பூச் சூடல்
2022-06-24@ 17:26:56

நன்றி குங்குமம் தோழி
பெண்கள் ஏன் தலையில் பூ வைக்கிறார்கள்? இந்த கேள்வி என் மனதில் பல நாட்களாக இருந்தது. அதற்கான விடையை அவர்களிடமே கேட்ட போது… பதில் கண்ணம் சிவந்து வெட்கம் மட்டுமே வந்தது. இந்தக் கேள்வி அவசியம் இல்லை. பெண்களைப் பொறுத்தவரை தலையில் பூ வைப்பது என்பது அவர்களின் அன்றாட நிகழ்வுகளில் ஒன்று. ஆனால் பூ வைக்கும் போது ஒரு பெண் தன் தோற்றத்தில் முழுமை அடைகிறாள் என்பது மட்டும் எனக்கு புரிந்தது. பூக்கள் சூடுவதால் அவர்கள் அழகாக தெரிகிறார்களா? அல்லது பூக்கள் அழகாக இருக்கிறதா என்ற விவாதத்திற்குள் போகாமல், மல்லி, முல்லை, கனகாம்பரம், ஜாதி, செம்பருத்தி, டிசம்பர்… என எந்த பூ வைத்தாலும் பெண்களுக்கு ஒரு தனிப்பட்ட அழகு தானாக வந்து ஒட்டிக்கொள்ளும்’’ என்கிறார் புகைப்பட நிபுணர் நவீன் கவுதம்ராஜ்.
வெட்டிங் போட்டோகிராபியில் ஈடு பட்டு வரும் நவீன் புகைப்பட கலைஞருக்கு உரிய குணமான மனதிற்கு நெருக்கமான புகைப்படம் எடுக்க அவர் தவறியதில்லை. காட்டுக்கு ராஜா போல் தனியாக நிற்கும் சிங்கத்தினை போல் ஊருக்குள் ஒற்றையாக நிற்கும் தனி மரங்களை தன் புகைப்படம் மூலம் படம் பிடித்து அதை ஒரு சீரீசாக பதிவு செய்துள்ளார். மேலும் அதனைத் தொடர்ந்து அனைத்து வயதில் உள்ள மனிதர்களின் அழகான புன்சிரிப்புகளையும் அவர் தன் மூன்றாவது கண் மூலம் படம் பிடித்துள்ளார். இந்த வரிசையில் சேர்ந்திருப்பது அவரின் மனதுக்கு நெருக்கமான பொக்கிஷம் மலர்கள் சூடிய பெண்களின் கூந்தல் அழகினை படம் பிடிப்பது. ‘பூச்சூடல்’ என்று இவரின் இந்த புகைப்படங்களை அழகாக தொகுத்துள்ளார் நவீன்.
‘‘என் சொந்த ஊர் திருவாரூரில் உள்ள ஒட்டக்குடி என்ற கிராமம். எங்க குடும்பம் கூட்டுக்குடும்பம். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மட்டுமில்லாமல், வீட்டில் எந்த விசேஷம் நடந்தாலும் அப்பா அந்த நினைவுகளை புகைப்படமாக பிடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்ப எங்களிடம் கேமரா கிடையாது. அப்பா அவரின் நண்பர்களிடம் இருந்து வாங்கி வந்து தான் படம் பிடிப்பார்.
இப்ப எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. அந்த காலத்தில் ரோல் கேமரா தான். அப்படி எடுக்கும் புகைப்படங்கள் எல்லாம் எப்போது வரும்ன்னு வீட்டில் உள்ள நாங்க அனைவரும் பார்க்க ரொம்ப ஆவலாக காத்திருப்போம். அப்பா அந்த சமயத்தில் என்னுடைய கையிலும் கேமரா கொடுத்து படம் பிடிக்க சொல்வார். வீட்டில் உள்ள அனைவரும் நான் கேமராவை கையில் ஏந்திய அடுத்த நிமிஷம் போஸ் கொடுக்க ஆரம்பிச்சிடுவாங்க. அப்படித்தான் எனக்கும் போட்டோ கிராபிக்குமான தொடர்பு ஆரம்பமானது.
