SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேங்காய் ஓட்டில் டாலர், கீ செயின்!

2022-12-19@ 17:29:25

நன்றி குங்குமம் தோழி

நமது சுற்றுப்புற சூழலில் கிடைக்கிற பொருட்களிலிருந்தே அழகான கைவினைப் பொருட்களை தயாரிக்கலாம். அப்படியான ஒன்றுதான் தேங்காய் ஓடுகளிலிருந்து தயாரிக்கப்
படும் அணிகலன்கள். இதனை கழுத்தில் அணியும் செயினின் டாலராகவும் மற்றும் கீசெயினிலும் மாற்றிக்கொள்ளலாம். இதனை அழகாகவும் நேரத்தியாகவும் தேங்காய் ஓடுகளில் இருந்து உருவாக்கி வருகிறார் முத்துராஜ்.

ராஜபாளையத்தை சேர்ந்த இவர் இளநீரை குடித்து விட்டு தூக்கி வீசும் தேங்காய் ஓடுகளை எடுத்து அதனை பக்குவப்படுத்தி அழகான கைவினைப் பொருட்களாக மாற்றி வருகிறார். சாவிகளில் மாட்டும் செயின்கள், கழுத்தில் அணியும் செயினில் டாலர்கள், போட்டோ பிரேம்கள், பென்சில் பேனா வைக்க பயன்படுத்தப்படும் ஸ்டாண்டுகள், பரிசுப் பொருட்கள் என பல விதமான கைவினைப் பொருட்களை தேங்காய் சிரட்டையில் செய்து, ‘தெங்கம் கிராஃப்ட்ஸ்’ என்று சமூக வலைத்தளத்தில் விற்பனை செய்து வருகிறார். முழு நேரமாக இந்த வேலையை செய்து வருபவர் இப்படியொரு எண்ணம் ஏற்பட காரணம் குறித்து அவரே விவரித்தார்.

‘‘ராஜபாளையம் அருகே உள்ள புணல்வெளி கிராமம் தான் என்னோட சொந்த ஊர். நான் நல்லா படிப்பேன். ஆனால் என்ன படிக்கணும்ன்னு எனக்கு சொல்லித்தர யாரும் கிடையாது. அதனால் நானே எனக்கான வாழ்க்கையை அமைச்சுக்கணும்னு முடிவு செய்து பொறியியல் படிப்பினை தேர்வு செய்தேன். படிப்பு முடிச்ச கையோட நல்ல சம்பளத்தில் எனக்கு வேலையும் கிடைச்சது. ஒரு வருஷம் வேலைக்கும் போனேன். கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து தினமும் ஒரே வேலையை செய்வது போன்ற உணர்வு இருந்தது. இயந்திர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோமோன்னு எண்ணம் ஏற்பட்டது. இந்த துறையில் மேலும் கற்றுக்கொள்ள ஒன்றுமே இல்லையேன்னு தோணுச்சு.

எனக்கு புதுசு புதுசா ஏதாவது செய்யணும். அதனால் தான் பொறியில் துறையை தேர்வு செய்தேன். இந்த துறையில் என்னுடைய கிரியேட்டிவிட்டியை பயன்படுத்தலாம்ன்னு நினைச்சேன். ஆனால் நான் நினைச்சது போலஅந்த துறை இல்லை என்பது அந்த ஒரு வருடத்தில் புரிந்துகொண்டேன். அந்த எண்ணம்தான் எனக்கான ஒரு தேடலை உருவாக்கியது. எனக்கு நான் பார்த்துக் கொண்டிருந்த வேலை மேல் ெபரிய அளவில் ஈடுபாடு இல்லைன்னு என் பெற்றோரும் புரிந்து கொண்டாங்க. அதனால அரசு வேலைக்கு படிக்கிறியான்னு கேட்டாங்க. மறுபடியும் இதே போன்ற ஒரு இயந்திர வாழ்க்கைக்குள் சிக்கிக்கொள்ேவாமானு எனக்குள் ஒரு தயக்கம் இருந்தது.

