SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எல்லா விசேஷங்களுக்கும் வந்தாச்சு ரென்டல் உடைகள்!

2022-10-07@ 16:02:49

நன்றி குங்குமம் தோழி

டிசைனர் சித்ரா

‘‘கல்யாணம், காதுகுத்து, நிச்சயதார்த்தம், புதுமனை புகு விழா போன்ற விழாக்களுக்கு நாம் முதலில் யோசிப்பது என்ன உடை அணியலாம் என்பதுதான். வீட்டில் விசேஷம் என்றால் நாம் ஒரே புடவையை மறுபடி மறுபடி அணிய மாட்டோம். காரணம் எல்லா விழாக்களிலும் ஒரே உடையினை அணிந்திருப்பது போன்ற உணர்வு ஏற்படும். அதற்காகவே புதுசா என்ன உடை வாங்கலாம்னு யோசிப்போம். மேலும் இந்த உடைகளை சாதாரண நாட்களிலும் அணிய முடியாது.

எப்போதாவது நடைபெறும் விழாக்களுக்கு ஏன் புதுப்புது உடைகள் வாங்கி அலமாரியை நிரப்ப வேண்டும். இதற்கு ஒரே தீர்வு வாடகை உடைதான்’’ என்கிறார் சித்ரா. இவர் சென்னை சூளைமேட்டில் ‘மோக்ஷி ரென்டல் டெஸ்டினேஷன்’ என்ற பெயரில் ஒரு பொட்டிக் ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு உடைகள் மட்டுமில்லாமல் நகைகளும் வாடகைக்கு கிடைக்கும். விசேஷம் என்றால் புது உடைகள் மற்றும் நகைகளை அணிந்து அசத்தலாம்.

‘‘நான் சென்னை பொண்ணு. எனக்கும் ஃபேஷன் துறைக்கும் முற்றிலும் சம்பந்தம் இல்லை. எம்.சி.ஏ முடிச்சிட்டு ஐ.டி துறையில் வேலை பார்த்தேன். திருமணமாச்சு, கருவுற்றேன். என்னுடைய பிரசவம் கொஞ்சம் காம்பிளிகேஷன் என்பதால், என்னால் தொடர்ந்து வேலைக்கு செல்ல முடியல. அதனால் வேலையை ராஜினாமா செய்திட்டேன். என் மகள் மோக்‌ஷா கொரோனா முதல் அலை லாக்டவுன் அறிவிக்கும் முந்தைய தினம் தான் பிறந்தாள்.

அதனால் இரண்டு வருஷம் கிட்டத்தட்ட வீட்டிலேயே குழந்தையை பார்த்துக் கொண்டு அவளைப் பராமரிப்பதிலேயே கழிந்துவிட்டது. கொரோனா இரண்டாம் அலையின் போது... கொஞ்சம் தளர்வு ஏற்பட்டது. அந்த சமயத்தில் மீண்டும் ஐ.டிக்கு வேலைக்கு செல்ல முடியாது. அதனால் வேறு ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபடலாம்ன்னு நினைச்சேன். நான் திருமணத்திற்கு முன்பு தையல் கலை பயின்றிருக்கிறேன். அதனால் ஃபேஷன் டெக்னாலஜி படிச்சேன். அதைத் ெதாடர்ந்து தனிப்பட்ட டிசைன்களான ஆரி மற்றும் இதர வேலைப்பாடு குறித்தும் படிச்சேன்.  கொரோனா இரண்டாம் அலை முடிஞ்சதும் ஆரம்பிச்சு ஒன்றரை வருஷமாகுது’’ என்றவர் தனக்கென்று ஒரு வாடிக்கையாளர் வட்டத்தினை அமைத்திருக்கிறார்.

‘‘பொதுவாக பிரைடல் உடைகள் தான் விலை அதிகம். ஆனால் அதை அந்த ஒரு நாள் தான் அணிவோம். அந்த உடை காலம் முழுக்க நம்முடைய அலமாரியில் தூங்கிக் கொண்டு இருக்கும். என்னுடைய கல்யாண புடவையும் அப்படித்தான் இருக்கு. அந்த புடவையை நான் சொல்லப்போனால் ஒன்று இரண்டு முறைதான் அணிந்திருப்பேன். இப்படி காசு கொடுத்து வாங்குவதற்கு பதில் நமக்கு பிடிக்கும் உடையினை ஒரு நாள் வாடகைக்கு எடுத்து உடுத்திவிட்டு திரும்ப கொடுத்தால் பணமும் மிச்சம், உடையும் அலமாரியில் இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளாது. அதன் அடிப்படையில் தான் ரென்டல் பொட்டிக்கை ஆரம்பிச்சேன். ஒரு கடை திறந்தா அதற்கு வாடிக்கையாளர்கள் வேண்டும். அவர்கள் நம்மை தேடி வர குறைந்தபட்சம் ஒரு வருடமாகும். அதற்கு பதில் நாம் நேரடியாக வாடிக்கையாளர்களை சந்தித்தால் ஒரு ஆறு மாசத்தில் நமக்கான ஒரு வட்டத்தினை உருவாக்க முடியும் என்று நினைச்சேன்.

