குடும்பமா சந்தோஷமா வாழணும்!
2023-03-16@ 15:30:57

நன்றி குங்குமம் தோழி
மனம் திறக்கிறார் சுந்தரி (கேப்ரில்லா)
இரவு
ஏழு மணி என்றதும், இல்லத்தரசிகள் அனைவரின் வீட்டிலும் ஒரு நபராக இருப்பவர்
‘சுந்தரி’. இது சன்.டிவியில் வெளியாகும் தொடர். அதில் சுந்தரி என்ற
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கேப்ரில்லா. மைம் ஆர்டிஸ்ட்,
குறும்பட நடிகர், வீடியோ ஜாக்கி, யுடியூப் விலாகர் என பல முகங்கள் இவருக்கு
இருந்தாலும், சுந்தரி மூலம் இல்லத்தரசிகளின் மனதில் கம்பீரமாக நாற்காலி
போட்டு அமர்ந்துள்ளார். கலகலவென்று சிரித்து பேசும் கேப்ரில்லா, தன்
தோழிகள் மற்றும் சின்னத்திரை அனுபவங்கள் குறித்து பகிர்ந்து ெகாண்டார்.
‘‘என்னோட
சொந்த ஊர் திருச்சியில் இருக்கும் அல்லித்துறை. அப்பா, அம்மா இருவருமே
அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள். அண்ணன் சாஃப்ட்வேர் நிறுவனத்தில்
வேலைப் பார்த்து வருகிறார். எனக்கு படிப்பு பெரிசா வராது. ஆசிரியர் பொண்ணு
மக்குன்னு சொல்வாங்கல, அப்படித்தான் நானும். படிப்பு விஷயத்தில் நான்
ஆவரேஜ் தான். எனக்கு படிப்பு மேல் பெரிய ஆர்வம் இல்லை என்றாலும், கலை
சார்ந்த துறை மேல் தனிப்பட்ட ஈடுபாடு உண்டு. கல்லூரியில் படிக்கும் போது
எனக்கு சினிமாவில் நடிக்கணும்னு ஆசை வந்தது. ஆனால், அதில் எப்படி வரணும்னு
எல்லாம் தெரியாது. அதனால் முதலில் எனக்கான தகுதியினை அமைத்துக் கொள்ள
விரும்பினேன்.
எங்க ஊர் லோக்கல் சேனலில் வி.ஜேவாக வேலைக்கு
சேர்ந்தேன். கல்லூரி, வி.ஜேன்னு நானும் பிசியா இருந்தேன். ஒரு முறை
எனக்கும் அப்பாவுக்கும் இடையே பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது. அதில்
கோவத்தில் அவர் வி.ஜே மற்றும் சினிமா சார்ந்த எந்த நினைப்பும் இருக்கக்
கூடாது. வேலைக்கு போகக்கூடாதுன்னு சொல்லிட்டார். எனக்கு படிப்பு
வரலைன்னாக்கூட பரவாயில்லை. ஏதாவது ஒரு தொழில் செய்து கூட பிழைச்சிப்பேன்.
ஆனால் எனக்கு பிடிச்ச விஷயம் நடிப்பு. அதற்காகத்தான் வி.ஜேவாகவே
சேர்ந்தேன். அதையும் செய்யக்கூடாதுன்னு சொன்னதும் எனக்கு என்ன செய்றதுன்னு
புரியல. அதனால வீட்டைவிட்டு போயிடலாம்ன்னு முடிவு செய்து, ஒரு வேகத்தில்
சென்னைக்கு போகும் பேருந்தில் ஏறிட்டேன். சென்னையில் எனக்கு யாரையும்
தெரியாது. என்ன செய்யப்போறேன்னு புரியல.
அந்த நொடி சினிமாவில்
நடிக்கணும்ன்னு தான் நினைச்சேனே தவிர என்னுடைய அம்மாவப் பத்தி யோசிக்கவே
இல்லை. பஸ்சில் பயணம் செய்யும் போது தான் எனக்கு ெராம்ப பயமாயிடுச்சு.