இருந்தாலும் படிக்கலாம்னு முடிவு செய்து, தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்றேன். அரசு தேர்வுகளுக்கு படிக்கும் போது தான் எனக்கு  நம்மாழ்வார் ஐயா அவர்களின் அறிமுகம் கிடைச்சது. அவர் சொன்ன விஷயங்கள் அவரோட வாழ்க்கை முறையெல்லாம் என்னை ரொம்ப ஈர்த்தது. அவரைப் பத்தி தேடி தேடி படிச்சேன். உடனே அவரோட வானகத்துக்கு போகவேண்டும்னு முடிவு செய்தேன். காரணம், என்னுடைய தேடலுக்கான விடை அங்குள்ளதாக என் ஆழ்மனதில் ஒரு உணர்வு ஏற்பட்டது.

உடனே அவரின் வானகத்திற்கு கிளம்பினேன். அங்கு தங்கியிருந்து இயற்கை விவசாயம் கற்றுக் கொண்டேன். மேலும் இயற்கையோட எப்படி இணைந்து வாழணும்னு அங்க போன பிறகு தான் எனக்கு புரிந்தது. அந்த வாழ்க்கை முறை எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. அந்த சமயத்தில் அங்குள்ள மாணவர்கள் எல்லாரும் ஒரு டாலர் செயினை அணிந்திருந்தாங்க. வட்டமாக இருந்த அந்த டாலரை செயின் மற்றும் கயிற்றில் இணைத்திருந்தாங்க. பார்க்க அழகாகவும், கண்களை ஈர்க்கும் வண்ணம் இருந்தது.

என்ன என்று கேட்ட போது, தேங்காய் ஓடுகளில் செய்த டாலர்னு சொன்னாங்க. மேலும் தேங்காய் ஓடுகளில் பல விதமான கைவினைப் பொருட்களை செய்யலாம்ன்னு சொன்னாங்க. அது குறித்த பயிற்சி அங்கு ஒருத்தர் அளித்து வருவதாகவும் கூறினார்கள். எனக்கு அவர்கள் சொன்னதை கேட்ட போது ரொம்பவே ஆச்சரியமா இருந்தது. முத்தின தேங்காய் ஓட்டின் மேல் இருக்கும் நார்களை நீக்கும் அளவிற்கு தேய்த்தால் அது கருப்பான ஓடா மாறும். அதைக் கொண்டு பலவிதமான கைவினைப் பொருட்களை செய்ய முடியும்னு தெரிந்து கொண்டேன். மேலும் அங்கு இயற்கையாக கிடைக்கக் கூடிய பொருள்களை எப்படி கலை தன்மையாக மாற்ற முடியும்னு பயிற்சியும் நடைபெறுவதை தெரிந்துகொண்டேன்’’ என்றவர் அதற்கு பின் இந்தத் தொழிலில் முழுமையாக ஈடுபட ஆரம்பித்துள்ளார்.

‘‘நான் வானகத்திலேயே தங்கி சின்ன சின்ன வேலைகளை ஒரு சேவையாத்தான் செய்து வந்தேன். அப்போது தான் தேங்காய் ஓட்டு கைவினைப் பொருட்கள் பற்றி கேள்விப்பட்டேன். அதை செய்தால் என்னன்னு தோன்றியது. உடனே நான் அதற்கான பொருட்களை வாங்கினேன். எனக்கு சின்ன வயசுல இருந்தே நல்லா வரைய வரும். அது எனக்கு இதனை ஒரு தொழிலாக அமைக்க முடியும்ன்னு தைரியத்தை கொடுத்தது. அதே சமயம் எனக்கு ஒரே மாதிரியான வேலைகளையும் செய்ய பிடிக்காது.

