எந்த உடை யாருக்கு பொருந்தும்!
2022-11-09@ 17:52:48

நன்றி குங்குமம் தோழி
ஃபேஷன் டிசைனர் வனஜா!
நம்மை அழகுப் படுத்துவதோடு, சந்தோஷத்தில் நம் முகத்தையும் மத்தாப்பாக மலரவைக்கும் என்றால் அது ஆடைகள் தான் என்பதில் மிகையில்லை. பொதுவாக உடைகள் தேர்வு செய்வதில் நமக்கு பல்வேறு குழப்பங்கள் இருக்கும். அது நம்மை குண்டாக காட்டுமா? ஒல்லியாக தெரிவோமா? நமது சரும நிறத்திற்கு எடுப்பாக இருக்குமா? எந்த நிற உடைகள் நம்மை அழகாக எடுத்துக்காட்டும்? பூக்கள் நிறைந்த உடைகள் அணியலாமா? கோடிட்ட உடைகள் தான் செட்டாகுமா? புடவை அழகா, சுடிதார் அழகா?
சுடிதார் கழுத்து மாடல் எப்படி வைத்தால் நமக்கு பொருந்தும்? லெக்கின்ஸ் போடலாமா? இல்லை பட்டியாலா தான் நமக்கான உடையா? ... இப்படி ஒரு உடை தேர்வு செய்யும் முன்பே நமக்கு பல சந்தேகங்கள் தோன்றுவதுண்டு. இவ்வளவு சந்தேகம் தரக்கூடிய உடைகளை நாம் எவ்வாறு தேர்வு செய்யலாம் என்று டிப்ஸ் தருகிறார் ஃபேஷன் டிசைனர் வனஜா.
*நிறம் கம்மியாக இருப்பவர்கள் தங்களுக்கு வெளிர் நிறங்கள் தான் அழகாக இருக்கும் என்று தப்புக்கணக்கு போடுகிறார்கள். வெளிர் நிற ஆடைகளை அணியும் போது அது அவர்களின் நிறத்தை மேலும் மட்டுப்படுத்தி எடுத்துக் காட்டும். சொல்லப்போனால் மாநிற சரும நிறம் கொண்டவர்கள் வெளிர் நிற ஆடை அணிந்தால் அவர்கள் மேலும் கருமையாகத் தான் தோன்றுவார்கள். அவர்கள் பளிச் நிற ஆடைகளை அணியும்போது பிரகாசமாக தெரிவார்கள். அதற்காக அவர்கள் ரொம்ப அடர் நிற ஆடைகளை தேர்வு செய்யக்கூடாது.
*இப்போது பெரும்பாலான பெண்கள் குர்த்தி போன்ற உடைக்கு லெக்கின்ஸ், பட்டியாலா, ஜீன்ஸ் போன்ற பேன்ட்களை அணிகிறார்கள். ஆனால் எந்த மாதிரியான டாப்ஸ் என்ன பேன்ட்டிற்கு அணிய வேண்டும் என்பதில் பலருக்கு குழப்பமாக உள்ளது. முட்டிக்கு கீழ்வரை தொங்கும் சுடிதார் டாப்புக்கும், அனார்கலி டாப்புக்கும் லெக்கின்ஸ் பொருத்தமாக இருக்கும். பொதுவாக லெக்கின்ஸ் அடர் நிறங்களில் தேர்ந்தெடுத்தால் பார்க்க அழகாக இருக்கும். முட்டிக்கு மேலே அணியும் டாப்புக்கு பட்டியாலா மற்றும் ஜீன்ஸ் பொருத்தம். காலர் வைத்த சுடிதார் அணியும் போது நேரோ பேன்ட், ஜீன்ஸ் இரண்டுமே மிக அழகாகப் பொருந்தும்.
*இளம் வயது பெண்கள் சுடிதாரில் முதுகுப் பகுதியில் ஜிப் வைத்து தைத்துக் கொள்ளும் போது ஃபிட்டிங் கச்சிதமாக அவர்களின் தோற்றத்தை மேலும் எடுத்துக் காட்டுவதால் பார்க்க அழகாக இருக்கும். நடுத்தர வயதுக்கு மேல் உள்ளவர்கள் அகலம் குறைவான கழுத்து அல்லது காலர்நெக்குடன் முக்கால் கை சுடிதார்கள் போடும்போது அவர்களின் தோற்றத்திற்கு ஒரு கம்பீரத்தை தரும்.
