SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறுகதை-செத்து செத்து விளையாடு!

2022-10-20@ 17:46:42

நன்றி குங்குமம் தொழி

தனுஜா ஜெயராமன்

ஊசி போன்ற மெல்லிய குளிர்  மெரூன் கலர் ஸ்வெட்டரையும் மீறி உடலுக்குள் ஊடுருவ ஆரம்பித்தது சிபிக்கு.ஸ்டியரிங்கில் கை தந்தியடித்தது. குளிருக்கு இதமாக ஒரு டீ குடித்தால் தேவலாம் போல தோன்றியது. மலை முகட்டில் ஓரமாக இருந்த கடையின் ஓரமாக காரை நிறுத்தினான். அங்கே ‘‘டீ”ஆற்றிக் கொண்டிருந்தவன் சிபியை அடையாளம் கண்டு அதிசயித்தான். அவனிடம் டீ சொல்லிவிட்டு ‘‘ டைகர் எஸ்டேட் ” எவ்வளவு தூரம் என கேட்டான் . ‘‘இன்னும் ஒரு கிலோமீட்டர் தானுங்க”....என்றவன் இளித்தபடி... ஆட்டோகிராப் சார் என்றான்.

நீட்டிய நோட்டில்...‘‘சிபி சக்ரவர்த்தி” என தன் முழு கையெழுத்தை பதித்தவன் டீ க்ளாஸை உள்ளங்கையில் உருட்டியபடி ‘‘டீ” யை ஊறிஞ்சியவனுக்குள் குளிருக்கு இதமாக சூடாக வயிற்றினுள் இறங்கியது . அப்படியே விசிலடித்தபடி ஒரு சிகரெட்டை பற்ற வைத்தவன்... பார்வையை சுற்றிலும் ஓடவிட்டான்...இந்த அதிகாலை நேரத்தில் மலைகளின் நடுவே சலசலக்கும் ஓடைகள், உடலை ஒடுக்கும் மெல்லிய குளிர், பஞ்சுபொதிகள் காற்றில் பறப்பது போல் அவ்வப்போது மலையை கடக்கும் மேகங்கள், எங்கும் பசுமை போர்த்திய இலைகள், அதன் மீது சிந்திய பனித்துளிகள் என கண்ணுக்கு குளிர்ச்சியாய் விருந்தளித்தது குன்னூர். சட்டென மேகங்களுக்குள் மூழ்கியவனின் சிந்தனையை கலைத்தபடி,  நடுவே  தெரிந்து மறைந்தது ஜ்வால்யாவின் உருவம். ஒரு நிமிடம் மனதை பிசைந்தது.

நினைவில்...ப்ளீஸ் சிபி..ஒன் மோர்..என பல ஸ்டில்களை எடுத்து  தள்ளினாள் குழந்தையின் குதூகலத்துடன்... படீரென நினைவுகளை ஒதுக்கி காரை வேகமாக கிளப்பினான். போனமுறை ஜ்வால்யா காரை ஓட்டி வந்ததால் வழிதெரியாமல் தடுமாறினான். ‘‘டைகர் எஸ்டேட்... குன்னூர்”  என்ற பித்தளை போர்டு கண்ணுக்குள் தெரிய..தூரத்தில் தெரிந்த  பங்களாவினுள்  நுழைத்து தன் பிஎம்டபிள்யுவை போர்டிகோவில் சொருகினான்.

வாங்கைய்யா என தலையிலிருக்கும் முண்டாசை கழட்டியபடி வரவேற்றான் மாரிச்சாமி. வாட்ச்மேன் , தோட்டக்காரன் எல்லாமே அவன்தான். ஜ்வால்யாவின் அப்பா எஸ்டேட். அவளது குடும்பம் எப்போதாவது தான் இங்கு வந்து தங்கும். ஒரு ஆக்ஸிடென்டில் பேரண்ட்ஸை இழந்து தனிமரமான  ஜ்வால்யா தனது முதல்பட  டைரக்டரான சிபியை ஆசைஆசையாக காதலித்து கரம்பிடித்தாள். ஜ்வால்யாவின் அழகு சிபியை கட்டி போட்டது. கல்யாணத்திற்கு பிறகு  ஜ்வால்யாவின் விருப்பப்படி ஒருமுறை வந்தான். அதற்குள் என்னென்னவோ ஆகிவிட்டது. அதன்பிறகு தன் பட வேலைகளுக்கான லொக்கேஷன் பார்க்க தற்போது தான் வருகிறான் சிபி. லக்கேஜை இறக்கி உள்ளே வைத்த மாரிச்சாமி...சொர்ணா...காபி கொண்டா...என உரத்த குரலில் சொல்ல...காபியுடன் வந்த ஸ்வர்ணா. போனமுறை பார்த்ததை விட மிகஅழகாக தெரிந்தாள். சொர்ணா மாரிச்சாமியின் மகள். இருவருமே பல வருடங்களாக பங்களாவை பொறுப்புடன் பராமரித்து வந்தனர்.

