SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிச்சன் டிப்ஸ்

2022-12-15@ 17:24:07

நன்றி குங்குமம் தோழி

தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ள ஊறுகாயைத்தவிர வேறெதுவும் பொருத்தமாக இருக்காது. அது சம்பந்தமான சில டிப்ஸ்...

*எந்த வகை ஊறுகாய் என்றாலும் அதில் கடுகெண்ணெய் சேர்த்தால் கெட்டுப்போகாது.

*ஊறுகாய் ஜாடியில் கொதிக்கும் எண்ணெயில் நனைந்த துணியால் உட்புறத்தை துடைத்து விட்டு, பிறகு ஊறுகாய்களைப் போட்டு வைத்தால் பூசணம் பிடிக்காது.

*ஊறுகாய்க்குத் தாளிக்கும்போது, சிறிது எள்ளை வறுத்து பொடித்துச் சேர்த்தால் மணம் கூடும். கெட்டும் போகாது.

*ஊறுகாய்களை, கண்ணாடி பாட்டில், பீங்கான் ஜாடிகளில் போட்டு வைத்தால் கெடாமல் இருக்கும். எவர்சில்வர், பிளாஸ்டிக் பாத்திரங்களில் வைக்கக் கூடாது. ஊறுகாயும் கெட்டு, பாத்திரங்களும் கெட்டு விடும்.

- ஆர். பத்மப்ரியா, திருச்சி.

*தேங்காய் பர்பி செய்யும்போது சர்க்கரையைப் பொடித்துச் சேர்த்தால், வெண்மையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

*பூந்தி செய்யும்போது ஜாரிணியில் (துளைக்கரண்டி) மாவை வாணலிக்கு அருகில் வைத்துத் தேய்த்தால் முத்து முத்தாக விழும்.

*கேசரி, அல்வா, ஜிலேபி போன்றவற்றில்  கேரட் சாறு சேர்த்தால் நிறம் அழகாக இருக்கும். சுவை கூடும். உடம்புக்கும் நல்லது.

- எஸ். ராஜம், ஸ்ரீ ரங்கம்.

*மைதா மாவுடன் ரவை கலந்து தோசை வார்க்கும்போது உருளைக் கிழங்கு, கேரட், வெள்ளரிக் காய் இவற்றைத் துருவிப் போட்டு வார்த்தால் டேஸ்ட்டாக இருக்கும்.

*வேகவைத்த முட்டையின் ஓடு எடுக்க வரவில்லையா? முட்டையின் ஏதோ ஒரு இடத்தில் ஓட்டை அகற்றி, பிறகு குளிர்ந்த தண்ணீரில் போட்டு எடுத்து, அகற்றினால் சுலபமாக ஓடு அகன்றுவிடும்.

*முட்டைக் கோஸின் கணமான தோலை தூக்கிப் போட்டு விடாமல் பஜ்ஜி மாவில் தோய்த்து பஜ்ஜி செய்தால் சூப்பராக இருக்கும்.

*மிளகை வறுத்துப் பொடி செய்து குழந்தைகளுக்கு பருப்பு சாதத்தில் ஒரு சிட்டிகை கலந்து ஊட்டினால் வயிறு மப்பு தட்டாது. மிளகு ரசத்தை விட இதில் பலன் அதிகம்.

- எம்.ஏ. நிவேதா, அசூர்.

*முந்திரிப்பருப்பு போட வேண்டிய இடங்களிலெல்லாம் வேர்க்கடலையை பயன்படுத்தினால் சுவை வித்தியாசமாக இருப்பதோடு சத்தும் கூடும்.

*குடிக்கும் காபியிலே கொஞ்சம் சுக்கு பொடியை சேர்த்தால் சுவை வித்தியாசமாக இருப்பதோடு குளிர்காலத்தில் உடலுக்கு மிகவும் நல்லது.

*புளிக்கு பதிலாக எலுமிச்சை பழ சாற்றை பயன்படுத்தினால் புளியால் வரும் கெடுதல் நீங்கி விடும்.

- நா.பாப்பாநாராயணன், திருநெல்வேலி.

*அடை மீந்து போய்விட்டால், கொஞ்சம் கெட்டியாகிவிடும். அதை தூற எறியாமல் விருப்பமான வடிவில் வெட்டி பஜ்ஜி மாவில் நினைத்து பஜ்ஜியாக எண்ணெயில் பொரித்து, மாலை நேர ஸ்நாக்ஸாக தரலாம்.

- தாரா மணிவண்ணன், கோவை.

*நறுக்கிய வெங்காய துண்டுகளை வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கி பிறகு மாவில் தோய்த்தெடுத்தால் வெங்காய பஜ்ஜி கூடுதல் சுவையுடன் இருக்கும்.

*மிக்ஸியில் மாவு அரைக்கும் போது அது சூடாகி விடாமல் தவிர்க்க மாவில் சிறிது ஐஸ் வாட்டர் கலந்து அரைக்கலாம்.

*அடைக்கு அரைக்கும்போது மிளகாய் வத்தல் போட்டு அரைத்து, பின் ஒரு பச்சை மிளகாய் நறுக்கிப் போட்டால் நல்ல வாசனையாய் இருக்கும்.

- அனிதா நரசிம்மராஜ், மதுரை.

*பட்டாணி சுண்டலுக்கு வேக வைக்கும்போது 1 டீஸ்பூன் நல்லெண்ணெய், 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து வேக வைத்தால் சுவையும், மணமும் அதிகரிக்கும்.

*எந்த வகை சுண்டல் செய்தாலும் தனியா, வரமிளகாய், கடலைபருப்பு, பெருங்காயத்தை தலா 2 டீஸ்பூன் எடுத்து வறுத்து, பின் இறுதியில் கசகசா, விருப்பமெனில் சோம்பு 1 டீஸ்பூன் சேர்த்து பொடித்து, இந்த பொடியை தூவி இறக்க மணம், ருசி அதிகரிக்கும்.

*சிறுதானிய அவல் கொண்டு மிக்ஸர், இனிப்பு உருண்டை செய்து வைத்துக் கொள்ள, பசிக்கும் போது எல்லாம் கை கொடுக்கும்.

- மகாலஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.

பனை ஓலை கொழுக்கட்டை

தேவையானவை:

நறுக்கிய பனை ஓலை - 15 துண்டுகள்,
அரிசி மாவு - 1 கப்,
துருவிய தேங்காய் - 1/2 கப்,
பாசிப்பருப்பு - 1/4 கப்,
ஏலக்காய் பொடி - 1/2 ஸ்பூன்,
வெல்லம் அல்லது கருப்பட்டி - 3/4 கப்,
தண்ணீர் - 1 கப்,
சுக்கு பொடி - 1/2 ஸ்பூன்.

செய்முறை:

பச்சரிசியை ஊறவைத்து நன்றாக களைந்து நிழலில் உலர்த்தி மிக்ஸியில் மாவாக்கிக் கொள்ளவும். பனை இலைகளை சுத்தம் செய்து 4 அங்குலம் நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், துருவிய தேங்காயை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். பிறகு பாசிப்பருப்பை வாசம் வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் அரைத்த மாவு, ஏலக்காய் தூள், சுக்கு பொடி, தேங்காய் துருவல், பாசிப்பருப்பு ஆகியவற்றை போட்டு கலந்து கொள்ளவும். கருப்பட்டி அல்லது வெல்லத்தை  இளம்பாகு பதத்தில் காய்ச்சி, வடிகட்டி மாவுடன் கெட்டியாக பிசையவும். அந்த மாவை ஓலையின் இடையில் வைத்து மடக்கி, ஓலை நார் கொண்டு கட்டி வைக்க வேண்டும். மொத்த மாவையும் இவ்வாறு செய்த பிறகு ஒரு இட்லி பானையில் வைத்து, 20 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். சுவை, மணம் நிறைந்த சத்தான பனை ஓலை கொழுக்கட்டை தயார்.

- சௌமியா சுப்ரமணியன். சென்னை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்