புத்தக தானமும்.. Queer பப்ளிகேஷனும்!
2023-02-08@ 18:01:35

நன்றி குங்குமம் தோழி
இந்த ஆண்டு சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற 46வது புத்தகக்காட்சி ஜனவரி 6 முதல் 22 வரை மிகப் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. கூடுதலாக இந்த வருடம் 200 ஸ்டால்கள் போடப்பட்டிருந்த நிலையில், அனைவரையும் மிகக் கவர்ந்த இரண்டு ஸ்டால்களில் ஒன்று திருநர் மற்றும் “பால் புதுமையினர்” என அழைக்கப்படும் Queer கம்யூனிட்டி (LGBTQ+) மக்களுக்கானது. மற்றொன்று “கூண்டுக்குள் வானம்” என்கிற பெயரில் “சிறைகள் மற்றும சீர்திருத்தப்பணிகள் துறை” கைதிகளுக்காக உருவாக்கப்பட்ட புத்தகங்களைத் தானமாகப் பெரும் ஸ்டால். Queer பப்ளிகேஷன் ஸ்டால் குறித்து திருநங்கை கிரேஷ்பானுவிடம் பேசியபோது...
பபாசியில் உறுப்பினர் இல்லாத எங்களுக்கு 45 ஆண்டுகளைக் கடந்து முதல் முறையாக கிடைத்த மிகவும் பெருமைக்குரிய அங்கீகாரம் இது. பல்வேறு தளத்தில் நாங்கள் பயணித்தாலும் அறிவு தளத்திலும் பயணிக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். நான் என் புத்தகங்களை 2014ல் எழுதி வெளியிட முனைந்தபோது புறக்கணிப்புகளே அதிகம் கிடைத்தது. அப்போதே எங்கள் மக்களுக்காக ஒரு பப்ளிகேஷன் ஹவுஸ் உருவாக்க நினைத்து முன்னெடுத்ததின் முயற்சியே இந்த Queer பப்ளிகேஷன் ஸ்டால். இது எங்களின் முதல் முயற்சி. தொடக்கத்தில் சின்னச் சின்ன பிரச்சனைகள் இருந்தாலும் பெருவாரியான மக்களின் ஆதரவு எங்களுக்கு இருக்கிறது.
திருநர் மக்களில் 100 எழுத்தாளர்களை கண்டுபிடிக்க நினைத்தோம். ஆனால் 50 பேரைத்தான் இந்த புத்தககாட்சியில் அடையாளப்படுத்த முடிந்தது. ஆங்கிலம், தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் எங்கள் கம்யூனிட்டி மக்கள் எழுதிய புத்தகங்கள் இந்த புத்தகக் காட்சியில் கிடைக்க ஏற்பாடு செய்தோம். விரைவில் மற்ற மொழிகளிலும் புத்தகங்களை சேகரிக்கும் முயற்சியில் இருந்து வருகிறோம்.
அடுத்தடுத்து வர இருக்கிற புத்தகக் காட்சியில், இந்தியா முழுமைக்கும் உள்ள திருநர் மற்றும் பால்புதுமையினர் எழுதிய புத்தகங்கள் எங்களின் Queer பப்ளிகேஷன் ஸ்டாலில் கிடைக்க ஏற்பாடுகளைச் செய்வோம் என்று விடைபெற்றவரைத் தொடர்ந்து பேசியவர் திருநம்பி அருண் கார்த்திக்இந்த ஆண்டு புதிதாக உருவாகியுள்ள எங்களுடைய ஸ்டாலுக்கு மக்களிடத்தில் நல்ல அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. கேரள மாநில அரசின் விருதினை வென்ற திருநங்கை நேகா எழுதிய “ஆர்.ஐ.பி.(RIP)” என்ற புத்தகம், திருநம்பியாகிய நான் எழுதிய “என்னிலிருந்து பார்” என்கிற தலைப்பிட்ட கவிதை நூல், மாணவி அஜிதா எழுதிய “கலையிலிருந்து கவிதைகள்” என்ற மூன்று புத்தகங்களையும் இந்த ஆண்டு வெளியிட்டிருக்கிறோம்.
