SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆரோக்கியம் காக்கும் பாதாம் உணவுகள்!

2022-11-18@ 17:46:15

நன்றி குங்குமம் தோழி

பாதாமில் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்சிடன்ட்ஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. தினமும் 5 பாதாம் பருப்புகளை சாப்பிடுவதால், கொலஸ்ட்ரால் பிரச்சனை முதல் வயது முதிர்வு வரை எல்லாவித நோய்களுக்கும் சிறந்த மருந்தாகும். உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து வகையான பிரச்சனைகளுக்கு மட்டமில்லாமல், புற்றுநோயை எதிர்க்கும் வைட்டமின்கள் பாதாமில் உள்ளது. இப்படி பல நன்மைகளை தரக்கூடிய பாதாமில் பல சுவையான உணவுகளை வழங்கியுள்ளார் செஃப் மனீஷ் மெஹோத்திரா.

பாதாம் கேரட் அல்வா கிரம்பில்

தேவையானவை:

கேரட் - 1/2 கிலோ,
திக்கான பால் - 1/2 லிட்டர்,
சர்க்கரை - 1/2 கப்,
ஏலக்காய் பொடித்தது - 4,
நெய் - 2 மேசைக்கரண்டி தோல் நீக்கி பொடியாக நறுக்கிய பாதாம் - 1/4 கப்.

கிரம்பில் செய்ய தேவையானவை :

நறுக்கிய பாதாம் - 1/4 கப்,
மைதா - 3/4 கப்,
வெண்ணை (உப்பு சேர்க்கப்படாதது) - 1/4 கப்,
சர்க்கரை - 1/2 கப்,
அரைத்த பாதாம் - 1/2 கப்.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் கேரட் இரண்டையும் சேர்த்து நன்கு வேகவைக்கவும். பால் முக்கால் பாகம் குறையும் வரை நன்கு கொதிக்கவிடவும். பிறகு அதில் ஏலக்காய் பொடி, நெய், சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். அனைத்தும் ஒன்றாக சேர்ந்து சுருண்டு வந்ததும், அதில் நறுக்கிய பாதாமை சேர்த்து கிளறி தனியே வைக்கவும். கிரம்பில் செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு பிசறவும். பார்க்கும் போது பிரட் கிரம்ஸ் துகள்கள் போல் இருக்க வேண்டும். இதை ஒரு டிரேயில் வைத்து 180 டிகிரியில் மைக்ரோ அவனில் பேக் செய்யவும். பொன்னிறமாக மாறிய பிறகு அதன் மேல் கேரட் அல்வாவினை வைத்து வறுத்த பாதாமினை மேலே தூவி அலங்கரித்து பரிமாறவும்.

பாதாம் சேமியா முசாபிர்

தேவையானவை :

தோல் நீக்கி நறுக்கிய பாதாம் - 1/2 கப்,
சேமியா - 2 கப்,
நெய் - 3 மேசைக்கரண்டி,
தண்ணீர்  - 1 கப்,
சர்க்கரை சிரப் - 1 கப்,
ஏலக்காய் பவுடர் - 1/2 டீஸ்பூன்,
குங்குமப்பூ - 1 சிட்டிகை,
கோய் - 1/4 கப்,
வறுத்த பாதாம் - 3 மேசைக்கரண்டி.

செய்முறை :

கடாயில் நெய்யை சேர்த்து அதில் சேமியாவை பொன்னிறமாக வறுத்து தனியே வைக்கவும். அதே கடாயில் தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் அதில் சர்க்கரை சிரப்பினை சேர்க்கவும். பிறகு அதில் வறுத்த சேமியாவையும் சேர்த்து நன்கு வேகவிடவும். பிறகு ஏலக்காய், குங்குமப்பூ சேர்த்து கிளறவும். பிறகு இதில் துறுவிய கோயாவையும் சேர்த்து கிளறவும். தண்ணீர் சுண்டியதும் வறுத்த பாதாம் சேர்த்து அலங்கரிக்கவும்.

