SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அம்மா, அத்தை கைப்பக்குவத்தில் இலங்கை பாரம்பரிய உணவு!

2023-01-24@ 17:12:43

நன்றி குங்குமம் தோழி

‘‘சின்ன வயசிலேயே என் மனதில் பதிந்த பதிவுதான் அது. என்ன பட்டப்படிப்பு படிச்சாலும் கண்டிப்பா தனிப்பட்ட முறையில் ஒரு தொழில் செய்யணும் என்பதுதான். நான் சென்னையில் பிறந்து வளர்ந்தாலும், நான் ஒரு இலங்கை தமிழன். எனக்கு உணவு மேல் தனிப்பட்ட ஈடுபாடு உண்டு. அதனால் செஃப்பாக வேண்டும்னு நினைச்சேன். ஆனால், அது முடியல.
அதனால் எனக்கு பிடிச்சதை நான் தொழிலா செய்ய முடிவு செய்தேன்’’ என்கிறார் குமரேஸ். இவர் சென்னை பெசன்ட் நகரில் தன் அம்மா, அத்தை மற்றும் சகோதரனுடன் இணைந்து குடும்பமாக ‘கேண்டியன்’ என்ற இலங்கை உணவகம் ஒன்றை கடந்த பத்து வருடமாக நடத்தி வருகிறார்.

‘‘நமக்கு புடிச்ச சாப்பாடுன்னு இருக்கும். அதை மக்களுக்கு கொடுக்க விரும்பினேன். மக்கள் பெரும்பாலும் விரும்பி சாப்பிடும் உணவு வட இந்திய உணவாக இருப்பதால், அதைத்தான் நானும் என் அப்பாவும் சேர்ந்து 2013ல் ஆரம்பிச்சோம். அப்போது இந்த உணவகத்திற்கு வேறு பெயர் இருந்தது. வட இந்திய உணவுடன் ஒரு சில இலங்கை உணவான இடியாப்பம், ஆப்பம், சொதின்னு கொடுத்து வந்தோம். அதை சாப்பிட்டவர்கள், இலங்கையின் பாரம்பரிய உணவினை கொடுக்கலாமேன்னு கேட்டாங்க. அவங்க விரும்பியதால், வட இந்திய உணவுடன் தனி மெனுவாக இலங்கை உணவினையும் சேர்த்து கொடுக்க ஆரம்பிச்சோம்.

ஆரம்பிச்ச நாள் முதல் இன்று வரை நாங்க எந்த விளம்பரமும் கொடுத்ததில்லை. எல்லாமே இங்கு வந்து சாப்பிட்டவர்கள் வாய்வார்த்தையாக மற்றவர்களிடம் சொல்லி அப்படித்தான் எங்களுக்கான வாடிக்கையாளர்கள் உருவானாங்க. என் அம்மாவுடைய சொந்த ஊர் இலங்கையில் உள்ள கேண்டியன். அப்பா அதற்கு பக்கத்தில் இருக்கும் ஊரைச் சேர்ந்தவர். நாங்க தமிழர்கள் என்றாலும், இலங்கையில் பல தலைமுறையாக செட்டிலானவர்கள்.

அதாவது திருச்சியில் இருந்துதான் பலர் இலங்கையில் செட்டிலானார்கள். அவர்கள் வீட்டில் சமைக்கும் இலங்கை உணவினைதான் நாங்க இங்கு தருகிறோம். நான் என்னுடைய உணவகத்தில் இலங்கையின் பாரம்பரிய உணவினை ஆரம்பிக்கப் போவதாக சொன்னதும் என் பாட்டியும் அம்மாவும் ஒரு மெனு லிஸ்ட் சொன்னாங்க. அதன் பிறகு என்ன  கொடுக்கலாம்னு நாங்க எல்லாரும் சேர்ந்து முடிவு செய்து, ஒரு மெனுவினை அமைத்தோம்.

மெனுவில் உள்ள உணவினை சமைத்திடலாம் ஆனால் பாரம்பரிய சுவையினை ெகாடுக்கணும் என்பதால், முதல் ஒரு வருடம் அம்மாதான் கூட இருந்து எல்லா உணவுகளையும் எவ்வாறு தயாரிக்கணும்னு சொல்லிக் கொடுத்தாங்க. என்னுடைய செஃப் மட்டுமில்லை, நானும் சேர்ந்து கற்றுக் கொண்டேன், அவங்களின் கைப்பக்குவத்தை. இதில் சில உணவுகள் பாட்டியின் ரெசிபி. அதுவும் அம்மா சொல்லி கற்றுக்ெகாண்டேன். இப்ப என் அத்தைதான் கிச்சனை முழுசா பார்த்துக்கிறாங்க. அவங்க இலங்கையில் கேட்டரிங் செய்திட்டு இருந்தாங்க. இப்ப இங்க என்னுடன் சேர்ந்து இந்த உணவத்தில் முழுமையா செயல்பட ஆரம்பிச்சுட்டாங்க’’ என்றவரின் ஸ்பெஷாலிட்டியே இங்கு ஒவ்வொரு உணவினையும் ஃப்ரெஷ்ஷாக தயாரிப்பது தானாம்.

