SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக சாதனையில் இடம் பெறும் கோலக் குழு பெண்கள்!

2023-01-31@ 17:26:35

நன்றி குங்குமம் தோழி

ஆயக்கலைகளில் ஒன்றான கோலம் நம் இந்திய மண்ணின் பாரம்பரியங்களை பறைசாற்றுவதாகும். பல ஊர்கள், மதங்கள், மொழிகள், இனங்கள் என இருந்தாலும் அனைவருக்கும் பொதுவானதாக மாறுகிறது கோலங்கள். இதற்குச் சான்று பண்டிகைகள், விழாக்கள். தெருக்களில் மலரும் வண்ணக் கோலங்களை யார் போட்டிருந்தாலும் நின்று ஒரு நிமிடம் அதை ரசித்து பாராட்டிச் செல்லும் குணம் நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.

அவ்வாறு பாராட்டி விட்டுச் செல்லாமல் அந்த அழகான கோலங்களை அனைவரும் அறியும்படி வெளிக்கொண்டு வந்து மகிழும் குணம் ஒரு சிலருக்கே உண்டு. அதில் ஒருவர் தான் பெங்களூரில் வசிக்கும் லட்சுமி தேவி. கோலக்கலையில் அசத்தும் திறமைசாலிகள் அனைவரையும் ஒரே குழுவிற்குள் கொண்டு வந்து பார்ப்பவரை வியக்க வைப்பதுடன் சமூக சேவைகளும் செய்து வருகிறார்.

‘‘என்னுடைய சொந்த ஊர் ஆந்திரா. என் கணவர் கப்பல் போக்குவரத்து நிறுவனத்தில் பொது மேலாளர் பணியில் இருப்பதால், சென்னையில் சில வருடங்கள் வசித்து வந்தோம். தற்போது பெங்களூரில் வசித்து வருகிறோம். நாங்க ஆந்திராவில் இருந்த போது, அங்கு எல்லா பெண்களும் கோலத்திற்கு ரொம்ப முக்கியத்துவம் தருவாங்க. கிராமத்தில் உள்ள பெண்கள் குழுக்களாக இணைந்து தெரு முழுக்க கோலம் போடுவோம். மறுநாள் விடிந்ததும் அந்த தெருவைப் பார்க்கும் போது அப்படி வண்ணமயமா இருக்கும். இங்க சிட்டியில் தான் விசேஷ நாட்களில் மட்டும் கோலம் போடுறாங்க. அங்க அப்படி இல்லை. தினமும் கோலம் போடுவதையே ஒரு வைபவமா செய்வாங்க. என் அம்மாவும் அப்படித்தான். அவங்க தினமும் கோலம் போடுவாங்க. நானும் அவங்களுடன் சேர்ந்து கோலம் போடுவேன். அப்படித்தான் கோலம் ேபாட கத்துக்கிட்டேன்.

திருமணமானதும் கணவர் வேலைக்கு செல்ல எனக்கு வீட்டில் சும்மா இருக்க பிடிக்கல. என்ன செய்யலாம் என்று யோசித்த போது, ஒரு இணையம் பற்றி கேள்விப்பட்டேன். அமெரிக்காவில் வசித்து வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த லதா என்பவர் நம் பாரம்பரியத்தை உலகம் முழுக்க உள்ள தமிழ் பெண்கள் கொண்டு இணைக்க கோலத்திற்கான இணையம் ஒன்றை துவங்கி இருந்தார். அதைப் பார்த்து நானும் அதில் எனக்கு தெரிந்த கோலங்களைப் பதிவு செய்ய ஆரம்பிச்சேன்.

இருபது வருடங்களுக்கு முன் ஆண்ட்ராய்டு போன் எல்லாம் கிடையாதே. ஒரு பேப்பரில் கோலங்களை போட்டு அதை ஸ்கேன் செய்து அவர்களின் ஈமெயிலுக்கு அனுப்புவேன். அவங்க என் கோலங்களை இணையத்தில் பதிவு செய்வார்கள். அந்த காலம் இணையதளம் என்பது புதிது என்பதால், என் கோலங்கள் ஒரு வெப்சைட்டில் வருவதைப் பார்க்கும் போது அவ்வளவு பெருமையா இருக்கும். சொல்லப்போனால் இமாலய சாதனை செய்து விட்டது போல் தோன்றும்.

என்னுடைய கோலத்திற்கு  உலகில் இருந்து பல கோலப் பிரியர்களிடமிருந்து பாராட்டுகள் குவிந்தது. அதனைத் தொடர்ந்து ஃபேஸ்புக்கிலும் கோலங்களை பதிவு செய்யத் துவங்கினேன். ஊர் தெரியாது முகம் அறிமுகம் இல்லை என்றாலும் கோலங்கள் குறித்து நிறைய விஷயங்களை இணையம் மூலம் நாங்க ஷேர் செய்து கொண்டோம். சென்னை மற்றும் பெங்களூர் சுற்றி நிறைய பெண்கள் இணையத்தில் இருந்ததால், எல்லோரும் நேரில் சந்திக்க திட்டமிட்டோம். அதன் அடிப்படையில் எங்க வீட்டில் நாங்க ஒரு 25 பேர் சந்தித்தோம். அதன் பிறகு ஒரு வாட்ஸப் குழுவினை துவங்கினோம். அப்படித்தான் 2013ல் ரங்கவல்லி வாட்ஸப் குழு உருவாச்சு. இப்ப அதில் 500 கோலக் கலைஞர்கள் இணைந்திருக்கிறோம்’’ என்றவர் கோயில்களை கோலம் கொண்டு அலங்கரிப்பது குறித்து விவரித்தார்.

‘‘2019ல் எங்க  முகநூல் கோலங்களை பார்த்து சென்னை வடபழனி கோவிலில் நவராத்திரிக்காக கோலங்களைப் போட முடியுமான்னு கேட்டாங்க. கோவிலுக்கு சேவை செய்யும் வாய்ப்பை தவறவிடக்கூடாதுன்னு, வருவதாக கூறினோம். சென்னையில் இருந்து 25 பேர் சென்றோம் வடபழனி கோயில் பிரகாரம் முழுவதும் சுமார் 30 கோலங்களைப் போட்டோம். அதைத் தொடர்நது பெங்களூர் மந்த்ராலயத்தில் இருந்து அழைப்பு வந்தது. வருடம் தோறும்  ராகவேந்திரா ஜெயந்திக்கு ஆலயத்தில் வந்து கோலம் போட முடியுமான்னு கேட்டனர்.

நாங்க தயங்கியதைப் பார்த்து, முயற்சி செய்யுங்கள், உங்களால் முடியும் என்றனர் கோயில் நிர்வாகிகள். அந்த கோவிலையும் எங்க கோலங்கள் கொண்டு அலங்கரித்தோம். அதைத் தொடர்ந்து சிருங்கேரி சுவாமிகளின் 70வது பிறந்த நாள் விழாவிற்கு கோலமிட்டோம். மடம் முழுதும் சுமார் எழுபதுக்கும் மேல் கோலங்களைப் போட்ட அனுபவம் மறக்க முடியாது. இப்போது பல ஆலயங்களுக்கு குழுவாக சென்று கோலங்களை போட்டு வருகிறோம்.

கோவில்களில் தரையில் பெயின்டிங் கொண்டுதான் கோலங்களை போடுகிறோம். அதற்குத் தேவையான பெயின்டுகள், பிரஷ்கள், நாங்க தங்கும் இடம், பயண டிக்கெட், உணவு எல்லாம் கோவில் நிர்வாகமே பார்த்துக் கொள்வார்கள். கடவுளால் எங்களுக்குத் தரப்பட்ட கலையை கடவுளின் சந்நிதானத்தில் போடும் பெரும்பணியை எங்களுக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாகவே கருதுகிறோம். பணமும் பொருளும் மட்டுமே பிரதானமாக இருந்தால் இந்தளவு மனத்திருப்தி வராது என்பதுதான் உண்மை. ஒரு நாள் முழுக்க குனிந்தபடியே கோலங்கள் போடுவதால், முதுகு வலியும் உடல் சோர்வும் ஏற்படும். ஆனால் நாங்க போட்ட கோலத்தை பார்த்து மற்றவர்கள் வந்து பாராட்டும்போது அந்த வலி எல்லாம் சிட்டாய் பறந்திடும்’’ என்றவர் கோயிலில் கோலம் போட்ட போது மறக்க முடியாத அனுபவத்தினை பகிர்ந்தார்.

‘‘ஒவ்வொரு கோவிலுமே எங்களுக்கு ஸ்பெஷல்தான். இருந்தாலும் முதன் முதலில் வாய்ப்புத் தந்த வடபழனி முருகனை மறக்க முடியாது. பெங்களூர் மெஜஸ்டிக் ஏரியாவின் அமைச்சர் அங்குள்ள 50 கோவில்களிலும் கோலங்கள் போட அழைத்திருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள காரைக்குறிச்சியில் பிரசித்திப் பெற்ற குலசேகரநாதர் சிவன் கோவிலில் 50க்கும் மேற்பட்ட கோலங்களைப் போட்டிருக்கிறோம். புது வருடத்தில் கோட்டை வேங்கட ரமணா, 1500 ஆண்டு பழமையான புராதனக் கோவிலில் கோலம் போட்ட போது, அந்த உணர்வினை
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

வாய்ப்புகள் குவிந்ததால், அமைப்பு ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் எங்களின் சேவைகளை துவங்கினோம். அதில்  பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று கோலக் கலையை  மாணவ,  மாணவிகளுக்கு எளிய முறையில் கற்றுத் தருகிறோம். பாரம்பரியக் கலையில் ஈடுபடும் போது, உடல் மட்டுமில்லை மனதும் ஆரோக்கியத்துடன் இருக்கும். பெங்களூரில் உடுப்பிக் கிளையில் உள்ள குருகுலத்தில் பயிலும் 50 மாணவர்களுக்கு கோலப் பயிற்சி தருகிறோம்.

தொடர்ந்து பெங்களூரில் நிறைய பயிற்சிப்பட்டறைகளையும் நடத்தி வருகிறோம். சென்னையிலும் இது போன்ற பயிற்சி பட்டறை அமைக்கும் எண்ணம் உள்ளது. கோலம் நம்முடைய பாரம்பரிய கலை. இதன் சிறப்புகளை உலகறியச் செய்யும் வண்ணம் கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம் பெற திட்டமிட்டிருக்கிறோம். அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறோம். விரைவில் உலக சாதனையில் ரங்கவல்லி இடம்பெறும்’’ என்றார் லட்சுமி.

தொகுப்பு: சேலம் சுபா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்