SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

201 முட்டை உணவுகள்!

2022-11-24@ 17:07:39

நன்றி குங்குமம் தோழி

முட்டை உணவுகள் என்றாலே ஆம்லெட், முட்டை பொரியல், கலக்கி என ஒரு ஐந்தாறு வகைகளை தான் சாப்பிட்டிருப்போம். ஆனால், முட்டையில் மட்டுமே 200க்கும் மேற்பட்ட உணவினை செய்யலாம் என்கிறார் கோவையை சேர்ந்த மீனாட்சி குமார். இவர் கோவையில் ‘விஜயலஷ்மி ஆம்லெட் சென்டர்’ என்ற பெயரில் பிரத்யேகமான முட்டைக்கான உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்.

‘‘என் சொந்த ஊர் அருப்பு கோட்டை. படிச்சது வளர்ந்ததெல்லாம் மதுரை தான். வேலைக்காக கோயம்புத்தூருக்கு 1982ல வந்தேன். இங்கு தங்க பட்டறை ஒன்றில் வேலைப் பார்த்து வந்தேன். இங்கு வேலை செய்யும் இடத்திலேயே தங்கி இருந்ததால், நாங்களே சமைத்து சாப்பிடுவோம். அப்போது மதிய உணவிற்கு தினமும் முட்டை ஆம்லெட் செய்து சாப்பிடுவோம். அப்போதுதான் முட்டை என்றாலே ஆம்லெட் மட்டும் தானா, அதில் வேறு வகை உணவுகளை செய்ய முடியாதான்னு தோணும். அதனால் தினமும் அதே ஆம்லெட்டிற்கு பதில் பல வகைகளில் முட்டை உணவுகளை செய்ய ஆரம்பித்தேன். அதை எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள். அப்போ முட்டை விலை 10 பைசாதான்.

இதனாலேயே தினமும் 20 முதல் 40 முட்டைன்னு வாங்கி வருவோம். நானும் அதில் வித்தியாசமான உணவினை செய்து தருவேன். இப்படி விளையாட்டாக ஆரம்பித்ததுதான் நாளடைவில் பல
விதமான முட்டை உணவுகளை செய்ய பழகிட்டேன். இதற்கிடையில் எனக்கும் திருமணமானது. இத்தனைக் காலம் என்னுடன் சேர்ந்து வேலைப் பார்த்து வந்தவர்களுக்கு வித்தியாசமான முட்டை உணவுகளை சமைத்துக் கொடுத்து வந்தேன். திருமணத்திற்கு பிறகு என் மனைவிக்கு செய்து கொடுக்க ஆரம்பிச்சேன்.

அந்த சமயத்தில் தங்கம் விலை ரொம்பவே குறைய ஆரம்பித்தது. பட்டறையில் வேலை இல்லை என்பதால், எனக்கும் வேலை இல்லாமல் போனது. குடும்பத்தை நடத்த வேண்டும். என்ன பண்ணலாம்னு யோசிக்கும் போதுதான் என் மனைவிதான் சொந்தமா தொழில் செய்யலாம்னு யோசனை சொன்னாங்க. நானோ பட்டறையில் வேலை பார்த்தவன். சொந்தமா என்ன ெதாழில் செய்யலாம்னு புரியல. அப்பதான் மக்கள் அதிகம் விரும்புவது சாப்பாடு. அதனால் ஒரு சாப்பாட்டு கடை ஆரம்பிக்கலாம்ன்னு நினைச்சேன். நான் நகை பட்டறையில வேலை செய்யும் போது, பல டிசைன் நகைகளை வடிவமைச்சிருக்கேன். அதேபோல் சாப்பாட்டிலும் பல வெரைட்டி கொடுக்கலாம்னு திட்டமிட்டேன்.

கூடவே என்னுடைய ஸ்பெஷல் முட்டை உணவினையும் கொடுத்தா புதுசா இருக்கும்ன்னு நானும் என் மனைவியும் யோசிச்சோம். அதனால் மறுபடியும் நான் செய்த முட்டை உணவுகளை
எல்லாம் ஒவ்வொன்றாக செய்து பார்த்தேன். சுமார் 21 வகை முட்டை உணவுகளை எனக்கே அறியாமல் நான் கண்டுபிடித்திருக்கேன்னு அப்பதான் தெரியவந்தது. உடனே நானும் என் மனைவியும் சேர்ந்து சாப்பாட்டு கடையினை ஆரம்பித்தோம். மதியம் நேரம் வெரைட்டி உணவுகள் விற்பனை செய்வோம். மாலை 5 மணிக்கு மேல முட்டை உணவுகள் மட்டுமே விற்பனை செய்ய ஆரம்பித்தோம். காரணம், முட்டையில் மட்டுமே பல வகை இருப்பதால், அதை தனியாக கொடுக்க விரும்பினோம்.

