SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஞ்சிபுரம் பனாரஸ் பட்டில் குழந்தைகளுக்கான பாரம்பரிய ஃபேஷன் உடைகள்!

2022-12-13@ 17:58:29

நன்றி குங்குமம் தோழி

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் மோனிஷா பழனிச்சாமி. எம்.பி.ஏ படித்திருக்கும் இவர், தனியார் நிறுவனங்களில் பல துறையில் வேலை பார்த்தும், அந்த வேலைகள் எதுவுமே அவருக்கு மன நிறைவை கொடுக்கவில்லை. எப்போதுமே சுயமாக ஒரு தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அவருக்குள் இருந்து வந்தது. இந்த ஆசையை நிறைவேற்ற பல முயற்சிகள் எடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில், ஒரு நாள் தன் அம்மா செய்யும் தையல் வேலைப்பாடுகளைப் பார்த்தவர் குழந்தைகளுக்கான ஒரு ஃபேஷன் பிராண்ட் ஆரம்பிக்க எண்ணினார். நினைத்ததை உடனே செயல்படுத்த வேண்டும் என்ற முடிவுடன், சமூக வலைத்தலங்களில் ஒரு ஃபேஷன் பக்கத்தை ஆரம்பித்து, தன் சுய தொழிலை தொடங்கி உள்ளார்.

‘‘இந்தாண்டு மார்ச் மாதம் தான் ‘அமுதம் ஃபேஷன்ஸ்’ ஆரம்பித்தேன். இதற்காக நான் பல நாட்கள் எல்லாம் ஆய்வு செய்யவில்லை. சமூக வலைத்தளத்தில் என் அம்மா ஏற்கனவே வடிவமைத்து வைத்திருந்த உடைகளின் புகைப்படங்களை அதில் பதிவு செய்து என்னுடைய ஃபேஷன் துறையை ஒரே நாளில் ஆரம்பிச்சேன். என் தாத்தா, அப்பா எல்லோரும் டெக்ஸ்டைல் பிசினஸில்தான் ஈடுபட்டு இருந்தனர். என்னுடைய அம்மா முப்பது வருடங்களாக தையல் துறையில் இருக்கிறார். பல ஆடைகளை வடிவமைத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தையல் குறித்த பயிற்சியும் அளித்து வருகிறார். பலர் அம்மாவிடம் தையல் பயிற்சி எடுத்திருந்தாலும், நான் அவரிடம் முறையாக தையல் கற்கவில்லை.

ஆனால் அவர் தைக்கும் உடைகள் மற்றும் டிசைன்களைப் பார்த்து வளர்ந்ததால், எனக்கு அந்த கலை மேல் தனிப்பட்ட ஆர்வம் இருந்தது மட்டுமில்லாமல் அந்த துறை குறித்த விஷயங்களை அம்மாவிடம் அவ்வப்போது கேட்டு தெரிந்து கொள்வேன்.  அம்மாவின் பெயர் அமுதா என்பதால், என்னுடைய தொழிலுக்கும் அம்மாவின் பெயரையே வைத்தேன். இதற்காக நான் பெரிய அளவில் முதலீடு எல்லாம் செய்யல. ஏற்கனவே இருந்த தொழிலை டிஜிட்டல் மூலம் மேலும் விரிவுப்படுத்தினேன்’’ என்றவர் அது குறித்து விவரித்தார்.

‘‘அம்மா எல்லாருக்கும் உடைகளை தைத்து தருவார். ஆனால் என்னுடைய டார்கெட் சின்ன குழந்தைகளாக மட்டுமே இருந்தது. அதனால் முதலில் குழந்தைகளுக்கான சம்மர் கால உடைகளை அறிமுகம் செய்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பொதுவாக சின்ன குழந்தைகளுக்கு அம்மாக்கள் விரும்பும் டிசைன்களில் உடைகள் மார்க்கெட்டில் கிடைப்பதில்லை. அதனால் முதலில் அவர்களுக்கு பிடிக்கும் டிசைனர் உடைகளை பட்ஜெட்டிற்குள் அறிமுகம் செய்தேன். அதை பலரும் விரும்பியதால், அடுத்ததாக பாரம்பரிய உடைகளை அறிமுகம் செய்தேன். காஞ்சிபுரப் பட்டில் தொடங்கி, பனாரஸ் பட்டு வரை இந்தியாவில் சிறப்புமிக்க அனைத்து பட்டு மட்டுமில்லாமல் இதர துணி வகைகளிலும் குழந்தைகளுக்கான ஆடைகளை தயாரிக்க ஆரம்பித்தோம்.

என் அம்மாவுக்கு தையல் கலையை தாண்டி பெரிதாக வேறு எதுவும் தெரியாது. இப்போ இந்த தலைமுறைக்கு இருக்குற எக்ஸ்போஷர் எல்லாம் அவங்க காலத்தில் இல்லை. பொதுவாக அப்போது எல்லாம் பெண்கள் தையல் கலை அல்லது டைப்ரைட்டிங் போன்றவற்றை கற்றுக் கொள்வது வழக்கமாக இருந்தது. அம்மாவும் அப்படித்தான் தையல் கத்துக்கிட்டாங்க. தனக்கு ஒரு சுய சம்பாத்தியம் வேண்டும் என்று நினைத்த போது தான் கற்றுக் கொண்ட தையல் கலை தான் அவர்களுக்கு உதவியது. இதற்காக பெரிய முதலீடு எல்லாம் செய்யல. உறவினர்கள், அக்கம் பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு தைத்துக் கொடுக்க ஆரம்பிச்சாங்க. அது  அப்படியே   டெவலப் செய்தாங்க.

அவங்க விடாமுயற்சிதான் இப்போது அவர்களுக்கான ஒரு தொழிலை ஏற்படுத்திக் கொள்ளவும், மாணவர்களுக்கு பயிற்சி வழங்கும் அளவிற்கு முன்னேற்றம் ஆகியிருக்காங்க. என் அம்மா தான் என்னுடைய ரோல் மாடல். அவங்களை மனதில் கொண்டு தான் என் தொழிலை ஆரம்பிச்சேன். தைரியம் மற்றும் நம்பிக்கையை மட்டுமே முதலீடா வைச்சு அமுதம் ஃபேஷன்ஸ் ஆரம்பிச்சோம். இன்னைக்கு எங்களுக்கு ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் இருக்காங்க. கடலூர் மாவட்டத்துல எங்களுக்கு தனியா ஒரு யூனிட் இருக்கு. அதில பல பெண்கள் வேலை செய்றாங்க.

அம்மாவுக்கு டெய்லரிங் தெரியும், எனக்கு பிசினஸ், மார்க்கெட்டிங் திறமைகள் இருந்தது. ஆரம்பத்தில் சாதாரண ஒரு தையல் மெஷின் வைத்து தான் தொழிலை ஆரம்பித்தோம். எங்களுடைய டிசைன்ஸ், பாரம்பரிய உடையிலேயே ஒரு மார்டன் ஃபேஷன் அம்சம் இருக்கும். கோல்ட் ஷோல்டர், ஒரு சைட் மட்டும் ஸ்லீவ் போன்ற ஃபேஷன் அம்சங்களை பாரம்பரிய பட்டுப் பாவாடையில் புகுத்தினோம். இந்த தொழில் ஆரம்பித்த சில மாதங்களிலேயே  கொரோனா ஊரடங்கு அமலாகிவிட்டது. எனக்கும் அம்மாவுக்கும் கொரோனா தாக்கியதில், எங்கள் பிசினஸ் அப்படியே முடங்கியது. நான் ஒரே மாதத்தில் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துவிட்டேன்.

