SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கரகர... மொறுமொறு... கமகம...செட்டிநாடு பலகாரங்கள்

2022-10-22@ 16:19:12

நன்றி குங்குமம் தோழி

முன்பெல்லாம் தீபாவளி பலகாரங்களை வீடுகளில்தான் செய்வார்கள். வீட்டில் உள்ள பெரியவர்கள் செய்வதைப் பார்க்கும் பெண்கள் அதை அப்படியே உள்வாங்கி கற்றுக் கொள்வார்கள். இதனால், கை பக்குவம் அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்பட்டது. இப்போது காலம் மாறிவிட்டது. எதுவாக இருந்தாலும் கடையில் வாங்கும் காலமிது. எனவே, தின்பண்டம் தயாரிப்பு இப்போது கொடிகட்டிப் பறக்கிறது என்கிற சௌந்தரம் ஆச்சி, திருமணம், சீமந்தம், வளைகாப்பு, தீபாவளிப் பண்டிகை என எல்லா விசேஷங்களுக்கும் செட்டிநாடுப் பலகாரங்களை மொத்த ஆர்டராகத் தயாரித்துத் தருகிறார்.

முறுக்கு, கை முறுக்கு, தேன்குழல், கார முறுக்கு, சீமந்த முறுக்கு, சீர் வரிசை முறுக்கு, சீப்பு சீடை, சின்ன சீடை, அதிரசம், மணக்கோலம், மாவு உருண்டை... இவைகளே செட்டிநாட்டுப் பலகாரம். இவை தவிர்த்து தட்டை, அச்சு முறுக்கு, கார முறுக்க, பட்டர் முறுக்கு, ரிப்பன் பக்கோடா, பனை வெல்லம் கலந்த இனிப்பு சீடை, சோமாஸ் என 14 முதல் 15 வெரைட்டியான தின்பண்டங்களை சௌந்தரம் ஸ்நாக்ஸ் கிச்சனில் பாரம்பரிய கைப்பக்குவத்தில் தயாரித்து மொத்த விற்பனை செய்து வருகிறார்.

கடைக்குச் சென்று நீங்கள் வாங்கும் பலகாரங்கள் பெரும்பாலும் கடலைமாவில் தயாரானது என்றவர், ‘செட்டிநாடு பலகாரம்’ என்கிற பாரம்பரியத்திற்காகவே, பலகாரம் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்துகிறேன் என்கிறார் ஆச்சி.

நாம் செய்யும் தொழிலில் எப்பவும் நேர்மையாக இருக்கணும். தரமான அரிசி, தரமான உளுந்து, தரமான பாசிப்பருப்பு, பனைவெல்லம், உயர்ரக செக்கு எண்ணெய் கொண்டு தயாராகும் செட்டிநாடு பலகாரங்கள் காரம் இல்லாத மிதமான சுவை கொண்டவை. சுவை வயிற்றைக் கெடுக்காது. அதிரசத்திற்கான அரிசி மாவை உரலில் இடித்தும், முறுக்கு மாவை திருகைக் கல்லில் திரித்து செய்கிறோம்.

அதேபோல் முதல்நாள் பயன்படுத்திய எண்ணெயினை மறுநாள் பயன்படுத்துவதில்லை. பலகாரத்தைப் பார்க்கும் போதே சிறப்பாய் மணமாய் இருக்கும். சாப்பிட சாப்பிட திகட்டாமல் சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம் என்றவர், அனைத்து தின்பண்டங்களுமே எங்கள் கை பக்குவத்திலே தயாராவதால், மாவு அரைக்கும் எந்திரங்களை நாங்கள் பயன்படுத்துவதே கிடையாது என்கிறார்.

