SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

10 மாதங்களில் 55 லிட்டர் தாய்ப்பால் தானம்!

2022-11-25@ 17:32:10

நன்றி குங்குமம் தோழி

சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சிந்துகோயம்புத்தூரைச் சேர்ந்தவர் சிந்து மோனிகா. பொறியியல் பட்டதாரியான இவருக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அழகான பெண் குழந்தை பிறந்தது. இவரின் அசாத்திய செயலால் தற்போது சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.‘‘நான் ஐ.டி துறையில் வேலை ெசய்வதால், குழந்தைக்கு நினைத்த நேரம் தாய்ப்பால் கொடுக்க முடியாது. அதனால் அதனை பம்ப் செய்து பாட்டிலில் அடைத்து வைத்திடுவேன். அப்படித்தான் நான் என் குழந்தைக்கு தாய்ப்பாலினை தவறாமல் கொடுத்து வந்தேன்.

குழந்தையின் ஆரோக்கியம் முக்கியம் என்பதில் நான் ெராம்பவே கவனமாக இருந்தேன். ஆனால் என் குழந்தை குடித்தது போக... எனக்கு அதிகப்படியான பால் சுரந்தது. அவை வீணாகிறது என்று என் குழந்தைக்கு அதிகப்படியாக புகட்ட முடியாது, என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் வீணாக கீழே கொட்டிவிடுவேன். ஒவ்வொரு முறை கீழே கொட்டும் போது மனம் பதைபதைக்கும். அப்போதுதான் அந்த நினைவு என் கண் முன்னே தோன்றியது. எனக்கு குழந்தை பிறந்த போது முதல் ஆறு நாட்கள் என்னால் என் குழந்தைக்கு பால் கொடுக்க முடியாமல் போனது. அந்த நாட்கள் நான் மட்டுமில்லை, என் குழந்தையும் தாய்ப்பால் இல்லாமல் கொஞ்சம் கஷ்டப்பட்டாள்.

அந்த வலி என்ன என்று எனக்கு தெரியும். என்னைப்போல் பல தாய்மார்கள் அந்த வலியினை ஒவ்வொரு பிரசவத்தின் போது அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதனால் என்னால் முடிந்த உதவியினை செய்ய விரும்பினேன். அவ்வாறு தவிக்கும் குழந்தைக்கு தாய்ப்பாலை கொடுக்க நினைத்தேன். வீணாக போகும் தாய்ப்பால்... வேறு குழந்தைக்காவது கிடைக்கட்டுமே என்று நினைத்தேன். எனக்கு குழந்தை பிறந்த 99 நாட்களிலேயே தாய்ப்பால் தானம் குறித்து தெரிய வந்தது. தாய்ப்பால் தானம் கொடுப்பதற்காகவே ‘அமிர்தம்’ என்ற அமைப்பு இயங்குவது குறித்து கேள்விப்பட்டேன். அவர்களை அணுகினேன்.

100 நாளில் இருந்தே என் தாய்ப்பாலினை தானமாக கொடுக்க ஆரம்பித்து விட்டேன். இப்போது பத்து மாதங்களில் சுமார் 55 லிட்டர் தாய்ப்பாலை கோவை அரசு மருத்துவமனைக்கு தானமாக கொடுத்து இருக்கிறேன். அது 1500 பச்சிளம் குழந்தைகளை சென்றடைந்திருக்கிறது என்று நினைக்கும் போது எதையோ சாதித்து விட்டோம் என்று மனநிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது’’ என்கிறார் சிந்து. இவருடைய இந்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில், ஆசியா மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இரண்டுமே சான்றிதழ்கள் மற்றும் மெடல்கள் வழங்கியுள்ளன.

