SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாதவிடாயின் போது அலட்சியம் வேண்டாமே!

2023-01-21@ 18:01:29

நன்றி குங்குமம் தோழி

பெண்கள் மகளாக, தங்கையாக, அம்மாவாக, பாட்டியாக என பல அவதாரங்களை எடுத்து வருகிறார்கள் என்று அவர்களை நாம் கொண்டாடி வருகிறோம். ஆனால் ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் அவள் வயதிற்கு வந்த காலத்தில் இருந்து அவள் முதுமையை அடையும் காலம் வரை அவள் உடலில் பல வித மாற்றங்களை சந்தித்து வருகிறாள். அவள் உடலில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றங்கள் அவளுக்கு பலவித மன ரீதியாகவும் மற்றும் உடல் ரீதியாகவும் இன்னல்களைக் கொடுத்து வந்தாலும் அதை மிகவும் எளிதாகவும் சாமர்த்தியமாகவும் சமாளிக்கும் திறன் அவளுக்குண்டு.

அதில் மிகவும் முக்கியமான பிரச்னை என்றால் மாதவிடாய் பிரச்னை. இதில் ஒரு சில பெண்களுக்கு மாதம் தவறாமல் தொடர்ந்து வரும். சிலருக்கு அதில் பிரச்னை இருக்கும். ஒரு சிலர் PCOD பிரச்னையால் அவதிப்படுவார்கள். மாதவிடாய் காலத்தில் மட்டுமில்லாமல் அதன் பிறகு மெனோபாஸ் காலத்திலும் அதனால் சந்திக்கும் பிரச்னைகள் பல. இதில் மிகவும் முக்கியமானது, மாதவிடாயின் போது அவர்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்கள்.

‘‘நம் அம்மாக்கள் காலத்தில் சானிட்டரி நாப்கின்கள் கிடையாது. அவர்கள் துணிகளை தான் பயன்படுத்தி வந்தனர். அதனால் தொற்று ஏற்பட வாய்ப்பு இருந்ததால், அதில் இருந்து பெண்களை காக்க கண்டறியப்பட்டதுதான் சானிட்டரி நாப்கின்கள். இப்போது அதுவுமே பாதுகாப்பு இல்லை என்கிறார்கள். இவற்றை பயன்படுத்துவது எளிது என்றாலும், அதனால் உடல் ரிதியாக பிரச்னைகளை சந்திக்க வாய்ப்பு உள்ளது’’ என்று எச்சரிக்கிறார் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்.

‘‘பெண்கள் மாதவிடாயின் போது பயன்படுத்தக்கூடிய சானிட்டரி நாப்கின்களே பலவிதமான ரகங்களில் கிடைக்கிறது. ஆரம்பத்தில் வெறும் பருத்தி மட்டுமே கொண்டு தயாரிக்கப்பட்டு வந்த இந்த நாப்கின்கள், பெண்களின் தேவையினை அறிந்து அதில் பல மாற்றங்களை கொண்டு வந்தனர் அதன் தயாரிப்பு நிறுவனங்கள். நாப்கின்களில் இப்போது கசிவு ஏற்படாமல் இருக்க ஜெல் வடிவமாக அமைக்கப்பட்டுள்ளது. சிலவற்றில் வாசனை திரவியங்கள் சேர்க்கப்பட்டு கிடைக்கிறது. இப்படி பல விதமாக இவை மாற்றம் அடைந்துள்ளன.

நாப்கின்களின் அடுத்த வடிவம் தான் டாம்பூன்ஸ். இதனை பெண்கள் தங்களின் பிறப்புறுப்பில் பொருத்திக் கொள்ளலாம். அதனால் நாப்கின் அணியும் சங்கடம் ஏற்படாது. ஆனால் இவை இரண்டுமே பெண்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.பொதுவாக நாப்கின் மற்றும் டாம்பூன்கள் பருத்தி பஞ்சுகள் மூலம் தயாரிக்கப் படுகின்றன. பருத்தி வளர்ச்சிக்காக அதில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. இந்த பூச்சிக்கொல்லிகள் நமது தோலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.

இதேபோல், சில நிறுவனங்கள் தூய்மையான வெள்ளை நிறத்தில் நாப்கின்களை விற்பனை செய்கின்றன. இதில் அந்த தூய்மையைக் கொண்டு வருவதற்காக ப்ளீச்சிங் பயன்படுத்துகின்றன. இவை தவிர, சானிட்டரி நாப்கின்களில் பித்தலேட்டுகள் மற்றும் ஆவியாகும் கரிம கலவைகள் ஆகியவையும் உள்ளன. பித்தலேட்டுகள் என்பது பிளாஸ்டிக் பொருட்களை நீண்ட நாட்கள் பயன்படுத்துவதற்காக உபயோகப்படுத்தும் ஒருவித ரசாயனம் ஆகும். அதேசமயம் ஆவியாகும் கரிம கலவைகள் என்பது பெயிண்ட், தரைவிரிப்புகள், பசைகள், நுரை, ஏர் பிரஷ்னர், சுத்தம் செய்யும் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் ரசாயனம் ஆகும்.

பெண்களின் பிறப்பு உறுப்பு பகுதி மிகவும் மென்மையான சவ்வுகளைக் கொண்டது. இந்தப் பகுதியில் இது போன்ற ரசாயனங்கள் நிறைந்த தயாரிப்புகளை பயன்படுத்தும்போது அதில் உள்ள ரசாயனங்கள் உடலுக்குள் உறிஞ்சப்படும் வாய்ப்புகள் உள்ளது. இதன் காரணமாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் தோல் புற்றுநோய் போன்ற பல்வேறு புற்று நோய்கள் ஏற்படக்கூடும். எனவே பெண்கள் இது போன்ற ரசாயனம் அதிகம் உள்ள நாப்கின்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதில் அவர்கள் ஆர்கானிக் முறையில் தயாரிக்கப்படும் நாப்கின்களை பயன்படுத்தலாம்.

நாப்கின்களைக் காட்டிலும் டாம்பூன்களை பயன்படுத்துவது மிகவும் எளிதானதாகும். அதேசமயம் அவற்றை அதிக நேரம் பிறப்பு உறுப்பு பகுதியில் வைத்திருக்கும்போது டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் என்னும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் உருவாகும். இதனால் காய்ச்சல், குறைந்த ரத்த அழுத்தம், வாந்தி, உறுப்பு செயலிழப்பு, மூச்சிரைப்பு, தலைவலி, சிறுநீர் பிரச்னை மற்றும் மனக் குழப்பம் போன்றவை ஏற்படலாம். இதை அறிந்து தற்போது அது போன்ற டாம்பூன்கள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் நீங்கள் நாப்கின் பயன்படுத்துபவராக இருந்தால் அவற்றை நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றிக் கொள்வது கட்டாயம் ஆகும். மேலும் கரை படியவில்லை என்றாலும் இதனை மாற்றுவது அவசியம்.

இந்தப் பிரச்னை எல்லாம் இனி வேண்டாம் என்று நினைப்பவர்கள் மென்சுரேஷனல் கப்பினை பயன்படுத்தலாம். சிலிக்கானால் தயாரிக்கப்பட்டதால், அதில் நச்சினை பெருக்கும் ரசாயனங்கள் இல்லை. இந்த கப்புகளை நாம் பிறப்புறுப்பில் பொருத்திக் கொண்டால் போதும். அவ்வப்போது அதை நீக்கி நன்கு ஸ்டெரலைஸ் முறையில் சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்தலாம். ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறிய வேண்டிய அவசியம் இல்லை. நீண்ட நாட்கள் உபயோகித்தாலும் உடலுக்கும் தீங்கு விளைவிக்காது மேலும் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படாது’’ என்று ஆலோசனை வழங்கினார்  டாக்டர் ஸ்பூர்த்தி அருண்.

தொகுப்பு: இந்திராணி

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்