இவை தவிர்த்து ஏற்கனவே எங்கள் திருநர் மக்கள் எழுதி வெளியிட்டுள்ள, திருநங்கை ரேவதியின் வெள்ளை மொழி, லிவிங் ஸ்மைல் வித்யா எழுதிய நான் சரவணன் வித்யா, மெல்ல விலகும் பனித்திரை, கிரேஸ் பானுவின் சிந்தனைகள், பத்மினி பிரகாஷ் எழுதிய நெருப்பாற்றில் நீந்தி வந்தேன், கல்கி எழுதிய குறி அறுத்தேன், கல்கி சுப்ரமணியம் எழுதிய வீ ஆர் நாட் அதர்ஸ் போன்ற புத்தகங்களும் எங்கள் ஸ்டாலில் கிடைக்க ஏற்பாடு செய்திருந்தோம். இந்த ஆண்டு புத்தகக்காட்சியில் “டிரான்ஸ் ஜென்டர் இன் இந்தியா” என்கிற புத்தகம் அதிகம் விற்பனையானது. பலரும் இதைத் தேடிவந்து கேட்டு வாங்கிச் சென்றார்கள். புத்தகங்கள் விற்பனையாகிவிட்ட நிலையில் மீண்டும் வரவழைக்க ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம்.
Queer பப்ளிகேஷனைத் தொடர்ந்து “கூண்டுக்குள் வானம்” என்ற பெயரில் ஸ்டாலுக்கு தலைப்பிட்டு சிறைக் கைதிகளுக்காக புத்தகங்களைத் தானமாக பெற்றுவரும் சிறைத்துறை டி.ஐ.ஜி. முருகனிடம் பேசியபோது.. “ஒரு நூலகம் திறக்கப்படும்போது 100 சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன” என்றார் விவேகானந்தர். சிறை வாசிகள் புதிய புத்தகங்களை தேடிதேடி படிக்க வேண்டும் என்பதற்கான முயற்சியாக, சிறை மற்றும் சீர்திருத்தத்துறைத் தலைவர் திரு அம்ரேஷ் பூஜாரி, நூலகத்துறை இயக்குநர் இளம்பகவத் ஐ.ஏ.எஸ்., தமிழக அரசின் முன்னெடுப்பு மற்றும் வழிகாட்டுதலில் இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் “கூண்டுக்குள் வானம்” அரங்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது.
எல்லா ஸ்டாலும் புத்தகத்தை விற்பதற்காக அமைக்கப்பட்டது என்றால் எங்கள் ஸ்டால் மட்டுமே புத்தகத்தை தானமாகப் பெறுவதற்கு அமைக்கப்பட்டது. சிறைச்சாலை நூலகத்திற்கு புத்தகங்களை வழங்க நினைப்பவர்கள் அதற்கான வழி தெரியாமல் தவித்த நிலையில், இந்த ஸ்டால் அமைத்த முயற்சி பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. பலரும் தேடிவந்து புத்தகங்களைக் கொடுத்துச் சென்றனர். சிலர் புதிதாக புத்தகங்களை வாங்கியும் தானமாகக் கொடுத்துச் சென்றனர்.
அதிக எண்ணிக்கையில் தங்களிடம் இருந்த புத்தகங்களை நேரில் கொண்டுவந்து தரமுடியாதவர்கள், தங்கள் மொபைல் எண்களைக் கொடுத்துச் சென்றனர். காவல்துறை வாகனத்தை அவர்களின் முகவரிக்கே அனுப்பி பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளையும் அரங்கில் அறிமுகப்படுத்தினோம். தானமாகப் பெறப்பட்ட புத்தகங்கள் தமிழ்நாட்டில் உள்ள ஒன்பது மத்திய சிறை சாலைக்கும் பிரித்து வழங்கப்படும். குறிப்பாக புத்தகங்கள் ஆய்வு செய்யப்பட்டு, கைதிகளுக்கு பொருத்தமான புத்தகங்கள் மட்டுமே சிறை நூலகத்தில் வைக்கப்படும்.
கல்வி, தொழில் பயிற்சி, வேலை வாய்ப்பு இதெல்லாம் கைதிகளை சிறைக்குள் சீர்திருத்தவே வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் யோகா, தியானம் போன்ற பயிற்சிகளும் சிறைக்குள் உண்டு. அதையும் தாண்டி சிறை நூலகங்களில் உள்ள புத்தகங்கள் அவர்கள் மனமாற்றம் அடைய உதவும் என்பது எங்களின் நம்பிக்கை. “கைத்துப்பாக்கிகளைவிட புத்தகங்களே பெரிய ஆயுதங்கள்” என்றார் புரட்சியாளர் லெனின். சிறைக் கைதிகளுக்கு உறுதுணை புத்தகம்தான். சிறந்த புத்தகங்கள் அவர்களை நல்வழிப்படுத்தி, சமுதாயத்தை ஒட்டி வாழும் நல்ல மனிதராய் செதுக்கி வெளியில் அனுப்ப உதவும். பல அரசியல் தலைவர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் சிறைக்குள் இருந்தபோது தங்களின் பெரும்பாலான நேரங்களை புத்தகங்களைப் படிப்பது, எழுதுவதென இருந்தார்கள். தலைவர்கள் பலர் சிறைக்குள் இருந்தபோதுதான் தங்களின் படைப்புகளை எழுதி வெளியிட்டனர்.
