடிப்பு முடக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. எனவே, ஐஸ் பேக் வைத்த பிறகு, விரைவாக மருத்துவமனை வந்து பரிசோதித்துக்கொண்டு தேவைப்பட்டால் சிகிச்சை எடுப்பதன் மூலம் மரணத்தைத் தடுக்க முடியும்.

பாம்புக் கடி


இந்தியாவில் ஒரு சில பாம்புகள்தான் மரணம் சம்பவிக்கும் கொடு விஷம் உடையவை. தண்ணீர் பாம்புகளுக்கு கொடு விஷம் இல்லை. எனவே, பாம்பு கடித்தால் பதற்றப்படக் கூடாது. பாம்புக் கடியின் போது அந்த இடத்தில் கட்டுப்போடுகிறார்கள். இது தவறு. வாய்வைத்து விஷத்தை உறிஞ்சவும் வேண்டாம். இது இருவருக்குமே ரிஸ்க். அதுபோலவே, கூரான ஆயுதங்கள் கொண்டு அந்த இடத்தைக் கீறவும் கூடாது. இதனால் கடித்த இடம் தெரியாமல் போகும், இரும்பு துருப் பிடித்திருந்தால் இன்னும் சிரமம்.

கடிபட்ட இடத்தை ஓடும் குழாய் நீர் அல்லது வாய்க்கால் நீரில் சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
பாம்பு கொத்திய இடத்தை இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் கடிக்குள்ளானவரை கிடையாகப் படுக்க வைத்து ஆறு மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்குச் சேர்க்க வேண்டும். நடக்க வைத்து அழைத்துச் செல்ல வேண்டும். இதனால் விஷம் வேகமாகப் பரவும். ஆறு மணி நேரம் என்பது காலில் கடித்தால் என்பதைக் கொண்டு சொல்லும் கணக்கு இதயத்தின் அருகில் என்றால் விஷம் மேலும் வேகமாகப் பரவும்.

தேள் கடி

நமது ஊரில் உள்ள  தேள்களில்  உயிரிழப்பை ஏற்படுத்தும் விஷம் இல்லை. தேள்  கடித்தால் விஷம் ஏறாது. எனவே பயப்படத் தேவை இல்லை. தேள் கடித்தால் வெகு சிலருக்கு இதயத்துடிப்பு சீராக இருக்காது. குழந்தைகளுக்கு  மட்டும் தேள் கடித்தால் இதயத் துடிப்பில் பெரும் மாறுதல் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, மருத்துவமனையில் ஒருமுறை பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

அனபிளாக்சிஸ் (Anaphylaxis)

சிலருக்கு சில வயதில் இருந்து முட்டை, பால், பட்டாணி  ஆகியவை அலர்ஜியாக இருக்கக் கூடும். இவர்கள் அந்த பொருளைத் தொட்டாலே மூச்சுக்குழாயில் வீக்கம் ஏற்பட்டு,  பத்துப் பதினைந்து  நிமிடத்தில் உயிர் இருக்காது. இந்தப் பிரச்னைக்கு ‘அனபிளாக்சிஸ்’ என்று பெயர். இது ஒரு விதமான அலர்ஜி நோய். இவர்களுக்கு உடனடியாக அட்ரிலின் ஊசி போட வேண்டும்.

இந்த அலர்ஜியைச் சிறுவயதில் கண்டுபிடித்து விட்டால், எப்போதும் உடன் இந்த அட்ரிலின் ஊசியை வைத்துக்கொள்ளவேண்டும். தனக்கே தெரியாமல் குறிப்பிட்ட பொருளைத் தொட்டால்கூட, இந்தப் பிரச்னை ஏற்படும். இந்த சமயங்களில் இந்த ஊசி உயிர் காக்கும். ஆயிரத்தில் இருவருக்கு இந்தப் பிரச்னை காணப்படுகிறது. பெரும்பாலும், இவர்களுக்கு நண்டு முதலான கடல் வாழ் உணவுகள், பட்டாணி போன்றவற்றால் இந்த அலர்ஜி ஏற்படுகிறது. இந்த  அலர்ஜி இருப்பவர்கள்  வாழ்நாள் முழுவதும்  அலர்ஜி
ஏற்படுத்தும் பொருளைத் தொடவே கூடாது
 
மயக்கம்


பசி, சோர்வு, ரத்ததானம் செய்தபின் ஏற்படும் தளர்வு ஆகியவற்றால் சிலர், திடீ ரென மயங்கி விழுவார்கள். இது சாதாரண மயக்கமா? திடீர் இதயத்துடிப்பு முடக்கமா (Suddern cardiac arrest) என்பதை முதலில் கண்டறிய வேண்டும்.மயக்கம் அடைந்தவர்களை காற்றோட்டமான சூழலில் மல்லாக்க படுக்க வைக்க வேண்டும். பிறகு, அவர்களின் கால்களை சற்று நேரம் உயர்த்திப் பிடிக்க வேண்டும். பிறகு, உயரமான இரண்டு தலையணைகளின் மேல் அவர்களின் கால்களை வைக்கலாம். இவ்வாறு செய்யும்போது போதுமான ரத்த ஓட்டம் அவர்களின் மூளைக்குச் சென்று ஒருசில நிமிடங்களில் அவர்களுக்கு இயல்பாகவே நினைவு திரும்பிவிடும்.தலையணை இல்லாவிடில் நாற்காலியிலும் கால்களை வைக்கலாம். மயக்கத்தில் இருக்கும்போது வாயில் ஏதும் புகட்ட முயலக் கூடாது. முகத்தில் தண்ணீர் தெளிப்பதாலும் எந்தப் பலனும் இல்லை.

- இளங்கோ கிருஷ்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • sabarimalai-3

  பக்தர்களின்றி வெறிசோடி காணப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்!: புகைப்படங்கள்

 • rainpurevi111

  தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

 • radish3

  புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்!: புகைப்படங்கள்

 • farmers_proteeee11

  மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்!!

 • 03-12-2020

  03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்