SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

பெண்களுக்கு வரும் மனப்பதற்ற நோய்

2022-11-23@ 17:42:53

நன்றி குங்குமம் தோழி

Anxiety disorder

புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் 5% முதல் 7% பேருக்கு மனப்பதற்றம் இருக்கிறது.

பெரும்பாலானவர்களுக்கு தங்களுக்கு மனப்பதற்றம் இருக்கிறது என்பதே தெரியாது.

Anxiety disorder என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மனப்பதற்றம் இரண்டு மடங்கு பெண்களுக்கே அதிகம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என நம்மிடம் பேச ஆரம்பித்தவர் மருத்துவ உளவியல் நிபுணர் டாக்டர் சுனில்குமார். பெண்களுக்கு வரும் மனப் பதற்றம் குறித்து அவரிடம் மேலும் பேசியபோது..அனுபவங்களின் தொகுப்பே ஒருவரின் சிந்தனை. சிந்தனைகள் என்பது தகவல்களின் களஞ்சியம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தகவல்களை தொகுத்து வைத்திருப்பார்கள். இதில் ஒவ்வொருவரின் அனுபவமும் வேறுபடுகிறது. அந்த தொகுப்பில் பிரச்சனைகள் எழும்போது, சுற்றியிருக்கும் சூழலை அனுமானிக்கும் வேலையினை சிந்தனை செய்கிறது. அவர்கள் சூழலில் அச்சுறுத்தல் எதுவும் இருந்தால், அந்த அச்சுறுத்தலை சமாளிக்க உடலுக்கு கொஞ்சம் சக்தி தேவை. அந்த நேரம் மூளை நமது உடலில் சில அமிலங்களை அதிகமாக சுரக்கும். இதற்கு பெயரே ஸ்ட்ரெஸ் ஹார்மோன்.

மனப்பதற்ற நோயில் குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் மனப் பதற்றத்தை மூன்று கோணங்களில் நாம் பார்க்கலாம். முதலாவது ‘உடல்’ சார்ந்தது. இரண்டாவது ‘மனம்’ சார்ந்தது. மூன்றாவது ‘சமூகம்’ சார்ந்தது.

உடல் சார்ந்த மனப்பதற்றம்

இந்தப் பதற்றம் வருவதற்கு அவர் பெண்ணாக இருப்பதே மிக முக்கியக் காரணமாக இருக்கிறது. அதாவது பெண் பூப்படைவதில் ஆரம்பித்து அவளின் இறுதி மாதவிடாய் காலகட்டம்வரை மாதாமாதம் அவளுக்குள் நடக்கும் மாற்றத்தினால், பெண்கள் மனப் பதற்றத்திற்குள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். அதேபோல் மகப்பேறுக்குப் பின் உருவாகும் போஸ்ட் பார்ட்டம் டிஃப்ரஷனும் (postpartum depression) இதில் அடங்கும். இந்த காலகட்டங்களில் ஹார்மோனல் ஆஸ்பெக்ட்ஸ் பெண்களின் உடலில் மாற்றங்களை ஏற்படுத்தி மனதளவிலும் mood changes ஏற்படுத்தும். விளைவு பெண்களுக்கு மனப் பதற்றம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு இதில் அதிகமாக உள்ளது.

மனம் சார்ந்த மனப்பதற்றம்

இன்செக்யூர்ட் ஃபீலிங் பெண்களுக்கே அதிகம் இருக்கும். அதுவும் வளரிளம் பெண்கள், தாங்கள் பூப்பெய்தி விட்டதை அறியும் அந்த கால கட்டம் identity crisis என்பதால்,  உடல் ரீதியான மாற்றங்களை அவர்கள் சந்திக்க நேரும்போது எரியும் நெருப்பில் எண்ணை விட்ட கதையாக அதிகப்படியான பதற்றம் அவர்களை தொற்றிக்கொள்ளும்.

சமூகம் சார்ந்த மனப்பதற்றம்

நமது சமூகம் ஆணாதிக்கம் நிறைந்த சமூகம். பாலின பாகுபாடு நமது நாட்டில் அதிகமாக உள்ளது. ஒப்பீட்டளவில் பெண்களுக்கான பொதுவெளி என்பது குறைவு. இதன் காரணமாய் பெண்களின் பங்களிப்பு வெகுவாகக் குறைகிறது. இது சமூகம் சார்ந்த மனப்பதற்றத்தை பெண்களுக்கு ஏற்படுத்துகிறது.இந்த மூன்று காரணங்களின் கூட்டுக்கலவையே பெண்களுடைய மனப் பதற்றத்திற்கு முக்கிய அடிப்படை. இதுவே இவர்களின் அன்றாட வாழ்வை மேலும் சிக்கலுக்குள் கொண்டு செல்கிறது.

