SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அக்கா கடை-தொழிலாளர்களுக்காகவே நள்ளிரவு மட்டுமே இயங்கும் உணவகம்!

2022-05-16@ 17:59:03

நன்றி குங்குமம் தோழி

மதுரையின் மற்றொரு பெயர் தூங்காநகரம். அதற்கு முக்கிய காரணம் விடிய விடிய இயங்கும் சாலையோர உணவுக் கடைகள். இங்கு இரவு நேர உணவுக் கடைகள் ரொம்பவே ஃபேமஸ். எந்த நேரத்தில் இந்த ஊருக்குள் காலடி வைத்தாலும் நமக்கான உணவு கிடைக்கும் என்பதை இன்று வரை இந்த மாநகரம் நிரூபித்து வருகிறது. குறிப்பாக நள்ளிரவு நேரங்களில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் இரவு நேரம் வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு செல்லும் உழைப்பாளிகளின் பசியாற்றவே ரோட்டோர உணவகங்கள் மதுரை முழுக்க ஆங்காங்கே இரவு நேரங்களில் செயல்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் மதுரையின் மேல மாசி வீதியில் இரவு பத்துமணிக்கு மேல் வேலையில் இருந்து வருபவர்களுக்காகவே டிபன் கடையினை நடத்தி வருகிறார்கள் பாக்கியலட்சுமி, ரமேஷ் தம்பதியினர். மேல மாசி தெருவில் உள்ள சுந்தர விநாயகர் ஆலயம் அருகே இருக்கும் அக்கா கடைன்னு சொன்னாலே போதும் அந்த தெருவில் உள்ள அனைத்து உழைப்பாளிகளும் இவர்களின் கடையினை அடையாளம் காண்பிப்பார்கள். கடந்த பத்து வருடமாக இந்த கடையினை தன் கணவருடன் இணைந்து தனி ஒருத்தியாக நடத்தி வரும் பாக்கியலட்சுமி அக்கா தான் கடந்து வந்த பாதையினைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.

‘‘நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் மதுரை தான். எனக்கு ஐந்து வயசு இருக்கும் போதே அப்பா இறந்துட்டாங்க. நாங்க பெண்கள் மொத்தம் ஆறு பேர் மற்றும் அண்ணன், தம்பிகள் என மூன்று பேர். அப்பாவின் இறப்புக்கு பிறகு என் மூத்த அண்ணன் தான் குடும்ப ெபாறுப்பை ஏத்துக்கிட்டார். அவர் எங்களுக்காகவே கல்யாணம் செய்து கொள்ளவில்லை. எங்களை படிக்க வச்சது மட்டுமில்லாமல் எங்க எல்லாருக்கும் கல்யாணம் செய்து கொடுத்தார். எங்களுக்காகவே தன் வாழ்க்கை அனைத்தையும் தியாகம் செய்தவர். என் கணவர் இதே மதுரையில் எங்க வீட்டுக்கு பக்கத்து தெரு தான். அதே ஊர் மற்றும் அடுத்தடுத்த தெரு என்பதால், என்னை பெண் கேட்டு வந்தாங்க.

எங்க வீட்டிலேயும் பொண்ணும் பக்கத்திலேயே இருக்கும்னு கட்டிக் கொடுத்தாங்க. அவர் ஒரு மெடிக்கல் லேப்பில் வேலைப் பார்த்து வந்தார். மாதம் 12 ஆயிரம் சம்பளம். எங்களுக்கு இரண்டு பெண் பிள்ளைங்க. திருமணமான புதிதில் நான் என் மாமியார் வீட்டோட கூட்டுக் குடும்பமா தான் வாழ்ந்து வந்தேன். எங்களுக்கு முதல் குழந்தை பிறந்தவுடன், நானும் என் கணவரும் தனியாக அதே தெருவில் வேறு வீடு வாடகைக்கு பார்த்து வந்துட்டோம்.