அதன் அடிப்படையில் தான் ‘விஜயலஷ்மி  ஆம்லெட்’ கடை உருவானது. ஆரம்பத்தில் வெறும் முட்டையை மட்டுமே எப்படி சாப்பிடுவதுன்னு யாரும் வாங்க வரவில்லை. அதனால் புது வகையான முட்டை உணவுகள் போட்டு பார்ப்பேன். அந்த நேரத்தில் ஒரு சிலர் மட்டுமே கடைக்கு சாப்பிட வருவாங்க. மதிய உணவு கொடுப்பதால் அதில் வந்த வருமானம் கடை வாடகைக்கு, பொருட்கள் வாங்கவே சரியா இருந்தது. சாப்பாட்டுக் கடை வச்சிருந்தும், நானும் என் மனைவியும் கஞ்சி மட்டும் தான் குடித்து வந்தோம்.

இப்படியே இரண்டு வருசம் கழிஞ்சது. அந்த சமயத்தில் 51 வகையான முட்டை உணவுகளை நான் உருவாக்கி இருந்தேன். அதன் பிறகு என்னுடைய கடை பற்றி கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மத்தியில் தெரிய ஆரம்பித்தது. ஒருவர் மூலம் மற்ெறாருவர்னு பலர் சாப்பிட வர ஆரம்பிச்சாங்க. கோவை முழுக்க என்னுடைய முட்டை உணவகம் பிரபலமாச்சு. நானும் புதுசு புதுசா முட்டை உணவுகள் கண்டுபிடிச்சுகிட்டே இருந்தேன். இப்ப 201 வகை முட்டை உணவுகளை நான் கொடுத்து வருகிறேன்’’  என்றவர் முட்டை உணவு வகைகள் பற்றி விவரிக்க  ஆரம்பித்தார்.

‘‘முட்டையில் ஆம்லெட், கலக்கி, ஹாஜப் பாயில் மட்டுமில்லாமல் பீட்சா, பாதாம்  முட்டை  நூடுல்ஸ், பிரியாணி முட்டை பொரியல், காளான் முட்டை நூடுல்ஸ், நாட்டு முட்டை பிரெட் ஆம்லெட், வாத்து  முட்டை மசாலா பிரெட், பூண்டு காளான் முட்டை ஆம்லெட், முட்டை பப்ஸ், புதினா காடை முட்டை பொரியல், மல்லி முட்டை பொரியல், முட்டை சில்லி, தக்காளி முட்டை பொரியல், பிரெட் முட்டை ரோஸ்ட், பீட்ரூட் முட்டை காரப் பொரியல், கார முட்டை பணியாரம் என பல வகை முட்டை உணவுகளை கொடுக்கிறேன். இதற்கான மசாலாக்களை நான் வீட்டிலேயே தயார் செய்கிறேன். ஒவ்வொரு முறை புதுசுா முட்டை உணவுகளை செய்யும் போது வீட்டில் என் மனைவியுடம் கொடுத்து சுவைக்க சொல்வேன்.

அவங்க சாப்பிட்டு நல்லா இருந்தாதான், கடையில் என்னுடைய மெனுவில் சேர்ப்பேன். இப்படி நான் கடையில் செய்யும் பெரும்பாலான முட்டை உணவுகளை நாம் வீட்டிலேயே செய்யலாம். தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம், மசாலா தூள், மிளகாய் தூள் எல்லாம் சேர்த்து முட்டையுடன் அடிச்சு ஊற்றினால் அது தக்காளி கலக்கி. அதே போல பூண்டை பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கி பிறகு அதனை முட்டை மற்றும் மசாலா சேர்த்து அடித்து ஊற்றினால் பூண்டு கலக்கி தயார். பச்சை மிளகாய், இஞ்சி, தக்காளி மற்றும் மசாலாக்கள் எல்லாம் முட்டையுடன் சேர்த்து அடித்து இட்லி போன்ற வடிவத்தில் கொடுக்கலாம்.

இது ஸ்பெஷல் கலக்கி. இப்படி பல வகைகள் செய்யலாம். இப்போ அடுத்து 365 வகை முட்டை உணவுகளை தயார் செய்திட்டு இருக்கேன்.  ஒருத்தர் ஒரு நாளைக்கு ஒரு வகை முட்டை உணவு சாப்பிட்டாலும் 365 நாளும் புது வகையான உணவினை சாப்பிடலாம். அந்த மாதிரியான சாதனையை செய்ய முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்’’ என்று கூறும் மீனாட்சி குமாருக்கு முட்டை ஆம்லெட் மட்டும்தான் பிடிக்குமாம்.

தொகுப்பு: மா.வினோத்குமார்

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்