*சுடிதார் டாப் ஆழ்ந்த நிறம் என்றால் அதற்கான பேன்ட் கொஞ்சம் வெளிர் நிறத்தில் இருக்க வேண்டும். இரண்டுமே கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில் இருந்தால் பார்க்க நன்றாக இருக்காது.
*பிரிண்டெட் டாப்புக்கு எந்த வித டிசைன்களும் இல்லாத பேன்டும், பிளைன் டாப்புக்கு பிரிண்டெட் பேன்ட்டும் பொருத்தம்.
*சுடிதாரில் கோடுகள் அல்லது கொடி டிசைன்கள் இருந்தால் அதை நீளவாக்கில் வைத்து தான் தைக்க வேண்டும். குறுக்கு வாக்கில் வைத்து தைத்தால் அணிபவர்கள் குண்டாகவும், குள்ளமாகவும் தோற்றம் அளிப்பார்கள்.
*ஆடைகளை தொளதொளவென்று அணிந்தாலும், மிக இறுக்கமாக அணிந்தாலும் இரண்டுமே கண்ணியமான தோற்றத்தை தராது. உங்களின் உடல் அளவிலிருந்து ஒரு இன்ச் லூஸ் வைத்து தைத்துக் கொள்வது அழகாக இருக்கும்.
*எவ்வளவுதான் நாம் விலை கொடுத்து புடவைகள் எடுத்தாலும் அதற்கான பிளவுஸ் அமைப்பில் தான் அந்த புடவையின் அழகு மிளிரும். பிளவுஸ்களை பிளெயினாக தைக்காமல் புடவையின் நிறத்துக்கேற்ப பைப்பிங் அல்லது பீடிங் வைத்து தைக்கும் போது அழகு கூடும். கொஞ்சம் செலவு செய்ய விரும்புபவர்கள் புடவைக்கேற்ற மிக சன்னமாக கழுத்து கை ஓரங்களில் ஆரி ஒர்க் அல்லது எம்ப்ராய்டரி ஒர்க் செய்யலாம். ரிச் லுக் கிடைக்கும். கூடவே பின் கழுத்தில் நாட் வைத்து புடவையின் நிறத்திற்கு ஏற்ப விதவிதமாக சுங்குகளை இணைத்து தொங்கவிட்டு போடும்போது ரொம்பவும் அழகாக இருக்கும்.
*அலுவலகம் செல்லும் பெண்கள் புடவை, சுடிதார், பேன்ட், ஃபார்மல் சட்டைகள், ஸ்கர்ட் போன்றவற்றை அணிந்து செல்லலாம். இவற்றை அணியும் போது மிகவும் கவனமாகவும் அதே சமயம் மற்றவர் கண்களை உறுத்தாத படியும் இருக்க வேண்டும். சில அலுவலகங்களில் மேற்கத்திய உடைகளை அணிய அனுமதிப்பார்கள். சில நிர்வாகங்கள் பாரம்பரிய உடைகள்தான் உடுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். மேற்கத்திய உடைகள் என்றால் பேன்ட், அதற்கு ஏற்ப ஷர்ட் அணியலாம். கறுப்பு, பிரவுன் மற்றும் அடர் நீல நிற பேன்டுகளுக்கு வெள்ளை, நீல நிறங்களில் சட்டைகள் அணியலாம். உடலை இறுக்கிப் பிடிக்கும்படி அணியக்கூடாது. சட்டைகள் அணியும் போது கழுத்தை சுற்றி ஸ்கார்ப் அணியலாம் அல்லது வெயிஸ்ட்கோட் அணிந்தால் பார்க்க நேர்த்தியாக இருக்கும்.
*அலுவலகத்திற்கு செல்பவர்கள் புடவை அணியும் போது நன்றாக சலவை செய்த காட்டன் அல்லது சிந்தடிக் புடவைகள் அணியலாம். இதற்கு பிளவுஸ் சாதாரணமாக இருக்கவேண்டும். அதிக வேலைப்பாடு, முதுகில் ஜன்னல், கயிறு போன்றவை இருக்கக்கூடாது. அதேபோல் டீப்நெக் மற்றும் ஸ்லீவ்லெஸ் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும். புடவைகளை பிளீட் எடுத்து பின் குத்தவேண்டும். சிங்கிள் பிளிட் வைக்கக் கூடாது.
*சுடிதாரில் காட்டன் மற்றும் சிந்தடிக் அலுவலகம் செல்லும் பெண்களுக்கு ஏற்றது. துணி மெல்லியதாக இருந்தால், உள் துணி வைத்து தைக்கவேண்டும். லெக்கின்ஸ், உடல் ஒட்டி அணியக் கூடிய பேன்டிற்கு முட்டிக்கு கீழ்வரக் கூடிய டாப் அணிய வேண்டும். சுடிதார்களுக்கு துப்பட்டா அணியும் போது அழகாக பிளீட் எடுத்து பின் செய்யலாம் அல்லது சால்வை போல் போர்த்திக் கொள்ளலாம். ஒரு பக்கம் மட்டும் தொங்கவிட வேண்டாம்.
*தினசரியும் நாம் விலை உயர்ந்த ஆடைகளை அணிய முடியாது. ஆனால், சாதாரண காட்டன் துணிகளை உடுத்தினால் கூட நேர்த்தியாக சுருக்கமின்றி அயர்ன் செய்து அணிந்தால் அழகாக தெரியும்.
*ஆடை உடுத்துவது அழகோடு தொடர்புடையது மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. சீசனுக்கு ஏற்ற ஆடைகள் உடுத்துவது நம் மனதையும் மகிழ்ச்சிப்படுத்தும். கோடையில் காட்டன் ஆடைகள் அணிவது உடலையும் உள்ளத்தையும் உற்சாகப்படுத்தும்.
*ஒல்லியாக இருப்பவர்கள் கஞ்சி போட்டு சலவை செய்யப்பட்ட காட்டன் ஆடைகளை அணியலாம். சுடிதாரின் மேலாடையும், பேன்ட்டும் வெவ்வேறு நிறங்களில் இருந்தால் பார்க்க அழகாக இருக்கும்.
*ஒல்லியாக இருப்பவர்கள் பிரில் வைத்த ஆடைகளை அணிந்தால் சிறிது குண்டாக அவர்கள் தூக்கிக் காட்டும். இவர்கள் இறுக்கமான உடையினை அணிவதை தவிர்க்க வேண்டும்.
*பேன்ட், டீ ஷர்ட் அணியும் போது டீஷர்ட்டினை இன் செய்யாமல் அணியலாம்.
*பேன்ட் ஷர்ட் அணியும் போது, ஷர்ட்டில் ஒரு எம்பிராய்டரி அல்லது பேன்சி பட்டன்கள் இருக்கும்படி அணியலாம். பார்க்க அழகாக இருக்கும்.
*ஒல்லியாகவும் உயரமாக, நல்ல நிறமாக இருக்கும் பெண்கள் பெரிய பூ டிசைன்கள் கொண்ட உடைகளை அணியலாம்.
*ஒல்லியாகவும் உயரமாக, மாநிற பெண்கள் அடர்ந்த நிற உடைகளை தேர்வு செய்யக்கூடாது.
*குள்ளமாகவும் நிறமாகவும் உள்ளவர்கள் ஒரே நிறத்தில் உள்ள ஆடைகளை அணியக்கூடாது. அப்படி அணிய விரும்பினால், புடவை என்றால் கான்ட்ராஸ்ட் நிற பிளவுசும் சுடிதார் என்றால் துப்பட்டாவும் கான்ட்ராஸ்ட் நிறத்தில் அணியலாம்.
*புடவை எல்லா பெண்களுக்கும் அம்சமாக இருக்கும். உடல் பருமன் உள்ள பெண்கள் காட்டன் மற்றும் பாரம்பரிய பட்டுப்புடவைகளை அணிந்தால் பார்க்க அழகாக இருப்பார்கள். மொத்தத்தில் விலை உயர்ந்த ஆடைகளை தான் அணிய வேண்டும் என்றில்லை. சரியான முறையில் தேர்வு செய்து அணிந்தாலே உங்களுக்கு ரிச்சான தோற்றத்தை அளிக்கும்’’ என்று ஆலோசனை வழங்கினார் வனஜா.
தொகுப்பு: தனுஜா ஜெயராமன்
படங்கள்: ஜி.சிவக்குமார்
மேலும் செய்திகள்
மனதை மயக்கும் மணப்பெண் ப்ளவுஸ்கள்!
சிந்தடிக் ஷிபான் டிசைனர் புடவைகள் என்னுடைய சாய்ஸ் கிடையாது!
வசீகர தோற்றத்திற்கு 3டி ஃபிரேம்கள்
சினிமா முதல் காதுகுத்து வரை... வந்தாச்சு கஸ்டமைஸ்ட் உடைகள்!
என்னோட Portfolioக்கு நடிகை ஐஸ்வர்யா மாடலிங் பண்ணுனாங்க
தோல் பைகளுக்கு தனிப்பட்ட பிராண்ட் உருவாக்கணும்!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி