அரசுப் பள்ளி மக்களுக்கானது!
2023-02-02@ 17:50:50

நன்றி குங்குமம் தோழி
அரசுப் பள்ளிக்கூடங்கள் பல இருந்தாலும், அதில் அத்தியாவசியமான பல வசதிகள் இருப்பதில்லை. சொல்லப்போனால் கிராமங்களில் இருக்கும் பள்ளிக்கூடங்களின் கல்விக்கு தேவையான அடிப்படை கட்டிடங்கள் கூட இருப்பதில்லை. இந்த நிலையில் அங்கு படிக்கும் மாணவர்களுக்கான மிகவும் அவசியமானது கழிவறை. குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு. இந்த வசதி இல்லாத காரணத்தால் பல மாணவிகள் தங்களின் படிப்பினை பாதியிலேயே நிறுத்தி விடுகிறார்கள்.
இந்த நிலை அதிகமாகாமல் இருக்க அரசுப் பள்ளியின் நிலையின் மீது நாம் கவனம் செலுத்த வேண்டும். இதை உறுதிப்படுத்தும் விதமாகவும் சமீபத்தில் மக்களவையில் மத்திய கல்விதுறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி தமிழ்நாட்டில் உள்ள 70% பள்ளிகளில் போதிய கழிவறைகள் இல்லை என தெரிவித்திருக்கிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண் குழந்தைகள் தான். இதன் காரணமாகவே அவர்கள் பள்ளிப் படிப்பினை பாதியிலேயே விட்டு விடுகிறார்கள். மேலும் சரியான சுத்தம் இல்லை என்றால் அவர்களுக்கு உடல் உபாதைகளும் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
இந்த நிலையினால் பெண்களுடைய கல்வி மிகப்பெரிய சரிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதை மாற்ற பள்ளி குழந்தைகளை தங்களின் குழந்தைகள் போல நினைத்து பல ஆசிரியர்கள் பாடங்கள் சொல்லிக் கொடுப்பது மட்டுமில்லாமல் அவர்களின் தேவை அறிந்து அதற்கான உதவிகளையும் செய்துதான் வருகின்றனர். அப்படி ஒருவர் தான் திருவண்ணாமலையில் உள்ள ஐங்குணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வரும் அன்னரீட்டா. கழிவறை பிரச்னையினால் அவதிப் பட்டு வந்த பள்ளி மாணவிகளுக்காக தன்னுடைய சொந்த செலவில் கழிவறை கட்டிக் கொடுத்திருக்கிறார் இவர்.
‘‘எனக்கு சொந்த ஊரு சேலம். எம்.ஏ ஆங்கிலம் மற்றும் பி.எட் முடிச்சேன். படிப்பு முடிச்சதும் திருமணமானது. அதன் பிறகு தான் எனக்கு ஆசிரியர் வேலை கிடைச்சது. எனக்கு இரண்டு மகள்கள். இரண்டு பேருக்கும் திருமணமாகிவிட்டது. நான் ஆசிரியரா பணியில் இருந்தாலும், 2006ல் தான் இந்த பள்ளிக்கூடத்திற்கு ஆசிரியரா வேலைக்கு வந்தேன். இந்த அரசுப் பள்ளியில சுத்தி இருக்குற 10 கிராமங்ளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கிறாங்க. நான் பள்ளிக்கூடத்துல வேலைக்கு சேர்ந்த காலகட்டத்துல இருந்து இந்த பள்ளிக்கூடத்துல இருக்குற முக்கியமான பிரச்சனை போதிய கழிப்பறை வசதி இல்லாததுதான். கழிவறையில் கதவு இருக்காது, உடைந்து இருக்கும். குழாய்களும் உடைந்திருக்கும்.
அதிலும் சரியா தண்ணீர் வராது. இதனால் கழிவறை சுரியா சுத்தம் செய்யாமல் இருந்தது. இதனாலேயே பலர் கழிவறைக்கு செல்லவே கஷ்டப்பட்டாங்க. இந்த நிலைமை அங்கு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மட்டுமில்லை. ஆசிரியர்களான நாங்களும் அந்த பிரச்னையை சந்தித்தோம். குறிப்பாக பெண் பிள்ளைகள் மாதவிடாய் காலத்தின் போது மிகவும் அசெளகரியமான நிலையில் தான் அதை பயன்படுத்தி வந்தாங்க. ஏற்கனவே உடைந்திருக்கும் குழாய்... இன்னும் நாளாக நாளாக மோசமாக ஆரம்பித்தது. நாங்க கழிவறைக்கு போறதையே குறைச்சுகிட்டோம்.
பள்ளிக்கூடம் வந்தாச்சுன்னா அடுத்து வீட்டுக்கு போயிதான் கழிவறைக்கு போகிற நிலைமைக்கு தள்ளப்பட்டோம். நானே பள்ளிக்கு வந்தால் அடுத்து வீட்டுக்கு போகிற வரைக்கும் கழிவறைக்கு போக மாட்டேன். இதனால் தண்ணீர் குடிப்பதையும் தவிர்த்து வந்தோம். உடல் சார்ந்த பிரச்னைகளையும் சந்திக்க ஆரம்பிச்சோம்’’ என்றவர் இந்த நிலையை சமாளிக்க தானாவே துணிந்து இந்த முடிவினை எடுத்துள்ளார்.
‘‘நாங்களும் இது குறித்து எடுக்காத நடவடிக்கை இல்லை. எல்லாம் செயல்பட்டாலும், மறுபடியும் இந்த பிரச்னை தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. இதனால் மாணவிகள் படிப்பை பாதியிலேயே நிறுத்திட்டாங்க. இடை நிற்றல் அதிகமானது. இந்த சுற்றுவட்டாரத்தில் எங்க பள்ளிக்கூடம் தான் முக்கிய சென்டர் என்பதால், பத்தாம் மற்றும் +2ம் வகுப்பு தேர்வுகளும் இங்கு நடக்கும். அதற்கு வெளியில் இருந்து ஆசிரியர்கள் வருவாங்க. அப்படி வரவங்களுக்கும் இங்கு கழிவறை ஒரு பிரச்னையாக இருந்தது. இந்த நிலைமை மாற பள்ளியின் தலைமை ஆசிரியர் கழிப்பறை கட்டிக் கொடுக்க சொல்லி அரசிடம் முறையிட்டாங்க. அரசும் எங்களின் கோரிக்கையை நிறைவேற்றியது.
ஆனால் அவங்க சிமென்ட் ஷீட் அமைத்து இரும்பு இல்லாத கதவுகள் வச்சு தான் கட்டி கொடுப்பாங்க. எல்லாருடைய பயன்பாட்டால் அது உடைந்திடும். விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கு வரும் போது கழிவறையின் கதவு உடைந்திருக்கும். தொடர்ந்து அரசு கட்டி தரணும்னு நாமும் எதிர்பார்க்க முடியாது. ஒரே பள்ளிக்கு எத்தனை முறை கட்டித் தருவதுன்னு கேள்வி எழும். நம் பிள்ளைகளுக்கு நாமதான் முன்னாடி நின்னு ஏதாவது செய்து கொடுக்கணும் முடிவு பண்ணினேன்.
நான் பணியில் இருந்து ஓய்வு பெற 9 வருடங்களே இருப்பதால், கடந்த வருட முடிவிற்குள் பள்ளிக்கு எப்படியாவது கழிவறை ஒன்றை கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் எனக்குள் வந்தது. நான் ரோட்டரி கிளப்பிலும் ஒரு தன்னார்வலராக இருந்தேன். அவர்களிடம் என் கோரிக்கையை விண்ணப்பித்தேன்.
அவர்கள் கட்டித்தர சம்மதித்தாலும் அடுத்த வருடம் தான் கட்டித் தருவதாக கூறினார்கள். அதனால் நான் சேர்த்து வைத்திருந்த என் சேமிப்பான மூன்று லட்சத்தை எடுத்து கழிவறை கட்டுறதுக்கு தேவையான பொருட்களை வாங்கினேன். பொருட்கள் வாங்கியாச்சு, அவர்களுக்காக ஏன் காத்திருக்கணும் கட்டி முடிச்சிடலாம்னு அந்த வேலையில் இறங்க ஆரம்பித்தேன். ஆனால் அந்த சமயத்தில் என்னிடம் கட்ட தேவையான பணமில்லை.
அதனால் கட்டித் தருபவர்களிடம் தவணை முறையில் அதற்கான கட்டணத்தை செலுத்தலாம்ன்னு கேட்டேன். அவர்கள் முடியாது என்று செல்லிவிட்டார்கள். நான் இதில் ஈடுபட்டு இருப்பதைக் கேள்விப்பட்ட என் முன்னாள் மாணவர்கள் அவர்களுக்கு தெரிந்தவர்களிடம் கேட்டு கடன் வாங்கிக் கொடுத்தாங்க. என்னிடம் இருக்கும் பணத்தையும் எடுக்க முடியவில்லை. அந்த சமயத்தில்தான் என்னிடம் படிச்ச என் முன்னாள் மாணவன் தர்மதுரை எம்.எஸ்.சி முடிச்சிட்டு நான் வேலை செய்கிற பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்தான். கொரோனா காலத்தில் வேலை இழந்த நிலையில் சென்ட்ரிங் வேலைகள் செய்து வந்துள்ளான்.
அவனைத் தொடர்பு கொண்டு என்னுடைய கழிவறை கட்டுமானத்திற்கு உதவ கேட்டேன். உடனே சரின்னு சொன்ன தர்மதுரை அவனுடைய அம்மாவையும் அழைத்துக் கொண்டு வந்து கழிவறை கட்டும் வேலையை தொடங்கினான். சென்ட்ரிங் வேலைகளில் அனுபவம் இருந்ததால் எந்த பொருட்கள் எவ்வளவு விலையில் எங்கு கிடைக்கும் எனவும் தர்மதுரை தெரிந்து வைத்திருந்தான். நல்ல தரமான பொருட்களை வாங்கி கழிவறை கட்ட தொடங்கினோம். கழிவறை கட்டும் காலத்தில் சில சமயம் பணப் பற்றாக்குறை ஏற்படும். அந்த சமயத்தில் என்னுடைய முன்னாள் மாணவன் 30 ஆயிரம் கொடுத்து உதவினான்.
இது போக சில ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும் சின்னச் சின்ன உதவிகள் செய்தாங்க. ஆறே மாதத்தில் கட்டி முடித்தோம். மாணவர்களுக்கு 8, ஆசிரியர்களுக்கு 2 என கழிவறைகளை கட்டி முடித்தோம், சிமென்ட் ஷீட் இல்லாமல் கான்கிரீட் தளம் போட்டு இரும்பு கதவுகள், குழாய்களுக்கு ஆயில் பெயின்டிங் கொடுத்து பல வருடங்கள் நிலைத்து இருப்பது போல் அமைத்தோம்.
இந்த வேலையை நான் தொடங்கும் போது எதுக்காக இவ்வளவு மெனக்கெடுறீங்க... உங்களுக்கு எதுக்கு தேவையில்லாத வேலைன்னுதான் என்கிட்ட கேட்டாங்க. பள்ளிகளோட நிலைமைய மாத்தி நல்ல நிலைமைக்கு கொண்டு வர்றதுக்கு தான் எல்லா ஆசிரியர்களும் வேலை செய்றாங்க. தங்களோட வேலை நேரம் முடிந்தும் மாணவர்களுக்காக நேரம் ஒதுக்கி பாடங்கள் சொல்லித் தர்றோம். ஆசிரியர்கள் போராட்டங்கள்ல ஈடுபடும் போது கூட ஒரு பள்ளிக்கு ஒன்றிரண்டு ஆசிரியர்கள் தவிர மீதி பேர் வேலைக்கு வந்துருவாங்க.
சுழற்சி முறையிலதான் நாங்க எங்களுக்கான போராட்டங்களில் கலந்துக்குவோம். எல்லா நேரங்கள்லயும் மாணவர்களோட நலன்களை முன்னிறுத்திதான் நாங்க பல முடிவுகள் எடுக்குறோம். ஆனாலும் அரசுப் பள்ளிகள் குறித்து தவறான கண்ணோட்டம் மக்கள் மத்தியில் இருக்கு. அது மாறணும். அரசுப் பள்ளிகள் தங்களுக்கானவைன்னு புரிஞ்சுக்கணும்’’ என்கிறார் ஆசிரியை அன்னரீட்டா.
தொகுப்பு: மா.வினோத்குமார்
படங்கள்: ஜி.சிவக்குமார்
மேலும் செய்திகள்
ஆத்ம திருப்தி அளிக்கும் ‘வீடு திரும்புதல்’ திட்டம்!
‘அனைத்தும் சாத்தியம்’ (Museum of Possibilities)
மாற்றத்துக்கான பெண்கள் வான்காரி மாத்தாய்
வாழ்க்கை+வங்கி=வளம்!
மாற்றத்துக்கான பெண்கள் -முதல் பெண் பதிப்பாளர் அன்னை நாகம்மையார்
மருத்துவ வழிகாட்டும் ‘டாக்டர் நெட் இந்தியா’!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!