அப்போது ஒரு வாசகம் என் கண்ணில் பட்டது. ‘நீங்க இல்லாத குடும்பம்
உருக்குலைந்து போகும்’ என்பது தான் அந்த வாசகம். அதைப் படிச்சதும் நாம
தப்பு செய்திட்டோம்ன்னு தோணுச்சு. ஆனால் நான் சென்னைக்கு போகும் பஸ்சில்
பயணம் செய்யும் போதே என்னை தேடி கண்டுபிடிச்சிட்டாங்க. வீட்டுக்கு வந்ததும்
அம்மாவைப் பார்த்து ஒரே அழுகை. இனிமேல் எங்கும் போகமாட்டேன். ஒழுங்கா
கல்லூரிக்கு போறேன்னு வீட்டில் சொல்லிட்டேன்.
நாம ஒழுங்கா
இருக்கணும்னு நினைச்சாலும் ஊர் சும்மா இருக்குமா? ஊரைப் பொறுத்தவரை ஒரு
பெண் பிள்ளை வீட்டைவிட்டு போனா யாரோ ஒரு பையனோடு தான் ேபாயிட்டான்னு
பேசுவாங்க. ஆனால் நான் என்னுடைய கனவைத் தேடித்தான் போனேன்னு ஊரில் யாருமே
நம்பல. அவங்களுக்கு புரியவும் இல்லை. அதனால் கல்லூரி போகவும் எனக்கு
சங்கடமா இருந்தது. அங்கு எல்லாரும் என்னைப் பார்த்த பார்வையும், என்னைப்
பற்றி பேசினது எல்லாமே என் மனசை ரொம்பவே பாதிச்சது. வீட்டில் வந்து
கல்லூரிக்கு மட்டும் இல்லை வீட்டைவிட்டு எங்கும் போக மாட்டேன்னு அழுதேன்.
அப்ப அம்மா தான் என்னை தேற்றினாங்க.
நீ யார் கூடையும் ஓடிப் போகல.
நடிக்கணும்ன்னு போன. அதனால உனக்கு பிடிச்ச நடிப்பு தொழிலைத் தேடிப் போன்னு
எங்க வீட்டில் பர்மிஷன் கொடுத்தாங்க. அதன் பிறகு சென்னைக்கு வந்தேன்’’
என்றவர் சுந்தரி சீரியலில் எவ்வாறு வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்து
பேசத் துவங்கினார்.‘‘வீட்டில் அனைவரின் அனுமதியுடன் சென்னைக்கு வந்து
ஹாஸ்டலில் தங்கி, ஆன்லைன் சேனலில் வி.ஜேவாக சேர்ந்தேன். அதன் பிறகு எல்லா
சேனலிலும் வாய்ப்பு தேடினேன். நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில்
இருந்தே, மேடை நாடகம் மற்றும் மைம் எல்லாம் செய்திருக்கேன். ஒரு மைம்
பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி எடுத்தேன். அங்கு ஒரு நாடக குழுவினரும்
பயிற்சி எடுத்து வந்தாங்க.
அவர்களின் நாடக குழுவில் இணைந்து மேடை
நாடகத்தில் நடிச்சேன். அதே சமயம் மைமும் செய்து வந்தேன். ஆனால் எனக்காக
அடையாளம் கிடைக்கல. காரணம், மைம் பொறுத்தவரை முகத்தில் வெள்ளை பெயின்டும்,
பேய் போல வேஷம் போடுவோம். அதனால் நம்முடைய முகம் யாருக்குமே பரிச்சயமாகாது.
ஆனாலும் என்னுடைய முயற்சியை நான் கைவிடவில்லை. பாலுமகேந்திராவின்
மாணவர்கள் இயக்கும் குறும்படங்களில் நடிச்சேன். அதில் எனக்கு நல்ல
அங்கீகாரம் கிடைச்சது.
