புன்னகையும் கணணீரும்
2015-02-02@ 15:58:20

மலாலா மேஜிக்-7
ஒவ்வொருமுறை அப்பா வீட்டைவிட்டு வெளியேறும்போதும் அவர் திரும்பி வருவாரா என்று ஏங்குவது இப்போதெல்லாம் மலாலாவுக்கு ஒரு வாடிக்கையாகவே போய்விட்டது. பத்து வயதானபிறகும் இப்படி குழந்தைத்தனமாக ‘அப்பா, அப்பா’ என்று அரற்றுவதைக் கண்டு மலாலாவுக்கே உள்ளுக்குள் கொஞ்சம் போல் வெட்கம் பிறந்தாலும் தன்னை அவரால் மாற்றிக்கொள்ளமுடியவில்லை. என்ன செய்வது? ‘நீ தொலைந்தாய்’ என்று தாலிபான் நேருக்கு நேராக அப்பாவை மிரட்டிவிட்ட பிறகு, தாலிபானை எதிர்த்து அப்பா பத்திரிகையில் கடிதம் எழுதிய பிறகு, அவரை நினைத்துப் பயப்படாமல் இருக்க முடியுமா? ‘எனக்கொன்றும் பயமெல்லாம் இல்லை, நீ போய் வா அப்பா’ என்று வலுக்கட்டாயமாக புன்னகையை வரவழைத்து டாட்டா காட்ட முடியுமா?
இங்கே எல்லாமே வலுக்கட்டாயமாகத்தான் செய்யப்படுகின்றன. கட்டாயமே அனைத்தையும் தீர்மானிக்கிறது. இனி பெண்கள் வெள்ளை சல்வார் அணியக்கூடாது என்று சொல்லி விட்டார்கள். இருந்தாலும் மலாலா தனக்குப் பிடித்த நீல, வெள்ளை சல்வார் கமீஸை விடாப்பிடியாக அணிந்து சென்றார். ஆனால், இப்போது ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் பயம் பிடித்துத் தின்றது. பயந்து பயந்து, மறைந்து மறைந்து வீட்டிலிருந்து பள்ளிக்குத் தாவி ஓடிப்போகவேண்டியிருந்தது. அப்படியாவது இதை அணிந்துகொள்ளத்தான் வேண்டுமா என்று சில சமயம் தோன்றும். என் உடல், என் தேர்வு என்று மற்றொரு நேரம் தோன்றும். சிறுவர்களும்கூடத் தப்பவில்லை. அவர்கள் இனி சட்டை, டிரவுசர் அணியக்கூடாது. தொளதொளப்பான முழுநீள பைஜாமாதான். தாலிபான் தவிர்த்து வேறுயாருடைய சுயவிருப்பத்துக்கும் இனி இங்கே இடமில்லை.
மேற்கத்திய உடைகள்மேற்கத்திய நாடுகளுக்குதான். நமக்கென்று ஒரு பாரம்பரியம் இல்லையா? நமக்கென்று ஒரு கலாசாரம் இல்லையா? அவர்கள் உடைகளை, அவர்கள் கடவுள்களை, அவர்கள் வழக்கங்களை நாம் ஏன் கடைப்பிடிக்க வேண்டும்? நாம் பாதை தவறினால் நம் இறைவன் பொறுத்துக்கொள்வாரா? சீறுகிறார்கள் தாலிபான்கள். ஒரு சல்வார் கமீஸை ஏன் இறைவன் வரை கொண்டு செல்கிறார்கள் என்று மலாலாவுக்குப் புரியவில்லை. என் பெட்டியைத் திறந்து நான் எடுத்து அணியும் ஓர் ஆடை ஏன் இறைவனை உறுத்தவேண்டும்? மேலும், ஆடைக்கு எதற்குத்திசைகளின் முத்திரை? வடக்கு, மேற்கு என்றெல்லாம் ஒரு சல்வார் கமீஸைப் பிய்த்து பிரித்துவிட முடியுமா? ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து தொடரும் பஷ்டூன் கலாசாரமும் பண்பாடும் ஒரு மெல்லிய துப்பட்டாவால் உடைந்து நொறுங்கிவிடக்கூடிய அளவுக்கு பூஞ்சையானதா? இவ்வளவு பலவீனமான ஒரு கலாசாரத்தை இதுநாள்வரை பாதுகாத்து வந்திருப்பது ஓர் ஆயுதம்தானா? சல்வார் கமீஸை அனுமதிக்காத இறைவன் ஆயுதத்துக்கு மட்டும் அருளாசி வழங்கிவிடுவாரா?