தயாரிப்பின் தரம் மட்டுமே எங்களிடம் பேசும் என அழுத்தமாகச் சொல்லும்  சௌந்தரம் ஆச்சி, ஆர்டர் வரவர கொஞ்சம் கொஞ்சமாகத்தான் தயாரிப்புகளை செய்வதற்கு ஆரம்பிப்போம். அப்போதுதான் தின்பண்டம் சுவை கொடுக்கும் என்றவர், விரலால் மாவினை திருகி பதமாய் சுத்துவது கைமுறுக்கு. தேங்காய்ப்பால் எடுத்து மாவில் சேர்த்து செய்வது சீப்பு சீடை, பாசிப் பருப்பு மாவு உருண்டை முழுக்க முழுக்க நெய்யில் மட்டுமே பிடிப்பது எங்கள் தயாரிப்புகளை வாங்கிச் சுவைப்பவர்கள் ‘நல்லாருக்கு ஆச்சி’ன்னு சொல்வது மட்டுமல்ல, என்னைத் தேடி மீண்டும் மீண்டும் வர வேண்டும். தொழிலில் இது எனக்கு ரொம்பவே முக்கியம்.

அதுக்காகத்தான் நான் அதிகம் மெனக்கெடுகிறேன் என்றவர், தயாரிப்பு பண்டங்கள் சுவையாய் இருந்தால் மட்டுமே விற்பனைக்கு அனுப்புவது என்கிற குறிக்கோளும் என்னிடம் உண்டு. அதேபோல் கேட்ட நேரத்திற்கு கொடுப்பது என்கிற திட்டமிடலுடனே செயல்படுகிறேன். இதனால்தான் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் என்னிடம் ஆர்டர்களைக் கொடுத்து குறிப்பிட்ட நாளில் பலகாரங்களை வாங்கிச் செல்கிறார்கள்.

15 கிலோ, 20 கிலோ ஸ்வீட் எல்லாம் பண்டிகை காலம் தவிர்த்து மற்ற நாட்களிலும் சர்வசாதாரணமாக தயாராகி விற்பனைக்குச் செல்லும். திருமண மாதங்கள், பண்டிகைக் காலங்களில் ஆர்டர்கள் அதிகமாகவே வரும். ஆர்டர் அதிகமானால் அதற்கேற்ப  ஊழியர்களை அதிகப்படுத்திக் கொள்வேன். அருகிலுள்ள கேட்டரிங்  கல்லூரி மாணவிகளையும் தயாரிப்பு பணிகளில் பயன்படுத்துவேன்.

இவை தவிர்த்து மினிஸ்டர்களின் வீடுகள், வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் எனவும் எங்கள் தயாரிப்பு விமானங்களில் பறக்கிறது. எங்கள் தயாரிப்பில் உருவாகும் ஸ்வீட் வகைகள் 15 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் அப்படியே டின்களில் வைத்துச் சாப்பிடலாம். ஸ்வீட் தவிர்த்து மற்ற ஸ்நாக்ஸ் வகைகள் ஒரு மாத காலம் வரை அதே மணத்தில் அப்படியே சுவை மாறாமல் இருக்கும்.

இவை தவிர்த்து, வாடிக்கையாளர்களின் ஆர்டரின் பேரில் முறுக்கு மாவு, இடியாப்ப மாவு, அரிசி ரவை, களி மாவு, பொடி வகைகள், செடிநாட்டு மசாலாப் பொருட்கள், ஊறுகாய்  போன்ற உணவுப் பொருட்களையும் தயாரித்துத் தருகிறேன்.பாட்டி, அத்தை, அம்மா, பெரியம்மா, சித்திகளின் கை பக்குவத்தில், சுடச்சுட கொடுத்த சுவையான தீபாவளி பலகாரங்களின் சுவைகளை தொலைத்த தலைமுறை இது. அதனால்தான் செட்டிநாட்டு அரண்மனையை பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகள் எங்களின் தயாரிப்பு இடத்திற்கும் வந்து, பாரம்பரிய பலகாரங்களை நாங்கள் எந்த முறையில் எப்படி தயாரிக்கிறோம் என்பதைப் பார்த்து ரசித்து விட்டுக் கிளம்புகிறார்கள் என்றவாறு விடை பெற்றார் சௌந்தரம் ஆச்சி.