சொல்லப்போனால் குறும்படத்தில் திறமையான
நடிப்பிற்காகவே 37 விருதுகளை வாங்கி இருக்கேன். குறும்படம் மூலம்
வெள்ளித்திரையில் சின்ன சின்ன ரோல் நடிக்க வாய்ப்பு வந்தது. அப்படித்தான்
அய்ரா படத்தில் நடிச்சேன். அதில் நயன்தாராவின் சின்ன வயசு கதாபாத்திரம்
செய்தேன். அதன் பிறகு கபாலி படத்தில் ரஜினி சாரோட கிளைமேக்ஸ் சீனில் ஒரு
காட்சியில் நடிச்சேன். காஞ்சனாவிலும் சின்ன பர்பார்மென்ஸ் செய்திருப்பேன்.
இப்ப எண் 4ல் நடிச்சிருக்கேன்.
படங்கள் நான் செய்தாலும் எனக்கு
அதில் சரியான பிரேக் கிடைக்கல. சினிமாவில் எதிர்பார்ப்பது ஏதோ ஒன்று
என்னிடம் இல்லைன்னு எனக்கு புரிந்தது. அது என்னுடைய நிறமாக கூட இருக்கலாம்.
மேலும் அதற்கான வாய்ப்பு கேட்ட போது என் கண் முன் நிறைய விஷயங்களை எடுத்து
வச்சாங்க. அது எதுவுமே எனக்கு பொருந்தாதுன்னு நான் சினிமாவை விட்டு
விலகினேன்’’ என்றவர் டிக்டாக் மூலம் தனக்கான ஒரு பாதையினை ஏற்படுத்திக்
கொண்டார்.
‘‘சினிமா இல்லைன்னு ஆயிடுச்சு. அதற்காக நான் துவண்டு
போகல, எனக்கான மேடை எதுன்னு தேடினேன். டிக்டாக் செய்ய ஆரம்பிச்சேன். நான்
மைம் ஆர்டிஸ்ட் என்பதால், அதைக் கொண்ட டிக்டாக் செய்தேன். நாலு வரியினை
ெமளனமாக பாவனையில் செய்தேன். அதைப் பார்த்து பலர் எனக்கு வாய் பேச
வராதுன்னு நினைச்சாங்க. எனக்கு எழுதவும் பிடிக்கும். வாய்ப்பை வரும்னு
தேடிக் கொண்டு இருந்தா வயசாயிடும். நாம தான் நமக்கான வாய்ப்பினை
உருவாக்கணும். அதனால் அடுத்த கட்டமாக என்னைப் பாதித்த விஷயத்தைப் பற்றி பேச
ஆரம்பித்தேன். டிக்டாக் நேரம் ஒரு நிமிஷம் குறைக்கப்பட்டதும்,
கடிதாசிக்காரி என்ற பெயரில் கடிதம் முறையில் பேசினேன்.
இப்போது
படிப்பது, கடிதம் எழுதுவது எல்லாம் குறைந்துவிட்டது. அதைப் பற்றி பேசினேன்.
இதன் மூலம் என்னை பலர் அடையாளம் காண ஆரம்பிச்சாங்க. எப்படியும் வீட்டில்
இருந்து தான் செய்யப்போறோம். அதனால் எதற்கு சென்னையில் இருக்கணும்ன்னு
ஊருக்கே போயிட்டேன். அந்த சமயத்தில் தான் எனக்கு சுந்தரி சீரியலில் நடிக்க
வாய்ப்பு வந்தது. இந்த சீரியல் எனக்கானது போல ேதான்றியது. மேலும் நான் இந்த
சீரியல் ஒப்புக் கொள்ள என்னுடைய அம்மாவும் அம்மாச்சியும் தான் ஒரு காரணம்.