விரைவில் மலாலாவுக்கு நம்பிக்கையளிக்கும் ஒரு மாற்றம் அரசியல் தளத்தில் ஏற்பட்டது. அக்டோபர் 2007ல் பெனாசிர் புட்டோ பாகிஸ்தான் அதிபர்
தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடு திரும்புவார் என்று செய்தி வெளியானது. பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமராக வரலாறு படைத்திருந்த பெனாசிரின் மீது மலாலாவுக்கு இயல்பாகவே மரியாதையும் மதிப்பும் மிகுந்திருந்ததால் இந்த அறிவிப்பு அவரை மகிழ்ச்சியில் தள்ளியது. அனைத்து அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்ட பெண்களையே பார்த்துப் பார்த்துப் பழகிப்போயிருந்த கண்களுக்கு பெனாசிரின் கம்பீரமான தோற்றம் ஒரு புத்துணர்ச்சியை ஊட்டியிருக்க வேண்டும். மலாலா மட்டுமல்ல... அவரைப் போன்ற பல நூறு ஆயிரம் பெண்கள் பெனாசிரைப் பொறாமை பொங்கும் விழிகளோடு தான் கண்டனர். இருளுக்கு வெளிச்சத்தின் மீது இருக்கும் பொறாமையைப் போன்றது இது.
அதே சமயம், பெனாசிரின் அரசியலோடு இந்தப் பெண்கள் ஒத்துப்போயினர் என்றோ, குறைந்தபட்சம் அதைப் புரிந்துகொண்டனர் என்றோகூட எதிர்பார்க்க முடியாது. பெனாசிரின் அரசியல் அவர்களுக்கு முக்கியமில்லை. அவர் அரசியல் தளத்தில் இருக்கிறார் என்பதே அவர்களுக்குப் போதுமானது. அவருடைய தோல்விகள் அவர்களுக்கு முக்கியமில்லை. ஆண்களின் உலகில் ஆண்களோடு அவரால் போட்டிப்போட முடிந்திருக்கிறது என்பதே அவர்களுக்கு நிறைவைத் தந்துவிட்டது. அவர்களால் எப்படியெல்லாம் இருக்க முடியாதோ அப்படியெல்லாம் பெனாசிர் இருந்தார். இதைவிடப் பெரிய வெற்றியை ஒரு பெண்ணால் அடைந்துவிட முடியுமா என்ன? நுனி நாக்கில் ஆங்கிலத்தையும் உதடுகளில் சிவப்புச் சாயத்தையும் நிரப்பிக்கொண்டு, தீர்க்கமான கண்களுடன், கம்பீரமான நடையுடன் பெனாசிர் கூட்டத்தைப் பார்த்து கையசைத்தபோது நீர் கோர்த்த கண்களுடன் ஒரு பெரும் பர்தா கூட்டம் கையசைத்து மகிழ்ந்தது.
அவ்வளவுதான் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது என்பதால் கையசைத்து முடித்துவிட்டு அவர்கள் வீடு திரும்பி நடந்து சென்றார்கள். ஆகஸ்ட் 1988ல் ஜியா உல் ஹக் மரணமடைந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தானின் முதல் பெண் அதிபராக ஆட்சியில் அமர்ந்தார் பெனாசிர் புட்டோ. பாகிஸ்தான் வரலாற்றில் அதிக காலம் ஆட்சியில் இருந்தவர் (11 ஆண்டுகள்) ஜியா உல் ஹக். பாகிஸ்தான் இஸ்லாமியமாக வேண்டும் என்பதே இவருடைய ஆயுள்கால நோக்கமாகவும் தனிப்பட்ட விருப்பமாகவும் இருந்தது. இந்த விருப்பத்தின் நீட்சியாக அவர் ஜனநாயகத்தை ஒரு விரோத சக்தியாகவே பாவித்து வெறுத்தொதுக்கினார். அனுகூலமான சூழல் நிலவாதபோதெல்லாம் அவசர நிலைப் பிரகடனத்தை அறிவிக்க அவர் தயங்கியதில்லை.
