SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

மக்கள் கொண்டாடும் கோட்டைமேடு ஃபுட் ஸ்ட்ரீட்!

2022-11-23@ 17:47:04

நன்றி குங்குமம் தோழி

சைவ ஓட்டல் என்றால், தோசை, இட்லி, பூரி, மீல்ஸ் போன்ற உணவுகளை சுவைக்கலாம். இதுவே அசைவ ஓட்டல் என்றால், பிரியாணி, சிக்கன் கிரேவி, மட்டன் சாப்ஸ் என்று ஒரு பிடி பிடிக்கலாம். மற்ற வித்தியாசமான உணவுகளான கபாப், ஷவர்மா, கிரில் போன்ற உணவுகளுக்கு என தனிப்பட்ட உணவகங்கள் உள்ளன. நாம் விரும்பும் உணவுகளை சுவைக்க அந்தந்த ஓட்டலுக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. காரணம், அந்த தெருவுக்குள் சென்றால் போதும். நாம் விரும்பும் உணவுகளை
விருப்பம் போல் சுவைக்கலாம்.

ஆம்! கோவையில் உள்ள கோட்டை மேடு என்ற இடம் சாலை உணவுகளுக்கு பிரதானம். இங்கு ஒரு தெரு முழுதும் பல வகையான உணவகங்கள் உள்ளன. பிரியாணி முதல் கபாப், கிரில், ரோஸ் மில்க்... என நாம் நினைக்கும் உணவுகளை இங்கு சுவைக்கலாம். இந்த ஃபுட் ஸ்ட்ரீட் கலாச்சாரம் பல மெட்ரோ நகரங்களில் பரவி வருகிறது. இரவு நேரத்தில் திருவிழா போல் காட்சியளிக்கும் இந்த உணவகங்கள். அங்குள்ள உணவுகளை ருசிப்பதே ஒரு வகையான கொண்டாட்டம்தான். ருசியான உணவிற்கு...

மனிதர்களின் நாக்கு அடிமை. அது மட்டுமில்லாமல் ஒரு உணவினை பார்க்கும் போதும்... அதன் மணத்தை நுகரும் போதும்... பட்டனைத் தட்டினார் போல் நம் மூளையில் சுரக்கும் திரவம்... நம் நாவில் அந்த உணவின் சுவையினை உணரச் செய்ய வைக்கும். அப்படி ஒரு மாயசக்தி சுவையான மணமான உணவிற்குண்டு. இது சாலையோர கடைகளில் மட்டுமே கிடைக்கக் கூடியது. ஒரே இடத்தில் பல வகையான உணவகங்கள் மட்டுமில்லாமல் பல வகையான உணவுகளைப் பார்க்கும் போது... நம்மை அறியாமல் நம் மனம் குதூகலமாகும். அப்படியான ஒரு இடம் தான் கோவையில் இருக்கிற கோட்டைமேடு. உக்கடம் பகுதியில் இருக்கும் கோட்டை மேடு சாலையோர உணவுகளின் தொட்டில் என சொல்லலாம்.

ஒரு முறை கோட்டைமேட்டில் உள்ள உணவு வகைகளை பார்க்கவே அரை நாள் ஆகும். அவ்வளவு நீளமான உணவு பட்டியலோடு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது அங்குள்ள சாலையோர கடைகள். அந்த தெருவுக்குள் நுழைந்தவுடனே எண்ணையில் குதித்துக் கொண்டிருக்கும் கைமா வடைகள் நம் சுவையின் மண்டலத்தினை வரவேற்க காத்திருக்கும். அந்த வடைகளை சுவைக்காமல் நம்மால் அடுத்த கடைக்கு நகர முடியாது.

அடுத்து தீயில் பொறியும் கபாப், தந்தூரி வகை உணவுகள். மறுபக்கம் சிக்கன், மட்டன், பீப் பிரியாணிகளின் மணம் சுண்டி இழுக்கும். அதை ருசித்து விட்டு கடைசியில் இளநீர் நுங்கு சர்பத்தை குடித்து முடிக்கும் போது உணவுகளை சுவைத்ததோடு மட்டுமில்லாமல் கோட்டைமேட்டையும் சுற்றி பார்த்திருப்போம். ‘‘எங்களுக்கு விடிவதே மதியம் 12 மணிதான். இங்குள்ள கடைகளுக்கு மக்கள் கூட்டமே 10 மணிக்கு மேல தான் வருவாங்க’’ என பேச ஆரம்பிக்கிறார் யசீர்.

