SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிச்சன் டிப்ஸ்

2021-04-15@ 17:09:20

நன்றி குங்குமம் தோழி

*புளித்த தோசை மாவில் சிறிது சர்க்கரை கலந்து தோசை வார்த்தால் புளிப்பு சுவை குறைவாக இருக்கும்.

*தேங்காய் சாதம் செய்யும்போது அத்துடன் சிறிதளவு வறுத்தரைத்த வெந்தயப்பொடி கலந்தால் சுவையும், மணமும் நன்றாக இருக்கும்.

*குக்கரில் பீட்ரூட் வேக வைத்த நீரை வீணாக்காமல் அதில் ரசம் செய்யலாம். வேக வைத்த நீரும் வீணாகாது. ‘ரெட்’ கலர் ரசம் நன்றாக இருக்கும்.

-ஆர்.பிரகாசம், திருவண்ணாமலை.

*ஊறுகாய்க்கு மிளகாய் அரைக்கும்போது ஒரு பிடி கடுகையும் வறுத்து சேர்த்து அரைத்து ஊறுகாய் போட கெடாமல் நாட்பட வருவதோடு வாசனையாக இருக்கும்.

*நன்கு சிவந்த மிளகாயை வெயிலில் காய விட்டு பொடித்து ஊறுகாய் போட கலராக இருக்கும்.

*ஊறுகாய்க்கு தாளிக்கும் எண்ணெயிலேயே மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலந்து காயில் கலந்துவிட காரம் அதிகமாக தெரியாது.

*காய்கறி ஊறுகாய் போல், புளிப்பு சுவையுள்ள கிரீன் ஆப்பிள், கொய்யா போன்ற பழங்களிலும் ஊறுகாய் போட சுவையாக இருக்கும்.

மகாலெட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்

*கஞ்சி மாவு செய்ய ராகியுடன், புழுங்கலரிசி, அவல், ஏலக்காய் கிராம்பு சிவக்க வறுத்து பொடி செய்து கஞ்சி செய்து கொடுத்தால் குழுந்தைகளின் உடல்நலனுக்கு நல்லது.

*பாத்திரங்களை கழுவும் முன் அதில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்தால் தேய்ப்பதற்கு சுலபமாக இருக்கும்.

*தேய்த்த பாத்திரங்களை கவிழ்த்து மூடி வைத்துவிட்டு நன்றாக காய்ந்தபிறகு துணியால் நன்கு ஈரம் போக துடைத்து அலமாரியில் வைக்கவும். கிச்சன் டிராயர் மரத்தினால் இருப்பதால் ஈரத்துடன் வைத்தால் மரம் ஏறி விரைவில் கெட்டு விடும்.

- பிச்சை சுவாமிநாதன், ராஜகீழ்ப்பாக்கம்.

*கமலா ஆரஞ்சு தோலை வேஸ்ட் பண்ணாமல் பொடியாக நறுக்கி, வதக்கி, உப்பு, புளி, மிளகாய் சேர்த்து துவையலாக அரைத்து சாதத்தில் கலந்து சாப்பிடலாம்.

*பரங்கி (மஞ்சள் பூசணி) குடலைப் பொடியாக நறுக்கி வதக்கி, உப்பு, புளி, மிளகாய் சேர்த்து துவையல் அரைக்கலாம். சாதத்தில் போட்டும் சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

- கே.சாந்தி, உள்ளகரம்.

*எலுமிச்சை சாதம் செய்யும் போது, ஒரு கிண்ணத்தில் எலுமிச்சை சாறு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கலந்துகொள்ளவும். அதில் தாளித்ததை ஊற்றிக் கலக்கிய பிறகு மொத்தமாக சாதத்தில் சேர்த்து கிளறினால் கூடுதல் சுவையுடன் எலுமிச்சை சாதம் இருக்கும்.

*வெங்காய ஊத்தப்பம் ஊற்றும்போது தோசை தடிமனாக இருந்தாலும் இருபுறமும் நன்றாக வேகவேண்டும் என்றால், தோசையின் நடுப்பகுதியில் சிறு ஓட்டை செய்து எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்து விடும்.

*ரசம் கொதித்து இருக்கும்போது அதில் ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலைப் பொடியைத் தூவி இறக்கினால் வாசனையாக
இருக்கும்.

- வசந்தா மாரிமுத்து, சென்னை.

*பஜ்ஜி மாவை மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து பஜ்ஜி செய்தால் உப்பியும், மிருதுவாகவும் இருக்கும்.

*இனிப்புகள் செய்யும்போது கேசரி பவுடருக்குப் பதில், கேரட் சாறு சேர்த்தால் நிறமும் அழகாக இருக்கும். உடம்புக்கும் நல்லது.

*ஃபிளாஸ்குகளில், சூடான பானங்களை நிரப்புமுன் வெதுவெதுப்பான நீரிலும், குளிர்பானங்களை நிரப்புமுன் குளிர்ந்த நீரிலும் கழுவி விட்டு பிறகு நிரப்பினால் சூடாகவோ, குளிர்ச்சியாகவோ பானம் நீண்ட நேரம் இருக்கும்.

- ஆர்.பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்.

*வாணலியில் எண்ணெய் ஊற்றி, சீரகம் போட்டுப் பொரிந்தவுடன் வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்து தேவையான அளவு வேக வைத்த முந்திரியையும் சேர்த்துக் கொதிக்க விடவும். ஒன்று சேர்ந்து வரும்போது கெட்டியான தேங்காய்ப்பால் சேர்த்து, கலந்து இறக்கவும். முந்திரிப் பருப்பு குழம்பு, வெள்ளை சாதம், ஆப்பம், இடியாப்பத்துக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.

*வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு தாளிக்கவும். அத்துடன் வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள் தூள், மல்லித்தூள் தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். தோசை, சப்பாத்திக்கு இந்த ‘கொத்சு’ நல்ல காம்பினேஷன்.

*பாலுடன் சர்க்கரை, கார்ன்ஃப்ளார் மாவு சேர்த்து அடுப்பில் வைத்து, கை விடாமல் கிளறவும். ஒரு சில சொட்டு வெனிலா எசென்ஸ் சேர்க்கவும். கெட்டியானதும் இறக்கி, ஒரு தட்டில் கொட்டவும். ஆறியதும் துண்டுகள் போட்டு வைக்கவும்.  துண்டுகளை மைதாக் கரைசலில் தோய்த்து, பிரட் க்ரம்ஸில் புரட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுக்க ‘ஃபிரைடு மில்க்’ இதமாக, இனிமையாக இருக்கும்.

- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

பழத்தயிர் பச்சடி

தேவையானவை

வாழைப்பழம், மாதுளை முத்துக்கள், கிஸ்மிஸ் பழம், தயிர், உப்பு - தேவையான அளவு.

செய்முறை

வாழைப்பழத்தை சில்லைகளாக நறுக்கி சிவப்பு மாதுளை முத்துக்கள், கிஸ்மிஸ் பழத்தை சேர்த்து உப்பு சேர்த்து பிசறி வைக்க சிறிது நேரத்தில் நீர் விட்டுக் கொள்ளும். நீரை வடிகட்டி விட்டு கெட்டித்தயிர் சேர்த்துக் கொடுக்கவும். அலங்கரிக்க மல்லித்தழை சேர்க்கவும். இது குழந்தைகளின் கண் எரிச்சல், வறட்டு இருமல், வெயில் சூட்டினால் வரும் நோய்களை கட்டுப்படுத்தும். ஆன்லைன் படிப்பில் உடல்சூடு ஆவதும் ஏற்படாது.

- எஸ்.ராஜம், திருச்சி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்