SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

சிறுகதை-முறுக்கு

2022-11-24@ 17:00:52

நன்றி குங்குமம் தோழி

விஜி முருகநாதன்

‘‘குணா”வ அன்னைக்கு பாப்பேன்னு நெனக்கவே இல்ல.‘‘சென்னிமலைல ரெண்டு மூணு வசூல் இருக்கு. நீ வேணா வாயேன். பாட்டிய பாக்கணும்னு சொல்லிட்டே இருந்தியேன்னு...” இவரு சொன்னோன்னிமே சந்தோஷத்தோட பொறப்புட்டுட்டேன்.‘‘நந்து மெதுவா நடந்து பாட்டியூட்டுக்குப் போயிட்டுரு..  வசூல முடிச்சுப்புட்டு வெரசா  வந்திர்றேன். வசூல் பண்ற எடத்துக்கு உன்னயக்    கூட்டிட்டுப் போனா எதானும் பகடி பேசுவானுங்க.அதான் இங்கேயே எறக்கி வுடறேன்.

பார்த்து சூதானமாப் போ புள்ள. பாட்டிகிட்ட வெவரஞ் சொல்லிப்பூடு..”
“ஏங்க.. பாட்டி  இட்லி சுட்டுப் பார்த்திட்டுருக்கும்.. சாப்புட்டு அப்புறமா போலாமில்ல..”

“இல்லம்மா.. இந்த டைமுக்குப் போனாத்தான் அந்தாளப் பிடிக்க முடியும். ரொம்பநாளா ஏச்சுட்டே திரியறான்.. நீ போய் சாப்பிட்டுட்டு இரு.. நா பத்தே நிமிசத்துல வந்திர்றேன்..”ன்னு சொல்லிட்டே  மாருதி வேனைத் திருப்பிட்டுப் போயிட்டார்.வைகாசி மாச வெக்க காலைல எட்டு மணிக்கே முறுக்கு சுட்டு கிட்டுருந்துச்சு.. வண்டிப்பேட்டலிருந்து மெதுவா  நடக்க ஆரம்பிச்சேன். லேசாத்  தாரதாரயா வேர்வ கோடு போட ஆரம்பிச்சுச்சு. சுத்திலும் பார்த்தேன்.

 காக்காயன் மளிகைக்கடை இருந்த இடத்துல அண்ணாமலை டிபார்ட்மெண்டல்
ஸ்டோர்னு போர்டு போட்டிருந்துச்சு.“அட”ன்னு ஆச்சரியப்பட்டேன். எங்கூர்ல காக்கா வெள்ளன கத்த மறந்தாலும் மறக்குமே ஒழிய, அண்ணாமலை அண்ணன் வெடியக்காத்தால கட தொறக்க மறக்க மாட்டாரு. இப்ப மணி எட்டாகியும் இன்னுமே  தொறக்கல. ஒரு வேள டிப்பார்ட்மெண்டல் ஸ்டோராயிட்ட பவிசு போலும்னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டேன்.

 அப்பதான் பக்கத்துல  “கீரீச்”ன்னு யாரோ வேகமாக பிரேக் போடற சத்தங் கேட்டு,  ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌“எந்த அறிவு கெட்ட பய இவ்வளவு பக்கத்துல கொண்டாந்து வண்டிய நிறுத்தறதுன்னு  மனசுக்குள்ள திட்டிகிட்டே திரும்பிப் பார்த்தேன்.“ஏ புள்ள நந்தினி..எப்ப வந்த ..?!தனியா எங்கிட்டுப் போற ..? வூட்ல அவரு ,பெரியவங்க எல்லாஞ் சொகந்தானே..?! எங்க அவரக் காணோம்..?!” சிரிச்சுகிட்டே மூச்சு விடாம  மொபட்டில ஒரு காலக் கீழ் ஊனிக்கிட்டே கேக்கறான் குணா.. “வந்துருக்காருடா..நீ.. நீ.. நீங்க எங்க இங்க ..?!”ன்னு தடுமாறினேன்.

