SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாலூட்டும் அம்மாக்களுக்கான சூப்பர் ஆடைகள்!

2022-11-29@ 17:44:21

நன்றி குங்குமம் தோழி

பெண்களுக்கு குறிப்பாக ஆடைதான் மிகப்பெரிய பலம். அது வெறும் மானம் காக்கும் உடை மட்டுமல்ல, ஒருவருக்கு தன்னம்பிக்கை கூட்டும் பலமும் கூட. கம்பீரமான பெண்களுக்கு அவர்களுக்குப் பொருத்தமான ஆடை மட்டும் அமைந்துவிட்டால் இன்னும் அழகும், பொலிவும் கூடிப் போய் விடும். இவ்வாறு அழகு மற்றும் தன்னம்பிக்கையினை ஏற்படுத்தும் ஆடைகள் பிரசவித்த பெண்களுக்கும் இருந்தால் அவர்கள் மேலும் தன்னம்பிக்கையில் மிளிர்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

காரணம், முன்பெல்லாம் பிரசவித்த பெண்கள் பெரும்பாலானவர்கள் புடவை கட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். சேலை அழகான உடைதான் என்றாலும், இந்த தருணத்தில் அவர்களுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்தும் உடையாக மாறிவிடுகிறது. அந்த சிரமம் இனி பெண்களுக்கு அவசியமில்லை என்கிறார் அபி கல்யாண். இவர் கர்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த பெண்களுக்காகவே விதவிதமாக பிரத்யேக உடைகளை வடிவமைத்து வருகிறார்.

‘‘என்னுடைய சொந்த ஊரு சென்னை. படித்தது வளர்ந்தது எல்லாமே இங்க தான். என்ஜினியரிங் படித்து ஐ.டி துறையில் வேலை பார்த்து வந்தேன். எனக்கு அந்த வேலையில் பெரிய ஈடுபாடு இல்லை. எல்லா பெண்களைப் போலவே எங்க வீட்டிலேயும் மாப்பிள்ளை பார்த்தாங்க. திருமணமும் முடிந்தது. குழந்தையும் பிறந்தது. அந்த சமயத்தில்தான் நான் ஒரு பெண் கர்ப்ப காலத்தில் மற்றும் பிரசவத்திற்கு பிறகு உள்ளாகும் சிரமத்தை பற்றி புரிந்து கொண்டேன்.

குறிப்பாக அவர்கள் அணியும் உடைகள். காரணம் நானும் என்னுடைய கர்ப்ப காலத்திலும், குழந்தை பிறந்த பிறகும், பல சிரமங்களை சந்தித்தேன். அதில் மிகவும் முக்கியமானது, எனக்கான பொருத்தமான ஆடைகளை தேர்வு செய்து அணிவதில் பல சிக்கல்களை சந்தித்தேன். குறிப்பாக குழந்தையை அழைத்துக் கொண்டு வெளியே செல்லும் போதும், அங்கு குழந்தையை கவனித்துக் கொள்ள நேரும் போதும் எனக்கு பெரிய சவாலாக இருந்தது. அந்த நேரத்தில் நம் உடலுக்கு வசதியான உடைகள் அணிய முடியாதது பெரிய காரணமாக இருந்தது.

ஒரு கட்டத்தில் அதுவே என்னுடைய சிந்தனையாக மாறியது. என்னைப்போல் தானே மற்ற கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களும் கஷ்டப்படுவார்கள்’’ என்று யோசித்தவர் கர்ப்பிணி மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்காகவே தனிப்பட்ட வசதியான உடைகளை அறிமுகம் செய்ய நினைத்துள்ளார்.‘‘என்னுடைய சிந்தனைக்கு ஒரு நல்ல பாதை வழிவகுத்து கொடுத்தது கொரோனா. இந்த காலத்தில் பலரின் வாழ்க்கை பாதை மாறியுள்ளது. ஐ.டி வேலை என்பதால், வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்க வேண்டிய சூழல். மேலும் வீட்டைவிட்டு அநாவசியமாக வெளியே செல்ல முடியாத சூழல். இவை இரண்டுமே எனக்கான ஒரு தொழிலை அமைத்துக்கொள்ள உதவியாக இருந்தது.

அதன் அடிப்படையில் தான் என்னுடைய ஆன்லைன் தொழிலை நான் துவங்கினேன். எனக்கு ஏற்கனவே டிசைனிங் குறித்து தெரியும் என்பதால், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிரசவித்த பெண்களுக்கான உடைகளை வடிவமைத்தேன். அதை துணிக்கடைகளுக்கு சென்று விற்பனை செய்தேன்.

முதல் இரண்டு வருடம் யாருமே என்னுடைய உடையினை வாங்க முன் வரவில்லை. அது எனக்கும் பெரிய  தோல்வி மனப்பான்மையை ஏற்படுத்தினாலும், என்னால் முடியும் என்ற வைராக்கியத்தை மட்டும் நான் இழக்கவில்லை. அந்த சமயத்தில்தான் இன்ஸ்டா, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் அதிகமாக செயல்பட ஆரம்பித்தன. என்னுடைய உடைகளை படம் பிடித்து ‘தொட்டில்’ என்று பெயர் வைத்து, அதில் பதிவிட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய டிசைன்கள் பல பெண்களுக்கு பிடித்து போக, வாங்க ஆரம்பித்தார்கள்.

நான் ஆடை வடிவமைப்பு குறித்து படிக்கவில்லை. எல்லாமே என்னுடைய அனுபவத்தைக் கொண்டு தான் வடிவமைக்கிறேன். காரணம், நான் அந்த காலக்கட்டத்தில் இருக்கும் போது, உடை என்னுடைய அன்றாட வாழ்க்கை முறைக்கு பெரிய சவாலாக இருந்தது. இந்த உடை இப்படி இருந்தால் நன்றாக இருக்குமேன்னு நான் அப்போது யோசித்து இருக்கேன். நான் சந்தித்த ஒவ்வொரு பிரச்னைக்கான தீர்வினை நான் அப்போதே சிந்தித்திருந்தேன். அந்த ஒவ்வொரு சிந்தனைதான் இப்போது ஆடையாக வடிவம் பெற்று வருகிறது. நான் சிந்தித்த விஷயத்தை நேரடியாக கொண்டு வரும் போது பல சிக்கல்கள் ஏற்படும். அதனால் பல ஆய்வுகள் செய்து தான் ஒவ்வொரு உடையினையும் நான் வடிவமைத்து வருகிறேன்’’  என்றவர்  அகில இந்திய பெண் சாதனையாளர் விருதினை பெற்றுள்ளார்.

‘‘நம்பிக்கை இருந்தால், சாதாரண இல்லத்தரசியால் கூட வெற்றிகரமான தொழில் முனைவோராக  ஆக முடியும். என்னுடைய தொழிலுக்கு என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ரொம்ப உறுதுணையாக இருந்தாங்க. ஆன்லைன் முறையில் நல்ல வருமானம் கிடைத்தாலும், இதனை ஒரு கடையாக அமைக்க வேண்டும் என்பது என்னுடைய கனவாக இருந்தது. அதுவும் சில மாதங்கள் முன்பு நிறைவேறியது. சென்னை ஆழ்வார்பேட்டையில் என்னுடைய கடையினை திறந்துள்ளேன். சாதிக்க வேண்டும் என்று சிந்திக்கும் பெண்கள் கடந்து வரும் பாதை கரடுமுரடானது தான். ஆனால் அவற்றை சக்சஸாக கடந்து வந்தால், கண்டிப்பாக தொழிலில் நல்ல முன்னேற்றத்தை பார்க்க முடியும்’’ என்கிறார் அபி கல்யாண்.

தொகுப்பு: ஆனந்தி ஜெயராமன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-senthilbalaji-8

  சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!

 • athisayangal

  நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்

 • perunad

  பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!

 • turkeydeath11

  துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!

 • lantern-festival-china

  உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்