இது நாள் வரை சொந்த வீடு என்பதால் வாடகை கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் இருந்தது. தனியாக வந்த பிறகு வீட்டு வாடகை, பிள்ளைங்க படிப்பு, வீட்டுச் செலவு என அனைத்திற்கும் அவரின் சம்பளம் போதுமானதா இல்லை. அப்ப நான் ரொம்பவே கஷ்டப்பட்டேன். அதனால் திருப்பூரில் உள்ள என்னுடைய சின்ன அக்கா வீட்டிற்கு சென்று அங்கு பனியன் கம்பெனியில் தினமும் சில காலம் வேலைப் பார்த்தேன். அப்பதான் என் அக்கா... நீதான் நல்லா சமைப்பியே... சின்னதா ஒரு சாலையோர கடை ஒன்றை ஆரம்பின்னு ஆலோசனை சொன்னார்.

என் அம்மா வீட்டில் நாங்க மொத்தம் பத்து பேர் என்பதால் தினமுமே பத்து பேருக்கு உணவு தயாரித்த அனுபவம் இருக்கு. அப்படித்தான் நான் சமைக்கவே கத்துக்கிட்டேன். அக்காவின் ஆலோசனையை கணவரிடம் சொல்ல தள்ளுவண்டி கடையினை தயார் செய்து இரவு நேர உணவு மட்டுமே கொடுக்க முடிவு செய்தோம். கடையை ஆரம்பிச்ச போது நிறைய பிரச்னைகள் வந்தது. நாங்க புதுசா ஏரியாவுக்குள் வந்துவிட்டதா அந்த ஏரியா மக்கள் கடையை எடுக்க சொல்லி பிரச்னை செய்தாங்க.

ஒரு புறம் இவங்க மறுபுறம் போலீசும் இங்க கடை ேபாடக்கூடாதுன்னு சொன்னாங்க. பிழைப்புக்காக இந்த கடை போடுறோம்ன்னு அவர்களிடம் சொல்லி எங்களின் பிரச்னையை சொன்ன பிறகு மனிதாபிமானத்தில் சம்மதித்தாங்க. இப்ப இந்த கடைய ஆரம்பிச்சு பத்து வருஷமாச்சு’’ என்றவர் இரவு நேரம் மட்டும் கடையினை இயக்கும் காரணம் குறித்து விவரித்தார்.

‘‘இந்த ஏரியாவில் நகை, ஜவுளி, பட்டறை போன்ற கடைகள் இருக்கு. அந்த கடைகள் எல்லாம் பத்து மணி வரை இயங்கும். கடைய மூடிய பிறகு அதில் வேலைப் பார்ப்பவர்கள் அந்த நேரத்தில் தான் வருவாங்க. அவங்களுக்காகவே இந்த உணவகத்தை ஆரம்பிக்க நினைச்சோம். பத்து மணிக்கு ஆரம்பிச்சா இரவு 12 மணி வரை எங்க கடை இயங்கும். தோசை, இட்லி போன்ற டிபன் உணவுகள் மட்டும் தான் தருகிறோம். பரோட்டா நாங்க தருவதில்லை.

மைதாவில் செய்யப்படும் உணவு. இரவு நேரத்தில் சாப்பிடும் போது சுவையாக இருக்கும். ஆனால் செரிமான பிரச்னையை ஏற்படுத்தும். அதனால் இரவில் எளிதாக செரிமானமாகக்கூடிய உணவான இட்லி தோசை மட்டுமே தருகிறோம். இதற்கு சாம்பார், தக்காளி சட்னி, தேங்காய் சட்னி அப்புறம் எள்ளு சட்னி தருகிறோம். தோசையில் பூண்டு, எள்ளு பொடி தோசை, கறி வேப்பிலை பொடி தோசை, மிளகு பொடி தோசை, ஸ்வீட் தோசை, முட்டை தோசை, ஆனியன் ஊத்தப்பம், பொடி ஆனியன் ஊத்தப்பம் என 20 வகையான உணவுகளை தருகிறோம். ஆரம்பத்தில் அசைவ உணவும் கொடுத்து வந்தோம். ஆனால் பலர் மது அருந்திவிட்டு வருவதால் அதை நிறுத்திட்டோம். ஆம்லெட் மற்றும் முட்டை தோசை மட்டுமே தருகிறோம். ஆனால் தனிப்பட்ட முறையில் ஆர்டரின் பேரில் பிரியாணி மற்றும் அசைவ உணவுகளை செய்து தருகிறேன். எங்க கடையின் ஃபேமஸ் எள்ளு சட்னி மற்றும் பொடி தோசைகள். சிலர் எள்ளு சட்னி சாப்பிடவே வருவாங்க’’ என்றவர் கொரோனா நேரத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டுள்ளார்.

