SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ சுய மருத்துவம் வேண்டாம்!

2022-11-28@ 17:53:04

நன்றி குங்குமம் தோழி

டாக்டர் கலா தேவி

“மெட்ராஸ் ஐ” என்று பிரபலமாக அழைக்கப்படும் கண் வெண்படல அழற்சி தற்போது பல இடங்களில் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறார்கள் மத்தியில். ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக்காலம் முடிவுக்கு வரும்போதுதான் மெட்ராஸ் ஐ நோயின் பாதிப்பு அதிகரிக்க ஆரம்பிக்கும். இந்த ஆண்டு சென்னை மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் மழைப்பொழிவு காலம் நீடித்திருப்பதால், மெட்ராஸ் ஐ கண் நோய் பாதிப்பின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது’’ என்கிறார் மருத்துவ சேவை பிரிவின் மண்டல தலைவர் மற்றும் முதுநிலை கண் மருத்துவருமான டாக்டர் கலா தேவி. இவர் இதன் பாதிப்பு மற்றும் அதனை பாதுகாக்கும் முறை குறித்து விவரித்தார்.

‘‘மெட்ராஸ் ஐ என்பது, ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு அதிவேகமாக பரவக்கூடிய பொதுவான கண் நோய். இது பெரும்பாலும் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்படுகிறது. கண்ணிலிருந்து சுரக்கும் திரவங்களின் வழியாக கண் வெண்படலத்தில் அழற்சியை ஏற்படுத்துகிறது. இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவக்கூடியது. அதாவது ஒருவர் தன் கண்களை கசக்கும் போது, அதே கைகளால் மற்றவரின் பொருட்களை தொடுவதாலும், அதை அவர் பயன்படுத்தும் போது இந்த கண்நோய் மற்றவருக்கு பரவக்கூடிய வாய்ப்புள்ளது. அதே சமயம் ஒவ்வாமையினால் ஏற்படும் இந்த கண் தொற்று நோய், மற்றொரு நபருக்குப் பரவாது.

 மெட்ராஸ் ஐ, பாதிப்பில் காணப்படும் பொதுவான அறிகுறிகள்: கண் எரிச்சல், நீர் வடிதல், கண் சிவத்தல், கண்ணிலிருந்து பிசின் போன்ற அழுக்கு ெவளியேறுதல், வெளிச்சத்தைப் பார்த்தால் கண் கூச்சம் போன்ற அறிகுறிகள் தென்படும். கண் கருப்பு நிற படலத்தில், தொற்று ஏற்பட்டு இருந்தால், பார்வை மங்கலாக இருக்கும். சிலருக்கு கண் வீக்கம் ஏற்படும். அவர்களுக்கு குணமாவதற்கு நீண்டகாலம் எடுக்க வாய்ப்புள்ளது.

மெட்ராஸ் ஐ கண் நோயினை ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை மூலம் அறிந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் உடனடியாக அதனை குணப்படுத்த முடியும். இல்லாத பட்சத்தில் அது தீவிரமான பிரச்சனையாக மாறக்கூடும். சிலர் சுயமருத்துவம் செய்து கொள்கிறார்கள். அதாவது கண் எரிச்சல் என்றதும், அருகில் இருக்கும் மருந்து கடைகளில் ஆன்ட்டிபயாட்டிக் மற்றும் கண் சொட்டு மருந்துகளை பயன்படுத்துகிறார்கள். இது மிகவும் தவறான செயல். கண் சார்ந்த நோய்கள் மட்டுமல்ல உடல் சார்ந்த எந்த பிரச்னையாக இருந்தாலும் உரிய பரிசோதனை செய்து, நோயினை உறுதி செய்த பிறகு அதற்கான மருத்துவரிடம் முறையான சிகிச்சை பெற வேண்டும். இது கண் சார்ந்த நோய்க்கும் பொருந்தும்.  

ஏறக்குறைய 90% கண் வெண்படல அழற்சிகள் அடினோவைரஸ் என்பதனால் ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் கண் சிவந்து, அரிப்பும், எரிச்சல் தன்மை உள்ளதாகவும் மாறுகிறது. கண்களில் கண்ணீர் போன்ற நீர் சுரக்க ஆரம்பிக்கும். இந்த கண்ணீரில் உள்ள வைரஸ் ஒரு நபரிடம் இருந்து மற்றவரிடம் எளிதாகவும் வேகமாகவும் பரவும். மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய கைக்குட்டைகள், டவல்கள், தலையணை உறைகள் மற்றும் ஒப்பனைப் பொருட்கள் போன்ற தனிப்பட்ட பொருட்களின் வழியாகத்தான் ஒரு நபரிடமிருந்து, மற்றொரு நபருக்கு இது எளிதாகப் பரவும். ஆகவே, இத்தொற்று பாதிப்புள்ள நபரை தனிமைப்படுத்துதல் முக்கியமானது.

இக்கண் தொற்றுள்ள நோயாளிகள், அவர்களது கண்களிலிருந்து வரும் திரவ வெளியேற்றத்தை துடைக்க பேப்பர் நாப்கின்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவ்வாறு பயன்படுத்திய நாப்கின்களை உடனடியாக பத்திரமாக அகற்றிவிட வேண்டும். தொற்று ஏற்படும்போது பயன்படுத்திய பழைய கான்டாக்ட் லென்ஸ்களை அகற்றிவிட்டு அவர்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகு புதிய கான்டாக்ட் லென்ஸ்களை அணியவேண்டும். வழக்கமாக பயன்படுத்துகின்ற, திரும்பத்திரும்ப பயன்படுத்தக்கூடிய கைக்குட்டைகளை பயன்படுத்தக்கூடாது.

தங்களது கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தொற்றுப் பரவாமல் தடுக்க, தங்களது தனிப்பட்ட பயன்பாட்டுப் பொருட்களை பிறர்
பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. பள்ளி மற்றும் அலுவலகங்கள் போன்ற சுற்றுச் சூழலில் மெட்ராஸ் ஐ நோய் வேகமாக பரவக்கூடியது என்பதால், கண்களிலிருந்து அழற்சியின் காரணமாக ஏற்படும் கண்ணீர் போன்ற திரவச்சுரப்பு முற்றிலுமாக நிற்கும் வரை வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்து வீட்டிலேயே தனித்திருப்பது நல்லது’’ என்று ஆலோசனை அளித்தார் டாக்டர் கலா தேவி.  

தொகுப்பு: நிஷா

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

 • china-spring-festival

  சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!

 • orange-tree-wishes-27

  ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்