SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிரேட் கோல்ஸ் எல்லோருக்குமானது!

2023-02-08@ 17:57:40

நன்றி குங்குமம் தோழி

தன் குழந்தைகள் எல்லா துறையிலும் மிளிர வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு பெற்றோரின் கனவாக இருக்கும். அதனை நிறைவேற்ற தங்களால் முடிந்த அனைத்து வசதிகளும் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்காக ஏற்படுத்தி தருகிறார்கள். அப்படித்தான் பிரியா மற்றும் சந்தியா இருவரும் தங்களின் குழந்தைகளுக்கு கால்பந்து பயிற்சியினை அமைத்துக் கொடுத்துள்ளனர். ஆனால், அந்த பயிற்சி திருப்தி அளிக்காத ஒரே காரணத்தால், இவர்களே தங்களின் குழந்ைதகளுக்காக ஒரு பயிற்சி மையத்தினை துவங்கியது மட்டுமில்லாமல் வசதியில்லாத குழந்தைகளுக்கும் இலவச பயிற்சி அளித்து வருகிறார்கள்.

‘‘நானும் சந்தியாவும் சேர்ந்து ‘கிரேட் கோல்ஸ்’ ஆரம்பிச்சு பத்து வருஷமாகுது’’ என்று பேசத் துவங்கினார் பிரியா. ‘‘2013ல்  ஆரம்பிச்சோம். அப்ப எங்க பசங்களுக்கு 9 வயசு. எல்லா பெற்றோரை போல் நாங்களும் எங்க பசங்களுக்கு விளையாட்டு பயிற்சி வேண்டும்னு விரும்பிதான் கால்பந்தாட்ட பயிற்சியில் சேர்த்தோம். ஆனால் நாங்க நினைத்த அளவிற்கு அங்கு பயிற்சி கிடைக்கவில்லை. நிறைய சிக்கல்களை சந்தித்தோம். பொதுவாக ஒரு பயிற்சி மையத்தில் என்ன இருக்க வேண்டும் என்று நினைச்சோமோ அது எதுவுமே எங்க குழந்தைகளுக்கு கிடைக்கவில்லை. சரியான முறையில் பயிற்சி வடிவமைக்கப்படவில்லை. குறிப்பிட்ட நேரத்திற்கான பயிற்சியும் எங்களுக்கு கிடைக்கவில்லை.

ரொம்பவே அதிருப்தியாக இருந்தது. காரணம், பிள்ளைகள் எந்த பயிற்சிக்கு சென்றாலும் அதற்கு கஷ்டப்படப் போகிறவர்கள் பெற்றோர்கள்தான். அவர்களை பயிற்சி நிலையத்திற்கு அழைத்து செல்ல வேண்டும். பயிற்சிக்கான  கட்டணம் மற்றும் போட்டியில் பங்கு பெற்றால் அதற்கான செலவு மற்றும் நேரம் என அனைத்தும் பெற்றோர்கள் குழந்தைகளுக்காக செலவு செய்ய வேண்டும். இதில் கஷ்டம் எங்களுக்குதான். ஆனால் அதற்கான பலன் கிடைக்காத போது ஏமாற்றம் தானே ஏற்படும். இதெல்லாம்தான் நாங்க சந்திச்சோம். அப்பதான் முறையான கட்டமைப்பு  கொண்ட பயிற்சி மையத்தினை நாம் ஏன் திறக்கக் கூடாதுன்னு எங்களுக்கும் ஒரு எண்ணம் ஏற்பட்டது. கிரேட் கோல்ஸ் உருவாச்சு’’ என்றவரை தொடர்ந்தார் சந்தியா.

‘‘நாங்க இருவருமே பட்டதாரிகள், வேலைக்கு செல்லும் தாய்மார்கள். எங்களின் வேலைக்கான இடைப்பட்ட நேரத்தில்தான் நாங்க பசங்களுக்கான பயிற்சி குறித்த நேரத்தினை ஒதுக்கினோம். ஆனால் ஒவ்வொரு நாளும் நானும் பிரியாவும் அது சரியில்லை, இது சரியில்லைன்னு புலம்பிக் கொண்டு இருப்போம். இப்படி புலம்புவதை நிறுத்திவிட்டு அதற்கான சல்யூஷன் என்ன என்று பார்க்க விரும்பினோம். எங்களுக்கு விளையாட்டு துறை குறித்து எதுவுமே தெரியாது. ஆனால் ஒரு பயிற்சி மையம் என்றால் அதற்கு என்ன தேவை என்பது எங்களுக்கு தெரியும். அதைத்தான் நாங்க இந்த பத்து வருடமாக கொடுத்து வருகிறோம். இந்த காலக்கட்டத்தில் எங்களின் பயிற்சி மையம் பல பரிணாமங்களை அடைந்துள்ளது.

முதலில் எங்க பயிற்சி மையத்திற்கான முறையான பாடத்திட்டத்தினை வகுத்தோம். அதனை இங்கிலாந்தில் உள்ள சிறந்த கால்பந்தாட்ட பயிற்சியாளர் மூலம் அமைத்திருக்கிறோம். அவர் பாடத்திட்டத்தில் குறிப்பிட்டு இருப்பது போல் பயிற்சியினை கோச்சுகளுக்கு அளித்தார். அவர்கள் அதில் நன்கு தேர்ச்சி பெற்ற பிறகுதான் நாங்க இந்த மையத்தினையே ஆரம்பித்தோம்.
நாங்க ஆரம்பிச்ச போது 40 குழந்தைகள் எங்களின் மையத்தில் சேர்ந்தாங்க. பிறகு 6, 8, 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான தனிப்பட்ட பயிற்சிகளை துவங்கினோம். அதனை தொடர்ந்து நான்கு வயது குழந்தைகள் எங்களிடம் பயிற்சி பெற ஆரம்பித்தார்கள். தற்போது நான்கு வயது முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு நாங்க பயிற்சி அளிக்கிறோம். சென்னையில் மட்டுமே 8 பயிற்சி மையங்கள் உள்ளது. இதில் 800 குழந்தைகள் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

ஒவ்வொரு வயதினருக்கு ஏற்ப தனிப்பட்ட பயிற்சி திட்டங்கள் உண்டு. நாங்க ஒரு குறிப்பிட்ட பாடத்திட்டங்களை பின்பற்ற முக்கிய காரணம் அதை கடைபிடிக்கும் போதுதான் பயிற்சியின் தரம் எப்போதும் குறையாமல் ஒரே நிலையில் இருக்கும். எங்களின் அனைத்து மையங்களிலும் இதே பாடத்திட்டம் என்பதால் பயிற்சி முறையிலும் எந்த மாற்றமும் ஏற்படாது. பொதுவாக ஒரு விளையாட்டு பயிற்சி மையம் என்றால், அதில் பயிற்சி பெறும் அனைவரும் போட்டிகளில் விளையாட தகுதி பெற வேண்டும் என்றுதான் நினைப்பார்கள்.

ஆனால் எல்லா குழந்தைகளுக்கும் அந்த எண்ணம் இருக்காது. சில குழந்தைகள் விளையாட்டினை தங்களின் துறையாக தேர்வு செய்வார்கள். மற்றவர்கள் ஒரு விளையாட்டு கற்றுக் கொள்ள வேண்டும் அதற்கான பயிற்சி எடுத்தால் போதும் என்று நினைப்பார்கள். இப்படி இரு தரப்பினர்களுக்கும் நாங்க பயிற்சி அளிக்கிறோம். விருப்பமுள்ளவர்கள் தங்களின் துறையினை விளையாட்டாக தேர்வு செய்து கொள்ளலாம். அதற்காக நாங்க இந்திய கால்பந்து கூட்டமைப்புடன் இணைந்து எங்க மாணவர்களை இந்திய அளவிலான போட்டி
களில் பங்கு பெற வைக்கிறோம்.

ஆரம்பத்தில் எங்களுக்கு இந்த விளையாட்டுப் பற்றி தெரியாது. இந்த பத்து வருடங்களில் இந்த விளையாட்டு குறித்து நன்கு அறிந்திருக்கிறோம். அதற்காக எங்களால் பயிற்சி அளிக்க முடியாது. ஆனால் இந்த விளையாட்டு துறையால் மாணவர்களுக்கு என்னென்ன பலன்களை அளிக்க முடியும் என்பதை பற்றி தெரிந்து வைத்திருக்கிறோம். சொல்லப்போனால் நாங்க ஒரு பள்ளியின் பிரின்சிபால் மாதிரி. பயிற்சி மையத்திற்கு தேவை என்ன என்பதை புரிந்து கொண்டு அதை செயல்படுத்த முடியும்’’ என்றார்.

இவர்கள் பயிற்சி மையத்தில் அளிக்கப்படும் இலவச பயிற்சி குறித்து தெரிவித்தார் பிரியா. ‘‘எங்க பயிற்சி மையத்தில் இரண்டு மாடல் உண்டு. ஒன்று கட்டணம் செலுத்தி பயிற்சி பெறுவது. பயிற்சி பெற ஆர்வம் இருக்கும். ஆனால் அவர்களுக்கு வசதி இருக்காது. அவர்களுக்காகவே ஒரு அறக்கட்டளையினை துவங்கினோம். அதன் மூலம் ஸ்பான்சர் பெற்று வசதியில்லாதவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கிறோம். அதில் அவர்கள் போட்டியில் பங்கு பெற வேண்டும் என்றாலும் அதற்கான கட்டணம் மற்றும் அவர்கள் தங்குவதற்கான வசதி, உணவு என அனைத்தும் எங்க அறக்கட்டளை மூலம் ஏற்பாடு செய்து தருகிறோம். கடந்த மாதம் இதற்காகவே சென்னையில் ஒரு கார்னிவல் நடத்தினோம்.

அதன் மூலம் கிடைத்த நிதியினை வசதியில்லாத மாணவர்களுக்கான கட்டணத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறோம். எங்க இருவரின் நம்பிக்கை இந்த விளையாட்டு எல்லோருக்குமானது. வசதி இல்லை என்ற காரணத்தால் அவர்களின் கனவு சிதைந்துவிடக்கூடாது என்பதுதான். தற்போது ராணிப்பேட்டையில் எங்களின் இரண்டு பயிற்சி மையம் இயங்கி வருகிறது. அதில் அங்குள்ள கிராமத்து குழந்தைகளுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறோம். அந்த மையத்தில் மட்டுமே 150 குழந்தைகள் பயிற்சி பெற்று வருகிறார்கள். மேலும் எங்களின் பயிற்சி கிளப்பின் சார்பிலும் மற்ற கிளப்புகளுடன் இணைந்து போட்டி நடத்தி வருகிறோம். கோவிட் காரணத்தால் இரண்டு வருடம் நடத்த முடியாமல் போனது. இந்த வருடம் பெரிய அளவில் நடத்த இருக்கிறோம்’’ என்றவர் சந்தித்த தடையினை பற்றி விவரித்தார்.

‘‘பயிற்சி மையம் ஆரம்பித்தால் அதற்கான விளையாட்டு திடல் ேவண்டும். ஆரம்பத்தில் அதற்கு ரொம்பவே சிரமப்பட்டோம். மேலும் எங்க குழந்தைகள் அனைவரும் 15 வயதிற்குட்பட்டவர்கள் என்பதால், அவர்களுக்கு எல்லா வசதியும் கொண்ட இடமாக இருக்க வேண்டும். அதாவது, விளையாட தாராளமாக இடம் இருக்கணும். மேலும் கழிவறை வசதிகள் மற்றும் அவை சுத்தமாக இருக்க வேண்டும். பள்ளியில் இயங்கப்படாத விளையாட்டுத் திடலில் பயிற்சி அளிக்க அனுமதி பெற்று அதனை வாடகைக்கு எடுத்தோம்.

தற்போது மூன்று பள்ளிக்கூடத்தில் உள்ள விளையாட்டுத் திடலில் நாங்க பயிற்சி அளித்து வருகிறோம். சென்னையில் கால்பந்துக்கு என தனிப்பட்ட கிளப் உள்ளது. அங்குள்ள கிரவுண்டையும் நாங்க எங்க பயிற்சிக்காக பயன்படுத்திக் கொள்கிறோம். இதுவரை 3500 குழந்தைகளுக்கு பயிற்சி அளித்திருக்கிறோம். 25 கோச்சுகள் எங்களின் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கிறாங்க. மேலும் ஐந்து பள்ளிகளுக்கு எங்க பயிற்சி மையம் மூலமாக அங்குள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம்.

அடுத்து கோச்சுக்கான வேட்டை. பயிற்சி அளிக்கக்கூடிய கோச் திறமையானவர்களாக இருந்தால்தான் நல்ல முறையில்பயிற்சி அளிக்க முடியும். மேலும் அவர்கள் எங்களின் பயிற்சி திட்டங்களை புரிந்து கொண்டு செயல்படணும். இப்போது எங்களிடம் இருக்கும் அனைவரும் அங்கீகரிக்கப்பட்டவர்கள்.  அவர்கள் இந்த விளையாட்டு குறித்து தனிப்பட்ட ஆய்வு செய்து அதனை மாணவர்களுக்கு சொல்லித் தருகிறார்கள்.

நாங்க அடுத்து சந்தித்த மிகப்பெரிய தடை கோவிட். பள்ளி மற்றும் விளையாட்டு மையங்கள் எல்லாம் அந்த இரண்டு வருடம் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இரண்டு வருடம் அவர்களுக்கு பயிற்சி தடைபடக்கூடாது என்பதால், ஆன்லைன் முறையில் பயிற்சியினை துவங்கினோம். ஒரு சின்ன இடத்தில் எவ்வாறு பயிற்சி அளிக்க முடியும் என்று சிந்திச்சு அதற்கான பயிற்சிகளை அமைத்தோம். இதன் மூலம் குழந்தைகள் தங்களின் வீட்டு மொட்டை மாடியில் அல்லது தோட்டத்தில் என தங்களின் பயிற்சியினை ஆன்லைன் முறையில் தொடர்ந்தார்கள். மழை மற்றும் புயல் போன்ற காலத்திலும் இந்தப் பயிற்சி எங்களின் மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்து வருகிறது.

தொழில்நுடபம் வளர வளர அதில் நன்மைகள் மட்டுமில்லை, சில தீமைகளும் இருக்கும். நாங்கள் அதன் பாசிடிவ் பக்கம் மட்டுமே எடுத்துக் கொண்டதால், காஞ்சிபுரம், கல்பாக்கம் போன்ற இடங்களில் இருந்தும் ஆன்லைன் முறையில் எங்களிடம் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள்.எங்களின் அடுத்த டார்கெட் மற்ற நகரத்திலும் பயிற்சி மையத்தினை துவங்க வேண்டும். மேலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்க வேண்டும். அதற்கான ஏற்பாட்டில் இறங்கி இருக்கிறோம்’’ என்றனர் இருவரும் கோரசாக.

தொகுப்பு: ரிதி

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்