வெள்ளப்பெருக்கு
2016-04-06@ 16:41:29

சமீபத்தில் அதிர வைத்த வெள்ளப் பெருக்குக்குப் பிறகு கிரவுண்ட் ஃப்ளோர் வீடுகளுக்கான மவுசு வெகுவாகக் குறைந்திருக்கிறது. இனி வரும் காலங்களிலும் இதே நிலை தொடருமா? ஏற்கனவே கிரவுண்ட் ஃப்ளோர் வீடுகளில் இருப்பவர்களின் நிலை என்னாகும்?
எம்.எஸ்.பி. ஹோம்ஸ் முத்துசாமி
நடந்த சம்பவத்துக்குப் பிறகு யாரும் கிரவுண்ட் ஃப்ளோர் வீடுகளே கட்டாமல் இருக்கப் போவதில்லை. இயற்கை நமக்கு சொல்லிக் கொடுத்த விஷயங்களில் இருந்து கொஞ்சம் சுதாரித்துக் கொள்ள வேண்டும். இனி வரும் காலங்களில் புதிதாக வீடு கட்டுவோர் தரையில் இருந்து 4 அடிகள் உயர்த்திக் கட்ட வேண்டும். ஏற்கனவே தரைத்தளத்தில் குடியிருப்போர் ஒருவித புதிய டெக்னாலஜி மூலமாக வீட்டை மூன்றரை அடிகள் வரை உயர்த்திக் கொள்ளலாம்.
ஸ்ட்ரக்ச்சுரல் இன்ஜினியர்ஸ் வந்து பார்த்துவிட்டு, இதற்கான ஆலோசனைகளைச் சொல்வார்கள். இதற்கு ரூபாய் 10 லட்சம் வரை செலவாகும். வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை சரி செய்ய வங்கிகளில் கடன் தருகிறார்கள். அதை இதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வேலைக்கு அதிகபட்சம் 2 மாதங்கள் தேவை.
அரசாங்கமும் சில விஷயங்களை சரி செய்ய வேண்டும். சாலை போடும் போது ஏற்கனவே உள்ள சாலையைக் கொத்திவிட்டுப் போட வேண்டும் என்பது சர்வதேச விதிமுறை. ஆனால், ஒவ்வொரு முறை சாலை போடப்படும் போதும் ஏற்கனவே உள்ள சாலையின் மேல்தான் போடுகிறார்கள். சாலையின் மட்டம் அதிகரிக்கிறது. மழைநீர் சேகரிப்போ, புயல்நீர் வடிகாலோ முறையாக அமைக்கப்படுவதோ, அவை சரியாக இயங்குகின்றனவா எனக் கண்காணிக்கப்படுவதோ இல்லை.
மாநில அரசு சார்பாக உடனடியாக அதற்கென ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். ஏரிகள் சரியாக தூர்வாறப்படுவதில்லை. அதுவும் இனி சீர் செய்யப்பட வேண்டும். வீட்டின் உயரத்தைக் கூட்டினாலும், இந்த விஷயங்கள் சரி செய்யப்படவில்லை என்றால் இன்னும் சில வருடங்கள் கழித்து இதே போல மழையும் வெள்ளமும் வந்தால் இதே போன்ற பாதிப்பைத்தான் மக்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.
இப்போதைக்கு அவசரகால நடவடிக்கையாக முதலில் குறிப்பிட்டுள்ள லேட்டஸ்ட் தொழில்நுட்ப முறையில் வீடுகளை உயர்த்திக் கொள்ளலாம். தனி வீடு, அபார்ட்மென்ட் என எல்லாவற்றுக்கும் இதைச் செய்யலாம்.