தடைகளைத் தாண்டிய சௌந்தரம் ஆச்சி

சௌந்தரம் ஆச்சி என்பதே எனக்கான அடையாளம். நான் பதினொன்றாம் வகுப்புவரைதான் படிச்சிருக்கேன். காரைக்குடிதான் எனக்கு ஊர். எங்கள் ஊரில் செட்டிநாடு பலகாரம்தானே ஸ்பெஷல். என் மாமியார் நேர்த்தியாய் பலகாரம் செய்வார். அவரிடம் சுத்தமும் அதிகம் இருக்கும். பலகாரங்களை அவர் தயாரிக்கும் விதமே ரசனைக்குரியதாய் இருக்கும். அவரிடம் இருந்தே நானும் செட்டிநாடு பலகாரம் தயாரிப்பு சூட்சுமத்தை கற்றுக்கொண்டேன்.

என் வீட்டுக்காரர் ஒரு விபத்தில் மாட்ட, வருமானத்திற்கு வழியின்றி பலகாரம் செய்யும் தொழிலுக்கு வந்தேன். ஆரம்பத்தில் பலகாரம் செய்து விக்கிறேன்னு என்னை யாரும் மதிக்கலை. நேர்மையாகச் செய்யும் எந்தத் தொழிலும் கேவலமில்லைன்னு, யார் எதைச் சொன்னாலும் நான் பெரிதாக காதில் போட்டுக்கொள்வதில்லை. ஆனால் என் கை பக்குவத்திற்கு ஆதரவு வெகுவாய் பெருகியது.

நானும் அவருமாக பலகாரம் தயாரிப்பதையே முழு நேரத் தொழிலாக்கினோம். முதலில் காரைக்குடி அருகே உள்ள எங்கள் கிராமத்தில் வைத்து இந்தத் தொழிலை செய்தோம். அப்போது வாடிக்கையாளர்கள் எங்களைத் தேடிவர சிரமப்பட்டனர். சென்னையில் இருந்து வருகிற ஆர்டர்களை நானும் எனது கணவருமாகப் பேக் செய்து காரைக்குடி சென்று, அங்கிருந்து சென்னைக்குச் செல்லும் பேருந்துகளில் ஏற்றி அனுப்பி வைப்போம். இந்த சிரமங்களை குறைக்க வீட்டை காரைக்குடிக்கே மாற்றிவிட நினைத்தேன். பலகாரம் தயாரிப்பு வேலை என்பதால், வீடு வாடகைக்கு கொடுக்க யாரும் தயாராய் இல்லை. எப்படியோ காரைக்குடி பேருந்து நிலையம் அருகே வீடு கிடைத்தது. தொடக்கத்தில் 2500 ரூபாய் வாடகை கொடுத்து வந்தவள், இப்போது 15 ஆயிரம் கொடுக்கிறேன்.

நான் செய்கிற பலகாரத் தொழிலில் பெண்களுக்கே முன்னுரிமையும், முக்கியத்துவம் எல்லாம்! கிட்டதட்ட 15 பெண்களின் குடும்பம் இந்தத் தொழிலை நம்பி இருக்கிறது. எந்தப் பெண்ணாவது என்னைத் தேடி வந்து, ஆச்சி எனக்கு வேலை கொடுங்க எனக் கேட்டால், பலகாரம் தயாரிப்பில் ஏதாவது ஒரு வேலையினை அவருக்காக உருவாக்கி கொடுத்துவிடு வேன். பள்ளியில் என்னோடு படித்த தோழிகளும் தயாரிப்பு பணியில் என்னுடன் இருக்கிறார்கள். எம்.ஏ படித்த பெண்களில் சிலரும் என்னிடம் வேலை செய்கிறார்கள். வேலை நேரம் காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை.

என்னிடத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு என் பணியிடம் ஹோம்லி அட்மாஸ்பியர்தான். கூடவே பாதுகாப்பும் உறுதி. அலுவலகத்தில் வேலை செய்கிறமாதிரி சுத்தமாக நேர்த்தியாக உடையணிந்து காலையில் பணிக்கு வருவார்கள். வீட்டுக்கு செல்லும்போதும், எண்ணெய் சட்டி அருகே  நின்று வேலை செய்து விட்டுச் செல்கிற பெண்கள் மாதிரியான தோற்றமின்றி, உடைகளை நேர்த்தியாக மாற்றிய பிறகே வீடு திரும்புவார்கள்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-senthilbalaji-8

  சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!

 • athisayangal

  நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்

 • perunad

  பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!

 • turkeydeath11

  துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!

 • lantern-festival-china

  உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்