இந்த இளநீர் ஓடு புதுசா, ஒரு தனித்தன்மையான வேலையாக இருக்கும்னு தோன்றியது. பொதுவாக தேங்காய் ஓடுகளால் செய்யப்படும் பொருட்கள் அனைத்துக்கும் முற்றிய தேங்காய் ஓட்டைதான் பயன்படுத்துனாங்க. ஆனா, நான் ஒரு மாற்றாக இளநீர் ஓடு கொண்டு பொருட்களை செய்ய ஆரம்பிச்சேன். இளநீர் ஓடு தேங்காய் ஓடு போல் கருப்பாக இருக்காது. வெள்ளை நிறத்தில் இருக்கும். அதனால் தேங்காய் ஓடு மற்றும் இளநீர் ஓடு இரண்டையும் கொண்டு உருவங்கள் மற்றும் எழுத்துக்களை வடிவமைச்சேன். ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டமா இருந்தது. புதுசா ஒன்னு கண்டுபிடிச்சா என்ன மாதிரியான தோல்விகள் ஏற்படுமோ அப்படி தான் எனக்கு நடந்தது.

எல்லாத்தையும் தாண்டி என்னோட கற்பனையில இருந்த ஓவியத்தை அந்த ஓடுகள்ல கொண்டு வந்தேன்’’ என்றவர் எப்படி இதை தொழிலாக மாற்றினார் என்பதை சொல்ல ஆரம்பித்தார், ‘‘தெருவோரங்களில் இருக்கும் இளநீர் கடைகளுக்கு சென்று அவங்களிடமிருந்து இளநீர் ஓடுகளை வாங்கி வருவேன். ஓட்டில் என்ன உருவத்தை கொண்டு வரப்போகிறோம்னு முடிவு செய்வேன். அதை அப்படியே ஒரு காகிதத்தில் வரைந்து கொள்வேன். அதற்கு ஏற்ற ஓட்டினை தேர்வு செய்து, அதன் மேல் வரைந்த ஓவியத்தை ஒட்டி அதன் வடிவத்திற்கு ஏற்ப வெட்டிக் கொள்வேன். அதன் பிறகு அதை நன்கு தேய்த்து, மேல் இருக்கும் நார்களை நீக்கி கம்பியால், நான் வரைந்த உருவத்தை மட்டும் தனியாக வெட்டி எடுப்பேன். முத்தின தேங்காய் ஓட்டில் நான் தயார் செய்திருக்கும் உருவத்தை வைத்து சேர்த்து ஒட்டிடுவேன். இப்படித்தான் ஒரு பொருளை உருவாக்குறேன்.

இதில் முக்கியமானது தேங்காய் ஓட்டினை என்னுடைய டிசைனிற்கு ஏற்ற பக்குவத்திற்கு கொண்டு வருவது தான். இதுவரை 400 வகையான கைவினைப் பொருட்களை செய்துள்ளேன். ஒரு பொருள் செய்து முடிக்க குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாகும். வாடிக்கையாளர்கள் விரும்பும் டிசைன்களையும் வடிவமைத்து தருகிறேன். மழை வெயில் பட்டாலும் குறைந்த பட்சம் இரண்டு வருடங்கள் அப்படியே இருக்கும்.

செயின் டாலர் மட்டுமில்லாமல் சோப்பு டப்பா, டீ கப்கள், அகப்பை, சாம்பிராணி வைக்கக்கூடிய ஸ்டாண்டு, பெயர் பலகைகள் என பல விதமான பொருட்களை தேங்காய் ஓடுகளில் உருவாக்கலாம். தற்போது சமூக வலைத்தளங்களில் மட்டுமே நான் செய்யும் பொருள்களை விற்று வருகிறேன். என்னுடைய எண்ணமெல்லாம் முடிந்தளவு இயற்கையில் கிடைக்கும் பொருள்களை பயன்படுத்தி மக்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்களாக உருவாக்க வேண்டும். அப்போதுதான் நாம் இயற்கையோடு இணைந்து வாழ்கிறோம் என்று பொருள்’’ என்கிறார் முத்துராஜ்.   

தொகுப்பு: மா.வினோத்குமார்

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்