SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

35 ரூபாயில் 100 வகையான பேக்குகள்!

2022-11-22@ 17:30:23

நன்றி குங்குமம் தோழி

கவுசிக் கிருஷ்ணனும் அவரது மனைவி திவ்யா கவுசிக்கும் இணைந்து முழுக்க முழுக்க பெண்களைக் கொண்ட ஈகோ ஃப்ரெண்ட்லி பேக்குகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். சுமார் நூறு வகைகளான பேக்குகளுடன் ஒவ்வொரு பேக்கும் 3000 கணக்கில் எப்போதுமே அவர்களிடம் ரெடியாக இருக்கிறது. அதிகமாக உற்பத்தி செய்வதால், குறைந்த விலையில் விற்பனை செய்கிறார்கள். 35 ரூபாயில் தொடங்கி அதிகபட்சமாக 1000 ரூபாய் தான் இவர்களின் பேக்கின் விலை. அது மட்டும் இல்லாமல் இவர்களுடன் சுமார் 1500 பெண்கள் ரீசெல்லர்களாகவும் இணைந்து இருந்து பயன் பெறுகிறார்கள்.

‘‘என் மனைவி திவ்யாவும், அம்மா சித்ராவும் சேர்ந்து ஒரு திருமண நிகழ்ச்சிக்காக தங்கள் பட்டுப் புடவைக்கு மேட்சிங்கான பர்ஸை வடிவமைத்தார்கள். அந்த நிகழ்ச்சியில் இவர்களுடைய ப்ர்சை பார்த்த ஒருவர், தனக்கு இதே போல ஒரு நூறு பேக் செய்து கொடுக்கும்படி சொன்னார். அப்படி எங்களுடைய வீட்டு கேரேஜில் ஒரே ஒரு தையல் கலைஞர் மற்றும் தையல் மிஷின் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த ‘லக்ஷயா பேக்ஸ்’ என்று பேச ஆரம்பித்தார்.

கவுசிக். ‘‘எங்களுக்கு தேவைப்படும் போது மட்டுமே வந்து தையல் கலைஞர் எங்களுக்கு பைகளை தைத்துக் கொடுப்பார். இப்போது மாதம் சுமார் 20,000 பேக்குகளை நாங்களே தயாரித்து விற்பனை செய்யும் அளவிற்கு வளர்ந்திருக்கிறோம். எங்களுடைய பேக்குகள் எல்லாமே ஈகோ ஃப்ரெண்ட்லிதான். ப்ளாஸ்டிக் மற்றும் லெதர் கலக்காத இயற்கையாகவே மட்கும் தன்மை கொண்ட துணியால் செய்யப்பட்ட பேக்குகள் இவை. எல்லாமே சுற்றுச்சூழலுக்கு உகந்தது” என்கிறார்.

கவுசிக்கை தொடர்ந்து பேச ஆரம்பித்த திவ்யா, “நானும் என் கணவரும் ஐ.டி துறையில்தான் வேலை செய்து வந்தோம். என் மாமியார் சித்ரா தான் இதை ஆரம்பத்தில் தனியாக ஆரம்பித்தார். அவர் தான் உண்மையிலேயே இந்த கம்பெனியை நிறுவியவர். நாங்கள், அவர் ஆரம்பித்த தொழிலை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு போய் அதிகளவு உற்பத்தியை உருவாக்கினோம். ஆரம்பத்தில் பேக்கில் ஆரம்பித்து பின் குர்தீஸ், லெங்கிங்ஸ், நைட்டீஸ் என எங்களுடைய தொழிலை விரிவுபடுத்தினோம்.

முதலில் ஐந்து வகையான ரிட்டர்ன் கிஃப்ட் பேக்குகள் மட்டுமே எங்களிடம் இருந்தது. இப்போது 95 வகையான பேக்குகளை நாங்களே உருவாக்கி விற்பனை செய்கிறோம், இது தவிர தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ஹாண்ட் பேக்குகள், ஸ்லிங் பேக்குகள், லேப்டாப் பேக்குகள், அம்மாக்களுக்கான ட்ராவல் பேக்ஸ், மாமி பேக்ஸ், வெளியில் ஷாப்பிங் செல்லும் போது கையடக்கமான ஷாப்பிங் பைகள், சேனிட்டரி பவுச்கள் என ஏராளமான ஐட்டங்களை விற்பனை செய்கிறோம்.

இதை எல்லாம் அதிக அளவில் உற்பத்தி செய்வதால் குறைந்த விலையில் எங்களால் விற்பனை செய்ய முடிகிறது. நாங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு பொருளுமே ஒரு சிறப்பம்சத்துடன் இருக்கும். சாதாரண ரிட்டர்ன் கிஃப்ட்ஸ் ஆக இருந்தாலுமே அது ஒரு முறை மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கி வீசுவது போல இருக்காது. நீங்கள் கொடுக்கும் ஒரு சின்ன பையைக் கூட உங்கள் விருந்தினர்கள் பல ஆண்டுகள் மறுபயன்பாடு செய்யும் அளவிற்கு தரமானதாகவும் ஃபேன்சியானதாகவும் நாங்கள் செய்து கொடுக்கிறோம். சின்ன பர்ஸை திறந்தால் அது காய்கறிகள் வாங்கும் பேக்காக மாறிவிடும். அதே போல ஒரு ஷாப்பிங் பேக்கை அழகாக மடித்து பட்டன்/சிப் போட்டுவிட்டால் அதை பாக்கெட்டிலேயே கொண்டு போக முடியும். இது போன்ற பயன்படுத்தக்கூடிய கிஃப்ட்ஸை உங்கள் விருந்தினர்களும் நிச்சயம் வெளியே தூக்கி போட மாட்டார்கள். ஏதாவது ஒரு விதத்தில் நிச்சயம் தங்கள் வீட்டில் பயன்படுத்துவார்கள்.

இதை நாங்கள் மாஸ் ப்ரொடியூஸ் செய்வதால், எப்போதுமே நீங்கள் கேட்கும் டிசைனில் 3000 பேக்குகள் எங்களிடம் தயாராக இருக்கும். அதிலும் குறைந்தது எண்பது நிறங்களில் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் நேராக அடையாறில் அமைந்திருக்கும் எங்கள் கடைக்கே வந்து கையோடு ஒரே ஒரு பையையும் வாங்கிப் போகலாம் அல்லது ஐநூறு-ஆயிரம் பேக்குகளையும் வாங்கி போகலாம். இந்த காரணங்களால்தான் சுமார் 11 வருடத்தில் இவ்வளவு பெரிய வெற்றியை எங்களால் பார்க்க முடிந்தது” என்றார் திவ்யா.

“நான் ஐ.டியில் சேல்ஸ் துறையில் வேலை செய்தேன். அங்கு ஒரே மாதிரியான பொருட்களை தான் திரும்ப திரும்ப விற்பனை செய்ய வேண்டும். அதில் கிரியேட்டிவிட்டிக்கு எல்லாம் எந்த இடமும் இல்லை. நல்ல சம்பளம் கிடைத்தாலும் காலப்போக்கில் அந்த வேலை எனக்கு சலிப்பை கொடுத்தது. தனியாக ஏதாவது ஒரு பிசினஸை எடுத்து நடத்த வேண்டும் என்ற எண்ணம் உருவானது.

அப்போது என் அம்மாவின் பிஸினசை ஏன் முதலில் விரிவுப்படுத்தக்கூடாது என அவருடன் சேர்ந்து அவருடைய கனவை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்’’ என்கிறார் கவுசிக். ‘‘பேக்ஸ் ஆரம்பித்த ஒரே வருடத்தில் குர்தீஸ், நைட்டீஸ் மற்றும் லெங்கிங்ஸ் உற்பத்தியையும் ஆரம்பித்தோம். ஆரம்பத்தில் எங்களுடைய பிஸினஸை மொத்த விற்பனையாகவும், ரிட்டர்ன் கிஃப்ட்ஸ்களுக்காகவும் மட்டுமே தயாரித்து வந்தோம். ஆனால் சுமார் இரண்டாண்டுகள் கழித்து மார்க்கெட் நிலவரம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்ட போது எங்களுடைய வியாபாரத்தை ரீடெயில் பிஸினசாகவும் மாற்றினோம்.

யாரிடமும் இல்லாத உங்கள் அன்றாட பயன்பாட்டிற்கு தேவையான புதிய பொருட்களை நாங்களே அனுபவ பூர்வமாக கண்டுபிடித்து அதை விற்பனை செய்கிறோம். அப்படி உருவான சில முக்கிய பொருட்கள்தான் சானிட்டரி நேப்கின் பவுச்சுகள், மாமி பேக்ஸ், மாமி ட்ராவல் பேக்ஸ் எல்லாமே. எனக்கு குழந்தை பிறந்த போது தான், கைக்குழந்தையை வைத்திருக்கும் அம்மாக்களுக்கு சந்தையில் பல மேட்டர்னிட்டி பேக்குகள் இருந்தாலும், அவை உண்மையில் பயன்படுத்த எவ்வளவு வசதியாக இருக்கிறது என்று சோதித்த போது, எனக்கு அதில் பல பிரச்சனைகள் கண்ணில் பட்டது.

குழந்தையை சமாளிக்க முடியாமல் பல அம்மாக்கள் தனியாக குழந்தையுடன் வெளியே செல்வதற்கே பயப்படுகிறார்கள். அதனால், அவர்கள் சுலபமாக பயன்படுத்தக் கூடிய மாமி பேக்குகளை நாங்கள் உருவாக்கினோம். அதாவது குழந்தையை ஒரு கையில் பிடித்துக்கொண்டே வசதியாக பொருட்களை மற்றொரு கையால் பேக்கில் இருந்து எடுக்க வேண்டும். அதற்கு தகுந்த அளவில் முதலில் பேக் இருக்க வேண்டும்.

அதே போல ஃபீடிங் பாட்டில், வாட்டர் பாட்டில், ஃபார்முலா பாட்டில் என எல்லாம் வைக்க தனித் தனியாக ஆறு வாட்டர் பாட்டில் கம்பார்ட்மெண்ட்ஸ் இருக்கும். இந்த கம்பார்மெண்டில் குழந்தைகளின் துணிகளையும் கூட சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும். அடுத்து வெளியில் அம்மாக்களுக்கான பர்ஸ் மற்றும் செல்போன் வைக்கும் இடமும் இருக்கும். இப்படி சாதாரண ஒரு மாமி பேக்கை தயாரிக்கவே பல மாதங்கள் கடினமாக உழைத்து பல மாடல்கள் தயாரித்து அதை உபயோகித்து பார்த்த பின்தான் அதை மார்க்கெட்டில் நாங்கள் லாஞ்ச் செய்வோம். இதெல்லாம் சுமார் 500 ரூபாயிலேயே கிடைக்கும்.

அதே போல சானிட்டரி பேட் பவுச்சுகளும் அறிமுகப்படுத்தினோம். எல்லோரும் சானிட்டரி பேடை மறைத்து வைத்து கவரிலும் புத்தகத்திற்குள்ளும் வைத்துக் கொண்டு செல்கிறார்கள். அது பாதுகாப்பானது கிடையாது. அது மறைக்க வேண்டிய விஷயம் இல்லை என்றாலும், அதை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக இந்த பவுச்சுகளை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம்.

சில மேக்-அப் பேக்குகளில் பர்ஃபியூம் வைக்கும் போது அது எல்லா பொருட்களின் மீதும் கொட்டி விடும், அதே போல மருந்து பேக்கிலும் மருந்து பாட்டில்களையும் நேராகத்தான் வைக்க வேண்டும். அதற்காக எங்களிடம் பிரத்யேகமான பேக்குகள் இருக்கிறது. அதில் பாட்டில்களை நேராக வைக்கலாம். எந்த லீக்கேஜும் இருக்காது. இது தவிர ஜுவல்லரி பவுச்களும் இருக்கின்றன. ட்ராவல் செல்லும் போதெல்லாம் இந்த ஜுவல்லரி பவுச்சுகள் மிகவும் வசதியாக இருக்கும். வீட்டிலும் நீங்கள் அலமாரியில் அழகாக அதிக இடத்தை எடுக்காமல் அடுக்கி வைக்க முடியும். அதே போல பட்டுப் புடவைகளையும் அதன் ப்ளவுஸ்களையும் பத்திரமாக வைக்கவும் காட்டன் பேக்குகளை விற்பனை செய்கிறோம்.

அந்த பேக்குக்குள்ளேயே ப்ளவுஸும் வைக்க தனியாக ஒரு இடம் இருக்கும். உள்ளே வைத்திருப்பது என்ன சேலை என்று கண்டுபிடிக்க ட்ரான்ஸ்பேரண்ட் ஷீட்டும் இருக்கும். இதை எல்லாம் மிகுந்த குறைந்த விலையில் தான் விற்பனை செய்கிறோம். சிறிய பர்ஸ் 35 ரூபாயில் ஆரம்பித்து பெரிய ட்ராவல் பேக்குகளே 1200 ரூபாய்தான் ஆகும்” என்றவர். புதிதாக தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு சில முக்கியமான டிப்ஸ் கொடுக்கிறார்.

‘‘புதிதாக தொழில் ஆரம்பிக்க வேண்டும் என நினைப்பவர்கள் முதலில் உங்களுடைய பிசினஸுக்கு முழு நேரத்தையும் ஒதுக்க வேண்டும். ஏற்கனவே ஒரு கம்பெனியில் முழு நேரம் வேலை செய்தபடியே இந்த தொழிலிலும் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தால் அது நடக்காது. பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று உங்கள் தொழில் மீது நம்பிக்கை வைத்து முழு நேரமும் அதற்காக உழைத்து எந்நேரமும் உங்கள் தொழிலை எப்படி முன்னேற்றலாம் என்ற சிந்தனையில் இருக்கும் போது தான் உங்களால் வெற்றி பெற முடியும்.

இரண்டு வேலைகளை ஒரே சமயம் செய்ய நினைத்தால் அது நடக்காது. முடிந்தவரை உங்கள் வேலையில் இருந்து ஒரு ஆண்டு ப்ரேக் எடுத்துக்கூட உங்கள் தொழில் கனவை சிறப்பாக செயல்படுத்த திட்டமிடுங்கள் என்ற முக்கியமான ஆலோசனையை வழங்குகிறார் திவ்யா, அதே போல, ஒரு பிசினஸ் ஆரம்பித்ததும், அதை உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மூலமாக மட்டுமே விற்பனை செய்ய நினைக்காதீர்கள். உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலம் வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என காத்திருக்காமல், நேராக களத்தில் இறங்கி உங்கள் வாடிக்கையாளர்களிடமே நேரடியாக விற்பனை செய்ய ஆரம்பியுங்கள்” என்கிறார் திவ்யா.

செய்தி: ஸ்வேதா கண்ணன்

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்