தோல் பைகளுக்கு தனிப்பட்ட பிராண்ட் உருவாக்கணும்!
2022-12-19@ 17:18:31

நன்றி குங்குமம் தோழி
‘‘எந்த தொழிலை செய்தாலும் அதில் தனக்கென தனித்த அடையாளத்தை உருவாக்கி பயணித்தால் கண்டிப்பாக அந்த தொழிலில் எவ்வளவு போட்டிகள் வந்தாலும், சமாளித்து நீண்ட காலம் நீடித்து இருக்க முடியும்’’ என்கிறார் சுவாதி. சேலத்தை சேர்ந்த சுவாதி தோலினால் ஆன பைகளை தயாரித்து சமூக வலைத்தளங்களில் விற்பனை செய்து வருகிறார்.
தோல் பைகளை விற்பனை செய்வது மட்டுமில்லாமல் இண்டீரியர் டிசைனிங் வேலையிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார் சுவாதி. ‘‘எனக்கு சின்ன வயசுல இருந்தே சொந்தமா ஏதாவது தொழில் செய்யணும்ன்னு தான் விருப்பமாக இருந்தது. அதனால படிக்கும் போதே என்ன மாதிரியான தொழில் பண்ணப் போறமோ அது சார்ந்து படிக்கணும்னு முடிவு எடுத்து படிச்சேன். என்னோட குடும்பத்துலயும் எல்லோரும் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்தாங்க. அவங்களப் போல எனக்கு ஒருவரிடம் வேலைப் பார்க்க விருப்பமில்லை.
அதனால் சொந்தமா தொழில் செய்யணும்ன்னு ஆசை வந்தது. அதுக்காக நான் பொறியியல் படிப்பில் லெதர் துறையை தேர்வு செய்து படிச்சேன். படிச்சதும் ஒரு வருஷம் வேலை அடுத்து கல்யாணம். என் கணவரிடம் தொழில் துவங்கணும் என்ற என் ஆசையை சொன்னேன். அவர் சரின்னு சொன்னது மட்டுமில்லாமல் என்னுடன் இணைந்து என்னுடைய தொழிலில் உறுதுணையா இருந்தார். அவரும் தொழிலில் இணைந்ததால், நாங்க இருவரும் சேர்ந்து இண்டீரியர் டிசைன் தொழிலை தேர்வு செய்தோம்.
காரணம் சேலத்தில் இது சார்ந்த கம்பெனிகள் அதிகமா இல்லை. அதனால் எங்களுக்கு அதற்கான வாய்ப்பு இருக்கும்ன்னு முடிவு செய்து அந்த துறையில் முழுமையாக செயல்பட ஆரம்பித்தோம். ஆரம்பத்தில் எங்களுக்கு அந்த தொழில் ரொம்ப சவாலா இருந்தது. நாங்க கொடுத்த டிசைன்களை விட மக்களோட கற்பனை வேறு விதமாக இருந்ததுதான் காரணம், இப்போது சமூக வலைத்தளம் பரந்து விரிந்திருப்பதால், மக்கள் அதில் பல விஷயங்களை தெரிந்து கொள்றாங்க.
மேலும், அவர்கள் நிறைய இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள ஆரம்பிச்சிட்டாங்க. பலவிதமான வீடுகள், அதில் உள்ள உள்ளலங்காரங்கள் எல்லாவற்றையும் பார்க்கிறாங்க. அது போல் இல்லாமல் புதுமையா இருக்கணும்ன்னு விரும்புறாங்க. நாங்களும் அவங்க கற்பனைக்கு ஏற்ற டிசைன்களை காண்பித்தால் தான் திருப்தி அடைவார்கள்னு புரிந்து கொண்டோம். அதனால் இந்த துறை சார்ந்து நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளணும்னு டிசைன்கள் சம்பந்தமா படிக்க ஆரம்பிச்சேன்.
இண்டீரியர் டிசைன்கள் பற்றி படிச்சாலும் ஆரம்பத்துல சின்ன வேலைகளை மட்டும் தான் எடுத்து செய்தோம். முதலில் வீட்டுக்கான லைட்டிங் வேலைகளை மட்டும் செய்து கொடுத்தோம். எந்த இடத்தில் லைட் வைக்க வேண்டும், எந்த மாதிரியான வண்ணங்களில் விளக்குகளை அலங்கரிக்க வேண்டும், எந்த கோணத்தில் விளக்குகள் வைத்தால் அழகாக இருக்கும் என்பதையெல்லாம் வாடிக்கையாளர்களுக்கு செய்து கொடுத்தேன். என்னுடைய ஐடியாக்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்தது. எனக்கும் ஆர்டர்கள் வரத் தொடங்கின. சில நாள்கள் கழித்து மற்ற டிசைன்கள் பற்றி படித்து தெரிந்து கொண்டு அதனுடன் என்னுடைய கற்பனைகளையும் கலந்து செய்து கொடுத்தேன். இப்படி ஒரு வீட்டிற்கு தேவையான மொத்த இண்டீரியர் டிசைன்களையும் கற்றுக் கொண்டு நானே செய்து கொடுக்க ஆரம்பித்தேன்.
பொதுவாகவே எனக்கு ஒரே வேலையை தினமும் செய்தால் பிடிக்காது. ஒரு வேலையை செய்வதற்காக இன்னொருவர் வரும் வரை காத்திருக்கவும் மாட்டேன். இந்த மாதிரியான எண்ணங்கள்தான் என்னை தோல்பை குறித்த தொழில் தொடங்க காரணமாகவும் இருந்தது. இண்டீரியர் டிசைன்களை கற்றுக் கொண்ட பின்னர் வாடிக்கையாளர்கள் கேட்கும் டிசைன்களை நானே உருவாக்கவும் செய்தேன். இதில் முக்கியமானது டிசைன்களை கற்றுக் கொண்டு மட்டுமே நாம் ஒரு வேலையை செய்ய முடியாது. வாடிக்கையாளர்களின் மனங்களை புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்றவாறு டிசைன்களை உருவாக்கவும் வேண்டும்.
வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பையும் என்னுடைய கற்பனையையும் இணைத்து நானே ஒரு டிசைனை உருவாக்குவேன். புதுப்புது டிசைன்கள் என 2 வருட கடும் உழைப்புக்கு பின்னால் சொந்தமாக ஒரு மரச்சாமான்கள் வடிவமைக்கும் நிறுவனத்தை தொடங்கினோம். அதன் மூலம் ஆர்டர்கள் எடுத்து பல வித டிசைன்களில் மரச்சாமான் ெபாருட்களை செய்து கொடுத்தோம். டிசைன் வேலைகளை நான் கவனித்து கொண்டேன். ஆர்டர் எடுப்பது வெளி வேலைகளை என் கணவர் பார்த்துக் கொண்டார். அதன் பிறகு சேலம் மட்டுமில்லாமல் வெளிமாவட்டங்களுக்கும் நாங்க இண்டீரியர் செய்ய ஆரம்பித்தோம்’’ என்றவர் தான் நேரடியாக பயின்ற துறை சார்ந்து ஒரு தொழிலை செய்ய வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட தோல் பைகள் சார்ந்த தொழிலை துவங்கியுள்ளார்.
‘‘ஒரு தொழிலை தொடங்கும் முன் அந்த தொழில் சார்ந்து நாம் தெரிந்து வைத்திருப்பது அவசியம். படிப்பு முடிச்சதும் அது சார்ந்த தொழிலில் நான் வேலைப் பார்க்கவில்லை என்பதால் அது குறித்த ஆய்வில் ஈடுபட்டேன். இந்தியாவில் குறிப்பாக தோலினால் மட்டுமே செய்யக்கூடிய பொருள்கள் கிடைப்பது மிகவும் குறைவு. அப்படி கிடைத்தாலும் அது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படக்கூடியதாக இருக்கிறது.
விலையும் அதிகம். முக்கியமான சில பிராண்டு நிறுவனங்கள் மட்டுமே தோலினால் செய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்கின்றன. தோலினால் ஆன பொருள்களுக்கு என இந்தியாவில் சந்தை இருக்கு. அதை மனதில் கொண்டு புதிய டிசைன்களில், பல விதங்களில் தோல் பைகளை வடிவமைச்சு, தயாரிக்கவும் செய்தோம். நான் அது சார்ந்து படித்து இருந்ததால் தோல் பைகளை தயாரிப்பதற்கான பொருள்களை எங்கு வாங்க வேண்டும் என்று எனக்கு தெரியும். மேலும், நாங்களே டிசைன் செய்து தயாரிக்கவும் செய்வதால் நேரம் மற்றும் தரம் இரண்டையும் கவனித்து வேலைகளை செய்தோம்.
தோல் பைகளில் முக்கியமானது அதில் சேர்க்கப்படும் வண்ணங்களை கையாள்வதை வைத்து தான் அதன் விற்பனையும் அமையும். மக்களை கவரக்கூடிய வண்ணங்களில் பைகளை உருவாக்கினேன். நான் உருவாக்கி இருக்கும் தோல் பைகளை வேறு எந்த நிறுவனத்திடமும் பார்க்க முடியாது. பெரிய பைகளில் ஏதாவது ஒரு சின்ன பொருள் மாட்டிக் கொண்டால், அதை தேடுவது சிரமமாக இருக்கும்.
அதனால் என்னுடைய பைகளில் ஒரு சின்ன லைட்டினை பொருத்தி இருக்கேன். இந்த மாதிரி தனித்த வகையிலான தோல் பைகளை உருவாக்கியிருக்கிறேன். தற்போது நான் உருவாக்கியிருக்கும் தோல் பைகளை சமூக வலைத்தளங்களில் விற்பனை செய்து வருகிறேன். தோல் பைகளுக்கென தனித்த ஒரு பிராண்டினை இந்தியாவில் உருவாக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கனவு’’ என தன்னம்பிக்கையோடு சொல்கிறார் சுவாதி.
தொகுப்பு: மா.வினோத்குமார்
மேலும் செய்திகள்
மனதை மயக்கும் மணப்பெண் ப்ளவுஸ்கள்!
சிந்தடிக் ஷிபான் டிசைனர் புடவைகள் என்னுடைய சாய்ஸ் கிடையாது!
வசீகர தோற்றத்திற்கு 3டி ஃபிரேம்கள்
சினிமா முதல் காதுகுத்து வரை... வந்தாச்சு கஸ்டமைஸ்ட் உடைகள்!
என்னோட Portfolioக்கு நடிகை ஐஸ்வர்யா மாடலிங் பண்ணுனாங்க
காஞ்சிபுரம் பனாரஸ் பட்டில் குழந்தைகளுக்கான பாரம்பரிய ஃபேஷன் உடைகள்!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி