SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எலும்பு முறிவிற்கு இயற்கை முறையில் சிகிச்சை அளிக்கும் குள்ளாரி பரம்பரை!

2022-11-29@ 17:39:29

நன்றி குங்குமம் தோழி

உணவுக்கென்று ஊர் இருப்பதை போல வைத்தியத்திற்கென்று  ஒரு ஊர் இருக்கிறதென்றால் அது கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள சிங்கிரிபாளையம்தான். இங்கு எலும்பு முறிவு பிரச்னைக்கு இயற்கை முறையில் சிகிச்சையளிக்கின்றனர். மருந்து மாத்திரை இல்லாமல் இரண்டே மாதத்தில் எலும்பு முறிவை குணப்படுத்தி விடுகிறார்கள்.இதனாலேயே பக்கத்து மாநிலங்களில் இருந்தெல்லாம் மக்கள் அன்றாடம் இங்கு வந்து வைத்தியம் பார்த்து செல்கின்றனர்.

‘இயற்கையான வைத்தியத்தில் வலியை பொறுத்துக்கிட்டாலே போதும் எங்களுக்கு  பாதி சிகிச்சை முடிந்த மாதிரி’ன்னு பேச ஆரம்பிக்கிறார் செங்கோட்டையன். ‘‘இந்த வேலையை நாங்க பரம்பரை பரம்பரையாக செய்து வருகிறோம். என் தாத்தா 1957ல் இருந்தே எலும்பு முறிவுக்கான சிகிச்சை செய்து வந்தார். அவரைத் தொடர்ந்து என் அப்பா மற்றும் நானும் இதை செய்ய ஆரம்பிச்சோம். நான் பத்தாம் வகுப்பை முடிச்சிட்டு அப்பாவோட இந்த சிகிச்சை முறைகளை கற்றுக் கொண்டு அவருடன் இணைந்து செயல்பட ஆரம்பிச்சேன். என் தாத்தா  பெயர் கருப்பன். அவர குள்ளாரின்னு தான் இங்க இருக்கிறவங்க கூப்பிடுவாங்க.

இந்த வைத்திய முறையை அவர் தான் ஆரம்பிச்சார். இப்பவும் எங்களை குள்ளாரி மகன் பரம்பரைன்னு தான் சொல்வாங்க. எங்க வைத்தியசாலைக்கும் அதே பெயரை தான் நாங்க  வைத்திருக்கிறோம். இந்த சிகிச்சை முறைகளை என் தாத்தா ஆரம்பிக்க அவரின் அம்மாதான் காரணம். ஒரு முறை என் தாத்தாவின் அம்மா கீழ விழுந்துட்டாங்க. அவர்களின் எலும்பில் அடிபட்டது. அந்த காலத்தில் இந்த மாதிரி பெரிய மருத்துவமனைகள் எல்லாம் கிடையாது. அதனால என் தாத்தாவே அவங்க அம்மாக்கு  அடிபட்ட இடத்தில் நல்லா நீவி கட்டு போட்டு விட்டார். தினமும் கட்டைப் பிரித்து நன்றாக நீவி விடுவார்.

அதுலேயே அவருக்கு வலி குறைந்து சரியாகிவிட்டது. எலும்பு முறிவை இயற்கை முறையில் எந்த மருந்து மாத்திரை இல்லாமல் ஒரே மாசத்தில் குணப்படுத்திட்டார்னு எங்க பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் ஆச்சரியப்பட்டாங்க. எங்க சுற்றுவட்டாரத்தில் இருக்கிறவங்க எல்லாரும் எலும்பு சம்பந்தமான பிரச்னை அல்லது வலி என்றால் தாத்தாவிடம் வைத்தியம் பார்க்க ஆரம்பிச்சாங்க. அவங்க பிரச்னை சீக்கிரம் குணமாச்சு. அதற்கு காரணம் அவர் பயன்படுத்தும் எண்ணை. உடலில் உருவி விடுவதற்காகவே என் தாத்தா ஒரு எண்ணையை தயாரித்து வைத்திருந்தார். அது ஒரு  மூலிகை எண்ணை. தசை  வீக்கம், தசை பிடிப்பு இந்த மாதிரி வைத்தியங்களுக்கெல்லாம் அந்த எண்ணெய் கொண்டு நன்றாக நீவி விட்டாலே போதும். உடனே சரியாகிடும்.

ஆரம்பத்தில் ஒரு பொது நல சேவையாகத்தான் நாங்க செய்து வந்தோம். ஆனால் பலர் எங்களின் இந்த சிகிச்சை முறைப் பற்றி கேள்விப்பட்டு வர ஆரம்பிச்சாங்க. அதன் பிறகு நாங்க இதை தொழிலாகவே செய்ய ஆரம்பிச்சோம். ஒருவர் குணமாகி மற்றவர்களுக்கு சொல்ல ஆரம்பிக்க... சிங்கிரிபாளையம் என்றாலே எங்களின் எலும்பு முறிவு வைத்திய சாலை தான் எல்லாருக்கும் நினைவிற்கு வரும். அப்படி மக்கள் மனதில் நாங்க இடம் பிடிக்க ஆரம்பிச்சோம்.

கோபிச்செட்டிப்பாளையம் பக்கத்துல கர்நாடகா பார்டர் என்பதால் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் இங்க சிகிச்சைக்காக வர ஆரம்பிச்சாங்க. இப்போ கேரளாவில் இருந்தும் வராங்க’’ என்றவர் வைத்திய முறையை பற்றி பேச ஆரம்பித்தார்.‘‘இங்க ஆரம்பத்துல அடிபட்டு வர்றவங்களுக்கு எண்ணெய் தேய்ச்சு  நல்லா நீவி விடுவோம். இது இயற்கை வைத்திய முறை என்பதால், வலியை குறைக்கக்கூடிய எந்த மருந்துகளும் நாங்க கொடுக்க மாட்டோம். எண்ணைக் கொண்டு நீவி விடுவோம். அப்போது ஏற்படும் வலியை அவங்க தாங்கிக் கொண்டு தான் ஆகணும். அந்த வலியை தாங்கிட்டாலே அவங்களுக்கு பாதி சரியாயிருச்சுன்னு அர்த்தம்.

எலும்பு முறிவுல எலும்பு உடைஞ்சு தொங்கினா அதுக்கு மூங்கில் தப்பை வச்சு எண்ணெய் கட்டு போடுவோம். எண்ணைக்கட்டு போட்டால் கையை அசைக்கக்கூடாது. கட்டு போட்ட இடத்தில் தண்ணீர் படக்கூடாது. நாங்க கட்டின கட்டை, நாங்க தான் அவிழ்த்து விடுவோம். நீங்களா அதைப் பிரிக்கக் கூடாது. 10 நாளைக்கு ஒரு முறை வந்து கட்டு மாத்திக்கணும். கடைசியா போடறது நாட்டு முட்டை கட்டு. அந்த கட்டு கட்டின 15 நாட்களில் முழுமையா குணமாயிடும்.

அதனால் அடிபட்டவங்களே அந்த கட்டினை அவிழ்த்திடலாம். அதிகபட்சம் இரண்டு மாதங்களில் எலும்பு முறிவு என சரியாயிடும். மூட்டு வலி, முழங்கால் வலி, இடுப்பு வலி, எலும்பு முறிவு என எல்லா பிரச்னையையும் நாங்க குணமாக்குவோம். எலும்பு முறிவாக இருந்தால் நாங்களே சரி செய்திடுவோம். சிலர் எலும்பு முறிந்து உள்காயத்துடன் வருவாங்க. ஸ்கேன் செய்து பார்ப்போம். எங்களால் சரி செய்ய முடியும் என்றால் மட்டுமே அதற்கான சிகிச்சை அளிப்போம்.

முடியாத பட்சத்தில் மருத்துவமனைக்கு அனுப்பிடுவோம். இப்போ எக்ஸ்ரே மெஷின்கள் இருப்பதால், அதன் மூலம் காயத்தின் தன்மையை அறிந்து சரி செய்ய முடியுமா முடியாதான்னு சொல்லிடுவோம். முடியும் என்றால் ஒரே மாதத்தில் சரி பண்ணிடுவோம். அதனால தான் எங்கள தேடி மக்கள் வராங்க. இங்கு நாங்க தயாரிக்கும் எண்ணைதான் இந்த சிகிச்சைக்கான சிறப்பு மருந்து. எலுமிச்சம் பழம்,  சில மூலிகைகள் சேர்த்து தினமும் காய்ச்சி இந்த எண்ணையை தயார் செய்கிறோம்.

சிலர் எண்ணையை வாங்கி செல்லவும் வருகிறார்கள். 30 லிட்டர் ரெடி பண்ண ஒரு நாள் ஆகும். இந்த எண்ணெயை மூன்று வருஷம் வரைக்கும் உபயோகப்படுத்தலாம். எங்களின் சிகிச்சை மையம் 24 மணி நேரமும் இயங்கும். இரவு எத்தனை மணிக்கு வந்து கதவு தட்டுனாலும் வைத்தியம் பார்ப்போம். எங்கள நம்பி வரும் மக்களுக்கு தகுந்த சிகிச்சை அளித்து குணமாக்க வேண்டும் என்பது தான் எங்களின் முக்கிய நோக்கம்’’ என்கிறார் செங்கோட்டையன்.

தொகுப்பு: மா.வினோத்குமார்

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

 • china-spring-festival

  சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!

 • orange-tree-wishes-27

  ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்