‘‘கோட்டைமேடு என்றாலே அங்கு ஃபுட் ஸ்ட்ரீட் தான் பிரபலம். நான் உக்கடம் பகுதியில் இருக்கிற கோட்டைமேட்டில் ஹாஜியார் பிரியாணி என்ற பெயரில் பிரியாணி கடை ஒன்றை நடத்திட்டு இருக்கேன். 40 வருஷத்துக்கு முன்னாடி இந்தப் பகுதியில் ‘கடுப்பங்கடை’ன்னு ஒரு பரோட்டா கடை இருந்தது. மிகவும் பிரபலமான கடை. அந்த கடையில விக்கிற கருப்பு சால்னாவுக்காக நிறைய பேரு அடிமைன்னு சொல்லலாம். அதை பரோட்டாவுடன் சேர்த்து சாப்பிடவே இந்த கடையை தேடி நிறைய பேர் வர ஆரம்பிச்சாங்க.

அந்த சால்னாவின் சுவை போல் வேறு எங்கும் சால்னாவை ருசித்திருக்க மாட்டீங்க. அவ்வளவு சுவையா இருக்கும். அங்கு மக்களின் கூட்டம் வருவதால், பரோட்டா கடைக்கு அருகில் ஒரு பிரியாணி கடை வந்தது. மேலும் கோட்டைமேடு அருகே ரயில் நிலையம் மற்றும் மருத்துவமனை இருப்பதால், ரயில் நிலையத்திற்கு செல்பவர்கள் மற்றும் மருத்துவமனைக்கு வருபவர்கள் இங்கு சாப்பிட வர ஆரம்பிச்சாங்க. இரவு எந்த நேரம் போனாலும் பிரியாணியும் பரோட்டாவும் கிடைக்கும். ஊருக்கு புதுசா வரவங்க நல்ல சாப்பாடு சாப்பிடணும்ன்னு கேட்டா இந்த இடத்தை தான் சொல்வாங்க. ஒவ்வொரு உணவும் அவ்வளவு ருசியா இருக்கும்.

பரோட்டா மற்றும் பிரியாணிக் கடையை தொடர்ந்து புட்டு, சிக்கன், ரோல், ஜூஸ் கடை, சர்பத் கடைன்னு ஒவ்வொரு கடையாக இங்கு வரத்துவங்கியது. காலையில் புட்டு, ஆப்பம் கிடைக்கும். அது மட்டுமில்லை மதியம் முதல் இரவு வரை ஜூஸ், சர்பத், பரோட்டா, எக் ரோல், சிக்கன் ரோல், நுங்கு, பால், இளநீர். சிக்கன் கபாப், சிக்கன் ரோல், பீப் தவா கறி, கொத்து பரோட்டா, இடியாப்பம் கொத்து, மில்க் ஷேக் என பல வகையான உணவுகள் இங்கு கிடைக்கும். எத்தனை உணவு வகைகள் இருந்தாலும், இங்கு பிரியாணி தான் ஸ்பெஷல். இந்த தெருவின் சிறப்பே... இரவு இரண்டு மணிக்கும் இங்கு உணவு கிடைக்கும்.

சிலர் இரவு காட்சி சினிமா பார்த்து விட்டு இங்கு சாப்பிட வருவார்கள். நாங்களே இரண்டு மணிக்கெல்லாம் பிரியாணி தயார் செய்து பரிமாறி இருக்கிறோம். இப்போ கிட்டத்தட்ட 20 கடைகள் இந்த பகுதியில் இருக்கு. அதில் 600 பேர் வேலை செய்றாங்க. இப்போ இங்க கெடுபிடிகள் அதிகமானதால் இரவு 11 மணி வரை தான் திறந்திருக்கிறோம். இதேபோல் சரவணம்பட்டியிலும் ஃபுட் ஸ்ட்ரீட் உணவகங்கள் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்காக துவங்கப்பட்டு இருக்கு. அங்கு இரவு முழுதும் உணவுகள் கிடைக்கும்’’ என்றார் யசீர். ருசியான உணவு என்றால் மக்கள் அதை கண்டிப்பாக கொண்டாடுவார்கள் என்பதில் கோட்டைமேடு ஃபுட் ஸ்ட்ரீட் உணவகங்களே ஒரு உதாரணம்.

தொகுப்பு: மா.வினோத்குமார்

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
 • tirupati-murmu-5

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்