“என்ன புள்ள..புதுசா மரியாத எல்லாம்..எப்பம் போல் குணான்னே கூப்பிடு..இங்க அண்ணமார் கொட்டாயிலதான் காண்டீன் வச்சுருக்கேன்.நல்ல வரும்படி.!கண்ணாலம் ஆயிருச்சு . பொண்டாட்டி போண்டா போடும்.ஒரே பொம்பளப் புள்ள..நீ..?!”ன்னு  ஆரம்பிச்சான். அதுக்குள்ள கொஞ்ச தொலவுல இருந்த சொசைட்டிலேர்ந்து ,.“குணா  ..டீக்கு வெயிட்டிங்..”ன்னு கூப்பிடவே..“காலைல டீ ஊத்துவான். அதான் கூப்பிடறாங்க.. இருப்பயில்ல.. அப்பூடியே தேட்டர் பக்கமா வா..பக்கத்துலதான் வூடு..”என்றபடி பதில எதிர்பார்க்காம  மொபட்ட முறுக்கிக்கிட்டுப் பறந்துட்டான். அப்பதான் அவன் வண்டில வெச்சிருந்த டீ டிரம்மையே பார்த்தேன்.

குணாவும், நானும் எங்க ஊரு ஸ்கூல்ல பத்தாம் வகுப்பு  ஒட்டுக்காப் படிச்சோம். குணா அம்மாபாளையத்திலிருந்து  வந்துகிட்டு இருந்தான். மொதல்ல வேற வகுப்புல இருந்தவன் அந்த வருஷந்தான் எங்க வகுப்புக்கு மாறுனான்.அம்மாபாளையத்துல எட்டாம் வகுப்பு வரைக்கும் பஞ்சாயத்து யூனியன் ஸ்கூல்தான்.நானு எங்க பாட்டி வூட்லேர்ந்து படிச்சுட்டு இருந்தேன்.எங்கப்பாவுக்கு ஊர் ஊரா மாத்தற வேலைங்கறதுன்னால..“நீங்க போற பக்கமெல்லாம் தங்க செலயாட்டம் இருக்கற என்ற பேத்தியும் அலைகழிக்க வேண்டாம்.இங்கயே இருந்து படிக்கட்டும்.மாசந் தவறாம வந்து புள்ளயப் பாத்துட்டுப் போவீங்களாம்னு..” எங்க தாத்தா உத்தரவு போட்டுட்டாங்க.ஊருலேயே பெரிய பண்ணயக்காரர்ங்கறதுனாலேயும், யாருமே அவரு பேச்ச மீறி எதுவும் செய்ய மாட்டாங்கறதுனாலயும்  என்னய எங்க அம்மா பாட்டி வூட்டுலேர்ந்து ஸ்கூலுக்கு அனுப்பிச்சு  படிக்க வைச்சுட்டுருந்தாங்க.

எப்புடி இருக்கப்பட்டவங்க படிக்கிற ஸ்கூல்ல இல்லாதவங்க வந்து சேர்ந்து படிச்சா எளக்காரமாப் போகுமோ அதே மாதிரிதான் இல்லாத மக்க  படிக்கிற ஸ்கூல்ல இருக்கப்பட்டவங்க  படிக்கறதும்,..! சேர்ந்து  படிக்கற  யாருமே என்னயக் கூடச்  சேத்துக்கவே  மாட்டாங்க..டீச்சர்களும் பெரிய எடத்துப் பொல்லாப்பு நமக்கெதுக்குங்கறது மாதிரி விளக்கமாவேதான் இருப்பாங்க.
அப்ப எங்கிட்ட எதையுமே நெனக்காம   பேசுன   மொதப் பையன் ‘குணா’ மட்டுந்தான்..

எப்பவும் தல நெறய எண்ண  வச்சுப் படிய வாரி,முழுக்கை சட்டய மேல வரைக்கும் முழுசாப்  பட்டன் போட்டிருப்பான்.ரொம்ப நல்லாப் படிப்பான். அப்போ எங்க ஊர்ல பத்தாமோப்பு வரைக்கும் ஆம்பள பொம்பள சேர்ந்து படிக்கிற ஸ்கூல் இருந்துச்சு.பதினொன்னா வகுப்புலேர்ந்து “பாய்ஸ் ஸ்கூல்,கேர்ள்ஸ் ஸ்கூல் ”ன்னு பிரிஞ்சு பக்கத்தூர்ல போயிப் படிக்கோணும்.இப்ப சமீபமாத்தான் நாங்க படிச்ச ஸ்கூல கேர்ள்ஸ் ஸ்கூலா மாத்திட்டாங்க..