இன்னும், இன்னும் என்று இரண்டு கைகளாலும் அதிகாரத்தை அவர் பாய்ந்து பற்றிக்கொண்டார். இருப்பது போதாது என்று தோன்றியபோது அதிகாரத்தின் ஊற்றுக் கண்ணான அரசியல்அமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவந்து தன்னை மேலும் பலப்படுத்திக் கொண்டார்.1980களில் ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியன் படைகள் நுழைந்தபோது அங்கிருந்த முஜாஹிதீன்கள் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போர் தொடுத்தனர். அப்போது, அமெரிக்கா, சவுதி அரேபியா துணையுடன் ஜியா உல் ஹக் முஜாஹிதீன்களை ஒருங்கிணைத்து சோவியத் ஆக்கிர மிப்பு முயற்சிகளை தடுத்து வந்தார். அவருடைய மரணத்துக்குப் பிறகே 1989ல் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியது. ஜியா உல் ஹக்கின் மரணம் இன்றுவரை ஒரு புதிர். முக்கிய ராணுவ உயர் அதிகாரிகளுடன் பயணம் செய்து கொண்டிருந்தபோது அவர் விமானம் நொறுங்கியது.
ஜியா உல் ஹக்கின் மரணத்தில்தான் பெனாசிர் புட்டோவின் அரசியல் வாழ்க்கை பிறந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1988ல் நடத்தப்பட்ட தேர்தலில் பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆரவாரத்துடன் வெற்றி பெற்றபோது ஒரு புதிய அத்தியாயம் மலர்ந்திருப்பதைக் கண்டு மக்கள் மகிழ்ந்தனர். ஜுல்பிகர் அலி புட்டோவின் இளைய மகளான பெனாசிர் தன் தந்தையின் இடத்தில் அமர்ந்ததைப் பலர் உணர்ச்சி பொங்கப் பார்த்தனர். (பாகிஸ்தான் மக்கள் கட்சியைத் தோற்றுவித்த வரும் 1973 முதல் 1977வரை அதிபராக இருந்தவருமான ஜுல்பிகர் அலி புட்டோவை கைது செய்து அவருக்கு மரண தண்டனை விதித்தவர் ஜியா உல் ஹக்). பெனாசிர் பாகிஸ்தானின் வரலாற்றைத் திருத்தி எழுதுவார் என்று அவர்கள் உளமாற நம்பினார்கள்.
மீடியாவும் சொல்லிச்சொல்லி மாய்ந்து போனது. பெண்கள் ஆண்களுக்குச் சமமானவர்கள் என்பதைக் கனவிலும் ஏற்காதவர் ஜியா உல் ஹக். ஆண்களைப்போல் பெண்களுக்கும் அரசியல் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை பலமாக எதிர்த்தவர் அவர். தான் அமர்ந்த நாற்காலியில் ஒரு பெண் நாளை அமரக்கூடும் என்று அவர் நினைத்துப் பார்த்திருப்பாரா? அதுவும் சாதாரணப் பெண்ணா? ஜியாவால் ஒழிக்கப்பட்ட எதிரியின் மகள் அல்லவா? இதைவிட உணர்ச்சிபூர்வமான ஒரு தருணம் பாகிஸ்தானுக்குக் கிடைக்குமா? பெண்களை மதிக்காத சமூகம், பிற்படுத்தப்பட்ட சமூகம் என்றெல்லாம் சொல்லிவரும் மேற்கத்திய நாடுகளின் கண்முன்னால் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் காட்டிவிட்டோம் அல்லவா? இனி பாகிஸ்தானின் சரித்திரம் ஒரு புதிய திசையில் பயணம் செய்யப்போகிறது. இதோ, இந்த நிமிடத்திலிருந்து ஒரு புதிய பாகிஸ்தானை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்!
ஆனால், பெனாசிர் பாகிஸ்தானை மாற்றவில்லை. பாகிஸ்தான் அவரை மாற்றி தன்வயப்படுத்திக்கொண்டது. மக்களின் எதிர்பார்ப்புகள் பொய்த்துப்போயின. இரும்புப் பெண்மணி என்று மார்கரெட் தாட்சரைப் போல் அழைக்கப்பட்ட பெனாசிர், அணுகுவதற்குக் கடினமான ஒரு நபராக மாறிப்போனார். உள்நாடு, இந்தியா, அயல்நாடு என்று எங்கும் அவரால் இணக்கமாக இருக்கமுடியவில்லை. போதாக்குறைக்கு ஊழல் குற்றச்சாட்டுகளும் மலிந்தன. தொடர்ந்து இருமுறை அதிபர் பதவி வகித்தார். மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 1993 முதல் 1996 வரை ஆட்சி புரிந்தார். 1997 தேர்தலில் தோல்வியுற்ற பெனாசிர் பாகிஸ்தானை விட்டு வெளியேறி தன்னைத் தானே சிறைபடுத்திக்கொண்டார். 2007ம் ஆண்டு பர்வேஸ் முஷரஃப் அரசுடன் உடன்படிக்கை செய்துகொண்டு பாகிஸ்தான் திரும்பிய பெனாசிர் மீண்டும் புதிதாகத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார்.
தனது இரண்டாவது வயதில் இருந்து பெனாசிர் பற்றிய கதைகளைக் கேட்டு வந்திருக்கிறார் மலாலா. ஒரு பெண்ணால் படிக்கமுடியும், தன் விருப்பப்படி எதையும் செய்ய முடியும் என்பதைப் பலர் பெனாசிரைப் பார்த்தே முதன் முதலில் தெரிந்து கொண்டனர். பெனாசிரின் உடை, நடை, பாவனை அனைத்தும் அவர்களுக்கு ஆச்சரியமளித்தன. பெனாசிர் துணிச்சல் மிக்கவர், தாலிபானைக் கண்டு அஞ்சாதவர் என்பது மலாலாவுக்குத் தெரியும். கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்துவிட்டுப் பிரகாசிக்கும் அவருடைய ஆற்றலைப் பார்த்து பார்த்து வளர்ந்தவர் மலாலா. ‘நான் வளர்ந்து பெரியவள் ஆகும்போது பெனாசிரைப் போல் இருப்பேன், பெனாசிரைப் போல் சிரிப்பேன், பெனாசிரைப் போல் ஓர் அரசியல் சூறாவளியாக மாறுவேன்’ என்று அடிக்கடி நினைத்துக் கொள்வார்.
பெனாசிர் பாகிஸ்தான் திரும்பும் செய்தி ஒளிபரப்பானபோது ஒட்டுமொத்த குடும்பமும் ஆர்வத்துடன் (தாலிபானுக்குத் தெரியாமல்தான்) தொலைக்காட்சி முன்னால் கூடி நின்றது. ஒன்பது ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் மண் மீது தன் பாதங்களைப் பதித்தபோது பெனாசிரின் கண்கள் கலங்கியிருந்ததை மலாலா கண்டார். அவர் கண்களிலும் நீர் கோர்த்துக்கொண்டது. திரும்பிப் பார்த்தார். அம்மாவின் உதடுகள் துடித்துக்கொண்டிருந்தன. ஒரு கட்டத்தில் அம்மாவால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளமுடியவில்லை. டி.வி. திரையைப் பார்த்து அழுதபடி கேட்டார். ‘எதற்காகத் திரும்பி வந்தாய் பெண்ணே? செத்துப் போகவா?’ அவர் மட்டுமல்ல, பெனாசிர் திரும்பி வருவது ஆபத்தானது என்றே அநேகம் பேர் கருதினார்கள். விமானத்தைவிட்டு அவர் இறங்கிய நிமிடம் தொடங்கி அவர்கள் வேறு எது பற்றியும் சிந்திக்கவில்லை. பெனாசிர் பத்திரமாக இருக்கவேண்டும்.
பெனாசிருக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது. கடந்த ஆட்சிகளில் பெனாசிர் இழைத்திருந்த அத்தனை சிறிய, பெரிய தவறுகளையும் அவர்கள் மறந்துவிட்டனர். இந்தப் பெண் எங்காவது தொலைவில் பத்திரமாக இருந்து தொலைத்திருக்கக்கூடாதா என்று ஆதங்கமடைந்தார்கள். ஊழலும் அடக்குமுறையும் தவறான அரசியல் முடிவுகளும் அவர்களுக்குப் புதிதல்ல. இவையெல்லாம் சேர்ந்ததுதான் அரசியல் என்பதே அவர்களுடைய புரிதல். பல அரசியல், ராணுவத் தலைவர்கள் இந்தத் தவறுகளை மீண்டும் மீண்டும் இழைத்திருப்பதை அவர்கள் அறிவார்கள். அதே தவறுகளைத்தானே ஒரு பெண்ணும் செய்திருக்கிறார்? போகட்டுமே!
பெனாசிர் புட்டோ மேற்கத்திய நாகரிகத்தின் அடையாளமாக மாறியபோது பாகிஸ்தான் துடிதுடிக்கவில்லை. மேற்கத்திய நாடுகளுடன் அவர் கைகுலுக்கிக்கொண்டபோதும் கூட பாகிஸ்தான் அதிர்ச்சியடையவில்லை. மாற்றங்கள் இப்படித்தான் இருக்கும் என்றே அவர்கள் எடுத்துக்கொண்டனர். அந்த அளவுக்கு பெனாசிர் புட்டோவைப் பாகிஸ்தான் நம்பியது. செப்டம்பர் 1996ம் ஆண்டு தாலிபான் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலில் ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது தாலிபான் பாகிஸ்தானின் செல்லப்பிள்ளையாகவே இருந்தது. அமெரிக்காவும் கூட தாலிபானை ஒரு முக்கிய நட்பு சக்தியாகவே கண்டது.
ஆப்கானிஸ்தானில் நிலைத்தன்மை ஏற்பட தாலிபான் உதவும் என்றும் தாலிபானின் துணையுடன் மத்திய ஆசியாவில் சந்தையை விரிவுபடுத்தலாம் என்றும் அமெரிக்கா கணக்கிட்டது. பெனாசிர் தன் தந்தையின் வழியில் தாலிபானுக்குத் துணையாகவே இருந்தார். ராணுவ உதவி, பண உதவி இரண்டையும் தாலிபானுக்கு வழங்கினார். தாலிபானை இறையாண்மைமிக்க ஒரு அரசாகவே பாகிஸ்தான் அரசு கருதியது. இஸ்லாமாபாத்தில் தாலிபானின் தூதரக அலுவலகம் திறக்கும் அளவுக்கு நிலைமை சென்றது. தாலிபானின் அயலகத் தூதர் அதிகாரப்பூர்வமாக பெனாசிரை சந்தித்து கைகுலுக்கி படம் எடுத்துக் கொண்டார். இறுதியில் செப்டம்பர் 11 தாக்குதல் சம்பவம் இந்த உறவைச் சிதைத்தது. பெனாசிர் மாறிப்போனார். தாலிபானுக்கு எதிராக உரத்தக் குரலில் பேசவும் செயல்படவும் தொடங்கினார்.
இராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கா மேற்கொள்ள இருந்த போர்களுக்கு முன்கூட்டியே தனது ஆசியையும் ஆதரவையும் வழங்கினார். தீவிரவாதத்துக்கு எதிரான போரில் தானும் பங்கேற்பதாக அறிவித்தார். ‘என் நாட்டில் தலைவிரித்தாடும் தீவிரவாதத்தை ஒழித்தே தீருவேன்’ என்று கேமரா வெளிச்சத்தில் சபதம் ஏற்றார். இவருடைய தந்தை ஜுல்பிகர் அலி புட்டோவின் ஆட்சியைக் குலைத்ததில் அமெரிக்காவுக்கும் பங்கு இருந்தது. இது பெனாசிருக்கும் தெரியும். இருந்தும் அவர் அமெரிக்காவுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். அமெரிக்காவின் நிழலில் நின்றால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்று அர்த்தப்படுத்திக் கொண்டார். பதிலுக்கு அமெரிக்கா பெனாசிருக்கு ரத்தினக் கம்பள வரவேற்பு அளித்தது. அவர் பாகிஸ்தான் திரும்புவதற்கு உதவியது. பெனாசிர் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆகவேண்டும் என்றும் அமெரிக்கா விரும்பியது.
பாகிஸ்தானுக்கு இப்போது திரும்பி வந்திருக்கும் பெனாசிர் புட்டோ முழுக்க முழுக்க ஒரு மேற்கத்திய தயாரிப்பாகவே மாறிப்போயிருந்தார். தாலிபானின் நட்புச் சக்தியாகத் தன் பயணத்தைத் தொடங்கி இப்போது தாலிபானின் விரோதியாக மாறிப்போயிருந்தார். எதிர்பார்த்த படியே இந்த மாற்றங்கள் பாகிஸ்தான் மக்களின் ஒரு பிரிவினரிடையே ஆதரவையும் தாலிபான்கள் இடையே எதிர்ப்பையும் சம்பாதித்திருந்தன. 27 டிசம்பர் 2007 அன்று பெனாசிர் புட்டோ உணர்ச்சிகரமாக உரையாற்றிக்கொண்டிருந்தபோது மலாலா தொலைக்காட்சியை விட்டு தன் கண்களை அகற்றவேயில்லை. குண்டு துளைக்காத வண்டியில் இருந்தபடி பெனாசிர் மக்களுக்குக் கையசைத்தபோது மக்கள் ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர். ‘மக்களின் துணை எனக்கு இருக்கும் என்று நம்புகிறேன். தீவிரவாதத்தையும் ராணுவவாதத்தையும் நாம் விரைவில் முறியடிப்போம்.’
மலாலா பார்த்துக்கொண்டிருந்தபோதே குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. பிறகு அங்கும் இங்குமாகப் பலர் ஓடினார்கள். கேமரா மேலும் கீழுமாக ஆடியது. பெனாசிர் தன் காரில் சரிந்ததை மலாலா கண்டார். சுவாசிக்கவும் மறந்து பேரதிர்ச்சியுடன் மலாலா அதனைக் கண்டார். பக்கத்தில் அம்மாவின் முகத்தில் தாரைத் தாரையாகக் கண்ணீர் பெருகத் தொடங்கி விட்டது. எதற்கும் கலங்காத அப்பாவும் கூட வெடித்து அழுவதைக் கண்டதும் மலாலாவுக்கு உலகமே முடிவுக்கு வந்துவிட்டதைப் போல் இருந்தது. பத்து வயது மலாலாவுக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது. பெனாசிரைக் கொல்வது சாத்தியம் என்றால் இனி பாகிஸ்தானில் யாருமே பாதுகாப்பாக இருக்க முடியாது என்றுதான் அர்த்தம்!
(மேஜிக் நிகழும்!)
மேலும் செய்திகள்
இந்தியாவிற்காக விளையாடி ஜெயிக்கணும்!
சக மனிதருக்கு உதவும் கல்வியை நான் கொடுக்கிறேன்!
குடும்பமா சந்தோஷமா வாழணும்!
நில்.. கவனி... சருமம்
அதிநவீன வசதியுடன் மிளிரும் மிட்லாண்ட்!
கிஃப்ட் எ விக்; கிஃப்ட் கான்பிடென்ஸ்!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி