உப்பு
2017-02-08@ 15:17:50

நன்றி குங்குமம் டாக்டர்
தேவை அதிக கவனம்
ஒரு சித்த மருத்துவப் பார்வை
18 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் நாள் ஒன்றுக்கு 5 கிராம் உப்பை உணவில் சேர்த்துக்கொண்டால் போதும் என்றுதான் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்திருக்கிறது. ஆனால், இந்தியர்கள் உட்கொள்ளும் உப்பின் அளவு 119 சதவீதம் என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது India Spend என்னும் ஆய்வு நிறுவனம். கிட்டத்தட்ட 10.98 கிராம் எடுத்துக் கொள்வதாக சொல்கிறது இந்த ஆய்வு.உப்பு பற்றி கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் ஆய்வு செய்து வரும் சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர் சுந்தர்ராஜிடம் இது பற்றிக் கேட்டோம்.‘‘நாம் சாதாரணமாக சாப்பிடும் உணவிலிருந்தே 1 கிராம் அளவு உப்பு நமக்கு கிடைத்துவிடும். மீதம் 4 கிராம் அளவு அதாவது முக்கால் டீஸ்பூன் அளவு உப்பை மட்டுமே நாம் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த அளவைத் தாண்டும்போது ரத்த அழுத்தம் கூடும், இதயம் தொடர்பான பிரச்னைகள் வரும், சிறுநீரகத்தின் வேலை அதிகரிக்கும்.
அதற்காக உப்பை முற்றிலும் தவிர்க்கக் கூடாது. எலக்ட்ரோலைட் பேலன்ஸ்(Electrolyte balance) எனப்படும் நமது உடலின் நீர்ச்சமநிலைக்கு உப்பின் அளவு சரியாக இருக்க வேண்டியது மிக அவசியம். குறிப்பாக, உடலில் உப்பின் அளவு குறைவானால் மயக்கம் ஏற்படும்.எனவே, உணவில் அளவோடு உப்பை எடுத்துக் கொள்வதுதான் சிறந்தது’’ என்றவரிடம், சந்தையில் கிடைக்கும் விதவிதமான பெயர்களில் வரும் உப்பு பற்றி கேட்டோம்.‘‘முதலில் கடல் உப்பு பற்றிச் சொல்லிவிடுகிறேன்.நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்வது கடலிலிருந்து எடுக்கப்படும் தூய்மைப்படுத்தப்படாத, பதப்படுத்தப்படாத சாதா உப்பு. இதற்கு சோடியம் குளோரைடு என்று பெயர். இதில் உள்ள சோடியம் அயனியானது ரத்த ஓட்டத்தையும், ரத்த அழுத்தத்தையும் சமன் செய்யும். இவை சோடியம் குறைவாக இருக்கும்போது ஏற்படும் நன்மைதான். ஆனால், அதுவே அதிகமாகும்போது சிறுநீரக செயலிழப்பு போன்ற விபரீத விளைவுகளை ஏற்படுத்தும்.
இரண்டாவதாக இமாலயன் சால்ட் என்று கூறப்படும் இந்துப்பில் சோடியம் குளோரைடைவிட பொட்டாசியம் குளோரைடு அதிகமாக இருக்கிறது. இதனால் ரத்த அழுத்தம் குறைந்து சமநிலைப்படும். கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், காப்பர், இரும்புச்சத்து போன்ற அனைத்துவிதமான மினரல்களும் இருக்கிறது. அயோடின் போன்ற வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுவதில்லை.
உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் சோடியம் உப்புக்குப் பதில், ஏதாவது ஓர் உணவுடன், ஒரு நாளைக்கு ஒரு கிராம் அல்லது 2 கிராம் அளவு இமாலயன் சால்ட்டை சேர்த்துக் கொள்ளலாம்.
அதற்காக சாதா உப்புக்கு மாற்றாகத் தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்றால் மருத்துவரின் பரிந்துரை அவசியம்.கார்லிக் வகை உப்பு வாய்வு தொந்தரவுக்கு நல்லது என்று சொல்லப்பட்டாலும், அதிகமாக உட்கொள்ளும்போது உடலில் இயற்கையாக உள்ள வாய்வை சமநிலைப்படுத்தும் தன்மையைக் குறைத்துவிடக்கூடும். நாளடைவில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைத்துவிடும் என்பதால் மருத்துவரின் ஆலோசனைப்படி குறைந்த அளவில் பயன்படுத்துவதே நல்லது.’’
இப்போது பரவலாக மக்கள் பயன்படுத்தி வரும் சுத்திகரிக்கப்பட்ட அயோடைஸ்டு உப்பு பற்றி...‘‘அயோடின் குறைபாடு உள்ளவர்கள் அயோடைஸ்டு உப்பை பயன்படுத்தலாம். ஆனால், இப்போது வெண்மை, தூய்மை, ஆரோக்கியம் என்று விளம்பரப்படுத்தி, கடலிலிருந்து எடுக்கும் உப்பில் ரசாயனங்கள் கலந்து பளபளவென வெண்மையாக்குகின்றனர். ‘சுத்திகரிக்கிறேன்’ என்று கூறி தாதுப்பொருட்களை அழித்துவிடுகின்றனர். அயோடைஸ்டு உப்பை எடுத்துக் கொண்டால் புத்திகூர்மை அதிகமாவதாகவும் விளம்பரப்படுத்துகின்றனர்.அயோடின் சத்துக்கு அயோடின் உப்பு மட்டுமே அவசியம் என்று சொல்ல முடியாது. இயற்கையாகவே காய்கறிகள், கனிகளில் நமக்குத் தேவையான அயோடின் கிடைக்கிறது. உப்பில் கலக்கப்படும் அயோடின் அதிகமானால் உடலில் பக்க விளைவுகள் ஏற்படும். அயோடின் குறைபாடு இல்லாதவர்கள் அயோடின் உப்பைத் தொடர்ந்து பயன்படுத்தினால் சாதாரண உப்பினால் ஏற்படும் தீய விளைவுகளைவிட அதிக தீமைகளை விளைவிக்கும்.இதன்மூலம் ஹைப்பர் தைராய்டு நோயை விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறோம். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அயோடின் உப்பை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் குறைகிறது என்பதும் தவறான நம்பிக்கைதான்’’ என்பவர், நம் பாரம்பரிய முறையில் பயன்படுத்தப்பட்ட கட்டுப்பு பெருமைகளை நிறைவாகக் குறிப்பிடுகிறார்.‘‘பதினெண் சித்தரால் பாடப்பட்ட வாதக் கோவையில் கூறப்பட்டதும், சித்தர்களாலும், முனிவர்களாலும் உருவாக்கப்பட்டு இன்றளவும் சித்த மருத்துவத்தில் கட்டுப்பு பயன்படுத்தப்படுகிறது. சாதா உப்பில் பலவித மூலிகைச்சாறுகளையும், மூலிகைகளையும் சேர்த்து சுட்டு, பக்குவப்படுத்தி எடுக்கப்படுவதே கட்டுப்பு.
மாற்று மருத்துவத்தில் மருந்து உட்கொள்ளும்போது, பத்தியமாக, உப்பில்லா உணவை உண்ணச் சொல்வார்கள். ஏனெனில், மருந்தின் வீரியத்தை உப்பு குறைத்துவிடும் என்பதால் பத்தியத்தில் இருப்பவர்கள், சாதா உப்புக்குப் பதில் கட்டுப்பை பயன்படுத்தலாம். கட்டுப்பு, மருந்தின் வேகத்தை மேலும் அதிகரிக்கச் செய்யக்கூடியது. சாதாரணமாக அனைவருமே உணவில் கட்டுப்பை சேர்த்துக் கொள்ளலாம். உப்புச்சுவை இருந்தாலும், சாதா உப்பைப்போல், கட்டுப்பை உட்கொள்வதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது.உடலில் சேரும் அதிகப்படியான சாதா உப்பு சிறுநீர்வழியாக வெளியேறுவதால், சிறுநீரகத்துக்கு அதிகப்படியான வேலையைக் கொடுக்கிறது. ஆனால், கட்டுப்பு சிறுநீர் வழியாக வெளியேறாமல் மலம் வழியாகவும், வியர்வை மூலமும் வெளியேறுவதால் சிறுநீரகத்தின் வேலையை குறைக்கிறது. இதனால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதில்லை.கட்டுப்பு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி, சாத்வீகத் தன்மையைக் கொடுக்கக்கூடியது. சிறுநீரக செயலிழப்பு, சர்க்கரைநோய், ரத்தஅழுத்தம், புற்றுநோய், வராமல் தடுப்பதால் கட்டுப்பை எடுத்துக் கொள்வதன்மூலம நோயற்ற இளமையான வாழ்வை வாழலாம். நம் பாரம்பரிய மருத்துவத்தைத் தவிர வேறு எந்த மருத்துவத்திலும் கட்டுப்பு உபயோகம் கிடையாது” என்கிறார்.
- என்.ஹரிஹரன்
மேலும் செய்திகள்
முதுமையிலும் இனிமை காண்போம்!
குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி அவசியம்!
ஆர்த்ரைட்டிஸை வெல்வோம்!
தெரப்பிகள் பலவிதம்
நடப்போம்… நலம் பெறுவோம்!
பலமாகும் பழங்கள்! ஃப்ரூட்டேரியன் டயட்!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!