SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாழ்க்கை+வங்கி=வளம்!

2023-01-18@ 17:45:45

நன்றி குங்குமம் தோழி

வணிகக் கடன் (Business Loan)

மகிழ்வான வாழ்க்கைக்கு மூன்று வளங்கள் மிகவும் அவசியமானவை.. அவை இயற்கை வளம், மனித வளம், நிதி வளம். இயற்கை வளம் என்பது மண் வளம், வானிலைச் சமநிலை, பொருள் பெருக்கம், தேவையான காலத்தில் தேவையானவை கிடைத்தல். மனித வளம் உழைப்பும், உடல் தகுதியும் உள்ளிட்டு மனிதன் தான் இயங்குதலும், தன் மூலம் பிற இயக்கப்படுவதையும் குறிக்கும். நிதிவளம் பொருளுக்கானதும், சேவைக்கானதுமான விலை அல்லது மதிப்புக்கு குறியீடான நிதி ஆதாரம். முதலிரண்டு வளங்களின் சூழலுக்கு ஏற்ப மனிதன் இயங்கத் தொடங்கினாலும் உரிய நேரத்தில் நிதிவளம் இல்லையெனில் வாழ்க்கையின் ஓட்டம் தடைபடும். அத்தகைய நிதிவளத்திற்குப் பாலமாக வங்கிகள் செயல்படுகின்றன.

வங்கிகள் விண்ணப்பதாரரின் தேவைகளுக்கு ஏற்ப பல திட்டங்களின் மூலம் கடனுதவி  வழங்குகிறது. தனிநபரின் தேவைகளான வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது, உயர் கல்வி, மருத்துவ மற்றும் பிற அத்தியாவசிய செலவுகளுக்கு என்று தனிநபர் கடன் திட்டங்கள் வங்கிகளால் செயல்படுத்தப்படுகின்றன. விவசாயம், வணிகம், அயலக வணிகம் (Inport & Export Transactions) என்று ஒவ்வொரு துறை சார்ந்த கடன் திட்டங்கள் அனைத்தும் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்கின்றன.

வணிகக் கடன்

நிரந்தர (Fixed) மற்றும் நடப்பு (Current) மூலதனத் (Capital) தேவைகள், புதிய தளவாடக் கருவிகள் (Plant and Machineery) வாங்கி இயக்க ஆகும் செலவு, செயல்பட்டுச் செலவுகள், மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தியான பொருட்களை சிலகாலம் சேமித்துவைக்க என்ற மிகப்பெரிய தொடர் நிதித் தேவைகளைக் கணக்கிட்டால் அவ்வளவு தொகையை ஒருவரால் உடனடியாக தொழில் தொடங்க முதலீடு செய்ய முடிவதில்லை. தொழில் தொடங்க வங்கிகள் வழங்கும் வணிகக் கடன் திட்டங்கள் இவை அனைத்திற்காகவும் பயன்படுகின்றன. சிறுவணிகம், நடுத்தர வணிகம் மற்றும் பெருவணிகம் ஆகிய அனைத்திற்கும் வங்கிகள் கடன் வழங்குகின்றன.

முதலீட்டுத்தொகை, வருட உற்பத்தியளவு, லாபமீட்டும் அளவு ஆகிய பல காரணிகளை கணக்கில் கொண்டு வணிகத்தின் அளவு சிறு வணிகமா, நடுத்தர வணிகமா அல்லது பெருவணிகமா என்பது நிர்ணயிக்கப்படுகிறது. மேலும் வங்கி வழங்கும் வணிகக் கடன் அரசு அறிவிக்கும் திட்டங்களின் அடிப்படையிலும், உதாரணமாக, முத்ரா கடன் திட்டம், ஸ்ரீசக்தி வணிகக் கடன், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்புத் திட்டம், மாநில அரசின் மானியத்துடன் மாவட்டத் தொழில் மையம் வழங்கும் திட்டங்கள் ஆகியன வங்கியின் கடன் கொள்கையின்படி வடிவமைக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தும் திட்டங்களின் அடிப்படையிலும் அமைகிறது.  

கடன் வகைகள்

தவணைக்கடன், கேட்புக்கடன் (Demand Loan) மற்றும் பணக்கடன் (Cash Credit) என்று கடன் வகைகள் உள்ளன. பொருள் அல்லது இயந்திரம் அல்லது இடம் அல்லது வாகனம் மூலம் உற்பத்தியாகும் பொருள் விற்பனையாகும் என்றால் அதற்கு வழங்கப்படும் கடன் தவணைக் கடனாகும். உதாரணத்திற்கு ஒரு உணவுப் பொருட்கள் (மசாலா பொருட்கள்) தயாரிப்பதற்கு இடம், அரைக்கும் இயந்திரங்கள், உற்பத்தி செய்ய மற்றும் பொருட்களை விற்பனை செய்யப் பணியாளர்கள், மூலப்பொருட்கள் ஆகியவை தேவை. அவர் தயாரிக்கும் பொருட்கள் அவரிடமே தங்குவதில்லை. விற்பனை செய்யப்படுகிறது.

அதன் மூலம் ஈட்டும் பணம் மீண்டும் தொழிலிலேயே போடப்படுகிறது. இது ஒரு சக்கரம் போல இயங்கும் தொடராகும். மொத்த பொருட்களும் விற்பனையான பிறகு அவரின் செலவிற்கு போக மீதமிருக்கும் பணம் தான் அவரது லாபம். இந்த சக்கரத்தின் கால அளவு உற்பத்தியாக எடுத்துக்கொள்ளும் நாட்கள், இருப்பு வைக்கும் காலம் மற்றும் விற்பனையாகும் நாட்கள் ஆகியவற்றின் மொத்த கூட்டுத் தொகையாகும். மூன்று மாதங்கள் முதல் முப்பத்து ஆறு மாதங்கள் வரை இந்தக்கால அளவு இருக்கும் என்பதால் இந்த நடப்பு மூலதனத்திற்கு வங்கிகள் கேட்புக் கடனாகவோ, பணக்கடனாகவோ நிதி வழங்குகின்றன.

இந்த நடப்பு மூலதனம் தவிர நிரந்தர மூலதனம் என்பது இயந்திரங்கள் வாங்கும் செலவு மற்றும் தொழிற்சாலைக்கான இடம் சொந்தமாக வாங்குவது அல்லது வாடகைக்கு / குத்தகைக்கு எடுப்பது ஆகியனவாகும். இடமும் இயந்திரங்களும் நிலையானவை. மூலப்பொருள் மாற்றம் பெற்று விற்பனையாகிறது. ஆனால் இயந்திரங்களும், இடமும் உருமாறுவதில்லை. எனவே இயந்திரங்கள் வாங்கவோ அல்லது இடம் வாங்கவோ வழங்கப்படும் கடன் தவணைக்கடனாக நிர்ணயிக்கப்படுகிறது.

தவணைக்கடனை திருப்பச் செலுத்தும் கால அளவு 48 மாதங்கள் முதல் 120 மாதங்கள் வரை என்று அந்தந்த தொழில், முதலீடு, லாபமீட்டும் விகிதம், தொழிலகத்தின் கடனைத் திருப்பச் செலுத்தும் திறன், சந்தை நிலவரம் ஆகியவற்றின் அடிப்படையில் அமையும். பொதுவாக தவணைக்கடனுக்குரிய வட்டி விகிதம் சற்று அதிகமாக இருக்கும். தொழிலகத்திற்குத் தேவையான வாகனங்களை தவணைக்கடன் மூலம் விண்ணப்பித்து வங்கியிடமிருந்து பெறமுடியும்.

பொருள் உற்பத்தி என்றில்லாமல் ஒருவர் பொருளை மொத்தமாக வாங்கி சிறுசிறு பகுதிகளாக விற்கிறார் என்றால் அதற்குரிய வணிகக்கடனிலும் கேட்புக்கடன், பணக்கடன் மற்றும் தவணைக்கடன் ஆகிய நிலைகள் உள்ளன. மொத்தமாக வாங்கும் பொருளை இருப்பு வைக்க அதற்குரிய சேமிப்பு கிடங்குகள் / அறைகள் அவற்றின் வாடகை, சில வணிகர்களுக்கு குளிர்சாதன இயந்திரங்கள் தேவையெனில் அவற்றை வாங்குவதற்கான முதலீடு, வணிகம் செய்வதற்கு வணிகப்பொருளுடன் பயணம் செய்யவேண்டுமெனில் அதற்குரிய வாகனங்கள் வாங்குவதற்கான தொகை ஆகியவை தவணைக்கடனாக வங்கியால் வழங்கப்படுகிறது. வாங்கி இருப்பு வைத்து விற்பனை செய்யும் பொருட்களுக்கான முதலீடு கேட்புக்கடனாகவோ அல்லது பணக்கடனாகவோ வங்கியிடமிருந்து பெறலாம்.    

வணிகம் செய்பவருக்கு மூலப்பொருளைத் தருபவர் பொருட்களைத் தந்துவிட்டு சிலநாட்கள் கழித்து அதற்குரிய பணத்தை பெறுவதும், உற்பத்தியான பொருட்களை விற்பவர் அவற்றுக்குரிய விலைத்தொகையை உடனடியாக வாங்குபவரிடமிருந்து பெறாமல் குறிப்பிட்ட கால அளவிற்குப் பிறகு பணம் பெறுவதும் பொதுவான வணிக நடைமுறையாகும். வங்கி கடன் வழங்க பரிசீலிக்கும்போது வணிகருக்கு வெளியிலிருந்து கிடைக்கும் இதர கடன்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும்.

சிறு / நடுத்தர வணிகக்கடன்

வணிகம் என்பது ஒரு பொருளை வாங்கி விற்று லாபமீட்டுவது என்ற குறியீட்டில் மட்டும் நாம் பார்க்காமல் பொருளை உற்பத்தி செய்வதையும் கணக்கில் கொள்ளலாம். ஒரு சிறிய தொழிற்சாலையைத் தொடங்குபவருக்குத் தேவையானவை அதற்குரிய இடம் (சொந்தமாக அல்லது வாடகை), ஊழியர்கள், பண மூலதனம். பொருளை மொத்தமாக வாங்கி பகுதி பகுதியாக விற்பனை செய்தால் அதற்கும் இருப்புவைக்க இடம், வாங்குவதற்குப் பணம், பணியாளர் ஊதியம், விற்பனையை நிர்வகிக்க ஆகும் செலவுகள் என்று வணிகக்கடன் பட்டியல் நீளுகிறது. வங்கியை அணுகுவதற்கு முன்நாம்  தொழிற்சாலை என்றோ,  பொருளை வாங்கி விற்கும் நிறுவனமென்றோ ஒரு சிறு நிறுவனத்தைத்தான் மாதிரி வடிவமாகக் கொண்டு பேசுகிறோம் என்பதை முதலில் நினைவில் கொள்ளவேண்டும். வங்கியை அணுகுவதற்குமுன் முதன்முதலில் வணிகத்தைப் பற்றிய ஒரு திட்ட அறிக்கையைத் தயாரிக்க வேண்டும்.

அரசின் மானிய உதவிக்கடன் என்றாலும் வங்கியின் திட்டத்தின்மூலம் வழங்கப்படும் கடன் என்றாலும் விண்ணப்பதாரர் வங்கியிடம் முதலில் வழங்கும் திட்ட அறிக்கைதான் விண்ணப்பதாரர் மேற்கொள்ளும் வணிக மதிப்பீடு சரியாக இருக்க வேண்டும். மதிப்பீடு சரியில்லையென்றால் வங்கி உடனடியாக கடனுதவி தர மறுத்துவிடலாம். இந்த திட்ட அறிக்கையின் கூறுகளையும், அதனை எவ்வாறு தயாரிப்பது என்பதையும் பார்ப்போம்.

வணிக திட்ட அறிக்கை

பெயர், தந்தை / கணவர் / மனைவி பெயர், முகவரி, பிறந்த தேதி, தொலைபேசி எண்கள், ஆதார் எண்கள், வருமானவரி கணக்கு எண்கள், வருமானவரி கணக்கு எண்கள் இல்லையெனில் பூர்த்தி செய்யப்பட்ட படிவம் 16, விண்ணப்பதாரரின் இரண்டு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் வங்கிக்குச் சென்று வணிகக்கடனுக்காக விண்ணப்பிக்க வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ளவை திட்ட அறிக்கையில் முதன்மையாக இடம் பெறவேண்டும். மேலும் விவரமாக இடம்பெறவேண்டியவை பின்வருமாறு:

1)வணிகம் / தொழிலகம் பற்றிய சிறு குறிப்புகள்.

2)தேவையான மொத்த முதலீடு (பணமாக)

3)மொத்த முதலீட்டில் விண்ணப்பதாரர் செலுத்தக்கூடிய தொகை.

4)வணிகம் / தொழில் செய்யும் இடம் (முகவரி).

5)இடம் சொந்தமானதா அல்லது வாடகையா குறிப்பிட வேண்டும்.

6)வாடகை இடமெனில் அதற்கான மாத வாடகை மற்றும் செலுத்தும் முன்பண விவரம்.

7)வணிகத்தில் / தொழிலில் பெற்றுள்ள அனுபவம் மற்றும் அதற்கான சான்று.

8)வணிகம் / தொழிலுக்காக கிடைக்கும் பிற கடன்கள்.

9)விண்ணப்பதாரரின் சொத்து மற்றும் நிலுவையில் உள்ள கடன் விவரங்கள்.

10)கடன் நிலுவையில் இருந்தால் அதற்குச் செலுத்தும் தவணைத்தொகையும் தவணைக்காலமும்.

11) வணிகத்தில் / தொழிலில் இருக்கும் சந்தை வாய்ப்பு.

12) வணிகத்தில் / தொழிலில் சந்தைப் போட்டியாளர்கள் விவரம்.

13) வணிகத்தில் / தொழிலில் முன் அனுபவம் இல்லை. ஆனால் பயிற்சி பெற்றவர் என்றால் அதன் விவரம்.

14) குடும்பத்திலுள்ள அங்கத்தினர் மற்றும் அவர்களின் வருமான விவரம்.

15) மூன்றாம் நபர் கடனுக்காக பொறுப்புறுதி (Third Party Guarantee) தருகிறார் என்றால் அவரின் முகவரி,  கடன் மற்றும் சொத்து விவரம்.

16) கடனுக்காக வழங்கும் பிணையம் (Security), நிலையான சொத்து என்றால் அதன் இருப்பிடம், சந்தை மதிப்பு மற்றும் குறைந்தது 13 ஆண்டுகளுக்கான வில்லங்கச் சான்றிதழ்.

17) பிணையமாக வழங்கும் சொத்தின் உரிமையாளர் இறந்துவிட்டால் இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் ஆகிய ஆவணங்கள்.  விண்ணப்பதாரரே வாரிசு அல்லது வாரிசுகளில் ஒருவர் என்றால் மற்ற வாரிசுகளின் முகவரி, வருமான மற்றும் கடன் விவரம். அவர்கள் பொறுப்புறுதியாளராக இருக்கவேண்டும் என்று வங்கி கேட்கலாம்.

18) பிற வங்கிகளில் விண்ணப்பதாரர் வைத்துள்ள கணக்கு விவரங்கள்.

19 )விண்ணப்பிக்கும் வணிகம் / தொழிலுக்கு அரசுத்துறையில் மானியம் கிடைக்குமென்றால் அதன் விவரம்.

20) வணிகம் / தொழில் நடத்த அரசு / உரிய துறை வழங்கிய அனுமதிச் சான்றிதழ்கள்.

கடன் பெறுவதற்காகத் தயாரிக்கும் திட்ட அறிக்கையில் மேற்குறிப்பிட்ட அனைத்தும் இடம் பெற்றிருந்தால் வங்கியின் பரிசீலனை மிகவும் எளிதாக இருக்கும். எந்த வங்கியைத் தேர்வுசெய்து வணிக / தொழில் கடனுக்கு விண்ணப்பிக்கின்றோமோ அந்த வங்கி வழங்கும் கடன் திட்ட விவரங்களை முதலில் தெரிந்துகொள்வது நல்லது. வங்கியில் அதற்கான கையேடுகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வைத்திருப்பர்.

மேலும் கடன்பெறத் திட்ட அறிக்கை தயாரிக்க பட்டயக் கணக்காளர்கள் அல்லது விற்பனைவரி கணக்கீட்டாளர்கள் ஆகியோரின் உதவியை நாடலாம். சில இடங்களில் வங்கி பணியிலிருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகள் இதற்கென உதவுகின்றனர். விண்ணப்பதாரர் அனைத்து விவரங்களையும் தெளிவாகவும் மிகைப்படுத்தாமலும் எழுதி வங்கியிடம் விண்ணப்பத்துடன் வழங்கவேண்டும். மேலும் எதிர்நோக்கும் குறிப்பிட்ட காலத்தின் மொத்த விற்பனை, லாபமீட்டும் தொகை ஆகியவற்றை சந்தையிலுள்ள அதே துறை சார்ந்த வணிகம் / தொழிலகத்தின் செயல்திறன், விளைவு ஆகியவற்றை அறிந்து அதற்கு ஈடாகக் குறிப்பிடுவது நல்லது.

சிறு மற்றும் நடுத்தர வணிகம் / தொழிலகம் நடத்துவோர் மேற்கொள்ளவேண்டிய முன்பணிகளைக் குறித்துப்  பார்த்தோம். இனி வங்கிகள் வழங்கும் ஒவ்வொரு வணிகம்  / தொழிலகம் சார்ந்த கடன் திட்டங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம். 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • eartheyaa

  ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

 • kerala-fest-beauty-28

  அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

 • isreal-22

  இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

 • ADMK-edappadi-palanisamy

  அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

 • germanysstt1

  ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்