SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நலம் தரும் சிறுதானியங்கள்

2017-12-11@ 14:25:33

தினை: உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் இரண்டாவது தானியம் இதுதான். தினையில் உலக உற்பத்தியில் சீனா முதல் இடம் வகிக்கிறது. நாம் இரண்டாம் இடம் வகிக்கிறோம். இது தெற்கு ஆசியாவில் சுமார் 10,000 வருடங்களுக்கு மேலாகப் பயிரிடப்பட்டு வருகிறது. தினைக் கதிர்கள் நரி வாலைப் போன்ற தோற்றத்தில் இருப்பதால் இதை ஆங்கிலத்தில் Fox Tale Millet என்று சொல்கிறார்கள். இறடி, ஏறல், கங்கு என்ற வேறு பெயர்களும் இதற்கு உள்ளன. தினையைப் பயிரிட வடிகால் வசதியுள்ள மணல் பாங்கான மண் வளம் தேவை. 70 நாளில் கதிர்பிடித்து 90 நாளில் கதிர் முற்றி அறுவடைக்குத் தயாராகிவிடும். ஆடி, ஆவணி பட்டங்கள் இதற்கு ஏற்றவை.  வைட்டமின் பி ஊட்டச்சத்தும் பாஸ்பரஸ், கால்சியம் போன்ற தாது உப்புக்களும் நிறைந்த இது எலும்புகளை வலுவாக்கும். குடல் புண், வயிற்றுப் புண்களை குணமாக்கும். செரிமானத்தை மேம்படுத்தும். தினையில் இட்லி, தோசை, பொங்கல், அதிரசம், முறுக்கு ஆகியவை செய்யலாம்.

சாமை: சாமை ஒரு புன்செய் நிலப் பயிராகும். இதைப் பயிர் செய்ய ஆடி, ஆவணிப் பட்டங்கள் ஏற்றவை. இது 80ம் நாளில் கதிர்பிடித்து, 100-110 நாட்களுக்குள் கதிர் முற்றி அறுவடைக்குத் தயாராகிவிடும். சாமையில் இரும்புச்சத்து, வைட்டமின் பி, புரதச்சத்து நிறைந்துள்ளது. எலும்புகளுக்கு இடையில் உள்ள தசைகளை வலிமை பெறச் செய்கிறது. மலச்சிக்கலை நீக்கி செரிமானத்தை மேம்படுத்தும். இனப்பெருக்க உறுப்புகளை வலுவாக்கும். தாது கெட்டிப்படும். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. சாமையில் பொங்கல், உப்புமா, பிரியாணி போன்றவை செய்யலாம். சாமை நெல்லரிசி போன்றே பயன்படுத்த ஏற்றது. கைக்குத்தலாக உமி நீக்கி பயன்படுத்தும்போது இதன் நார்ச்சத்துக்கள் முழுமையாக நமக்குக் கிடைக்கும்.

வரகு: வரகின் விதை ஆயிரம் வருடங்கள் வரை முளைப்புத் திறன் கொண்டது என்கிறார்கள். மனிதன் ஆதி காலம்தொட்டே வரகைப் பயன்படுத்தி வந்திருக்கிறான். வரகுக்கு ஏழு அடுக்குத் தோல் உண்டு. இந்த தானியத்தை பறவைகளாலும் விலங்குகளாலும் உண்ண முடியாது. வரகை கோயில் கோபுரங்களில் உள்ள கும்பத்தில் போட்டிருப்பார்கள். இதற்கு இடியையும் தாங்கும் வலிமை உள்ளது என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது. களர் மண்ணில்கூட சிறப்பாக வளரும் பண்புடையது இது. ஆடிப்பட்டம் வரகு சாகுபடிக்கு ஏற்றது. இதன் வயது ஐந்து மாதங்கள்.

வரகில் புரதச்சத்து, கால்சியம், வைட்டமின் பி, நுண்ணூட்டச்சத்துக்கள், நார்ச்சத்து நிறைந்துள்ளன. வரகை நன்கு தோல் நீக்கி சுத்தம் செய்யாவிட்டால் தொண்டையில் அடைத்துக்கொண்டு ஒருவித ஒவ்வாமையை ஏற்படுத்தும். கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டும். கண் நரம்புகளுக்கு ஏற்றது. கால்சியம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை அளிக்கும். செரிமான மண்டலத்துக்கு ஏற்றது. மாதவிடாய் கோளாறுகளை சீராக்கும். நிணநீர் மண்டலத்தை வலுவாக்கும். வரகில் இட்லி, தோசை போன்றவை செய்து சாப்பிடலாம்.

கேழ்வரகு: ஆரியம், ராகி, கேப்பை, குரக்கன் என்ற வேறு பெயர்களும் இதற்கு உள்ளன. தமிழகம் ராகி சாகுபடியில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம். ஆப்பிரிக்காவில் இருந்து சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இது இங்கு வந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இது ஆண்டுக்கு ஒருமுறை விளையும் பயிராகும். வெப்ப மண்டல, மித வெப்ப மண்டல பயிர் என்பதால் மலைச்சரிவுகளிலும் சமவெளிகளிலும் பயிரிடலாம். ராகிக்கு அதிக மழை நல்லதல்ல. கதிர் முதிரும்போது மழை இருக்கக் கூடாது. வண்டல் மண் இதற்குச் சிறந்தது. சிறிதளவு நீர் வாய்ப்பையும் பயன்படுத்தி வளரும்.
இதில் உள்ள டிரிப்டோன் எனும் அமினோ அமிலம் பசிக்கும் உணர்வை நெடுநேரம் தக்கவைத்திருக்கும். செரிமானத்தை மேம்படுத்தும். கால்சியம் நிறைந்திருப்பதால் எலும்புகள் வலுப்படும்.

இதன் பைட்டோகெமிக்கல்கள் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த வல்லவை. லெசித்தின் மற்றும் மெத்தியோனைன் போன்ற அமினோ அமிலங்கள் கல்லீரலில் உள்ள தேவையற்ற கொழுப்பை அகற்ற உதவுகின்றன. எனவே, உடல் பருமன் உள்ளவர்கள் சாப்பிடலாம். பால் சுரப்பை மேம்படுத்தும். ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும். கேப்பையில் தோசை வார்த்துச் சாப்பிடலாம்.

பனிவரகு : பனிவரகு ஒரு புன்செய் தானியம். சிறுதானியங்களில் குறைந்த காலத்தில் விளைவது இதுதான். குளிர் காலங்களில் அதிகாலையில் பொழியும் பனியின் ஈரப்பதமே இதற்குப் போதும். அதனால்தான் இதற்கு பனிவரகு என்று பெயர். சராசரியாக 65வது நாளில் கதிர் அறுவடைக்குத் தயாராகிவிடும். மார்கழியில் விதைத்து தை முடிந்ததும் அறுவடை செய்துவிடலாம்.  நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்தது. கால்சியம் எலும்புகளை வலுவாக்கும். நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தும். எலும்பு, மூட்டுகளுக்கு நல்லது. பனிவரகில் இட்லி, தோசை, குழிப் பனியாரம் செய்து சாப்பிடலாம்.

கம்பு: கம்பு எல்லா மண்ணிலும் விளையும் தாவரம். இதன் அறுவடைக் காலம் மூன்று அல்லது நான்கு மாதங்கள். ஏறத்தாழ 40க்கும் மேற்பட்ட நாடுகளில் கம்பு பிரதானமான உணவுப் பொருளாக உள்ளது. குறிப்பாக ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளிலும் மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் முக்கிய உணவாக கம்பு உள்ளது. உலகின் மொத்த சிறுதானிய உற்பத்தியில் கம்புதான் 55 சதவீதம் என்கிறார்கள். கம்பில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி11 ரிபோஃப்ளேவின், நியாசின் உள்ளிட்ட நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன. கால்சியம் எலும்புகளை வலுவாக்குகிறது.

இரும்புச்சத்து ரத்தசோகையைப் போக்குகிறது. உடல் வலுவைக் குறைக்கிறது. உடல் உஷ்ணத்தைக் குறைக்கிறது, மலச்சிக்கலை நீக்கி வயிற்றுப்புண்ணை குணமாக்குகிறது. வேறு எந்த சிறுதானியத்திலும் இல்லாத அளவுக்கு கம்பில் ஐந்து சதவீதத்துக்கு மேல் எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெயில் பாலிசாச்சுரேட்டட் ஃபேட் எனப்படும் நிறைவுறா கொழுப்பு உள்ளது. இது இதயத்துக்கு ஏற்றது. தேவையற்ற கொழுப்பை அகற்றி நல்ல கொழுப்பை உடலில் சேர்க்கும். கம்பில் தோசை, பனியாரம், இட்லி செய்து சாப்பிடலாம்.

குதிரைவாலி: இது ஒரு புன்செய் பயிர். இதை 90 நாட்களில் மானாவரியாகப் பயிரிட்டு அறுவடை செய்யலாம். இதை புல்லுசாமை என்றும் சொல்வார்கள். குதிரையின் வால் போன்று இதன் கதிர் காணப்படுவதால் குதிரைவாலி என்ற பெயர் வந்தது. இதில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி போன்றவை உள்ளன. கால்சியம் எலும்புகளை வலுவாக்கும். மூட்டுவலியைப் போக்கும். குதிரைவாலியில் வெண்பொங்கல், பிரியாணி, உப்புமா போன்றவை செய்து சாப்பிடலாம். நெல் அரிசியைப் போன்றே குதிரைவாலி சாதத்திலும் கார்போஹைட்ரேட் நிறைவாக உள்ளதால் உடனடியாக எனர்ஜி கிடைக்கும்.

சோளம் : ஆண்டுக்கு ஒருமுறை சாகுபடி செய்யும் பயிர் இது. ஆடிப்பட்டத்தில் விதைக்கலாம். அமெரிக்காவில் சோளம் மிக முக்கியமான உணவுப் பொருள். சோளத்தில் உடலுக்கு அவசியமான இரும்புச்சத்து, புரதச்சத்து, கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து ஆகிய அனைத்துமே நிறைந்துள்ளன. இதில் உள்ள நல்ல கொழுப்பு உடலின் தேவையற்ற எடையைக் குறைக்க உதவும். கரோட்டின் கண்களுக்கும் நரம்புகளுக்கும் நல்லது. தயமின், ரிபோஃப்ளோவின், நியாசின் ஆகிய நுண்ணூட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. சோளத்தில் தோசை, அடை, வடை, வெண்பொங்கல் என விதவிதமாக சமைத்துச் சாப்பிடலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pramos1

  கப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..!!

 • pamaka1

  20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்!!

 • jammuele1

  ஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்!: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..!!

 • nuclearscientist1

  ஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்!: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..!!

 • 01-12-2020

  01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்