SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறுகதை-மகளென்னும் தோழி

2023-01-25@ 17:28:33

நன்றி குங்குமம் தோழி

மேகலா சித்ரவேல்

அன்பில் நிறைந்த அம்மா.இந்தக் கடிதத்தை பல நாட்களாக, பல முறைகள் எழுதிக்கிழித்து இறுதியாக நேற்று இரவு எழுதி முடித்தேன்.  ஒரே வீட்டில் மலரும் மணமுமாக நாம் இருக்கும் போது இந்தக் கடிதம் எதற்கு என்று நீ யோசிக்கலாம். ஆனால் நான் பேசுவதை என் எதிரில் கேட்க உனக்கு முகமற்றுப் போகலாம். அந்த இம்சையை உனக்குக் கொடுத்து விடக்கூடாது என்பதற்கே இந்தக் கடிதம்.அம்மா, உன் புருஷன்… அவர்தான் என்னை உயிராக்கிய ‘உத்தமன்’ கிட்ட இருந்து விவாகரத்துக் கடிதம் வந்த போது எனக்கு ஐந்து வயசு.

வீட்டில் நடந்த பஞ்சாயத்து இன்னும் என் நினைவிலிருக்கு. ஊரிலிருந்து வந்த உன் அம்மாவிடம் உன் மாமியார் “வாங்க சம்மந்தியம்மா வாங்க… வந்து நீங்களே இந்த பஞ்சாயத்தைக் கேளுங்க. என் பிள்ளை ‘டைவர்ஸ்’ கேட்டது எதுக்குன்னும் தெரிஞ்சிக்குங்க. எப்ப பார்த்தாலும் வேலைக்கு போகச் சொல்லி பொண்டாட்டி படுத்தி எடுத்தா ஒரு ரோஷமுள்ள ஆம்பிளை என்னங்க செய்வான்? பிள்ளை மனசு நொந்து போயிட்டான். அதான் விலகிட முடிவு செய்து ‘டைவர்ஸ்’ கேட்டுட்டான். அவன் தப்பு செய்தான்னு நீங்க நினைச்சா அவனை செருப்பால அடிங்க… நான் தடுக்க மாட்டேன்” என்று புலம்பல் புராணம் படித்தாள்.

உடனே உன் அம்மா, “இவ செய்திருப்பா சம்மந்தியம்மா. செய்திருப்பா. ஒரு ஆண் பிள்ளையை எப்பபாரு வேலைக்கு போகச் சொல்லி தொணப்பிக்கிட்டே இருந்தா, அவருதான் என்ன செய்வாரு? இந்த நிலையில இவளையும், இவ பொண்ணையும் எங்கக்கூட வைச்சிப் பார்க்க முடியாது. இவளைப் பத்தி நீங்க என்ன முடிவு எடுப்பீங்களோ எடுத்துக்குங்க. எங்களை விட்டுடுங்க” என்று பெரிய கும்பீடு போட்டு விட்டுப் போய் விட்டாள்.

“பெத்தவளே கை விட்டுட்டா… உன்னைப் போல கட்டினவனை அலட்சியம் செய்யும் புதுமைப் பெண் இந்த வீட்டுக்கும் வேணாம்” என்று கையை வாசலை நோக்கிக் காட்டினாள் உன் மாமியார்.அரைமணி நேரத்தில் கிளம்பி நாம சென்னைக்கு வந்ததும் உன் சினேகிதி லதா ஆன்ட்டிதான் நமக்கு அடைக்கலம் தந்தாங்க. உனக்கு ஒரு வேலையும் வாங்கித் தந்தாங்க. அதுக்கப்பறம் நீ ராப்பகலா உழைச்சி என்னை ஒரு இளவரசி போல வளர்த்தாய். என்னோட பி.டெக். பட்டம் உன்னோடதும்மா. ஏன்னா உனக்காகத்தான் நான் படிச்சேன்.