குணாவுக்கு  நான்னா ஒரு தனிப் பிரியம். எனக்கு சுட்டுப் போட்டாலும் கணக்குப் பாடம் வராது. அதுவும் கணக்கு எடுக்கற சொரணாம்பா டீச்சருக்கு என்னக் கண்டாலே வேப்பங்காய்தான்.எதாச்சும்  ஒண்ணு மாத்தி ஒண்ணு நொடுக்கு நொடுக்குன்னு சொல்லிட்டே இருப்பாங்க.ஒரு நா கணக்கு தப்பா போட்டுட்டேன்னு..“மேட்ச்சுக்கு மேட்சா மினுக்கிட்டு வரத் தெரியுதுல்ல..கணக்க மட்டும்  போடத் தெரியாதா.? இருக்கற வசதிக்கு எங்கயாச்சும் கான்வென்ட்டு கீன்வெண்டுன்னு போயி படிக்க வேண்டியதுதானே.? இங்க வந்து எங்க உசுர எடுக்கறது..?!”ன்னு ஒரப்பாத் திட்டுனாங்க.. சொரணாம்பா டீச்சர் எங்களுக்கு  ஒரு வகையில சொந்தங்கறதுனால தாத்தாகிட்ட பயமெல்லாம் கிடையாது.

எல்லோர் முன்னாடியும் கண்ணுல தண்ணி கரைகட்ட தல குனிஞ்சு நின்னவள வகுப்புப் பசங்க எல்லாம் குறுஞ் சிரிப்போட பாத்துகிட்டு இருந்தாங்க. அப்பல்லாம் இப்ப மாதிரி ஒன்பதாம் வகுப்பு படிக்கறப்பவே  பத்தாங்கிளாஸ் பாடமெல்லாம் சொல்லிக் கொடுக்க  மாட்டாங்க.ஸ்பெஷல் கிளாஸ் எல்லாம் எப்பவாச்சும் சனிக்கிழம மட்டுந்தான் வெப்பாங்க.அன்னைக்கு சாயங்காலம்  ஸ்கூல் விட்டுப் போயிட்டிருந்தேன். “நந்தினி ”ன்னு கூப்பிடற சத்தங் கேட்டுச்சு. குணாதான் பின்னாடி சைக்கிள்ல வந்து கூப்பிட்டான்.

“என்னடா.‌?!”
“உனக்கு கணக்கு வராதா..?! ”
“அதுனாலதானே டீச்சர் திட்டுனாங்க..”
“ஏன்.. சொரணாம்பா டீச்சர்கிட்டயே டியூசனுக்குப் போக வேண்டியதுதானே..?!”
“எங்க தாத்தாவுக்கு டியூசனால்லே புடிக்காது டா..பொட்டப்புள்ளைங்க ஆறுமணிக்கு மேல வெளித்தெருவுக்கு போறதான்னு சத்தம் போடுவாரு..”
“சரி.. அப்படின்னா தெனத்துக்கும் அரமணி முன்னாடி ஸ்கூலுக்கு வந்துரு.நாஞ் சொல்லிக் தாரேன்.. எனக்கு கணக்கு  அருமயா வரும்..”அரமணி நேரம் முன்னாடி போறதுக்கெல்லாம் வூட்ல ஒண்ணும் சொல்ல மாட்டாங்கறதுனால, நிதமும் குணா எனக்கு கணக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சான்.யாருமே இல்லாம தனிச்சுக் கெடந்த எம் மனசுக்குள்ள குணாவோட ஸ்நேகிதம் எதமாப் பாவ ஆரம்பிச்சுது.

தெனமும் ஸ்கூல் விட்டு வாறப்ப எங்க பாட்டி வூட்டுத் தெரு  வரைக்கும் சைக்கிள தள்ளிக்கிட்டே பேசிட்டு வருவான். எனக்கு டிராயிங் போடறதுக்கு அவ்வளவுக்கா வராது.குணாதான் ரெக்கார்ட் நோட்ல படமெல்லாம் போட்டுத்  தருவான். மாதிரி வடிவத்துக்கு ஒட்டற எலையெல்லாங் கூட அவந்தான் கொண்டாந்து தருவான்.ஒரு தடவ காச்சல்ன்னு ரெண்டு நாளு லீவு போட்டுட்டேன். வூட்டுக்கேத் தேடிட்டு வந்துட்டான்.நல்ல வேளயா தாத்தா வூட்ல இல்ல. “உன்னப் பாக்க கூடப் படிக்கிற பையன் வந்துருக்கான்னு பாட்டிதான் சொன்னாங்க. அத்தோட சூதனாம்புள்ள வூட்டுக்கெல்லாம் பசங்க தேடி வாரது தாத்தாக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்..” நொடிச்சுகிட்டே போனாங்க.