தங்களுக்கு ஏற்படும் பயத்துக்கும் பதற்றத்திற்குமான வித்தியாசத்தை பெண்கள் முதலில் உணர வேண்டும் என்ற மருத்துவர், பயம் என்கிற உணர்வு எல்லோருக்கும் கண்டிப்பாக இருக்க வேண்டும். பயம் வந்தால்தான் நல்லது. உதாரணத்திற்கு காட்டுக்குள் நடந்து செல்லும்போது பாம்பு கடிக்கும் என்கிற பய உணர்வு வந்தால்தான் பாதுகாப்பு குறித்த விசயத்தை அடுத்து நாம் யோசிப்போம். இந்த உணர்வே நம்மை பாதுகாப்பாய் வைத்துக்கொள்ளும். ஆனால் நமது பயத்திற்கான காரணி தெளிவாகவும், கான்கிரீட்டாகவும் இருக்க வேண்டும்.

ஆனால் பதற்றம் என்பது பயத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இது மனதளவில் உருவாவது. சுருக்கமாக இல்லாத ஒன்றை நாமாகவே இருப்பதாக அதீதமாக கற்பனை செய்வது. உதாரணத்திற்கு வராத பாம்பை வீட்டுக்குள் வந்து விடுமோ என நினைப்பதே பதற்றம். இங்கு பதற்றத்திற்கான காரணி கான்கிரீட்டாய் இல்லாமல் எதிர்காலத்தை நோக்கிய சிந்தனையாக வெளிப் படும். நாளைக்கு இப்படி எனக்கு ஆயிருச்சுனா..?! நாளைக்கு எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால்..?! நான் பொருளாதார ரீதியாக பின் தங்கீட்டேனா..?! என்கிற மாதிரியான சிந்தனைகளே பதற்றத்தின் அடிப்படை. இவை உடலளவில் பல மாற்றங்களை உருவாக்கும்.

உடல் மாற்றத்திலும் மூன்று முக்கிய விசயங்கள் உள்ளது. முதலாவது நெஞ்சு படபடவென அடிப்பது. கை கால் உதறல் எடுப்பது. உடல் சில்லென மாறுவது அல்லது உடல் சூடாகி வேர்த்துக் கொட்டுதல். நாக்கு வறண்டு போதல். யூரின், மலம் போன்ற உடல் கழிவுகள் வெளியேறுவது போன்ற உணர்வைத் தோற்றுவித்தல். இப்படியான மாற்றங்களை எழுச்சி நிலை (arouses) என்போம். இரண்டாவது, அவர்களின் சிந்தனைகள் எப்போதும் எதிர்மறையாக (anticipation) மாறுவது. இயல்பாக நடக்கும் விசயத்தையும் எதிர்மறையாக சிந்தித்து தன்னை வருந்துவது.

அல்லது அதீதமாகக் கோபப்படுவது. மூன்றாவதாக நிகழ்வது அவாய்டென்ஸ். அதாவது பதற்றம் மூலம் உடலில் ஏற்படும் எழுச்சியால், மனதில் ஏற்படும் எதிர்மறை சிந்தனையால் அவாய்டென்ஸ் நிகழ்கிறது. குறிப்பாக வெளிநபர்களை சந்திப்பதையும், வெளிச் சூழலையும் முற்றிலும் தவிர்ப்பது. அந்த நேரத்திற்கு அது நிம்மதியாக இருந்தாலும் இது மேலும் அவர்களை சிக்கலாக்கும். மனப்பதற்றத்தில் இருப்பவர்கள் இந்த மூன்று நிலைக்குள்ளும் வட்டமிட்டுக்கொண்டே இருப்பார்கள். இந்த மூன்று நிலைக்குமே மருத்துவத்தில் தீர்வு உண்டு. உடல் நம்மையும் மீறி செய்யும் எழுச்சி நிலையை(arouses) கட்டுப்படுத்த சில உளவியல் ரீதியான பயிற்சிகள் இருக்கிறது. இதற்கு பெயர் ரிலாக்சேஷன் எக்சஸைஸ். இதை மருத்துவத்தில் மைன்ட்புல்நெஸ் என்போம். இதனை செய்யும்போது மனப்பதற்றம் குறையும்.

பதற்றத்திற்குள்ளோ நெருக்கடிக்குள்ளோ நாம் போகும்போது, அதை ஆங்கிலத்தில பைட் ஆர் ஃப்ளைட் ரெஸ்பான்ஸ் (fight or flight response) என்போம். அதாவது எதிர்கொள்வது அல்லது அதில் இருந்து தப்பித்து ஓட முயற்சிப்பது. இது இரண்டைச் செய்வதற்கும் உடம்பிற்கு சக்தி தேவை. அப்போது மூளை நமது உடலளவில் சில மாற்றங்களை ஏற்படுத்திவிடும்.  இது நமக்குள் மேலும் சிக்கலை உருவாக்கி, நமது மூடிலும் மாற்றங்களை உருவாக்கும்.

நம் எண்ணங்களுக்கும் எமோஷனலுக்கும் எப்போதும் நெருங்கிய தொடர்பு உண்டு. பாஸிட்டிவ் எண்ணங்கள் பாஸிட்டிவ் எமோஷனலை உண்டு பண்ணும். நெகட்டிவ் எண்ணங்கள் நெகட்டிவ் உணர்ச்சிகளைத் தூண்டும். பதற்றத்தை நமக்குள் எப்படியாக வளர்த்துக் கொண்டோமோ, அது மாதிரி அமைதியையும் நமக்குள் நம்மால் வளர்க்க முடியும். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டுமெனில், நமது எண்ணங்களை கையாளக் கற்றுக்கொள்ள வேண்டும். இதற்கென சில உளவியல் யுக்திகள் உள்ளது. இதன் வழியே ஒருவரின் எண்ணங்களை மறுசீரமைக்க முடியும். சுருக்கமாகச் சொல்வதென்றால மாற்றி யோசி என்பதே. யோசிப்பதை மறுசீரமைத்து மாற்றி யோசிக்கக் கற்றுக் கொண்டால், யோசனைகளால் உருவாகும் உணர்ச்சி தடுக்கப்படும். இதற்கு cognitive behavioral theory எனப் பெயர்.

மூன்றாவது சிகிச்சை, தவிர்த்தல் நிலைக்கு (avoidance). அதாவது தவிர்க்கின்ற விசயத்தை நேருக்கு நேராய் சந்திப்பது. இது exposure based therapy எனப்படும். பதட்டம் தரக்கூடிய சூழலை ஒரு படிநிலையில் நேரடியாக எதிர்கொள்வது. இதில் திறன் மேம்படும். சில வியாதிகளை தடுப்பதற்கான எதிர்ப்பு சக்தி நமது உடலிலேயே உள்ளது.

நம்மைப் பார்த்ததும் ஒருவர் சிரிக்கவில்லை என்றால் மூளை உடனே அவர் திமிர் பிடித்தவர் என யோசிக்க ஆரம்பிக்கும். அவர் அவசரமாகப் போனார் அதனால் கவனிக்கலை என்று நினைத்தால் அது நடுநிலையான சிந்தனை. நான் ஏதோ தப்பு பண்ணீட்டேன். அதனால் அவர் என்னிடம் பேசவில்லை என நினைக்க ஆரம்பித்தால் பதற்றம் தானாகவே ஒட்டிக்கொள்ளும்.  இங்கே சூழலை அனுமானிக்கும் தன்மை ஒவ்வொருவருக்கும் மாறுபடும். இதில் தவறு நேர்ந்தால் மறு அனுமானம் செய்வதற்கும்..

சிந்தனைகளை தன்னறியச் செய்வதற்கும் சிகிச்சையில் சொல்லித்தரப்படும். இது மனரீதியான பயிற்சி. உங்கள் சிந்தனைக்கும் உணர்ச்சிக்கும் உள்ள தொடர்பை கண்டு பிடித்து அறிவது. சூழலை அனுமானிப்பதை கண்டுபிடிப்பது. இதற்கு பெயரே cognitive behavioral theory.பதற்றத்தில் சிக்கியவர்களுக்கு சாப்பிடத் தோன்றாது, தூங்கத் தோன்றாது. ஓய்வு எடுக்க மனம் நினைக்காது, யாரையும் பார்க்கவும் பேசவும் மனம் விரும்பாது. நம்முடைய தினப்படி வாழ்வை அதிகமாக சீரழிக்கும், அதன் மூலமாக பாதிப்பை ஏற்படுத்தும் நிலையினை அடைந்தால் மட்டுமே மருந்து மாத்திரை என அடுத்த கட்டத்திற்குப் போகவேண்டும். அதுவரை உளவியல் சிகிச்சையே சிறந்தது.