‘‘அமிர்தம் அமைப்பின் நிறுவனர் ரூபா தான் எனக்கு எல்லா விவரங்களையும் சொல்லிக் கொடுத்தார். குறிப்பாக தாய்ப்பாலை எப்படி சேமிக்க வேண்டும் என்ற விவரங்களையும் சொல்லிக் கொடுத்தார். அவரின் வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு மாத இறுதியிலும் அமைப்பினை சேர்ந்த தொண்டர்கள் வந்து நான் சேமித்து வைத்திருக்கும் தாய்ப்பாலை வாங்கிக்கொண்டு போவார்கள். என்னுடைய இந்த செயலுக்கு என் கணவர், மாமியார் மற்றும் என் பெற்றோர் அனைவரும் ஆதரவு அளித்தனர். அவர்களுக்கு தாய்ப்பாலின் மகத்துவம் என்ன என்று புரிந்ததால்தான் என்னுடைய இந்த செயலுக்கு முழு ஆதரவு கொடுத்தனர். நான் மட்டுமில்லாமல் இதன் முக்கியத்துவத்தை என் உறவினர்களிடமும் வலியுறுத்துவேன்.

பொதுவாக ரத்த தானம் எல்லாரும், எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் தாய்ப்பாலை அப்படி எல்லாம் தானம் கொடுக்க முடியாது. பிரசவித்த மற்றும் பாலூட்டும் தாய்மார்களால் மட்டும்தான் அந்த தானத்தை செய்ய முடியும். அவ்வாறு செய்யும் தாய்மார்களுக்கு கொஞ்சம் பரந்த மனம் வேண்டும். பலர் தாய்ப்பால் தானம் கொடுப்பதால் தங்களின் குழந்தைக்கு போதிய தாய்ப்பால் இல்லாமல் போகும் என்ற தவறான மூட நம்பிக்கைகளில் இருக்கிறார்கள்.

அந்த குழப்பம் நீங்க ஒவ்வொரு பாலூட்டும் தாய்மார்களும் தங்கள் வீட்டின் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்குச் சென்று பாருங்கள். அங்கு பச்சிளம் குழந்தைகளை வைத்திருக்கும் எமர்ஜென்சி வார்டுக்கு சென்றால், ஆபரேஷன் செய்த நிலையில் அம்மா ஒரு புறம் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்க, குழந்தைக்கு வேறொரு இடத்தில் சிகிச்சை அளித்துக்கொண்டு இருப்பார்கள். அந்த குழந்தையை சுற்றி பல உறவினர்கள் இருந்தாலுமே, யாரும் அந்த குழந்தையை தொட்டுக்கூட பார்க்க முடியாத நிலை. கண்ணாடிப் பேழையில் இருக்கும் குழந்தையை  தூரத்தில் இருந்துதான் பார்க்க முடியும். குறை மாதத்தில் பிறந்த குழந்தையாக இருக்கும் இந்த குழந்தைகளுக்கு ஆரோக்கியமே தாய்ப்பால்.

அது அவர்களின் ஊட்டச்சத்தினை அதிகரிக்க ரொம்பவே உதவியாய் இருக்கும். பொதுவாக அம்மாக்கள் சந்தோஷமான சூழ்நிலையில் இருக்கும் போது தான் தாய்ப்பால் நன்றாக சுரக்கும். தங்கள் குழந்தையை கையில் கூட தூக்க முடியாத சூழ்நிலையில், அந்த குழந்தை உயிருடன் இருக்குமா இருக்காதா என்ற வலியில் துடிக்கும் தாய்மார்களுக்கு பால் சுரக்காமல் கூட போகலாம். தன்னால் தாய்ப்பால் கூட கொடுக்க முடியாத நிலைதான் தன் குழந்தையின் ஆரோக்கியமற்ற நிலைக்கு காரணம் என்று குற்ற உணர்ச்சி அதிகமாகி பல தாய்மார்கள் அவதிப்படுவார்கள்.

இதைப் பார்த்த போது, என்னால் முடிந்த அளவுக்கு தாய்ப்பால் தானத்தில் ஈடுபடவேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். பொதுவாக தாய்ப்பால் அதிகமாக எடுக்கும் போது, அது அதிகமாக சுரக்கவும் செய்யும். அதை புரிந்து கொள்ள வேண்டும். நம்மைச் சுற்றியே பல விழிப்புணர்வுகள் இருக்கத்தான் செய்கிறது. அதனை கொஞ்சம் கண் விழித்துப் பார்த்தாலே, அறிவியல் சார்ந்த தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்” என்கிறார் சிந்து.