‘‘ஆரம்பத்தில் தென்னிந்திய உணவான சாப்பாடு, ரசம், சாம்பார், கூட்டுப் பொரியல் எல்லாம் கொடுத்திருந்தேன். ஆனால் அதைத்தான் நாம வீட்டிலும் சாப்பிடுகிறோம் என்பதால் வட இந்திய உணவு மற்றும் இலங்கை உணவிற்கு மாறிட்டேன். எங்களின் உணவகத்தில் சாப்பிட வருபவர்கள் கொஞ்சம் பொறுமையை கடைப்பிடித்தால்தான் சுவையான உணவினை சுவைக்க முடியும். இதனால் பலர் என்னிடம் சண்டையே போட்டிருக்காங்க.

காரணம், ஒரு உணவினை நீங்க ஆர்டர் செய்தா அதை நாங்க பரிமாற குறைந்தபட்சம் அரைமணி நேரமாகும். நாங்க எதையுமே தயாரித்து வைத்திருக்க மாட்டோம். ஆர்டர் வந்த பிறகுதான் அதனை சமைக்கவே ஆரம்பிப்போம். சில உணவகத்தில் ஏற்கனவே பாதி சமைத்த நிலையில் உணவினை வைத்திருப்பார்கள். நாங்க அப்படி இல்லை. எல்லாமே ஃப்ரெஷ்ஷாதான்  செய்வோம். அதாவது புட்டு, ஆப்பம் நீங்க ஆர்டர் கொடுத்த பிறகுதான் மாவினை திரித்து வேகவைத்து தருவோம். சிக்கன், இறால் கூட அப்படித்தான். எல்லாமே அப்போது சமைத்து தருவோம்.

எங்களிடம் சண்டை போட்ட வாடிக்கையாளர்கள் உணவினை சாப்பிட்ட பிறகு அவர்களின் வயிறு மட்டுமில்லை மனமும் குளிர்ந்து காத்திருப்புக்கு நல்ல திருப்தியான உணவினை சாப்பிட்டோம்னு அவங்க சொல்லும் அந்த ஒரு வார்த்தைதான் எங்களின் சக்சஸ். இது சின்ன இடம் என்பதால், சில சமயம் கூட்டம் வரும் போது மட்டும் கொஞ்சம் சங்கடமா இருக்கும்’’ என்ற குமரேஸ் இங்கு பரிமாறப்படும் இலங்கை உணவினைப் பற்றி விவரித்தார்.

‘‘நான் எங்க வீட்டில் இன்று வரை சாப்பிடும் இலங்கை உணவினைதான் இங்க கொடுக்கிறேன். தமிழர்கள் மற்றும் இலங்கை உணவிற்கு பெரிய வித்தியாசம் இல்லை. கேரளா மற்றும் தமிழ்நாடு இரண்டின் கலவைன்னு சொல்லலாம். அவங்க கொஞ்சம் காரமா சாப்பிடுவாங்க. நமக்கு அது பழக்கமில்லை என்பதால், காரத்தை கொஞ்சம் குறைச்சிருக்கேன். அவங்களின் பாரம்பரிய உணவு இடியாப்பம், புட்டு, ஆப்பம், சொதி, கொத்து, சம்பல், அரிசி சாதம் என்பதுதான். அவங்க நம்மளை போல் சாம்பார், ரசம், தயிர்னு மூன்று தடவை சாப்பிட மாட்டாங்க.

ஒரே முறைதான் சாப்பிடுவாங்க. சாதம் இருக்கும், அதற்கு சம்பல் கண்டிப்பா இருக்கும். சிக்கன் அல்லது மீன் கிரேவி, இரண்டு வகையான காய் அப்புறம் பருப்பு கறி. சிக்கனைவிட மீன், கருவாடு நிறைய சாப்பிடுவாங்க. சம்பல் மதிய உணவில் மட்டுமில்லை, காலை மற்றும் இரவு வேளை உணவிலும் இருக்கும். அது இல்லாமல் சாப்பிட மாட்டாங்க. இவங்களின் அரிசியில் கஞ்சித்தன்மை அதிகமா இருக்கும். அது சாதத்திற்கு ஒரு வித சுவை மற்றும் நறுமணத்தை தரும்.

