SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏ பாட்டி...என் ஸ்வீட்டி...நீ இன்னும் ப்யூட்டி... லூட்டியடி!

2023-01-31@ 17:27:55

நன்றி குங்குமம் தோழி

ஃபயர் பாட்டி ராஜாமணி

தன் பேரன் முகமது தௌஃபிக்கோடு பாட்டி ராஜாமணி அடிக்கும் லூட்டி  சமூக வலைத்தளங்களில் படு வைரல். “ஜீன்ஸ்செல்லாம் மாட்டிக்கோ... லிப்டிக்கு போட்டுக்கோ... பொய் பேசும் நரையெல்லாம் மை பூசி மாத்திக்கோ...”  “ஜீன்ஸ்” படத்தில் வரும் இந்த பாட்டி பாடல் வரிகள், நம்ம ராஜாமணி பாட்டிக்கு அப்படியே பொருந்தும். “லவ் டுடே”  படத்தில் நடிகை இவானா கெட்டப்பில் தொடங்கி...

சிம்ரன், மீரா ஜாஸ்மின், த்ரிஷா, அஸின், நயன்தாரா, ஹன்சிகா மோத்வானி, களவாணி பட ஓவியா, சந்திரமுகி ஜோதிகா, படையப்பா ரம்யா கிருஷ்ணன், துப்பாக்கி காஜல் அகர்வால், மதராசப்பட்டினம் எமி ஜாக்ஸன் வரை அத்தனை கெட்டப்பிலும் நம்மை அசரடிக்கும் ராஜாமணி பாட்டியிடம் பேசியதில்...எனக்கு ஊர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம். பிறந்தது.. வளர்ந்தது.. படிச்சது.. வேலைக்குப் போனது என எல்லாமே இந்த ஊர்தான். அந்தக் காலத்து எஸ்எஸ்எல்சி முடிச்சு ரெண்டு வருசம் டீச்சர் டிரெயினிங் படிச்சேன். பிறகு எங்க ஊரில் இருந்த தொடக்கப்பள்ளியில் டீச்சராகவும் வேலை பார்த்தேன். என்கூடப் பிறந்தவுங்க மொத்தம் ஐந்து பேர். ரெண்டு தம்பி, ரெண்டு தங்கை. நான்தான் வீட்டில் மூத்தவள் என்றவர், 1970 காலகட்டத்திலேயே தனக்கான வாழ்க்கைத் துணையை தானே தேர்ந்தெடுத்த கதையை நம்மிடம் பகிர்ந்தார்.

1972ல் எனக்கு திருமணம் நடந்தது. என் வீட்டுக்காரர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர். நானோ இந்து சமூகம். வீட்டில் என் திருமணத்திற்கு பயங்கர எதிர்ப்பு. பெரிய போராட்டமே நடந்தது. எல்லாத்தையும் மீறி அவருக்காக உறுதியா நின்னேன். நகைகளை கழட்டி வச்சுட்டு, கட்டுன புடவையில், சான்றிதழ்களை மட்டும் எடுத்துக்கிட்டு  வீட்டைவிட்டு வெளியேறுனேன் என்றவர், என்கிட்ட இருக்கும் அத்தனை பொருளுமே நானே சம்பாதித்து என் உழைப்பில் ஒவ்வொன்றாக வாங்கியது என்கிறார் புன்னகைத்து.

நான் படிக்கும்போது, என் வீட்டுக்கு எதிரில் ஒரு ஸ்கூல் இருந்தது. அங்கேயே கல்லூரியும் அருகில் இருந்தது. அதில்தான் அவர் உடற்கல்வி இயக்குநராக இருந்தார். வீட்டு வழியாகப் போகும்போது வரும்போது பார்த்து பழகி கல்யாணம் பண்ணிக்கிட்டோம். நமக்கு பிடிச்ச விஷயத்தை அடையணும்னா எதையாவது விட்டுக்கொடுக்கனும் இல்லையா? நான் என் குடும்பத்தையே அவருக்காக விட்டுக் கொடுத்துட்டேன். இப்போது அவர் உயிரோடில்லை. எங்களுக்குப் பிறந்தது ஒரே மகள். பெயர் ஆமினா பர்வின். அவளை அவரின் சமூக வழக்கப்படியே வளர்த்து திருமணமும் செய்து கொடுத்தோம்.

எங்களுக்கு இரண்டு பேரன்கள். பெரியவன் முகமது ஜீபேர். ஏரோநாட்டிக்கல் எஞ்சினியரிங் முடித்து வேலையில் இருக்கிறான். அவனுக்குத் திருமணம் முடிந்து குழந்தையும் சமீபத்தில் பிறந்துள்ளது. சின்னவன்தான் முகமது தௌஃபிக். இவன்கூடத்தான் நான்  நடித்து  வீடியோ வெளியிடுகிறோம். ஒரே குடும்பமாக நாங்கள் இருக்கிறோம் என்றவரிடம் நடிப்பிற்குள் வந்தது குறித்துக் கேட்டபோது.?

சோழிங்கநல்லூரில் தௌஃபிக் படித்த கல்லூரி அருகில் வீடு எடுத்து, நான் அவனுக்கு சமைச்சுப் போட்டுக்கிட்டு அவன் கூடவே இருந்தேன். காலேஜ் முடிந்து வந்ததுமே அவன் அறைக்கதவைப் பூட்டிக்கிட்டு உள்ளேயே இருப்பான். சாப்புடக் கூப்பிடப்போனாலும் சட்டுனு கதவைத் திறக்கமாட்டான். கதவைப் பூட்டிக்கிட்டே உள்ள என்னடா பண்றன்னு ஒருநாள் சத்தம் போட்டேன். படத்தில் வரும் ஒவ்வொரு சீனையும் நடிச்சு மொபைலில் எடுத்து வைத்ததை என்னிடம் காட்டினான். சினிமாவில் நடிப்பதுதான் அவனின் விருப்பமாக இருந்தது.

சினிமாதான்னு முடிவு பண்ணிட்டா அதுக்கான முயற்சியில இறங்க வேண்டாமா? எடுத்ததை நீயே பார்த்தால் எப்படியெனக் கேட்டு,  நீ நடிச்சதையெல்லாம் சினிமா டைரக்டர்ஸ்கிட்ட காட்டு எனச் சொன்னேன்.“இவ்வளவு பேசுறியே பாட்டி, எங்க ஒரு சீனை நீ எனக்கு செஞ்சு காட்டு பார்ப்போம்னு” என்கிட்ட விளையாட்டாகக் கேட்டான். அப்படி வெளியானதுதான், “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படத்தில்  வரும் என்னோட “ஒரு கோடிப்பூ” நடிப்பு வீடியோ.

அது சோஷியல் மீடியாவில் படு வைரலானது. தொடர்ந்து அவன் கேட்கும் சின்னச் சின்ன டயலாக்கை அவனுக்காக பொழுது போக்கா நடிச்சு காண்பிச்சேன். அதை எல்லாம்  அவன் படம் பிடித்து எனக்கே தெரியாமல் யு டியூப்பில் போடப் போட கொஞ்சம் கொஞ்சமாக பிக்அப் ஆகி இப்ப இந்த அளவுக்கு வந்திருக்கு என்ற ராஜாமணி பாட்டி தனக்கான கேமராமேன், காஸ்டியூம் டிசைனர், மேக்கப் எல்லாமே தன் பொண்ணுதான் என்கிறார். தேவைப்பட்டால் சிலநேரம் தௌஃபிக்கூட எனக்கு மேக்கப் போட்டுவிடுவான் என்றவர், இந்த வயதில் நடிப்பது எனக்கு கொஞ்சமும் கஷ்டமாகவே தெரியலை என்கிறார் புன்னகைத்து.

நடிகர் கமலஹாசனோடு இந்தியன்-2 படத்தில் ஒரு சின்ன ரோல் செய்திருக்கேன். நடிகர் அதர்வாவுடனும் ஒரு படத்தில் நடிச்சு முடிச்சுருக்கேன். இதுவரை முழுசா இரண்டு வெப்சீரிஸ்களில் நடிச்சு முடிச்சுருக்கேன். அதில் ஒரு வெப்சீரிஸ் எனக்கு மிக முக்கியமான ரோல் என்கிறார் இன்றைய தலைமுறைக்கே டஃப் கொடுத்தவறாய். சில சொந்தக்காரவுங்க வீட்டுத் திருமணத்திற்கு நாங்கள் சென்றால், அங்கிருப்பவர்கள் மணமக்களோடு படமெடுப்பதைவிட என்னோடு நின்று படமெடுக்கவே ஆசைப்படுறாங்க என்றவர், முதுமையில் வாழ்றதுதானே எல்லோருக்கும் கடினம், அதை நான் என் பேரப்பிள்ளைகளோடு பிரமாதமாக வாழ்ந்துகிட்டு இருக்கேன், நடிப்பு மட்டுமல்ல புத்தகங்களும் நான் நிறைய படிப்பேன். மேலும் நான் எப்பவுமே என் மனதுக்குள் எதையும் போட்டு குழப்பும் கேரக்டரில்லை. தெளிவான அதேநேரம் ரொம்பவே ஜாலியான டைப்.

எல்லாத்தையும் டேக் இட் ஈஸியா எடுத்துப்பேன். இப்ப இருக்கும் ஜென்ரேஷனுக்கு ஏற்ப என்னை மாத்திக்குவேன். அதனாலதான் என் பேரன் வரையிலும், அவர்கள் போக்கில் என்னால் ஈடு கொடுக்க முடியுது என்கிற ராஜாமணி பாட்டி, உங்கள் எண்ணங்களை எப்போதுமே உயரமாக வச்சுக்கோங்க என டிப்ஸ் கொடுக்கிறார்.கற்பனைகள் மனதில் இருந்தால் நீங்களும் இளைஞர்தான். இதுதான் என் இளமைக்குக் காரணம் என்றவர், ஏஜ் இஸ் நாட் எ மேட்டர் என்பதை மிகவும் அழுத்தமாகவே சொல்லி விடைகொடுத்தார், தன் 76 வயதிலும் துள்ளும் இளமையுடன் வலம் வரும் ராஜாமணி பாட்டி.

முகமது தெளஃபிக்

என் நோக்கம் சினிமாதான். இப்பதான் நடிகர் அதர்வாவுடன் ஒரு படத்தில் முக்கிய ரோலில் நடிச்சு முடிச்சுருக்கேன்.  ஸ்கூல் படிக்கும்போதே நடிப்பில் எனக்கு ஆர்வம் இருந்தது. பி.எஸ்.ஸி. விஷுவல் கம்யூனிகேஷன் முடித்ததும், கூத்துப்பட்டறையில் சிறிது காலம் நடிப்புப் பயிற்சி எடுத்தேன். டிக்டாக் பிரபலமாய் இருந்த நேரமது. என் நடிப்பை வெளிப்படுத்தி சின்னச் சின்ன வீடியோக்களை அதில் வெளியிட்டேன். அவ்வளவாக வியூவ்ஸ் அப்போது எனக்கில்லைதான். பாட்டியோட “ஒரு கோடிப்பூ” டயலாக் வைரலாக எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக வியூவர்ஸ் அதிகமானாங்க. அப்படியே நடிப்பில் பாட்டியோட டிராவலாக ஆரம்பிச்சேன்.

எனக்கு விபரம் தெரிந்து பாட்டி எப்பவும் துறுதுறுன்னு எல்லாத்திலுமே ஆர்வமாக இருப்பாங்க. அவுங்க எப்பவுமே ஜாலியான பாட்டிதான். நிறைய என்னோடு விளையாடுவாங்க. ஃபன் பன்னுவாங்க. அப்படித்தான் நான் சொல்றதை விளையாட்டா செய்து காட்டி நடிக்க ஆரம்பிச்சாங்க. முதலில் சின்னச்சின்ன ரீல்ஸ் வீடியோ, ஷார்ட் வீடியோ எனத் தொடங்கி, அப்படியே காமெடி வீடியோ, டூயட் வீடியோ, படத்தில் இடம்பெறும் முக்கியமான சீன்ஸ்கள் என கொண்டு வந்தோம். எங்களுக்கு சப்ஸ்க்ரைபர்ஸ் அதிகமானதும், கூடுதலாக காஸ்டியூம், மேக்கப் எல்லாவற்றிலும் கவனம் செலுத்தத் தொடங்கினோம்.

கன்டென்ட் ரெடியானதுமே எடுக்கப்போகும், குறிப்பிட்ட சீனை பாட்டிக்கு பிளே செய்து காட்டுவேன். ‘‘அதேமாதிரி வருமான்னு எனக்குத் தெரியலை.. ஆனால் ட்ரை பண்றேன்னு'' சொல்லிட்டு கிட்டதட்ட அதே அளவுக்கு பாட்டி பண்ணீருவாங்க. சிமிலர் காஸ்டியூம், டயலாக், லிப் சிங் என கொண்டு வரும்போது அந்த சீன் அப்படியே பாட்டியோட சிங்காயிடும். 2K கிட்ஸ்க்கே பாட்டி பல நேரம் டஃப் கொடுப்பாங்க.

(சிரிக்கிறார் தெளஃபிக்  )இந்த பிப்ரவரி வந்தால் பாட்டிக்கு 76 ஆகப்போகுது.  ஒவ்வொரு கெட்டப்பையும் பாட்டி போடும்போது பாட்டி என்பதையே மறந்து சிலநேரம், என் தங்கச்சி என்கூட இருக்கிற மாதிரி ஒரு ஃபீல் இருக்கும் எனக்கு. ஒரு தங்கை இருந்தா எப்படி பிடிச்ச உடைய போட்டுக்கிட்டு, துறுதுறுன்னு அப்படியே நம்மகிட்ட சேட்டை பண்ணிக்கிட்டு, வேலை பார்த்துக்கிட்டே இருப்பா? அப்படித்தான் பாட்டி எனக்கு.  வீட்டு வேலைகளையும் அவுங்களே இழுத்துப்போட்டு பண்ணுவாங்க. நிறைய புத்தகம் படிப்பாங்க. இயற்கையை ரசிப்பாங்க.

மனதளவில் தன்னை இளமையா எப்பவும் வச்சுப்பாங்க. அதனால்தான் அவுங்க வயது பெரிதாக வெளியில் தெரியலை.எங்கள் சேனலுக்கு யுடியூபில் 9 லட்சம் சப்ஸ்க்ரைபர்ஸ்.. இன்ஸ்டாவில் இரண்டரை லட்சம் பாலோவர்ஸ், ஜோஷ் ஆப்பில் 3 மில்லியன்ஸ் பாலோவர்ஸ் இருக்காங்க. 2019ல் வீடியோ எடுக்க ஆரம்பித்தோம். 4 வருடம் தொட்டாச்சு. 1500க்கும் மேற்பட்ட வீடியோக்களை இதுவரை பாட்டியும் நானுமாக நடித்து அப்லோட் பண்ணியிருக்கோம். தேவைப்பட்டால் குடும்ப உறுப்பினர்களையும் நடிப்பில்  உள்ளே  கொண்டு வருவேன்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • switzerland-japan-win

  சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

 • choco-fac-fire-27

  அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!

 • missii

  வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்