சிந்துவை தொடர்ந்து, ‘‘குழந்தை பிறந்து முதல் இரண்டு நாட்களில் சுரக்கும் ‘கொலாஸ்ட்ரம்” எனும் சீம்பாலில் தான் குழந்தைக்கு நோய்கள் அண்டாமல் தடுக்கும் ஆண்டிபாடிஸ் இருக்கிறது. உங்கள் குழந்தைக்கே நீங்கள் மூன்று நான்கு ஆண்டுகள் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், அந்தளவு உங்கள் தாய்ப்பால் சுரக்க வேண்டும். அதற்கு தாய்ப்பாலை வெளியே எடுக்கும் போதுதான் அது அதிகம் சுரக்கும்” என்கிறார் திருப்பூர் அவிநாசியைச் சேர்ந்த அமிர்தம் தாய்ப்பால்  தானம் அமைப்பை சேர்ந்த ரூபா செல்வநாயகி.

“அமிர்தம் தொண்டு நிறுவனம் தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் இயங்கி வருகிறது. சிந்து ஒரு ஹைப்பர் லேக்டேட்டிங் மதர். அதாவது, அவருக்கு அதிகமான தாய்ப்பால் சுரக்கும். பொதுவாகவே ஆரம்பத்தில் 80% தாய்மார்களுக்கு அதிகப்படியான பால் சுரக்கும். ஆனால் பலருக்கும் இது தெரியாது. நாம் எந்த அளவுக்கு தாய்ப்பாலை எடுக்கிறோமோ அதே அளவு அது மீண்டும் மீண்டும் சுரக்கும். தாய்ப்பால் என்பது, பச்சிளம் குழந்தைகளின் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தேவையான ஊட்டச்சத்தை கொடுக்கும் ஒரே அமிர்தமாகும். குழந்தை
களின் மூளை வளர்ச்சிக்கும் நரம்பு மண்டலத்துக்கும் இது வலு சேர்க்கும்” என்றவர் தாய்ப்பால் தானம் குறித்த விவரங்களை பகிர்ந்தார்.

‘‘நீங்கள் உங்கள் குழந்தைக்கு பாலூட்டிய பின், எஞ்சிய பாலை அதிகாலை வேளையிலோ அல்லது குழந்தை அதிக நேரம் தூங்கும் இடைப்பட்ட நேரத்தில் தாய்ப்பாலை பம்ப் மூலம் எடுத்து குளிர்சாதனப் பெட்டியில் உறைய வைக்கலாம். பின்னர் எங்களை தொடர்பு கொண்டால், நாங்க வந்து அதனை பெற்றுக்கொள்வோம். அதனை நாங்க தாய்ப்பால் வங்கியில் பத்திரமாக சேர்த்து விடுவோம். அங்கு தாய்ப்பால் சரியான முறையில் பதப்படுத்தப்பட்டு அதன் மாதிரிகள் ஆய்வுக்கூட்டத்துக்கு அனுப்பப்பட்டு ஏதேனும் வைரஸ் அல்லது பாக்டீரியா அறிகுறிகள் உள்ளனவா என ஆய்வு செய்யப்படும்.

அவ்வாறு ஆய்வு செய்யப்பட்டு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று உறுதி செய்யப்பட்ட  பின்னரே NICU பிரிவில் உள்ள பச்சிளம் குழந்தைகள், எடை குறைவான குழந்தைகளுக்கு கொடுக்கப்படும்” என்ற ரூபா ஐந்து வயது குழந்தையின் தாய். இவர் சுமார் 27 மாதங்கள் தன்னுடைய தாய்ப்பாலை தானமாக வழங்கியுள்ளார். தன் மகளுக்கு 4.5 வயது வரை தாய்ப்பால் கொடுத்துள்ளார். இப்போது அவருடைய அமைப்பில் சுமார் 5000 பாலூட்டும் தாய்மார்கள் இணைந்து தாய்ப்பால் தானம் வழங்கி வருகின்றனர். இது தவிர ஐம்பது உறுப்பினர்கள் தமிழகம் முழுவதும் உள்ளனர்.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • stalin-corp-31

    மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

  • long-whale-newyork

    35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

  • pak-blast-30

    பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

  • china-spring-festival

    சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!

  • orange-tree-wishes-27

    ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்