‘‘கொரோனா சமயத்தில் எல்லா கடையையும் மூடச் சொல்லிட்டாங்க. பல நிறுவனங்களும் இயங்கல. அந்த சமயத்தில் என் கணவருக்கும் வேலை போயிடுச்சு. அந்த இரண்டு வருஷம் ரொம்பவே கஷ்டப்பட்டேன். வீட்டு வாடகை ஆறாயிரம் தரணும். வீட்டில் பசங்க சாப்பாடு படிப்பு பார்க்கணும். அந்த நேரத்தில் என் மூத்த மகள், மருமகன், குழந்தையும் இங்கதான் இருந்தாங்க. மேலும் என்னுடைய சின்ன தங்கையின் கணவர் கார் ஓட்டிக் கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் தொழில் இல்லை என்பதால் அவளும் குடும்பத்தோடு இங்க வந்துட்டா. கிட்டத்தட்ட பத்து பேரை நான் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இவருக்கு வேலை இல்லை. என்னால் சாப்பாட்டு கடையும் போட முடியவில்லை. சம்பாத்தியம் இல்லை. கையில் இருந்த நகையை அடமானம் வச்சாச்சு. எவ்வளவு தான் கடன் வாங்குறது. என்ன செய்றதுன்னே தெரியல. அந்த விரக்தியில் தூக்க மாத்திரையை சாப்பிட்டுவிட்டேன். என் சின்ன மகள் தான் என்னைப் பார்த்து, உடனே என் கணவரிடம் சொல்லி மருத்துவமனையில் சேர்த்தாங்க. அந்த சமயத்தில் ஒரு பத்திரிகையில் வேலை பார்த்து வந்த குமார் என்பவர் எங்களின் நிலைமையைப் புரிந்து கொண்டு வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கொடுத்து உதவி செய்தார். தேங்காய் எண்ணை முதல் பல் துலக்கும் பேஸ்ட், மளிகை பொருட்கள் என அனைத்தும் கொடுத்தார். அவருக்கு நான் ரொம்பவே கடமைப்பட்டிருக்கேன். அதன் பிறகு கொஞ்சம் கட்டுப்பாடு விலகிய பிறகு கடை போட ஆரம்பிச்சோம்.

கடை இரவு நேரம் என்பதால் காலையில் என் கணவர் தினசரி கூலி வேலைக்கு சென்று வருகிறார். என் சின்ன மகள் பார்மசியில் வேலை பார்க்கிறாள். இரவு நானும் என் கணவரும் கடையை நடத்துறோம். இந்த மூன்று வருமானம் கொண்டு தான் நான் வாங்கிய கடன், வீட்டு வாடகை மற்றும் குடும்ப செலவினை இப்ப சமாளித்து வருகிறோம். எனக்கு சிறிய அளவில் கடை மாதிரி அமைத்து உட்காரும் வசதிக் கொண்டு உணவு வழங்கணும்ன்னு விருப்பம். காலையில் பொங்கல், பூரி, சப்பாத்தி என வெரைட்டியா செய்யலாம். மதியம் சாதம் வகைகள் கொடுக்கலாம். மீண்டும் இரவு டிபன் உணவுகள். ஆனா, கடைக்கான அட்வான்ஸ், வாடகை எல்லாம் பார்க்கும் போது, வரும் லாபம் அதற்கே போயிடும் என்பதால் அதில் ஈடுபடாமல் இருக்கேன். ஆனால் இந்த நிலை எப்போதும் போல இருக்காது... கண்டிப்பா மாறும். அப்போது நான் கடையை நடத்துவேன்’’ என்கிறார் பாக்கியலட்சுமி தீர்க்கமாக.

செய்தி: ப்ரியா

படங்கள்: வெற்றி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • SYDNEYY111

  தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..

 • Mexico_Mayor

  மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!

 • manipurlandaa1

  தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!

 • America_Truck

  அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

 • wild-fire-california-30

  கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்