ஒரு முறை அவங்க என்னிடம், சினிமா வேண்டாம்ன்னு சொல்லிட்ட, அப்ப உனக்கு
சீரியலில் நடிக்கும் வாய்ப்பு எல்லாம் வராதான்னு கேட்டாங்க. என்னை நம்பி
என்னுடைய கனவினை தேடிப் போக அனுமதிச்சாங்க. அவங்க என் மேல் வைத்திருக்கும்
நம்பிக்கைக்காகவே நான் சுந்தரியில் நடிக்க சம்மதிச்சேன்’’ என்றவர் தன்
தோழிகள் பற்றி பகிர்ந்தார்.
‘‘நான் எல்லாரிடமும் ரொம்ப நல்லா
பழகுவேன். ஆனால் உயிருக்கு உயிரான தோழிகள்னு பார்த்தா இரண்டு பேர் தான்.
அல்ஃபியா, திவ்யா. அல்ஃபியாவும் நானும் ஆறாம் வகுப்பில் இருந்து ஒன்னா
படிச்சோம். எனக்கு அவ இன்னொரு அம்மா. ரொம்ப நல்லா என்னைப் பார்த்துப்பா.
என்னுடைய அம்மாவிற்கு ஒரு முறை அறுவை சிகிச்சை நடந்தது. அப்ப அவ வீட்டில்
இருந்துதான் எங்களுக்கு சாப்பாடு வரும். அதே சமயம் நான் எனக்காக ஆசையா
ஏதாவது வாங்கி இருப்பேன். அவளைப் பார்த்ததும் அதை அவளுக்கு கொடுத்திடுவேன்.
நான் வீட்டைவிட்டு சென்னைக்கு வந்தபோது, என்னுடைய ஃபோனை அவ அண்ணன் தான்
டிராக் செய்து நான் எங்க இருக்கேன்னு கண்டுபிடிச்சாங்க.
நான்
வீட்டுக்கு வந்த பிறகு என்னைப் பார்த்து கட்டிப்பிடித்துக் கொண்டு அழ
ஆரம்பிச்சிட்டா. அந்த பாசம் எல்லாம் மனசார ஒருவர் மேல் அன்பு செலுத்தும்
போதுதான் ஏற்படும். இப்ப அவளுக்கு கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கு.
திவ்யா என்னுடைய கல்லூரி தோழி. அவ என் ேமல ரொம்ப பொசசிவ். எனக்கு ஏதாவது
பிரச்னைன்னு அவளிடம் சொல்லிட்டா போதும் உடனே அழுதிடுவா.
அதனாலேயே
நான் என் பிரச்னைகளை அவளிடம் சொல்ல மாட்டேன். அதே சமயம் என் மனசுக்கு பாரமா
இருக்கும் விஷயத்தை அம்மாவிடம் சொல்வேன். அம்மா மேரி கிளாரா, நான்
தடுமாறும் போது எல்லாம் எனக்கு சப்போர்ட்டா இருந்து என்னை சரியான பாதையில்
வழிநடத்தி வருபவர். நான் இவ்வளவு தூரம் கலைத்துறையில் பயணம் செய்திருக்க
காரணம் அவங்க தான். 19 வயசில் சென்னைக்கு வந்தேன். இங்கு நான் தனியாக
இருக்கும் போது எல்லாம் என்னை அங்க இருந்து இயக்கியதும் இவங்கதான்.
சுந்தரி
டீம். இது என்னுடைய மற்றொரு குடும்பம். இரண்டு வருஷமா நாங்க டிராவல்
செய்றோம். அழகர் சார் ஒவ்ெவாரு கதாபாத்திரத்தையும் அழகாக செதுக்கி
இருக்கார். சொல்லப்போனால் என்னுடைய நிறத்திற்கு கிடைத்த அங்கீகாரம். ஒன்பது
வருஷமா நான் கலைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று இருந்த தவத்திற்கு
கிடைத்த பலன். டைட்டில் கதாபாத்திரத்தில் நடிப்பேன்னு நான் நினைச்சுக்கூட
பார்க்கல. தினமும் மக்கள் என் முகத்தை பார்க்கிறாங்க. என்னை வெளியே
பார்க்கிறவங்க, சுந்தரின்னு அழைக்கும் போது அவ்வளவு சந்தோஷமா இருக்கு. சில
சமயம் என்னுடைய நிஜப்பெயர் கூட எனக்கு மறந்திடும். எனக்கு கணவரா நடிக்கும்
ஜிஷு. இதில் ஆன்டி ஹீரோவா நடிக்கிறார்.