சிறைச்சாலை என்பது தனி உலகம் கிடையாது. சிறைக்குள் இருக்கும் கைதிகள் நம்மை போன்ற மனிதர்களே. குற்றம் செய்யாத நபர்களும் சூழ்நிலை கைதியாய் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்க நேரலாம். ஏதோ ஒரு காரணத்திற்காக குற்றம் செய்து தண்டனை அடைந்தவர்களாகவும் அவர்கள் இருக்கலாம். இங்குள்ள பெரும்பாலான கைதிகளின் பொழுதுபோக்கு புத்தகம் படிப்பது. புத்தகம்தான் கைதிகளை நல்வழிப்படுத்தும். நீங்கள் தானம் செய்யும் புத்தகங்கள் கண்டிப்பாக சிறைக் கைதிகளுக்கு பயனுள்ளதாய் இருக்கும்.
வாசிப்பை நேசிப்போம்!!
* தன்னை தூக்கிலிட அழைத்தபோது தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை முடித்துவிட்டு வருகிறேன் என சாகும் தருவாயில் கூட புத்தகம் வாசித்தவர் மாவீரன் பகத்சிங்.
* மரண தண்டனை விதிக்கப்பட்டு நஞ்சு தனக்கு கொடுக்கப்படும் வரை படித்துக் கொண்டே இருந்தாராம் கிரேக்க நாட்டுச் சிந்தனையாளர் சாக்ரடீஸ்.
* வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் நெல்சன் மண்டேலா.
* நான் படிக்காத புத்தகம் ஒன்றை எனக்கு தருபவர்களே எனக்கு மிகவும் விருப்பமானவர்கள் என்றார் ஆபிரகாம் லிங்கன்.
* பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை எனக் கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் மார்ட்டின் லூதர்கிங்.
* லண்டன் நூலகத்தில் இருபது ஆண்டுக்காலம் படித்து ஆய்வு செய்து, பின்னாளில் பொது உடைமைத் தத்துவத்தின் தந்தையாக விளங்கினார் காரல் மார்க்ஸ்.
* தன் வாழ்நாளில் பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை படித்து, தன் படுக்கை அறைக்கு அருகிலேயே ஒரு நூலகம் வைத்திருந்தார் டாக்டர் அம்பேத்கர்.
* பெண்களிடம் கரண்டியை பிடுங்கி விட்டு புத்தகத்தை கொடுத்தால் போதும் என்றார் தந்தை பெரியார்.
* ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன் என சொன்னாராம் காந்தியடிகள்.
* ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும் போது, வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லி சாப்ளின்.
* ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.
* தான் மறைந்த பின் தமது சடலத்தின் மீது மலர் மாலைகள் வைக்கக்கூடாது, புத்தகங்கள்தான் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம் ஜவஹர்லால் நேரு.
* புத்தகத்தின் சில பக்கங்கள் பாக்கி இருப்பதால் அதை முடிக்கும் வரை அறுவை சிகிச்சையை தள்ளி வைக்கச் சொன்னாராம் அறிஞர் அண்ணா.
* ஒரு நாளில் பன்னிரண்டு மணி நேரம் படிப்பதிலும், படித்ததைச் சிந்திப்பதிலும் செலவிட்டாராம் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன்.
* ‘கற்றனைத்தூறும் அறிவு’ என்றார் திருவள்ளுவர்.
செய்தி: மகேஸ்வரி நாகராஜன்
படங்கள்: ஆ.வின்சென்ட்பால்
மேலும் செய்திகள்
ஆத்ம திருப்தி அளிக்கும் ‘வீடு திரும்புதல்’ திட்டம்!
‘அனைத்தும் சாத்தியம்’ (Museum of Possibilities)
மாற்றத்துக்கான பெண்கள் வான்காரி மாத்தாய்
வாழ்க்கை+வங்கி=வளம்!
மாற்றத்துக்கான பெண்கள் -முதல் பெண் பதிப்பாளர் அன்னை நாகம்மையார்
மருத்துவ வழிகாட்டும் ‘டாக்டர் நெட் இந்தியா’!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி