SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

என்னோட Portfolioக்கு நடிகை ஐஸ்வர்யா மாடலிங் பண்ணுனாங்க

2022-12-27@ 17:40:07

நன்றி குங்குமம் தோழி

காஸ்டியூம் டிசைனர் தீபிகா

கடவுள் அவதாரமான காளி தேவியின் அவதாரத்தில் அவர் கோபத்தை  வெளிப்படுத்தியிருக்கிற ‘விசாம்கி’ அவதாரம் எனக்கு ரொம்பவே பிடித்த அவதாரம் என்கிற காஸ்டியூம் டிசைனர் தீபிகா, கோவையில் சிறிய அளவில் ‘விசாம்கி’ என்கிற பெயரில் பொட்டிக் ஒன்றை நடத்தி வருகிறார்.கோபமும் நம்மில் இருக்கும் உணர்வுதானே. நமது கோபத்தில் ஒரு நியாயம் இருந்தால் அதை வெளிப்படுத்துவது தவறில்லை. எந்தவொரு காரணம் நம்மை பின்னுக்கு இழுத்தாலும், பெண்கள் தங்களை வெளிப்படுத்த தயங்கவோ, பயப்படவோ கூடாது என்றவாறு மேலும் நம்மிடம் பேச ஆரம்பித்தார்.

துவக்கத்தில் என் அக்காதான் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். எந்தவொரு விஷயத்துக்கும் அவள் பின்னால் ஒளிந்து நின்று அவளின் கண்கள் வழியாகவே இந்த உலகத்தைப் பார்த்தேன். ஆனால் இப்போது அவள் உயிரோடில்லை. அவளின் இறப்பிற்கு பின் தனிச்சு விடப்பட்ட உணர்வு.சென்னை டி.ஜி. வைஷ்ணவா கல்லூரியில் பி.காம் படித்து, லயோலாவில் எம்.காம். முடித்ததும், வீட்டுக்கு அருகாமையிலே இருந்த ஃபேஷன் டிசைனிங் ஸ்கூலில் என் சின்ன வயதுக் கனவான ஃபேஷன் டிசைனிங் கோர்ஸும் முடித்தேன். பிறகு தொடர்ச்சியாக நிறைய டிராவல் பண்ணியதில் சுற்றி இருப்பதையெல்லாம் உள்வாங்கி, ஒரு தொழில் தொடங்கும் ஆர்வம் ஏற்பட்டது.

கார்மென்ட்  பிஸினஸோடு உடைகளையும் டிசைன் செய்து கொடுப்பது எனக்கு பிடித்தமான வேலையாக இருந்தது. முதலில் கொல்கத்தா, அஸ்ஸாம், ஜெய்ப்பூர், குஜராத் போன்ற மாநிலங்களுக்கு பயணித்து, அங்குள்ள கைத்தறி நெசவாளர்கள் நெய்த துணிகளை மட்டும் வாங்கி வந்து, எனது பொட்டிக்கில் வித்தியாசமான முறையில் வைத்து காட்சிப்படுத்தினேன். என்னோட மெட்டீரியல்ஸ் ரொம்பவே டிரெண்டாய், பார்க்க க்ளாசிக்கா இருக்கும். பிறகு ஒரு டெய்லரிங் யூனிட்டை தொடங்கி, உடைகளையும் நானே டிசைன் செய்து கொடுக்க ஆரம்பித்தேன். கல்லூரிக்குச் செல்லும் பெண்கள், வேலைக்குச் செல்பவர்கள் ரெகுலர் கஷ்டமரானார்கள். அவர்களின் விருப்பத்திற்கு கஸ்டமைஸ்டாக உடைகளை டிசைனிங் செய்து கொடுக்க தொடங்கினேன்.

இயற்கையின் மீதும் எனக்கு ஆர்வம் உண்டு. முதலில் ஃபேஷன் டிசைனிங், பிறகு ஸ்லோவாக பிளான்ட்ஸ் விற்பனையும் இணைப்பது என தொடங்கிய மூன்றே மாதத்தில் கோவிட் நோயால் லாக்டவுன் வந்து, எல்லாம் தலைகீழ் ஆனது. ஆனாலும் மனம் தளரவில்லை. கடையை மட்டும் மூடிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். கொரோனா முடிவுக்கு வந்து, நிலைமை கொஞ்சமாய் சீரானதும், முதலில் செடிகளை உள்ளே கொண்டு வந்து சிறிய அளவில் நர்ஸரி தொடங்கினேன்.

பள்ளிக் குழந்தைகளுக்கு இயற்கையின் தொடர்பை உணர்த்தி, செடி வளர்ப்பில் ஆர்வத்தை தூண்ட, சின்னச்சின்ன வொர்க்  ஷாப்களை என் இடத்தில் அவ்வப்போது நடத்தத்
தொடங்கியதில் கொஞ்சம் கொஞ்சமாக விசாம்கியின் வாடிக்கையாளர்களும் விரிவடைந்தார்கள்.இயற்கையை சேதப்படுத்தாமல், ஹோம்மேடாய் பொருட்களை தயாரித்து திறமையை வெளிப்படுத்தும் பெண்கள், பெண் தொழில்முனைவோரின் தயாரிப்புகளை, காட்சிப்படுத்தவும் எனது கடையில் இடம் உண்டு. காரணம், கஷ்டப்பட்டு முன்னுக்கு வரும் பெண்களை எனக்குப் பிடிக்கும். பெண்களுக்கு பிரச்சனை என்றாலும் என் ஆதரவு முழுமையாய் உண்டு.

அந்த வகையில் நான் காளிதேவிதான் என்றவர், எனது விசாம்கி ஷாப்பினையும் முழுக்க முழுக்க நானே டிசைன் செய்து, இன்டீரியரும் செய்தேன் என, வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் தனது பொட்டிக் ஷாப்பின் உள் மற்றும் வெளி அலங்கார வடிவமைப்புகளை விளக்கினார். கடையை டிசைன் செய்ய முதலில் ஆர்க்கிடெக்சரைத்தான் அழைத்தேன். ஆனால் அதற்கான செலவே அதிகமாக வந்தது. இறுதியாக என்னோட டிரீம் ஸ்டோர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை நானே வரைந்து டிசைன் செய்து, கார்பென்டெர்ஸ் உதவியுடன் என் கனவை நிறைவேற்றிக் கொண்டேன். நான் எதிர்பார்த்ததை  அவர்கள் அழகாக நிறைவேற்றிக் கொடுத்தார்கள். என் கனவு விசாம்கி  இதோ வித்தியாசமாய் அழகாய்  நிமிர்ந்து நிற்கிறாள் என்றவர், காஸ்டியூம் டிசைனராக தான் பணியாற்றியதே இந்த கிரியேட்டிவிட்டியை உருவாக்க காரணம் என்கிறார்.

படிப்பை முடித்து சென்னையில் இருந்த நாட்களில் சினிமா எனக்கு பிடித்த மீடியமாக இருந்தது. ஏதாவது ஒருவிதத்தில் சினிமாவில் என்னை தொடர்புபடுத்த, காஸ்டியூம் டிசைனராகவும் படங்களில் பணியாற்றத் தொடங்கினேன். அப்படி வந்த வாய்ப்புதான் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஐஸ்வர்யா நடித்த பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி போன்ற படங்கள். இதில் நடிகை ஐஸ்வர்யாவின் நட்பு எனக்கு அழுத்தமாகவே கிடைத்தது.எனது திறமையை வெளிப்படுத்தும் முயற்சியாய் துணியில் ஓரிகாமி (Origami) முறையினை புகுத்தி உடைகளை நானே டிசைன் செய்யத் தொடங்கினேன். நிஃப்டில்(NIIFT) ஃபேஷன் டிசைனிங் முடித்த எனது நண்பர் ஒருவரிடத்தில், சில கடினமான ஓரிகாமி டிசைனைக் கற்று துணிகளில் அதனை முயற்சித்தேன்.

இதில் வெள்ளை ஓரிகாமி உடையினை மட்டும் தயாரித்து முழுமையாக முடிக்க 100 மணி நேரம் எடுத்தது. மெஷினை பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க கைகளால் தைத்து தயாரான உடை இது. இந்த உடையினை முழுமையாக முடித்து நிமிர்ந்தபோது, நம்மாலும் எதையும் செய்துவிட முடியும் என்கிற நம்பிக்கை வந்தது. தூரத்தில் இருந்து பார்த்து ஒதுங்கும் அளவுக்கு வாழ்க்கை ஒன்றும் பயங்கரம் கிடையாது என்கிற அந்த நம்பிக்கைதான் என்னை பொட்டிக் ஷாப்பை வியந்து பார்க்கும் அளவுக்கு டிசைன் செய்யத் தூண்டியது என்கிறார்.

ஓரிகாமில் கருப்பு வண்ணத்தில் நான் தயாரித்த க்யூட்டி கேட்சர் (cootie catcher) உடையும், வெள்ளை வண்ணத்தில் நான் தயாரித்த வாட்டர்பாம் (water bomb) உடையும் நடிகை ஐஸ்வர்யாவுக்கு ரொம்பவும் பிடித்துப்போக, அவராகவே முன்வந்து என் கெரியருக்கான ஃபோர்ட் ஃபோலியோவிற்காக, ஓரிகாமி உடைகளை அணிந்து ஆல்பத்திற்கு போஸ் கொடுத்தார்.

சினிமாவிற்காக  வேலை பார்த்த நாட்களில் ஏற்பட்ட ஒருசில கசப்பான அனுபவங்களை அசை போட்டவராய் மேலே தொடர்ந்தவர்... சூழல் என்னை சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு மெல்ல நகர்த்தியது. கோவை வந்த பிறகே சொந்த முயற்சியில் டிசைனர் ஷாப்பினை ஆரம்பித்து என் பொட்டிக்கை டிசைன் பண்ணி, திறப்பு விழாவெல்லாம் முடித்து திரும்பிப் பார்த்தால் ‘தீபு நீயா இதையெல்லாம் தனியா நின்னு செய்த’ என்கிற மாதிரி நானே எனக்குள் கேட்டுக் கொண்டேன் என்றவர், என்னை என்றைக்கு நான் நம்ப ஆரம்பித்தேனோ, அதன் பிறகே என்னாலும் நிறைய விஷயங்களை தனியாக செய்ய முடியும் என்கிற நம்பிக்கை வந்தது. அந்த பிளெஷ்ஷர் பிடித்திருக்கிறது என்கிறார் புன்னகைத்து.

பெங்களூரில் இருந்து என் கணவர் என்னைப் பெண் பார்க்க வந்தபோது, “நான் சொந்தமாக கார்மென்ட்ஸ் டிசைனிங் ஷாப் ஒன்றை நடத்தி வருகிறேன். திருமணம் முடிந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக பெங்களூருக்கு எனது தொழிலை ஷிஃப்ட் செய்கிறேன்” என அவரிடத்தில் சொல்லியிருந்தேன். என் கடையையும், என்னுடைய கிரியேட்டிவிட்டியையும் பார்த்தவர்,
“இத்தனை அழகாக பார்த்துப் பார்த்து டிசைன் செய்த ஒரு கடையை மூடிவிட்டு நீ என்னோடு வந்து பெங்களூரில் செட்டிலாகிவிடு என்று நான் சொன்னால் அது ரொம்பவே தப்பு. உனக்கான கெரியரில் நீ போ. உனக்கு ஹேப்பியானதைச் செய். அதற்கு நான் துணையாக வருவேன்” என்றார். எங்கள் ரிலேஷன்ஷிப் அழகாகப் போகிறது...

புன்னகைக்கிறார்!! “ஆண்கள் தப்பு செய்தால், பெண்கள் அட்ஜெஸ்ட் செய்து போகணும், அட்ஜெஸ்ட் செய்து வாழணும் என்பதெல்லாம் அவசியமே இல்லை. என் பையனே தப்பு செய்தாலும் நீ கேள்வி கேளு... பெண்கள் எப்பவும் யாரையும் சார்ந்து வாழக் கூடாது. சொந்தக்காலில் நிற்கணும். உனது வருமானத்தை உன் பாதுகாப்புக்குன்னு சேர்த்து பத்திரமா வச்சுக்கோ...” என சில விஷயங்களை எனக்கு ரொம்பவே அழகாக விளக்கிய அரசு ஊழியரான எனது மாமியாரும் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்.

தப்பு செய்கிற மகன்களை கேள்வி கேட்டாலே, எந்த ஆணும் பெண்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள். தப்பு செய்வது மகனாக இருந்தாலும் சட்டையை புடிக்கணும்... அந்த வகையில் எல்லா அம்மாக்களுமே காளி தேவி மாதிரி இருக்கணும். ஒவ்வொரு அம்மாவும் இதை தங்கள் வீட்டில் இருந்து தொடங்கணும்... அழுத்தமாகவே பதிவு செய்து விடைபெற்றார்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்