செல்போன் வந்த பிறகு எங்க ஊர் வயல்வெளியில் வேலைப் பார்க்கும் தாத்தா, நாற்றில் கருதுகளை சாப்பிட வரும் பறவைகள், பாட்டியின் சிரிப்பு என போட்டோகிராபிகளின் ஆரம்பக்கட்ட படம் பிடிக்கும் பாணியினை நானும் பின்பற்ற ஆரம்பித்தேன். கல்லுாரி படிப்பு முடிந்ததும், வேலைக்காக சென்னைக்கு வந்தேன். இங்க வந்த பிறகு தான் போட்டோகிராபிக்கென ஒரு தனி குழுவே இயங்கி வருவது தெரிய வந்தது. ‘வீக்கெண்ட் கிளிக்கர்ஸ்’ எனும் பெயரில் செயல்பட்ட புகைப்பட கலைஞர்கள் குறித்த அமைப்பு பற்றி தெரிந்து கொண்டேன். இவர்கள் அனைவரும் புரொபஷனல் புகைப்பட கலைஞர்கள் கிடையாது. புகைப்படம் எடுப்பதில் ஆர்வமுள்ளவர்கள்.
வார இறுதிநாட்களில் வேலைப் பளுவில் இருந்து தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்வதற்காக ஒவ்வொரு இடமாக குழுவாக சென்று அந்த சூழலை படம் பிடிப்பார்கள். அந்த குழுவில் இணைந்து அவர்களுடன் நானும் பயணிக்க தொடங்கினேன். அந்த பயணம் தான் என்னை முழுநேர புகைப்பட கலைஞனாக மாற்றியது. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வெட்டிங் புகைப்படங்கள் எடுப்பதில் ஈடுபட ஆரம்பிச்சேன். இருந்தாலும் என்னுடைய மனதிற்கு நெருக்கமான புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதன் அடிப்படையில் எடுத்தது தான் ஒற்றை மரங்கள் மற்றும் மக்களின் புன்சிரிப்புகளின் தொகுப்பு’’ என்றவர் பூச்சூடல் தொகுப்பு புகைப்படங்கள் குறித்து விவரித்தார்.
‘‘பெண்கள் தலையில் பூ சூடுவது என்பது சாதாரணமான பழக்கம் என்றாலும், தலைமுறைகள் தாண்டி அது நிகழ்ந்து வரும் பழக்கம். பெண்கள் தலையில் பூச்சூடி பார்க்கும் போது, அதில் ஒரு முழுமையான அழகு தென்படும். அந்த அழகினைத்தான் என் கேமரா மூலம் படம் பிடித்தேன். அது ஏற்பட ஒரு அழகான சம்பவத்தை குறிப்பிட வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் கூவாகம் திருவிழாவிற்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு குடும்பத்தை சேர்ந்த 20 பெண்கள் மட்டும் என்னை ஈர்த்தனர். காரணம் அவர்கள் தலையில் சூடியிருந்த பூக்கள். கனகாம்பரம், டிசம்பர் பூ, வாடாமல்லி என அனைத்து மலர்களும் அவர்களது கூந்தலை அலங்கரித்திருந்தது. ஒவ்வொரு மலரும் ஒரு நிறம்.
அவை எல்லாம் பார்க்கும் போது வானவில் அவர்களின் கூந்தலில் குடிக்கொண்டிருப்பது போல் காட்சி அளித்தது. அந்த காட்சி என்னை ரொம்பவே ஈர்த்தது. உடனே அவர்கள் எல்லாரையும் வரிசையாக நிற்க வைத்து படம் பிடித்தேன். அந்த புகைப்படம் பார்க்கும் போது ஒரு ஆத்மார்த்தமான உணர்வினை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் இவர்கள் யாரும் கண்ணாடியைப் பார்த்து அழகான சரம் போல் தங்கள் கூந்தலில் பூக்களை முடிக்கவில்லை. அப்படியே கையில் பூச்சரத்தை எடுத்து தங்களின் தலைமுடியில் சொருகிக் கொள்கிறார்கள். அல்லது கொண்டை சுற்றி முடிகிறார்கள். அந்த அழகினை அப்போது தான் கவனித்தேன்.
அதன் பிறகு திருச்சி, தஞ்சாவூர், காஞ்சிபுரம், விழுப்புரம், உடுமலைப்பேட்டை, திருவண்ணாமலை போன்ற பல ஊர்களுக்கு பயணம் செய்து அங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாராக இருந்தாலும் அவர்கள் தலையில் சூடியிருக்கும் பூக்களை ‘பூச்சூடல்’ என்ற தலைப்பில் ஒரு தொகுப்பாக படம் பிடிக்க ஆரம்பித்தேன். இந்த பயணத்தின் போது இன்றும் என் மனதில் பசுமையாக ஒட்டிக் கொண்டிருக்கிறது அந்த நிகழ்வு. ஒரு முறை பயணத்தின் போது ஒரு பள்ளி வாசலை கடக்க நேரிட்டது. அப்போது ஒரு சிறுமி இரண்டு ஜடை பின்னி அதில் கனகாம்பரம் பூவினை சூடியிருந்தாள். அவளைப் படம் பிடித்தேன்.
அதைக் கவனித்த அந்த சிறுமி என்னிடம், ‘அண்ணா என்ன செய்றீங்க’ன்னு கேட்டாள். அவளிடம் நான் எடுத்த புகைப்படத்தை காண்பித்த போது, அவளுடைய முகத்தில் கள்ளங்கபடமற்ற சிரிப்பினை பார்க்க முடிந்தது. இது வரை 140 பெண்களின் பூச்சூடல் அழகினை படம் பிடித்திருக்கிறேன். இந்த பயணத்தில் ஆறு வயது குழந்தை முதல் 85 வயதுள்ள பாட்டி வரை அனைவரையும் கேமராவில் பதிவு செய்திருக்கிறேன். எனக்கு அந்த பூச்சூடல் அழகினை படம் பிடிக்க வேண்டும் அவ்வளவு தான். வேறு எந்த பெரிய நோக்கம் இல்லை.
நான் வெட்டிங் புகைப்படம் எடுப்பதால், அதில் மணப்பெண்ணிற்கு என தனிப்பட்ட சிகை அலங்கார கலைஞர்கள் பூக்களை பல டிசைன்களில் அவர்களின் தலையில் அலங்கரிப்பார்கள். இதற்காக அவர்கள் பல மணி நேரம் செலவிடுவார்கள். ஆனால் சாதாரண ஜடை பின்னலிட்ட தலையில் அப்படியே சொருகி இருக்கும் பூ சரக் கூந்தலில் அந்த கிராமத்து பெண்ணை பார்க்கும் போது, இயற்கையான அழகிற்கு ஈடு இணையில்லை என்று தான் சொல்ல வேண்டும்’’ என்கிறார் நவீன் கவுதம்ராஜ்.
தொகுப்பு: ரித்திகா
Tags:
பூச் சூடல்மேலும் செய்திகள்
ஐஸ்க்ரீம் சேலை ஃபேஸ்புக் சேலை என பாரம்பரியத்தில் தனித்துவத்தை புகுத்திய ஐலா
இது பெண்களின் தாண்டவ்
பிங்க் நிற வானத்தை படம் பிடிக்க விடியற்காலை காத்திருந்தோம்!
வாழ்க்கை பாடங்களை கற்றுக் கொடுத்த நட்பு
யுடியூப்பை கலக்கும் சோனியா மகி
+2 தேர்வை படுக்கையில் இருந்தே எழுதினேன்!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!