ஆனால் நேரில் அவர் ஒரு
குழந்தை மாதிரி. ரொம்ப பிரியமா இருப்பார். ஆர்விஷ் என் கூடத்தான் பிறக்கல.
ஆனா தங்கச்சிமான்னு அண்ணன் பாசத்தை பொழிவார். மாலினி ரோலில் நடிக்கும்
தீப்தி, ரொம்ப துறுதுறுன்னு இருப்பாங்க. தீபா, லட்சுமி அக்கா, வரலட்சுமி
அம்மான்னு ஒரு பெரிய பாசக்கார குடும்பமே என்னைச் சுற்றி இருக்காங்க. எனக்கு
சமைக்க தெரியாது. இவங்க சொல்லித்தான் இப்ப சமைக்க கத்துக்கிட்டு
இருக்கேன்.
அப்புறம் என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நபர் என்
கணவர் ஆகாஷ். ஒரு ஷூட்டிங்கில் தான் முதல் முறையாக அவரை சந்திச்சேன்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் சுருள் மண்டையோடு அங்கும் இங்கும் சுற்றிக்
ெகாண்டிருந்தார். எனக்கு அவர் அறிமுகம் இல்லை என்றாலும், அவரே நேரடியா
என்னிடம், ‘புது வண்டியா தாங்க நான் ஒரு ரவுண்ட் போயிட்டு வரேன்’னு சொல்லி
வாங்கிக் கொண்டு போனார். அப்படித்தான் எனக்கும் அவருக்கும் நட்பு ஏற்பட்டு
காதலா மாறி இப்ப வாழ்க்கையில் இணைந்திருக்கிறோம். எனக்கு கிடைத்த பெரிய
கிஃப்ட் இவர். இவர் இல்லாமல் நான் இல்லை’’ என்றவருக்கு எதிர்காலம் குறித்த
கனவுகளும் உண்டு.
‘‘எனக்கு பெரிய அவார்ட் வாங்கணும்னு எல்லாம் கனவு
கிடையாது. சினிமாவில் ஜொலிக்கணும்னு ஆசை இருந்தது. ஆனால், கோவிட் பிறகு
எல்லாம் அப்படியே மாறிடுச்சு. கொரோனாவால் தெரிஞ்சவங்க பலரை இழந்திருக்கேன்.
இருப்போமா இல்லையான்னு ஒரு பயம் வந்தது. கருப்பழகி தியேட்டர் பேக்டரின்னு
ஒரு மைம் பயிற்சி பள்ளி ஆரம்பிக்கணும்.
குழந்தைப் பெற்றுக் கொண்டு என்
குடும்பத்தோட வாழணும். அவ்வளவுதான்’’ என்றார் முத்துப்பல் தெறிக்க தனது
டிரேட்மார்க் புன்னகையுடன் சுந்தரி அலைஸ் கேப்ரில்லா.
தொகுப்பு : ப்ரியா
மேலும் செய்திகள்
சக மனிதருக்கு உதவும் கல்வியை நான் கொடுக்கிறேன்!
நில்.. கவனி... சருமம்
அதிநவீன வசதியுடன் மிளிரும் மிட்லாண்ட்!
கிஃப்ட் எ விக்; கிஃப்ட் கான்பிடென்ஸ்!
கடைசி வரை அந்த ஆடு சிக்கல
ஜாம்பவான்கள் மத்தியில் தனித்து இருக்க விரும்பினேன்!
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!