நமது எதிர்ப்புசக்தி வேலை செய்யாது. நமது மனதை சீராக்கும் யுக்தி நமது மனதிற்குள்ளேயே உள்ளது. அந்த யுத்திகளை கற்றுக்கொள்ளத்தான் உளவியல் நிபுணர்கள் இருக்கிறார்கள். மனப்பதற்ற நோய் வந்ததுமே மருந்து மாத்திரைகளை எடுத்தால் மாத்திரை மட்டுமே வேலை செய்யும்.உளவியல் சிகிச்சையில் ஒருவர் தன்னையே பரிசோதனை செய்து பார்ப்பது.. பதற்ற சிந்தனை என்ன மாதிரியான உணர்ச்சியை தூண்டுகிறது என யோசித்து எழுதுவது.. இதனால் தன் நடத்தை எப்படியாக மாறுகிறது எனக் கண்காணிப்பது என பயிற்சிகள் இருக்கும். இதற்கு 3 முதல் 6 மாதம் இடைவெளி எடுக்கும். 10 முதல் 12 செஷன்களில் பயிற்சிகள் இதற்கென உள்ளது. ஒவ்வொரு பயிற்சி நேரமும் 45 நிமிடங்கள் எடுக்கும்.

முக்கியமாக ஒருவரின் மனப் பிரச்சனைக்கு அந்த தனிநபர் மட்டுமே காரணம் கிடையாது. சமூக காரணிகளையும் முன்நிறுத்திப் பார்க்க வேண்டும். இங்கே பெண்களுக்கு ஏற்படும் மனப்பதற்றம் என்பது அவர்களின் சூழல் சார்ந்தும் இருக்கிறது. அவர்களின் சூழலே அதனை புலப்பட வைக்கும். சமூகத்தை சீரமைத்து சில மாற்றங்களை கொண்டு வந்தாலே மனரீதியான மாற்றங்கள், நடத்தை ரீதியிலான மாற்றங்கள், சிந்தனை ரீதியிலான மாற்றங்கள் தானாக வரும்.

சமீபத்தில் வந்த பாலினப் பாகுபாடு ஆய்வறிக்கை (Gender gape study) இந்தியாவில் பாலினப் பாகுபாடு இல்லாமல் ஆவதற்கு 136 வருடங்கள் ஆகும் என்கிறது. பெண்களுக்கு எதிரான சூழல் நமது நாட்டில் நிலவும்வரை, சமூகரீதியான மாற்றங்கள் நடக்கப் போவதில்லை. இதை தனி நபர் பிரச்சனையாக, முழுக்க முழுக்க பெண்களின் உடல் சார்ந்து யோசிக்காமல், சமூகம் சார்ந்து யோசிக்க வேண்டும். சமூகக் காரணிகள் சிலவற்றை மாற்றி அமைப்பதன் மூலம் பெண்களுக்கு பதற்ற நோய் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் நிச்சயம் உண்டு. முக்கியமாக பெண்களுக்கான இடம் சமூகத்தில் சமமாக இருக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்தல் மூலமே இது சாத்தியம்.

வாசகிகளின் கவனத்திற்கு!

அன்புள்ள வாசகிகளே... தாங்கள் எழுதும் படைப்புகள் மாதம் இருமுறை வெளியாகும் எங்களின் ‘குங்குமம் தோழி’ புத்தகத்தில் இடம் பெற்று வருகிறது. இதற்கான சன்மானமும் வாசகிகளுக்கு தவறாமல் அனுப்பி வைக்கப்படுகிறது. படைப்புகளை எழுதி அனுப்பும் வாசகிகள் தங்களின் அலுவலக பெயரினை குறிப்பிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். நீங்கள் புனைப்பெயரில் எழுதினாலும், படைப்புகளில் உங்களின் விலாசம் மற்றும் செல்போன் எண்களை குறிப்பிடும் போது, அலுவலக பெயரினை (அதாவது வங்கிக் கணக்குகளில் இடம் பெற்றுள்ள பெயர்) குறிப்பிட்டு அனுப்புங்கள். இதன் மூலம் தங்களுக்கு நாங்கள் அனுப்பும் சன்மானம் தடையில்லாமல் கிடைக்கப் பெறும் என்பதை குறிப்பிடுகிறோம். நன்றி, பொறுப்பாசிரியர்குங்குமம் தோழி.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
 • tirupati-murmu-5

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்