நீ மத்த அம்மாக்களை போல இல்லைம்மா... பெரிய பொண்ணான நேரம் நான் பயந்து அழுதேன். அப்ப நீ ரொம்ப அன்பா அழகா சொன்னியே “இதுக்கு பயப்படக் கூடாதுடா. இந்த உலகத்து உயிரினங்களில் பெண் பிறப்புக்கு மட்டுமே இயற்கை கொடுத்திருக்கு. இந்த நிகழ்வு உரிய காலத்தில் பெண் உடலில் நிகழலைன்னா உலகத்தில் உயிரினங்கள் பூண்டற்றுப் போகும்டா. இது பயமில்லை. இதுவரம். இதை பயத்தோட பார்க்கக்கூடாது. பெருமையா, கர்வமா ஏத்துக்கணும். இன்னும் பெரியவளானதும் உனக்கு எல்லாம் புரியும். இந்தா ஸ்வீட் எடுத்துக்க…” அம்மா அம்மா… உன்னால மட்டும் எப்படிம்மா இப்படி யோசிக்க முடிஞ்சிது? என்னைப் பெற்ற என்தாய் தெய்வம்..

நான் ஆசைப்பட்டதற்காக வீட்டில் புத்தாண்டு கொண்டாட நீ ஒப்புக் கொண்டாய். விருந்து கலகலப்பாக நடந்து கொண்டிருந்த போது உன் சினேகிதி சங்கரி ஐஸ்கிரீம் கேட்டார்கள். ஒரு பெரிய கிண்ணம் நிறைய கொண்டு கொடுத்தேன். என்னையே குறுகுறுன்னு பார்த்தவங்க “இந்த விருந்தும் கொண்டாட்டமும் உனக்காகன்னு உன் அம்மா சொன்னா. உன் அம்மா எப்பவும் உன்னைப் பத்தியே கவலைப்பட்டுக்கிட்டிருக்கா..

ஆனா நீ? அவளைப்பத்தி என்னிக்காவது கவலைப்படறியா? எங்க… என்னைப் பார்த்து நெஜத்தை சொல்லு...”அவங்களை மறுத்து நான் பேசுமுன்னே அவங்க என்னைப் பார்த்து கேலியாக சிரித்துக் கொண்டே உன்னிடம் வந்துட்டாங்க. எனக்கு கோபத்தில் முகம் சிவந்தது. உன் மீது எனக்கிருக்கும் அளவற்ற அக்கறை எப்படி சங்கரிக்கு கேலி பேசும் பொருளாகியது? அவங்க கேலியா சிரிச்சது எதை சொல்லுது? யோசித்து யோசித்து மூைளயே குழம்பியது. அந்த விடுகதை அம்பை என் மீது எறிந்தவளையே விடுவிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். மனசு கொஞ்சம் ஆறுதலாகியது.

ஞாயிற்றுக்கிழமை பத்து மணிவரை தூங்கும் நான் ஏழு மணிக்கெல்லாம் தயாராகி உன்னிடம் சொல்லாமல் சங்கரி ஆன்ட்டி வீட்டுக்குப் போனேன். என்னை வியப்புடன் வரவேற்றாங்க.நான் நேரடியாகவே கேட்டேன். “எனக்கு உங்க மேல ரொம்ப கோபம் ஆன்ட்டி. எங்கம்மா மேல நான் உயிரையே வைச்சிருக்கேன். ஆனா, நீங்க எனக்கு அவங்க மேல அக்கறை இல்லைன்னு கேலியா சொன்னீங்களே” என்றபடி கண்ணைக் கசக்கினேன்.

சங்கரி ஆன்ட்டி மிரண்டு போயிட்டாங்க. “அது… அது வாய் தவறி வந்துட்டுதுடி என் தங்கமே… நான் சொன்னதை ரப்பர் போட்டு கலைச்சிட்டு ஜாலியா இருடி.. என் கண்ணில்லே?” அவங்க குரலில் தப்பிக்கும் அவசரம்.நான் தடால்னு அவங்கக் காலில் விழுந்தேன். அழக்கிளம்பினேன். “அன்னிக்கு ஏதோ ஒரு மூடுல உளறிட்டேன். தயவு செய்து உங்கம்மாக்கிட்ட  சொல்லிடாதேடி. பிளீஸ்… எங்க கம்பெனியின் பார்ட்னர்கள் உலகமெங்கும் இருக்காங்க. அவங்களில் ஒருத்தர் வெனிஸிலிருக்கிற ஜெரால்ட். ரொம்ப நல்ல மனுஷா.

கோடீஸ்வரர். நாலு வருஷத்துக்கு முன்னாடி கம்பெனி விஷயமா சென்னைக்கு வந்திருந்தார். பத்து நாள் இங்க தங்கி இருந்தார். உன் அம்மாவின் பண்பும், பணிவும் அவருக்கு மிகவும் பிடிச்சிட்டுது. அது மட்டுமில்லாமல் தனி மனுஷியா வாழ்ந்து உன்னை இந்த அளவுக்கு உயர்த்தினதைக் கேள்விப்பட்டு அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனா… உன் அம்மா அதை நிர்தாட்சண்யமா மறுத்துட்டா. அதுக்கு அவ சொன்ன ஒரே காரணம் நீ… நீ மட்டும்தான். ஜெரால்ட் புன்னகையுடன் வாழ்த்து சொல்லிவிட்டு விடைபெற்றார்.

மனசு தாங்காமல் நான், “நீ செய்தது நிச்சயம் சரியில்லை. உன் பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிட்டு புருஷன் வீட்டுக்குப் போகும்போது நீயும் கூடவே போயிடுவியா?” என்று கேட்டேன். “மாட்டேன் சங்கரி. பிறந்ததிலிருந்து என் விடியா மூஞ்சியை பார்த்தே வளர்ந்த பொண்ணு அவ. கல்யாணம் செய்து கிட்டு போனப்பறமாவது நல்ல முகங்களில் விழித்து மங்களகரமும், மகிழ்ச்சியும் நிறைந்து வாழணும். அந்த வாழ்க்கையை அவளுக்கு அமைச்சு குடுக்கறவரைக்கும் இந்த ஓட்டம் தான். அதுக்கு அப்பறம் நான் எங்காவது போய் அவளோட நல்வாழ்வுக்காக தெய்வத்தை வேண்டிக்கிட்டே காலத்தை கழிச்சிடுவேன்..”னு சொல்லிட்டு கண்கலங்க புன்னகைச்சா.

“வாழ வேண்டிய சின்ன வயசில மட்டும் உன் அம்மா உனக்காக தியாகம் செய்யலை. இந்த நாலு வருஷத்தில் உன் கிட்ட இதை பத்தி சின்ன அசைவில் கூட வெளிப்படுத்தாத அந்த தெய்வ அம்மாவுக்கு இதுவரை நீ என்ன பண்ணியிருக்கே? சொல்லு. இப்ப அவளுக்குத் தேவை என்னன்னு யோசிச்சிருப்பியா? இப்ப அவளுக்கு நாம செய்ய வேண்டியதெல்லாம் ஒரு நிரந்தரமான துணையைத் தேடி தருவதுதான். நான் சொன்னது உனக்கு புரியும்னு நம்பறேன்.”

சங்கரி ஆன்ட்டியிடம் தலையசைத்து விடை பெற்றேன். உன்வயதில் ஜனிச்சதிலிருந்து இன்னிய வரைக்கும் உன் உதிரத்தை உறுஞ்சும் ஒட்டுண்ணியாகவே இருந்திருக்கேனேம்மா.. என்னை நினைச்சா எனக்கு அவமானமா இருக்கும்மா.. உன்னுடைய வயசையும், இளமையையும் பத்தி நான் நினைச்சுப் பார்க்காம கவலையே படாம இருந்ததுக்கு பிராயச்சித்தம் பண்ணிடறேன்மா..

பத்தே நாளில் என்னுடைய வேலை முடிஞ்சிட்டுதும்மா. ஒண்ணை மட்டும் நீ புரிஞ்சுக்கம்மா. நான் உனக்குத் துணையும் இல்லை. தூணும் இல்லை. இப்ப நான் சொல்லப் போவதைக் கேட்டு நீ கோபப்படக்கூடாது. இனி வரும் நாட்களில் இது வரை நீ அனுபவிக்காத அன்பு, பாசம், நேசம், காதல் எல்லாத்தையும் என்னைப் போல ஒரு மகளால முடியாதும்மா. அதை அற்புதமான ஒரு ஆணால்தான் உனக்குத் தரமுடியும். அவர் தான் உன்னுடைய உண்மையான துணைவன்.

அவரோடு எந்தவிதமான குற்ற உணர்வும் இல்லாமல் லகுவான காற்றைப் போல உன் வழியே போய் மகிழ்ந்து வாழும்மா. நாளை காலையில் உனக்காக நான் ஏற்பாடு செய்து விட்டுப் போகும் புது வாழ்வு இந்த வீட்டுக் கதவைத் தட்டும். நான் போறேன்மா… குட்பை.”விடிந்து வெகு நேரமாகியும் எழுந்து வராத மகளைப் பார்க்க அம்மா பதைப்புடன் அறைக்குள் ஓடினாள். மகளுக்கு பதிலாக முகம் பார்க்கும் கண்ணாடி மீது ஒட்டப்பட்டத் தாள் படபடத்துக் கூப்பிட்டது. எடுத்துப் படித்த அம்மா கதறலானாள்.

வாசலில் அழைப்பு மணி கூப்பிட்டது. கடும் கோபத்துடன் கதவைத் திறந்தாள் அம்மா.. சங்கரியும், அலுவலக நண்பர்களும் குதூகலக் கூச்சலுடன் உள்ளே நுழைந்தார்கள். எல்லோருக்கும் பின்னால் நின்றிருந்த ஜெரால்ட்டின் கையைப் பிடித்துக் கொண்டு கலகலவென சிரித்தபடி வருபவள் அவளுடைய மகளேதான்..“என்னம்மா உன்னை விட்டுட்டுப் போயிட்டேன்னு பயந்திட்டியா. அசடும்மா நீ.. உன்னை விட்டுட்டு என்னால இருக்க முடியாது.

இனிமே அப்பாவும் நம்மக்கூட இருக்கப் போறாரே.. எப்படி போயிடுவேன். நான் போயிட்டா அப்பறம் என் தம்பி, தங்கச்சியை யார் வளர்க்கறது? அதுகளை குளிக்க வைக்கணும்.. சோறு ஊட்டி விடணும்… ஸ்கூலுக்கு கூட்டிட்டு போய் விடணும்.. வீட்டுப்பாடம் எழுதவைக்கணும். அம்மாடியோ.. எனக்கு எவ்வளவு ேவலை இருக்கு. எல்லாத்தையும் நான்தானே பார்க்கணும்” என்று சொன்ன மகளை அம்மா முறைத்தாள்.

“என்னம்மா முறைக்கறே? உலக மேப்பிலிருக்கிற அத்தனை நாடுகளிலும் சுற்றிக் கொண்டிருந்த அப்பாவைப் பிடிக்கவே ஐந்து நாளானது. அப்பறம் என்ளை அறிமுகப்படுத்திக் கொண்டு என் ஆசையை சொன்னப்ப அவர் ஒரே கேள்விதான் கேட்டார். “உங்கம்மாவுக்கு இது விருப்பமா மகளே?” உன்னை சம்மதிக்க வைக்கறது என் பொறுப்புன்னு சொல்லி இருக்கேன். இப்ப நீ ஒப்புக்கலைன்னா நான் ஓடிப் போக மாட்டேன்.

ஒரேயடியா செத்து போயிடுவேன். நீ எனக்காகவே வாழ்ந்தது உண்மைன்னா இதையும் எனக்காகவே ஒத்துக்கோ.. முரண்டு பண்ணாம இரு..சங்கரி ஆன்ட்டி, லதா ஆன்ட்டி ரெண்டு பேரும் கல்யாணப் பெண்ணை தயார் பண்ணுங்க. புது பட்டுப்புடவை, நகையெல்லாம் பெட்ரூம் அலமாரியில ரெண்டாவது தட்டில் வைச்சிருக்கேன். அங்கிள் அப்பாவை தயார் பண்ணி கூட்டிட்டு வாங்க” என்றபடி பட்டு வேட்டி, சட்டை பையை நீட்டியவளிடமிருந்து சங்கரியின் கணவர் வாங்கிக் கொண்டார்.

வெளியில் வர முரண்டு பிடித்த அம்மாவை ஒரு பார்வையில் அடக்கிய மகள் அவளுடைய கையைப் பிடித்தாள். மறு கையில் ஜெரால்ட்டை பிடித்துக் கொண்டு பூவாய் மலர்ந்து சிரித்தபடி திருமண பதிவு அலுவலகத்துக்கு நடக்கலானாள். அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் வியப்பும் மகிழ்வுமாக புன்னகையுடன் தலையசைத்து வாழ்த்தினார்கள். பலர் அவர்களோடு உடன் நடக்க ஆரம்பித்தார்கள். தன் மகளின் மகிழ்வையும் மற்றவர்களின் ஒப்புதல் மகிழ்வையும் கண்ட அம்மா மகளோடு இணைந்து நடந்தாள். அம்மாவின் சம்மதம் அதில் புரிய மகள் வாய் விட்டு சிரித்தாள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-senthilbalaji-8

  சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!

 • athisayangal

  நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்

 • perunad

  பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!

 • turkeydeath11

  துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!

 • lantern-festival-china

  உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்