மசாலா பொறுத்தவரை பெரிய வித்தியாசம் கிடையாது. அதே பட்டை, கிராம்பு, ஏலக்காய் எல்லாம் இருக்கும். மிளகாயில் குண்டு மிளகாய் மற்றும் கேரளாவில் கிடைக்கும் தாய் சில்லியினை அதிகம் பயன்படுத்துவார்கள். அவர்களின் உணவில் தேங்காய் பிரதானமா இருக்கும். சொதி, கிரேவி, சம்பல் அனைத்திலும் தேங்காய் பயன்படுத்துவார்கள். மேலும் நம்மூரில் கருவாடு போல் அவங்க வீட்டில் எப்போதும் பதப்படுத்தப்பட்ட மீன் இருக்கும். எந்த காய்கறியுமே இல்லாத போது அவங்க அதை பொரித்து உணவிற்கு சாப்பிடுவார்கள்.

அவங்க சூரை மீனைத்தான் அதிகம் சாப்பிடுவார்கள். ஆனால் சென்னை மக்களுக்கு அந்த மீன் சாப்பிட்டு பழக்கமில்லை என்பதால், நான் வஞ்சிரம், வவ்வால், சங்கரா, ஷீலா போன்ற மீன்களைதான் என் உணவகத்தில் பயன்படுத்துகிறேன். எனக்கு நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து நான் சாப்பாட்டுக்கு மீன் குழம்புதான் சாப்பிட்டு இருக்கேன். கடலைக்கறிதான் பெஸ்ட்
காம்பினேஷன்னு சொல்வாங்க. ஆனால் என்னைக் கேட்டா புட்டு, மீன் குழம்பு சூப்பர் டேஸ்டா இருக்கும்.

எங்களின் மற்ற ஸ்பெஷாலிட்டி லஞ்ச் பாக்கெட்ஸ். இதனை ஆர்டரின் பெயரில்தான் பரிமாறுகிறோம். அதாவது நீங்க லஞ்ச் பாக்கெட் சாப்பிட வருகிறீர்கள் என்றால், முதன் நாளே எங்களுக்கு ஆர்டர் செய்திடணும். இதில் சிக்கன், முட்டை, இறால், மட்டன் மற்றும் வெஜ் என ஐந்து வகை லஞ்ச் பாக்கெட்களை கொடுக்கிறோம். இது ஒரு முழுமையான இலங்கை மீல்ஸ்னு சொல்லலாம்’’ என்றவர் கோவிட் போது பெருமளவில் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

‘‘என்னதான் எனக்கு உணவு மேல் ஈடுபாடு இருந்தாலும், கடைசியில் நான் செய்வது பிசினஸ்தான். லாபம் கண்டிப்பா பார்க்க விரும்புவேன். ஆனால் இந்த கோவிட் போது பெருமளவு பாதிக்கப்பட்டேன். உணவகம் செயல்படுத்த முடியாது. வேலை பார்ப்பவர்களையும் அனுப்ப முடியாத சூழல். கடைக்கான வாடகை, அவர்களுக்கு சாப்பாடு, தங்க இடம் என கையில் வைத்திருந்த சேமிப்பை கொண்டுதான் சமாளித்தேன்.

இப்ப மீண்டும் புதிதாக ஆரம்பித்தது போன்ற உணர்வு இருக்கு. கோவிட் இல்லாமல் இருந்திருந்தால், என்னுடைய உணவகத்தை மேலும் பெரிய அளவில் விரிவுபடுத்தி இருப்பேன். நான் ஒன்றும் பெரிய பணக்காரன் இல்லையே. சாதாரண குடும்பத்தை சேர்ந்தவன்தான். அதனால் மீண்டும் எழுந்திருக்கேன். ஆனால் இந்த முறை உணவகம் மாதிரி இல்லாமல் சின்ன அவுட்லெட். அதில் இலங்கை சிறப்பு உணவான ஆப்பம், இடியாப்பம், சொதி, சம்பல் போன்ற உணவுகளை கொடுக்க இருக்கிறேன். அதற்கான இடத்தை நிர்ணயித்த பிறகு செயல்படும்
எண்ணம் உள்ளது’’ என்றார் குமரேஸ்.

செய்தி: ஷம்ரிதி

படங்கள்: ஆ.வின்சென்ட்பால்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-senthilbalaji-8

  சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!

 • athisayangal

  நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்

 • perunad

  பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!

 • turkeydeath11

  துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!

 • lantern-festival-china

  உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்