பாதாம் பூந்தி லட்டு

தேவையானவை :

லட்டு மாவிற்கு :

கடலை மாவு - 1 1/2 கப்,
தண்ணீர் - 1 கப்,
ஏலக்காய் பவுடர் - 1/2 டீஸ்பூன்,
வறுத்த நறுக்கிய பாதாம் - 1/4 கப்,
உலர்ந்த கோஜி பெரி பழங்கள் - 3 மேசைக்கரண்டி,
நெய் - 3/4 மேசைக்கரண்டி,
எண்ணை - தேவையானவை

சர்க்கரை பாகிற்கு தேவையானவை :

சர்க்கரை - 1 1/2 கப்,
தண்ணீர் - 3/4 கப்,
குங்குமப்பூ - 1 சிட்டிகை.

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, குங்குமப்பூ மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதம் பாகு காய்ச்சி தனியே வைக்கவும். ஒரு கடாயில் எண்ணை சேர்த்து கொதிக்க வைக்கவும். ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, தண்ணீர், ஏலக்காய் பவுடர் சேர்த்து மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். சிறிது மாவினை எண்ணையில் பொரித்து பார்க்கவும். உருண்டையாக இல்லாமல் தட்டையாக வந்தால் மாவில் தண்ணீர் அதிகமாக இருப்பது என்று அர்த்தம்.

அந்த சமயத்தில் மேலும் சிறிது மாவு சேர்க்கலாம். அல்லது கூம்பு போல் பொரிந்தால், மாவு திக்காக இருக்கும், தண்ணீர் சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம். முத்துக்கள் போல் வந்தால் தான் பூந்தி செய்ய சரியான பதம். சின்ன சின்ன ஓட்டையுள்ள ஜல்லி கரண்டியில் மாவை ஊற்றி பூந்தியினை எண்ணையில் பொரிக்கவும். பொரித்த பூந்தியினை சர்க்கரை பாகில் சேர்க்கவும். எல்லா பூந்தியினையும் பொரித்தவுடன் அதில் பாதாம் மற்றம் கோஜி பெரி பழங்களைச் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு கையில் நெய் தடவி சின்ன சின்ன உருண்டையாக பிடிக்கவும்.

பாதாம் ஆப்பிள் சாட்

தேவையானவை :


வறுத்த பாதாம் - 60 கிராம்,
பச்சை ஆப்பில் (நறுக்கியது) - 1 மேசைக்கரண்டி,
சிகப்பு ஆப்பிள் - 1 மேசைக்கரண்டி (நறுக்கியது),
எலுமிச்சை சாறு - 1/2 பழம்,
கருப்பு உப்பு - இரண்டு சிட்டிகை,
புதினா - சிறிதளவு,
ஆலிவ் எண்ணை - 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்.

செய்முறை :


மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் ஒவ்வொன்றாக சேர்க்கவும். பிறகு நன்கு கலக்கவும். அப்படியே சாப்பிடவும். மாலை நேர ஸ்னாக்சிற்கு சிறந்த உணவு.

பாதாம் பீச் பழம் ரெலிஷ்  


தேவையானவை :


முழு பாதாம் - 400 கிராம்,
பீச் பழம் - 350 கிராம்,
சர்க்கரை - 150 கிராம்,
பட்டை - 1,
ஸ்டார் அன்னாசி - 1,
சிகப்பு மிளகாய் - 1,
பால்சாமிக் வினிகர் - 50 மிலி.

செய்முறை :


ஒரு பாத்திரத்தில் முழு பாதாமினை சூடான தண்ணீரில் ஊறவைக்கவும். பதினைந்து நிமிடம் கழித்து அதன் தோலினை நீக்கவும். பீச் பழத்தினை சின்ன சின்ன துண்டகளாக நறுக்கி வைக்கவும். சிகப்பு மிளகாயினை நீளவாக்கில் நறுக்கி உள்ளே இருக்கும் விதைகளை நீக்கவும். ஒரு கடாயில் சர்க்கரையை சேர்த்து கொதிக்கவைக்கவும். அது பிரவுன் நிறமாகி கேரமலைஸ் ஆனதும் அதில் தோல் நீக்கப்பட்ட முக்கால் பாகம் முழு பாதாமினை சேர்த்து அடுப்பில் வைத்து  நன்கு கிளறவும். இதனுடன் பீச் பழம், பட்டை, ஸ்டார் அன்னாசி, சிகப்பு மிளகாய் சேர்த்து நன்கு சமைக்கவும். கடைசியில் வினிகர் சேர்த்து நன்கு சுண்டும் வரை சமைக்கவும். அதனுடன் மீதமுள்ள பாதாமினை சேர்த்து 20 நிமிடம் சிறிய தீயில் வைத்து அடிப்பிடிக்காமல் கிளறவும். நாச்சோஸ் மற்றும் பிரெட்டுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

பாதாம் தேங்காய் பர்ஃபி  

தேவையானவை :


தேங்காய் துருவல் - 1 கப்,
தோல் நீக்கி பொடித்த பாதாம் - 1/2 கப்,
சர்க்கரை - 1 கப், நெய் - 1/3 கப்.

செய்முறை :

ஒரு கடாயில் நெய் சேர்த்து மிதமான தீயில் தேங்காய் துருவல் மற்றும் பாதாமினை சேர்த்து நன்கு வறுக்கவும். தேங்காயில் உள்ள எண்ணை மற்றும் பாதாம் எல்லாம் சேர்ந்து ஒன்றாக வரும் போது அதில் சர்க்கரையை சேர்த்து நன்கு வறுக்கவும். ஒரு தட்டில் நெய்யினை தடவி தனியே வைக்கவும். சர்க்கரை எல்லாம் கரைந்து தேங்காயுடன் ஒன்று சேர்ந்து நன்கு திரண்டு வரும். அந்த சமயத்தில் நெய் தடவிய தட்டில் கலவையை கொட்டி நன்கு பரப்பி விடவும். சூடு பாதியளவு குறைந்ததும், சின்ன சின்ன துண்டுகளாக வெட்டவும். நன்கு ஆறிய பிறகு துண்டுகளை தனியே எடுத்து வைக்கவும். இதனை காற்று புகாத பாட்டிலில் போட்டு வைத்தால் நன்றாக இருக்கும்.

பாதாம் தானிய பிரியாணி

தேவையானவை :

பார்லி - 1/2 கப்,
சிகப்பரிசி - 1/2 கப்,
தினை - 1/2 கப்,
நெய் - 2 டீஸ்பூன்,
பூண்டு நறுக்கியது - 1 டீஸ்பூன்,
இஞ்சி - 1 மேசைக்கரண்டி,
பச்சை மிளகாய் - 1 டீஸ்பூன்,
கேரட் நறுக்கியது - 1/2 கப்,
வெங்காயம் - 1/4 கப்,
பொடித்த மிளகு - 1/2 டீஸ்பூன்,
உப்பு - சுவைக்கு ஏற்ப,
காய்கறி வேவைத்த தண்ணீர் அல்லது தண்ணீர் - 7 கப்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லி - 1 1/2 டீஸ்பூன்,
ஸ்பிரிங் ஆனியன் - 1 1/2 டீஸ்பூன்,
பாதாம் - 1/4 கப்.

செய்முறை :

பாத்திரத்தில் நெய் சேர்த்து, அதில் சீரகம், பிரிஞ்சி இலை சேர்க்கவும். பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு கேரட், பார்லி, சிகப்பரிசி, தினை, தண்ணீர் என அனைத்தையும் சேர்த்து ஒரு கொதி வந்ததும் பாதாம் சேர்த்து மைக்ரோஅவனில் வைத்து 40 நிமிடம் 180 டிகிரியில் வேகவைக்கவும். தானியங்கள் வெந்ததும் கொத்தமல்லி உப்பு, மிளகுத்தூள் சேர்த்து உடனே பரிமாறவும்.

பாதாம் பூசணி கபாப்

தேவையானவை :

மஞ்சள் பூசணி - 500 கிராம்,
பச்சை மிளகாய் - 1 1/2 டீஸ்பூன்,
இஞ்சி,
பூண்டு நறுக்கியது - 2 மேசைக்கரண்டி,
சீரகம் - 1 டீஸ்பூன்,
உடைத்த தனியா - 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1  மேசைக்கரண்டி,
ஜாதிக்காய் தூள் - 1/8 டீஸ்பூன்,
சாட் மசாலா - 1 மேசைக்கரண்டி,
ஆம்சூர் பவுடர் - 1 மேசைக்கரண்டி,
நெய் - 40 கிராம்,
பாதாம் சீவியது - 20 கிராம்,
பாதம் நறுக்கியது - 40 கிராம்

செய்முறை :

பூசணிக்காயினை தோல் நீக்கி சீவிக்கொள்ளவும். கடாயில் நெய் சேர்த்து அதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சீரகம் மற்றும் அனைத்து மசாலா பொருட்களையும் சேர்த்து வதக்கவும். இதில் பூசணியை சேர்த்து அதில் உள்ள தண்ணீர் நீங்கும் வரை சமைக்கவும். பிறகு அதனுடன் நறுக்கிய பாதாம் சேர்த்து ஐந்து நிமிடம் சமைக்கவும். பிறகு அடுப்பை நிறுத்தி ஆறியதும், சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி தட்டி வைக்கவும். அதன் மேல் சீவிய பாதாமினை சேர்க்கவும். ஒரு தவாவில் நெய் சேர்த்து அதில் இந்த உருண்டைகளை வைத்து இரண்டு பக்கம் பொன்னிறமாக பொரிக்கவும்.

ஸ்பைக்ட் பாதாம்

தேவையானவை :

பாதாம் - 60 கிராம்,
கல் உப்பு - 1 டீஸ்பூன்,
ஆலிவ் எண்ணை - 5 மிலி,
தனியா - 1 மேசைக்கரண்டி,
காய்ந்த மிளகாய் - 2,
துவரம் பருப்பு - 1 மேசைக்கரண்டி,
கடலைப் பருப்பு - 1 மேசைக்கரண்டி,
மிளகு - 1 மேசைக்கரண்டி,
சீரகம் - 1 மேசைக்கரண்டி.

செய்முறை :

பாதாமினை கல் உப்பு மற்றும் ஆலிவ் எண்ணையில் வறுத்து தனியே வைக்கவும். மற்றொரு கடாயில் காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, துவரம் பருப்பு இரண்டையும் பொன்னிறமாக வறுக்கவும். இதனை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும். அதே கடாயில் தனியா மற்றும் மிளகினை வறுத்து கடைசியாக சீரகம் சேர்க்கவும். இதையும் ஆற வைத்த, பாதாமினை தவிர அனைத்தையும் பொடித்துக் கொள்ளவும். பிறகு அந்த பொடியினை பாதாமில் சேர்த்து காற்றுபுகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

பாதாம் பக்கோடா  

தேவையானவை :

முழு பாதாம் - 1 கப்,
கடலைமாவு - 2 மேசைக்கரண்டி,
ரவை - 1 மேசைக்கரண்டி,
எண்ணை - பொரிக்க,
சிகப்பு மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்,
கல் உப்பு - சுவைக்கு ஏற்ப,
பெருங்காயம் - ஒரு சிட்டிகை,
கருவேப்பிலை - 2 டீஸ்பூன்,
தண்ணீர் - 2 மேசைக்கரண்டி,
இஞ்சி - 1 டீஸ்பூன் (நறுக்கியது),
பச்சை மிளகாய் - 1/2 டீஸ்பூன் (நறுக்கியது).

செய்முறை :

பாதாமினை வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசறவும். உடன் பாதாமினை சேர்த்து நன்கு பிசையவும். கடாயில் எண்ணையை சேர்த்து பிசறிய பாதாமினை சேர்த்து பொரிக்கவும். சுவையான மாலை நேர ஸ்னாக்ஸ் ரெடி.

தொகுப்பு: ப்ரியா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • stalin-corp-31

    மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

  • long-whale-newyork

    35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

  • pak-blast-30

    பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

  • china-spring-festival

    சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!

  • orange-tree-wishes-27

    ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்