நாகர்கோவிலில் உருவாகும் பெண்கள் கால்பந்தாட்ட அணி!
2023-01-19@ 17:36:30

நன்றி குங்குமம் தோழி
சமீபத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்தாட்டத்தை இந்திய மக்கள் அதிகம் கொண்டாடி தீர்த்தனர். இந்திய அணியினர் கால்பந்தாட்டத்தில் அதிகமாக வெற்றி பெற்றதில்லை என்றாலும் இந்தியாவிலிருந்து உலகக்கோப்பை போட்டிக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து உலகமே வியந்துதான் போனது என சொல்லலாம்.
தமிழ்நாட்டில் குறிப்பாக நாகர்கோவிலில் உள்ள தூத்தூர் பகுதி மக்கள் கால்பந்தாட்ட வீரர்களுக்கு தனியாக பாதகைகள் வைத்து கொண்டாடினர். உலக கால்பந்தாட்ட கோப்பையினை தூத்தூர் பகுதி மக்கள் ஏன் இவ்வளவு கொண்டாட வேண்டும். அவர்களுக்கும் கால்பந்தாட்டத்திற்கும் உள்ள சம்பந்தம் என்ன? என்ற கேள்விகளுக்கான விடையினை நாம் 60 வருடங்களுக்கு முன்பிருந்தே தேட வேண்டும்.
கடந்த 60 வருடமாக இந்திய மற்றும் தமிழ்நாட்டு கால்பந்தாட்ட அணியில் தூத்தூர் பகுதி வீரர்கள் வருடம் தவறாமல் தேர்வாகி வருகின்றனர் என்பது தான் அவர்களின் இந்த கொண்டாட்டத்திற்கு காரணம்ன்னு சொல்லலாம். பல வீரர்களை உருவாக்கும் தூத்தூரில் ஆண்கள் மட்டுமில்லாமல் பெண்களும் இந்த தேர்வு பட்டியலில் சாதிக்க தயாராக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
30க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் இந்தப் பகுதியில் கால்பந்தாட்டத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்று ஒரு அணியாக செயல்பட்டு வருகின்றனர். மாநில, மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிவாகை சூடி வருகிறார்கள். திறமையான வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் இருந்தாலும், இவர்கள் பயிற்சி பெற முறையான மைதானம் இல்லை என்று வினவுகிறார் கால்பந்தாட்ட பயிற்சியாளரான ஜான் பிரிட்டோ. இவர் இங்கு பெண்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி மற்றும் அவர்களின் தேர்ச்சிவிகிதம் குறித்து விவரித்தார்.
‘‘நாகர்கோவில் கேரளாவிற்கு அருகில் இருப்பதால் எங்கள் பகுதியில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் கால்பந்தாட்டம் விளையாட வேண்டும் என ஆர்வம் ஏற்பட்டது. நாகர்கோவில் பகுதியில் அந்த கால கட்டங்களில் KRYC (Kennadi Rural Youth club) என்ற பெயரில் சுற்று வட்டார ஊர்களுக்கு இடையே கால்பந்தாட்ட போட்டிகள் நடக்கும். நாங்களும் 1964ம் கால கட்டங்களிலேயே இங்கு கால்பந்தாட்ட அணி ஒன்றை உருவாக்கினோம்.
தூத்தூர் கடலை ஒட்டி அமைந்துள்ள பகுதி என்பதால் இங்கு அதிகமான மணல் இருக்கும். ஆரம்பத்தில் மணலில் கால்பந்தாட்டம் விளையாட தொடங்கினோம். மணலில் உங்களால் கால்பந்தாட்டம் விரைவாக விளையாட முடியாது. அதன் வேகத்தை குறைத்துவிடும். காரணம், நாம் பந்தினை உதைக்கும் போது அது மணலில் பட்டு நாம் உதைத்த இடத்திலேயே நின்றுவிடும். ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பந்தினை நாம் செலுத்த முடியாது. அதனால் மணலில் விளையாடுவது என்பது மிகவும் கடினமாக இருந்தது.
இது போன்ற சவால்கள் இருந்தாலும், அதை எல்லாம் கடந்துதான் நான் கால்பந்தாட்டப் பயிற்சியினை தொடர்ந்து எடுத்து வந்தோம். எங்கள் ஊரில் கால்பந்தாட்டத்திற்கான தனிப்பட்ட அணி மட்டும் தான் இல்லை. ஆனால் எங்க ஊரை சேர்ந்தவர்களுக்கு ஓரளவிற்கு இந்த விளையாட்டு தெரிந்திருந்தது. கால்பந்தாட்டத்தில் பின்பற்றப்படும் அடிப்படை விதிகள் மற்றும் அதில் உள்ள நுணுக்கங்கள் உள்ளிட்டவற்றை தெரிந்து வைத்திருந்தார்கள்.
அவர்களுக்கு தெரிந்த விதிகள் மற்றும் விளையாட்டு முறையினை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்கள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கால்பந்தாட்டம் எங்க பகுதி மக்கள் மத்தியில் பிரபலமாச்சு. ஒரு கட்டத்தில் KRYCயில் நடக்கக்கூடிய போட்டிகளில் எங்க ஊர் மக்கள் பங்கு பெற்று வெற்றி பெற ஆரம்பித்தார்கள். காரணம், இந்த போட்டிகள் எல்லாம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தான் நடைபெறும். நாங்க கடற்கரை மணலிலேயே விளையாட பழகி இருந்ததால், செம்மண் மைதானத்தில் விளையாடும் போது எங்களின் ஒரு உதையில் பந்து அப்படியே வழுக்கிக் கொண்டு சென்றது.
தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று கோப்பைகளை பெறத் தொடங்கினர். எங்க கால்பந்தாட்ட வீரர்களை மற்றவர்கள் ‘மணல் ராஜாக்கள்’ என்றுதான் அழைப்பார்கள். இது ஒரு கூட்டு விளையாட்டு என்பதால், எல்லோரும் ஒன்றாக இணைந்து விளையாட ஆரம்பித்தோம். பொதுவாக கால்பந்தாட்ட போட்டியினை அந்தந்த நாடு தங்களின் நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று விளையாடுவார்கள். அதேபோல் நாங்களும் எங்க ஊருக்கு பெருமை சேர்க்க விளையாட ஆரம்பித்தோம். இதன் மூலம் எங்க அணி வீரர்கள்
பற்றி வெளியே தெரிய ஆரம்பித்தது.
சில வீரர்கள் தமிழ்நாடு கால்பந்தாட்ட அணியில் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டனர். எங்களுடைய கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகவே இதை நாங்க பார்த்தோம்’’ என்றவர் தங்களுக்கான ஒரு மைதானம் அமைக்க அதற்கான வேலைகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
‘‘மைதானம் அமைக்க KRYC எங்களுக்கு ரூ.20 ஆயிரம் நிதி அளித்தது. மேலும் எங்களின் ஊர் மக்களும் எங்களுக்காக நிதியினை வசூலித்து கொடுத்தனர். அதைக் கொண்டு ெசம்மண் மைதானம் ஒன்றை நாங்க பயிற்சி பெறுவதற்காக அமைத்தோம். அதுமட்டுமில்லாமல் விளையாடுவதற்கு தேவையான பொருட்களையும் வாங்கினோம். 1998ம் ஆண்டு எங்க ஊரில் இருந்து விளையாட சென்ற ஒரு வீரர் சிறப்பாக ஆடியதால், அவருக்கு அரசு வேலை கிடைத்தது. தற்போது எட்டு பேர் இந்த விளையாட்டால் அரசு வேலையில் இருக்கிறார்கள். கால்பந்தாட்டம் விளையாடினால் கண்டிப்பாக அரசு வேலை கிடைக்கும் என்று மக்கள் மனதில் பதிந்துவிட்டது. அதனால் அவர்கள் தங்களின் குழந்தைகளையும் விளையாட அனுமதிக்கிறார்கள்.
மேலும் எங்கள் விளையாட்டு குழுவில் பயிற்சி பெறுவதற்கு வெளி ஊர்களில் இருந்தும் பலர் வர ஆரம்பித்தனர். அதன் அடிப்படையில் பெண்களுக்கு தன்னம்பிக்கை
ஏற்பட அவர்களுக்கு என ஒரு தனி அணியினை உருவாக்கினோம். அவர்களும் போட்டிகளை வென்று கோப்பைகள் மற்றும் பதக்கங்களை பெற்றனர். பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்களும் அவர்களை சிறு வயதில் இருந்தே விளையாட்டு பயிற்சிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது 70 பேர் கால்பந்தாட்ட பயிற்சியினை இங்கு பெற்று வருகிறார்கள். இதில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டு அணியில் ஐந்து பேராவது தேர்வு செய்யப்படுவார்கள். எங்களுக்கு கிடைத்த நிதியுதவிக் கொண்டு மைதானம் மற்றும் விளையாட்டிற்கு தேவையான பொருட்கள் மட்டுமே வாங்க முடிந்தது. அதைக் கொண்டே பல வெற்றிகளை இவர்கள் குவித்து வருகிறார்கள். ஆனால் காலையில் மட்டுமே எங்களால் இவர்களுக்கு பயிற்சி அளிக்க முடிகிறது.
மைதானத்தில் மின்விளக்கு வசதி இல்லாத காரணத்தால், சூரியன் அஸ்தமித்த பிறகு எங்களால் இவர்களுக்கு பயிற்சியினை அளிக்க முடிவதில்லை. இதனால் காலை ஒரு வேளை மட்டுமே தான் இவர்களால் பயிற்சியினை மேற்கொள்ள முடிகிறது. அதற்கான வசதியினை அரசு ஏற்படுத்திக் கொடுத்தால், இவர்களின் திறமை மென்மேலும் மெருகேறும். தமிழ்நாட்டை தாண்டி இந்திய அணியிலும் பெண்கள் இணைவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக உள்ளது’’ என்றவர் ‘நேதாஜி ஸ்போர்டஸ் கிளப்’ ஒன்றை அமைத்து அதன் மூலமாகவும் சுமார் 20 டோர்னமென்டுகளை நடத்தியுள்ளார்.
செய்தி: மா.வினோத்குமார்
படங்கள்: ர.ரஞ்சித்
மேலும் செய்திகள்
சிறுகதை -அமானுஷ்யம்
முதுமலை தம்பதிகள் குறித்த ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது!
ஆத்ம திருப்தி அளிக்கும் ‘வீடு திரும்புதல்’ திட்டம்!
‘அனைத்தும் சாத்தியம்’ (Museum of Possibilities)
மாற்றத்துக்கான பெண்கள் வான்காரி மாத்தாய்
வாழ்க்கை+வங்கி=வளம்!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!