ஆனால் அம்மாவுக்கு குணமாக கொஞ்ச நாட்கள் ஆனது. அந்த சமயத்தில் வாடிக்கையாளர்கள் ஆர்டர்கள் கொடுப்பதை நிறுத்தவில்லை. எங்களை நம்பி வந்த வாடிக்கையாளர்களை ஏமாற்றக்கூடாதுன்னு முடிவு செய்தேன். அந்த இக்கட்டான சமயத்திலும், மருத்துவமனையில் அம்மாவை பார்த்து விட்டு, வீட்டுக்கு வந்து நானே உடைகளை தைத்து கொடுக்க ஆரம்பித்தேன். மூன்று மாதங்கள் கழித்து, அம்மா முழுமையாக குணமாகியப் பின், எங்க சொந்த ஊரில் இருக்கும் பெண்கள், வேலைக்காக பல மைல் தூரம் சென்று டெய்லரிங் செய்வது தெரிய வந்தது. அதனால் என்னுடைய ஊரிலேயே ஒரு டைலரிங் யூனிட் ஆரம்பித்து அங்கே சில பெண்களை வேலைக்கு நியமித்து நான் டிசைன் செய்யும் உடைகளை தைத்துக்கொடுக்க சொல்வேன்.

இங்கே சென்னையில் அம்மாவும் நானும் எந்த மாதிரி துணிகளை பயன்படுத்தலாம் என்று தேர்வு செய்து, அதனை வடிவமைப்போம். இங்கு பல வித டிசைன்கள் இருக்கு. காரணம் நாங்க வாரம் மூன்று புதிய டிசைனர் கலெக்‌ஷன்களை அறிமுகம் செய்வோம். இப்போது குழந்தைகளுக்கான உடைகளுடன், தலையில் அணியக் கூடிய மேட்சிங் ஹெட் பேண்டும் கொடுக்கிறோம். அதே போல மேட்சிங் வளையல்களும் இந்த பொங்கலுக்கு கொண்டு வர இருக்கிறோம்.

இது தவிர ஆண் குழந்தைகளுக்கான உடைகளையும் ஆரம்பிக்க உள்ளோம். மேலும், வாடிக்கையாளர்கள் வசதியாக ஷாப்பிங் செய்ய, அமுதம் ஃபேஷன்ஸ் செயலியை அறிமுகப்படுத்தவுள்ளோம். சில வாடிக்கையாளர்கள் நேரில் வந்து ஆடைகள் வாங்க விரும்புகிறார்கள். அவர்களுக்காக ஆரம்பக்கட்டத்தில் சென்னையில் ஒரு கடையை ஆரம்பிக்கவும் திட்டமிட்டுள்ளேன். இது தவிர, பெண்களுக்கு தையல் தொழிலில் வாய்ப்பளித்து எங்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் முயற்சி செய்து வருகிறோம்.

எங்களிடம் 400 ரூபாயில் இருந்து 3000 வரையிலான பட்ஜெட் முதல் ஆடம்பர ஆடை வகைகள் கிடைக்கும். அதே போல, பல ஆஃபர்களும் எப்போதுமே எங்களிடம் இருக்கும். ஒரு முறை எங்கள் வாடிக்கையாளராக மாறுபவர்கள் தொடர்ந்து தங்கள் குழந்தைக்கு எங்களிடம் தான் ஆடைகள் வாங்குவார்கள். நல்ல வாடிக்கையாளர்கள் மூலமாகத்தான் எங்கள் பக்கத்தில் இப்போது சுமார் 33 ஆயிரம் ஃபாலோவர்ஸ் இருக்கிறார்கள்.

இந்தியாவில் இருக்கும் வாடிக்கையாளர்கள் அமுதம் ஃபேஷன்ஸின் இணையதளத்தை அணுகி வாங்கிக்கொள்ளலாம். வெளிநாட்டில் வசிப்பவர்கள், சமூக வலைத்தளம் மூலமாகவோ அல்லது நேரடியாக தொடர்பு கொண்டு உடைகளை வாங்கிக்கொள்ளலாம். இப்போது வெளிநாட்டில் இருந்தும் ஆர்டர்கள் வருகிறது. அவர்கள் நேரடியாக சமூக வலைத்தளத்தில் அல்லது மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம்” என்கிறார் மோனிஷா.

கேரள கசவு, கலம்காரி, ஜெய்ப்பூர் காட்டன் என இந்தியாவின் எல்லா மாநிலங்களில் இருந்தும் சிறப்பு வாய்ந்த துணிகளில், மார்டன் அம்சங்களுடன் குழந்தைகளுக்கும் குழந்தைகளின் அம்மாக்களுக்கும் இவருடையது ஃபேவரைட் ஷாப்பிங் பக்கமாக இருக்கிறது.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்