நான் கடையை திறந்த அடுத்த நொடி முதலில் சந்தித்தது அழகுக் கலை நிபுணர்களை தான். லக்கிலி... எங்க வீட்டிலேயே என்னுடைய அக்கா, அண்ணி என இரண்டு நிபுணர்கள் இருந்ததால், அவர்கள் மூலமாக பல அழகுக் கலை நிபுணர்களை சந்தித்தேன். மணப்பெண்ணைப் பொறுத்தவரை அவங்க முதல்ல இவங்கள தான் புக் செய்வாங்க. மேலும் இவர்கள் நிறைய கிளாஸ் மற்றும் வர்க்‌ஷாப் எல்லாம் நடத்துவாங்க. அதற்கு மணப்பெண் அலங்காரம் செய்யும் போது எங்களின் உடைகளை வாடகைக்கு எடுத்துக்கலாம். அந்த நோக்கத்தில் தான் அவர்களை சந்தித்தேன். அவர்களும் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க, வாடிக்கையாளர்கள் வர ஆரம்பிச்சாங்க.

அடுத்து இங்கு ஏற்கனவே இருக்கும் ரென்டல் கடைகளைப் போய் பார்த்தேன். அவர்கள் என்ன செய்கிறார்கள். எப்படி நடத்துகிறார்கள். அவர்கள் கடையில் உள்ள பிளஸ் மைனஸ் என்ன என்பதை தெரிந்து கொண்டேன். அவர்களின் மைனஸ் எல்லாவற்றையும் என்னுடைய ப்ளசாக மாற்றினேன். இது போல் ரென்டலுக்கு கொடுக்கும் உடைகள் கிராண்டாக இருக்காது. மேலும் நிறைய கலெக்‌ஷன்ஸ் வைத்திருக்கமாட்டாங்க. எல்லா சைசிலும் கிடைக்காது.

இதை எல்லாம் நான் மாற்றினேன். இங்கு என்னுடைய பெரும்பாலான உடைகள் கிராண்டாகத்தான் இருக்கும். அதேபோல் 5xl சைஸ் வரை என்னிடம் உடைகள் உள்ளது. பல வண்ணங்களிலும் உடைகள் இருப்பதால், அவர்களின் புடவைக்கு ஏற்ப மாட்சிங் பிளவுஸ்களை எடுத்துக் கொள்ளலாம். வாடகைக்கான உடையினை எடுக்க முதல்ல யோசிக்கிற விஷயம் சுத்தமா இருக்குமா, நல்ல நிலையில் வச்சிருப்பாங்களா என்பது தான்.

அதனாலேயே நாங்க ஒரு டிரைகிளினிங் யூனிட்டோட டையப் செய்திருக்கோம். தினமும் அவங்க துணியை எடுத்துக்கொண்டு போவாங்க. அதை நல்லா சுத்தம் மற்றும் சானிடைஸ் செய்து, காயவச்சு கொடுப்பாங்க’’ என்றவர் லெஹங்கா, ஆரி டிசைன் பிளவுஸ், பட்டுத்தாவணி, பிரைடல் உடைகள், பால் கவுன் என பலதரப்பட்ட உடைகளை தமிழ்நாடு முழுக்க வாடகைக்கு அளித்து வருகிறார்.

‘‘வாடகைக்கு கொடுக்கும் போது அவர்களின் அடையாள அட்டை மற்றும் ஒரு தொகையை டெபாசிட் செய்யணும். உடையை ரிட்டர்ன் கொடுக்கும் போது வாடகை தொகையை கழிச்சிட்டு மீதி பணத்தை கொடுத்திடுவோம். எங்களுக்கு நிறைய என்.ஆர்.ஐ தான் வராங்க. பத்து நாட்கள் முன்பு ஆன்லைனில் பார்த்து சொல்லிடுவாங்க. நாங்க அவங்களின் அளவுக்கு ஏற்ப அதை ஆல்டர் செய்து ரெடியா வைப்போம். இங்க வந்து ஒரு முறை அதை அணிந்து பார்ப்பாங்க. நாங்க அதை கல்யாணத்திற்கு ஒரு நாள் முன்பு அவங்க கைக்கு சேரும் படி டோர் டெலிவரி செய்திடுவோம். வேறு ஊர்ன்னா கூரியர் அனுப்பிடுவோம். எங்களிடம் இருக்கும் உடைகளை xl அளவு உள்ளவங்க வரை அணியலாம்.

பிளஸ் சைசில் இருக்கிறவங்களுக்கு கலெக்‌ஷனே வேறு. காரணம் அவங்களின் ஷோல்டர் சைஸ் முதல் இடுப்பளவு எல்லாம் மாறுபடும். சில சமயம் அவர்களுக்கு ஒரு டிசைன் பிடிச்சிருக்கும். அந்த டிசைன் வேற சைசில் இல்லை என்றால் அதை நாங்க கஸ்டமைஸ் செய்து கொடுப்போம். அதுவும் அவங்க பட்ஜெட்டிற்கு ஏற்ப. ஒருத்தருக்கு தனிப்பட்ட முறையில் கஸ்டமைஸ் செய்யும் உடைகளை நாங்க வாடகைக்கு கொடுக்கமாட்டோம்.

வாடகைக்கு எடுத்து செல்லும் உடைகளில் கரை பட்டால் அதற்கு எந்த எக்ஸ்ட்ரா தொகையும் கொடுக்க வேண்டாம். காரணம் மேக்கப் செய்யும் போது கண்டிப்பா கழுத்துப் பகுதியில் மேக்கப் கரை ஏற்படும். அது டிரை கிளின் செய்தா சரியாயிடும். அதுவே கிழிந்தாலோ அல்லது நெருப்பு பட்டிருந்தாலோ அந்த உடையை மீண்டும் பயன்படுத்த முடியாது என்பதால், அந்த மாதிரி பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே உடைக்கு ஏற்ற தொகையினை வாடிக்கையாளர் செலுத்த வேண்டும். எங்களிடம் 750 ரூபாயில் இருந்து உடைகள் வாடகைக்கு
கிடைக்கும்.

இப்ப எங்களின் புது வரவு நவராத்திரி கலெக்‌ஷன். நவராத்திரி முடிந்து தீபாவளி, கல்யாண சீசன் ஆரம்பிக்கும். அதனால் ஒரு கலெக்‌ஷன் கொடுக்க நினைச்சோம். இதில் 18 நாள் கணக்கு வச்சு ஒவ்வொரு நாள் ஒரு உடைகளை ரிலீஸ் செய்றோம். நம்ம பாரம்பரிய  பட்டுப் பாவாடை, லெஹங்கா, வெஸ்டர்ன், இன்டோவெஸ்டர்ன் போன்ற உடைகளை அறிமுகம் செய்திருக்கிறோம். சிலர் இதைப் பார்த்து விலைக்கும் கேட்கிறாங்க.

எங்களின் உடைகள் பற்றிய அப்டேட்களை நாங்க @mokshe_rental_destination என்ற எங்களின் இன்ஸ்டா பக்கத்தில் கொடுத்திருக்கிறோம். அதில் பார்த்து விரும்பும் உடைகள் மற்றும் டிசைன்களை தேர்வு செய்யலாம். உடைகளைப் பார்த்து பலர் இதற்கு மேட்சிங் நகைகளும் இருந்தா நல்லா இருக்கும்ன்னு சொல்ல, இப்போது நகைகளும் நாங்க வாடகைக்கு தருகிறோம். பெரும்பாலும் பிரைடல் மற்றும் கல்யாணம் என இதர விசேஷங்களுக்கு அணியக்கூடிய நகைகள் தான் எங்களிடம் இருக்கு.

இப்ப அடுத்து எங்களிடம் மாப்பிள்ளைக்கும் உடைகள் கேட்கிறாங்க. அதற்கான உடைகளை வடிவமைத்து வருகிறோம். இதன் மூலம் ஒரு மணப்பெண் மட்டுமில்லாமல் மணமகனுக்கும் உடைகள் அளிக்க திட்டமிட்டிருக்கிறோம். வாடகைக்கான உடைகள் பொறுத்தவரை மணமகளுக்கு மட்டுமே என்றில்லை. பார்ட்டி, கல்லூரி விழாக்கள், பள்ளி பேர்வேல் நிகழ்ச்சி, மிஸ் சென்னை, மிசர்ஸ் சென்னை, விளம்பர நிறுவனங்கள், சீரியல் காஸ்ட்யூம்ஸ், ரியாலிட்டி ஷோக்களுக்கு என எல்லாவற்றுக்கும் தருகிறோம்.

ஒரு பெண் திருமணம் என்று வந்தால், அவங்களுடைய நிச்சய பங்‌ஷன், திருமணம், சீமந்தம், ஃப்ரீ வெட்டிங் ஷுட், குழந்தையின் முதல் பர்த்டே விழா என அவங்களின் ஒரு வருட அனைத்து நிகழ்ச்சியையும் நாங்க கவர் செய்திடுவோம்’’ என்ற சித்ரா நாம் விரும்பும் டிசைன் மற்றும் நிறங்களுக்கு ஏற்பவும் உடைகளை  வடிவமைத்து தருகிறார்.

செய்தி: ஷம்ரிதி

படங்கள்: ஆ.வின்சென்ட்பால் 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • thaliand-monkey

  தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்த குரங்கு படையல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது..!

 • light-show-28

  பாரிசில் கண்கவர் ஒளி கண்காட்சி: மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணப் பூச்சிகள்..!!

 • china-corona-26

  தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

 • ragul-priyanka-25

  நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

 • ukrain-dark

  இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்