ஆனா, பாட்டி சொன்னத நா குணாகிட்ட சொல்லாம மறச்சுட்டேன். அடுத்த தடவ வந்தா சொல்லிக்கலாம்னு வுட்டுட்டேன்.அப்பதான்  எங்கூர்ல “தைப்பூசத் தேருத் திருவிழா”வந்துச்சு. எப்பவும் தைப்பூசம்னாலே ஊரே ரண்டு பட்டுப் போயிரும். சுத்துப்பட்டு அத்தன கிராமத்துக்கும் அதான் பெரிய  திருவிழாங்கறதுன்னால சனமா நெரம்பி வழியும்.காவடி ஆட்டமும், பால் கொடந் தூக்கறவங்களும்,முக்குக்கு முக்கு கட போடறவங்களுமா ஒரே கொண்டாட்டமா இருக்கும். கொடி கட்டுலேர்ந்து பாஞ்சு நாளும் விழாதான்.ஒவ்வொரு குல மடத்துக்குமா சுவாமி விருந்தாடப் போறதும்,அந்தந்த மடத்துக்காரங்க அவங்க ஒரம்பரைக்கெல்லாம் அன்னதானம் போடறதுமா அமர்க்களப்படும். தேரு முடிஞ்சு‌, முருகன் வள்ளி தேவானயோட மஞ்ச நீராடற வரைக்கும்  ஊரே கதம்ப சாப்பாடும் பூவும் கற்பூரமுமா கலந்து கட்டுன வாசமா அடிக்கும்.

எல்லாத் தியேட்டர்லயும் ஒரு நாளைக்கு ஐஞ்சு ஷோ ஓடும். அப்படியும் டிக்கெட்டுக்கு அடிச்சுப்பாங்க.பெரும்பாலும் அப்ப வந்த ரிலீஸ் படமாத்தான் கொண்டாருவாங்க.எங்க பாட்டி வூட்லேயும் திருவிழா முடியற பத்து நாளும் நெல கொள்ளாத சொந்தங்களா வந்து தள்ளும்.அப்படி வந்த சொந்தக்காரங்க விருந்து பலகாரம் கொறையில்லாம சாப்பிட்டு அப்ப ஆடிகிட்டு இருக்கற சினிமாவப் பார்த்துட்டுப் போனாத்தான் திருப்தியா போகும். இல்லன்னா..“என்னடா  கவனிக்கறாங்க.. ஒரு சினிமாக்கு கூட கூட்டிட்டுப் போல”ன்னு கொற சொல்லுவாங்க. அதுனால எங்க தாத்தாவும் ஒண்ணும் சொல்லாம வுட்டுருவாரு.

அந்தத் தடவ வந்த ஒரம்பற சனத்த சினிமாக்கு கூட்டிட்டு போலான்னு பார்த்தா , என்னதான் அடிச்சுப் பிடிச்சும் டிக்கெட்டே கெடக்கல. இத்தனக்கும் “பாலமுருகன் , தேவகிரி , அண்ணமார்”னு மூணு தியேட்டர் எங்க ஊர்ல.ஆனா, எல்லாத் தியேட்டருமே நெரம்பி வழிஞ்சதுல பக்கத்துல அம்மாபாளையம் சித்ரா டெண்ட் கொட்டாய்க்கு மாமா கூட்டிட்டுப் போச்சு. எல்லாத்துக்கும் பேக் பெஞ்சு தான்.. இண்டர்வெல்ல “முறுக்கு.. முறுக்கு..”ன்னு  வித்துட்டு வந்த குரல் கேட்டுச்சு. யார்.. யாருக்கு  முறுக்கு வேணும்னு மாமா கேட்டுகிட்டே இருக்கறப்ப, முறுக்கு, போண்டாக் கூடயத்  தூக்கிட்டு இருந்த பையன் பக்கத்துல வந்தான். மொதல்ல குண்டு பல்பு வெளிச்சத்துல சரியா அடையாளந்
தெரியல.

அப்புறம் பாத்தா குணாதான் கூடயக் கையில வச்சுகிட்டு இருந்தான்.“டேய் குணா..”நீ என்னடா இங்கண்ணேன்..? “அப்பாக்கு உடம்பு செரியில்ல  ஸ்கூல் லீவுன்னு நா விக்க வந்தேன்னு ..” சொல்லிட்டே மறுபடி.. “முறுக்கு.. முறுக்கு..சூடா முட்ட‌போண்டா”ன்னு சத்தங் கொடுத்துட்டே போயிட்டான். கையிலிருந்த முறுக்கக் கடிக்கக் கூடத் தோணாம தெகச்சுப் போயிக் கெடந்தேன்.
அப்பதான் ஒண்ணு ஒரச்சது.. இதுவரைக்கும் தெனத்திக்கும் பேசுனாலும் குணாகிட்ட அவனோட  அப்பா என்ன வேல செய்யறாருன்னு கேட்டதே இல்லைன்னு..

அதுக்கப்புறம் எப்பவும் போலவே தேரு முடிஞ்சு ஸ்கூலுக்கு வந்தாலும், பொதுப் பரீட்சைக்கு நாளு நெருங்கிட்டதால மும்முரமா படிக்கத் தொடங்கிட்டோம் . குரூப்பூ ஸ்டடின்னு மிஸ் பிரிச்சு வச்சுட்டதனால குணாவும்,நானும் சாயந்திரம் ஒண்ணாச் சேர்ந்து போக முடியல.கடசி நாளு பரீட்சை முடிஞ்ச அன்னைக்குத்தான் நானும் குணாவும் பேச முடிஞ்சது.  வேற ஸ்கூல்ல பொதுப் பரீட்சை நடந்தது. கடைசி நாளுங்கறதுனால எல்லாப் பசங்களும் பொண்ணுங்களும் நடந்தே பேசிக்கிட்டே போலான்னு  முடிவு பண்ணி நடக்க ஆரம்பிச்சோம். வழக்கம் போல குணா சைக்கிளத் தள்ள நானும் கூட நடக்க ஆரம்பிச்சேன். எப்பவும் நா பேசலைன்னாக்கூட மூச்சுக்கு நூறு தரம் “நந்தினி.. நந்தினி”ன்னு பேசிட்டே வர்றவன்.. அன்னக்கி மௌனமா வந்தான்.
“என்னடா.. ஏன் பேசவே மாட்டேங்கற..”“நந்.. நந்தினி..”ன்னு தயங்கறான்.

“என்னடா.. என்ன.. இனிமே வேற ஸ்கூல்ல படிக்கப் போயிருவோம்னு கவலயா இருக்கியா”ன்னேன்.“ஆமா.. ன்னு எச்சில முழுங்கிட்டே சொன்னவன், சட்டுன்னு எம் மொகத்தப் பார்த்து.. “நந்தினி.. நா உன்ன ரொம்ப நேசிக்கறன் புள்ள.. கல்யாணம் பண்ணினா உன்னதான் பண்ணிக்கணும்னு ஆசைப்படறேன்னான்.”அவஞ் சொன்னதக் கேட்டவளுக்கு மொதல்ல சிரிப்புதான் வந்தது. சிரிச்சுகிட்டே,“ஏண்டா.. உனக்கென்ன கிறுக்கு பிடிச்சிருச்சா..? இப்பதான் பத்தாமோப்பு முடிச்சிருக்கோம். இன்னும் பிளஸ் டூ முடிச்சு டிகிரி படிச்சு..” “படிப்பெல்லாம் முடிஞ்சு வேலைக்கெல்லாம் போனப்புறந்தான்..”னு தயங்கித் தயங்கிச் சொன்னான்.

“அத அப்பப் பாக்கலாம்..இப்பப் போயி ஒழுங்கா பிளஸ் டூ படிக்கற‌ வேலயப் பாரு..”ன்னு சொன்னேன்.. ஆனா ஏனோ மனசுக்குள்ள “முறுக்கு.. முட்ட போண்டா”னு குணாவோட குரல் கேட்டுச்சு. நா சொன்னதைக் கேட்டோன்னிமே எம் மொகத்தையே பாத்தவன் எதுவுமே பேசல.. ஆனா கண்ணுல தண்ணி துளிர்ச்சு.,மொகமே வாடிப் பேயிருச்சு கொஞ்ச நேரத்துக்கு வானத்தயும் பூமியையும் மேலயும், கீழயுமாப் பாத்துக்கிட்டு இருந்தான்.

அப்புறமா
“வா புள்ள.. போலான்னு”குரல் கம்ம
சைக்கிளத்  தள்ளிட்டு நடந்துட்டான்.
அதுக்கப்புறம் மார்க் லிஸ்ட்ட
வாங்கப் போன அன்னக்கிக்கூட அவனப்
பாக்கல.. அவனும் எம்பத்தஞ்சு
பெர்சண்டேஜ் எடுத்திருந்தான்.

“நந்தினி.. குணாவோட அப்பா செத்துப் போயிட்டாரு.. பாவம் இனி மேல படிப்பானோ என்னவோ தெரியல புள்ள”ன்னு எங்ககூடப் படிச்ச கோவால் சொன்னான். “அடப்பாவமே”ன்னேன். டேய் நந்தினி.. ரொம்ப வருத்தப்பட்டுச்சுன்னு குணாங்கிட்ட சொல்லு..”ன்னு அவங்கிட்ட சொல்லி அனுப்பினேன். “சரி”ன்னு  நடந்த கோவாலன் திரும்ப வந்து..“நீன்னா குணாக்கு உசுரு. நீ நேர்ல போனின்னா கொஞ்சம் மனசு ஆறும் அவனுக்கு”ன்னான்.கோவாலன் சொன்னதக் கேட்டோன்னிமே குணா வூட்டுக்குப் போலான்னு தோணினத தாத்தா மொகத்த நெனச்சு முழுங்கிட்டேன்.

அதுக்கப்புறம் மேல   படிக்கறதுக்கு  வேத்தூருக்குப் போனதுல, புது எடம், சூழல், சிநேகக்காரங்கன்னு  குணாவோட நெனப்பு அப்படியே பின்னுக்குப் போயிருச்சு.. ஆனா எங்க கண்ணாலப் பத்திரிக்கய நெனப்பா  குணாவோட அட்ரஸுக்கு தபால்ல  போட்டேன்.. குணா கல்யாணத்துக்கு வருவான்னு நெனச்சேன். ஏனோ வரல.

புகுந்த வீடும் பெரிசுங்கறதுனால அதிகமா பாட்டி வூட்டுக்கும் வரவே  முடியல. எப்பாவது வந்தப்பவும் குணா கண்ணுலேயே படல. அன்னைக்குத்தான் ரொம்ப நா கழிச்சுப் பாக்குறேன்.
“ஏ..புள்ள ..மறக்காம வூட்டுக்கு வா..”ன்னு கத்தற சத்தங் கேட்டு நெனப்புக்கு வந்தேன். “குணா”தான் வண்டிய ஓட்டிட்டு கத்திட்டே போனான். அப்பதான் எவ்வளவு மெல்லமா நடந்துகிட்டுருக்கேனே புரிஞ்சுச்சு.  

“யார் நந்து.. இப்படி சத்தமா கூப்பிட்டுகிட்டே போறாங்கன்னு..” பக்கத்துல வேனக் கொண்டாந்து நிறுத்திட்டே கேக்கறாரு இவரு.“எங்கூட பத்தாவது படிச்சாங்க..பேரு குணா.. இங்கதான் அண்ணமார் தியேட்டர்ல காண்டீன் வெச்சுருக்கான். நீங்க போன வேல முடிஞ்சுதா. வெரசா வந்துட்டீங்க..”“அந்தக் கடங்காரன் எங்கியோ ஊருக்குத்  தொலஞ்சுட்டான்.. நீ வண்டில ஏறு.. காண்டீன்  வெச்சுருக்காருன்னா சொன்ன.. அறிமுகப்படுத்திட்டு ஆர்டர் கேட்டுருக்கலாமே..?!

“அதுக்கென்னங்க.. போறப்ப அப்படியே அண்ணமார் தேட்டர் வழியாப் போனாப் போச்சுன்னு சொல்லிட்டே ஏறப் போனவளோட‌ கண்ணுல பட்டுச்சு எங்க வேனோட பக்கவாட்டுல  எழுதியிருந்த அந்த வாசகம்..மொத்த வியாபாரம், “நந்தினி முறுக்கு வகைகள்...”அதையே ஒரு நிமிஷம் பார்த்த என்னோட காதுல கேட்டுச்சு “முறுக்கு.. முறுக்கு.. முட்ட போண்டா”ங்கற என்னைக்கோ கேட்ட ‘குணா’வோட குரல்..!

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
 • tirupati-murmu-5

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்