வாங்க மாமா உங்களுக்காகத்தான் காத்திருந்தேன் என உள்ளிருந்து அழைத்தபடி வந்தாள் மந்த்ரா.. ஜ்வால்யாவின் சித்தப்பா மகள். எப்படி இருக்க ?...மந்த்ரா...உன் தங்கை எப்படி இருக்கா? ஹாஸ்டலில் தானே இருக்கா இன்னமும்... ஆமாம் மாமா. நல்லாருக்கேன் . ரொம்ப இளைச்சுட்டீங்க என்றாள் கவலையுடன்..சரி ரெஸ்ட் எடுத்துக்கோங்க...நாங்க லன்ச் ரெடி பண்ணிடுறோம் என்று நகர்ந்தாள். பெட்ரூமினுள் நுழைந்தவனின் மூக்கை  பழகிய வாசனை ஒன்று மயக்கியது. ஜ்வால்யாவின் ‘‘கூல் வாட்டர் பெர்ப்யூம்” வாசனை இன்னமும் அறையில் மீதமிருந்ததை உணர்ந்தான்.. ஆழமாக மூச்சை இழுத்தவன்...ஸ்ஸ்ஸ் என பெருமூச்சுடன் கட்டிலில் சரிந்தான்.

ஜ்வால்யாவின் ஞாபகம் அலைகழித்தது. போனமுறை அவளுடன் எப்படியெல்லாம் இருந்தோம்  என்ற நினைவு வாட்டியது...அப்படியே கண்ணை மூடி படுத்திருந்தவன்... திடுக்கென விழித்தபோது மணி ஒன்று. டைனிங் டேபிளில் ஏராளமான உணவு தடபுடலாய் சமைத்திருந்தாள் சொர்ணா...சாப்பிட வாங்க என்றாள் வெட்கமாக. ஒய்யாரமாக நடந்து வந்த மந்த்ரா.. நெருக்கமாக டைனிங் டேபிளில் அமர்ந்தபடி.. சாப்பிடுங்க மாமா என அன்புடன் பரிமாறினாள்.. ஸ்வீட்... சாப்பிடுங்க...சிக்கன் வைக்கவா?...என கொஞ்சினாள்..

கூச்சமாக இருந்தாலும் கிறக்கமாக இருந்தது சிபிக்கு. தூரத்தில் சொர்ணா வேறு பொறாமை கலந்த வெட்கத்துடன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். இப்படியாக இன்றைய பொழுது... சொர்ணாவோடும்... மந்த்ராவோடும் கிளுகிளுப்பாக கழிந்தது. இரவு உணவை முடித்து அசதியாக ரூமுக்கு வந்தவன் கப்போர்டிலிருந்த விஸ்கியை க்ளாஸில் ஊற்றி தொண்டையில் சரித்துக் கொண்டான்...குளிருக்கு கதகதப்பாக இருந்தது..கட்டிலில் சரிய போனவனுக்கு கதவை தட்டும் சத்தம் கேட்டது..

கதவை திறந்தால் வெளியே மந்த்ரா..மெல்லிய நைலான் புடவையில் கவர்ச்சியாக நின்றிருந்தாள்.  உள்ளே வா வென இளித்தபடி அழைத்தவனை.. தூங்கலியா என கிறங்கியபடி ஒயிலாக நடந்து வந்து கட்டிலில் அமர்ந்தாள்.. புடவை தலைப்பு  சற்று விலகியதில் மூச்சையடைத்தது சிபிக்கு....அவள் எழுந்திரிக்கும் போது வேண்டுமென்றே தடுமாற ...சிபி அவளை அணைத்தபடி தாங்கினான். உங்களுக்காகத்தான் நான் குன்னூருக்கே வந்தேன் தெரியுமா? என சிணுங்கினாள்.. ஏதோ சத்தம் கேட்டவனாக நிமிர்ந்தால் ஜன்னலில்  சொர்ணா.. பார்த்ததும் சட்டென விலகி பயத்துடன் ஓடினாள்.

படீரென விளக்குகள் அணைய..பயங்கரமான சத்தத்துடன் ஜன்னல்கள் அடித்துக் கொள்ள இருள் சூழ்ந்தது.. மந்த்ராவிடம் மெழுகுவர்த்தி கேட்டான்... இப்போ ரொம்ப முக்கியமா? என முனகிய மந்த்ரா..அவனை விடுத்து மெழுகுவர்த்தி தேட ஓடினாள்.. காற்றில் குப்பென மல்லிகை பூ நறுமணம்..கூடவே கூல் வாட்டர் பெர்ப்யூம் வாசனை...திரைச்சீலை பேய்காற்றில் படபடக்க..சுவர் கடிகாரத்தின் டிக் டிக் ஒலி அறையின் நிசப்தத்தை கிழித்தபடி..பயங்கரமாக ஒலித்தது.

மெழுகுவர்த்தியுடன் உள்ளே நுழைந்த மந்த்ரா...எதையோ கண்டு... ‘‘வீ” லென அலற....என்ன என பயந்தபடி ஓடி வந்தான் சிபி...அ..ங்..க.. ஜ்வால்யா....என கை காட்ட...படீரென விளக்குகள் எரிய...எதிரில் சுவரில் ஜ்வால்யாவின் ஆளுயர புகைப்படம்..யாருமில்லை மந்த்ரா....வெறும் போட்டோ...என சிரிக்க..இல்லை சிபி...என திக்கியவளின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.

அவளை கட்டிலில் கிடத்தி...தூங்கு என தலையை தடவியவன் அவளுடலில்  ஓர் நடுக்கத்தை உணர்ந்தான்..பயந்திருக்கிறாள் என சமாதானப்படுத்தியபடி  அப்படியே உறங்கி போனான். திடீரென மாரிச்சாமியின் அலறல் கேட்டு எழுந்தவன்... வெளியே ஓடிவர ...சொர்ணா தலை குப்புற விழுந்தபடி ரத்த ஆற்றில் மிதந்து கிடந்தாள். போலீஸ் விசாரணையில் கிடுக்குப்பிடி போட்டது...சிபி.. மந்த்ரா.. மாரிச்சாமி... என யாரையும் விடவில்லை. குழப்பத்துடன் யோசித்தபடி ரூமிற்குள் நுழைந்தான்.. நடுங்கியபடி மந்த்ரா.. நான் சொல்லல...ஜ்வால்யா தான் என மறுபடியும் சொல்ல... சும்மா உளராத அவ செத்து எவ்ளோ நாளாகுது...நீ வேற என அலுத்துக் கொண்டான்...இன்று முழுவதும் விசாரணையில் கழிய..மாலை
லொக்கேஷன் பார்க்க கிளம்பினான் சிபி.

குன்னூரின் இண்டுஇடுக்கெல்லாம் அலைந்தான்.. இதுவரை திரையில் காணாத ஒரு இடத்தை காண்பித்துவிட...சட்டென நிறுத்தினான் காரை... போனமுறை ஜ்வால்யாவோடு வந்த அந்த அழகான பள்ளத்தாக்கு.  ப்ளீஸ்..சிபி..இங்க ஒரு போட்டோ எடேன்...நான் இன்ஸ்டாகிராமில் அப்டேட் பண்ணனும் என கொஞ்சினாள்.  வளைத்து வளைத்து ஜோடியாக, தனித்தனியாக , செல்பி என கேமராவை நிறைத்தாள் ஜ்வால்யா.. கண்கள் பணித்தது.

ஓரமாக நின்று ஜாக்ரதையாக கீழே குனிந்து பார்த்தான்... தலைசுற்றியது. முகம் முழுவதும் குப்பென வியர்த்தது. உடல் முழுவதும் நடுக்கம் பரவ வேகமாக நடந்தவன் தன் பின்னால் யாரோ தொடர்வதாக உணர்ந்தான்...திரும்பி பார்க்க யாருமேயில்லை..அவசரமாக காரில் ஏறினான்..நெஞ்சுக்கூடு படபடவென அடித்தது. காரில் ‘‘கூல் வாட்டர்” மணம் பரவியது. பின்சீட்டில் யாரோ அமர்ந்திருப்பது கண்ணாடியில்  தெரிய திரும்பினால் காலியாக இருந்தது...ப்ரம்மையாக இருக்கலாம் என மனதை சமாதானப்படுத்தி காரை கிளப்பினான். மந்த்ரா வீட்டிலிருக்க...ஜோஷ்னா உள்ளே வந்தாள்...பார்க்க அச்சு அசல் ஜ்வால்யாவை போலவே.... ஏண்டீ...சிபியை பயமுறுத்த சொன்னா...நீயேண்டீ சொர்ணாவை பயமுறுத்திட்ட..சே...

அக்கா...அவ ஜன்னல்ல எட்டிப் பாப்பாள்ன்னு ஜோசியமா தெரியும்...அவளை துரத்திக்கிட்டு ஓட அவள் என்னை பேய்னு நினைச்சி பால்கனியில் இருந்து விழுந்து செத்தா போல...நான் என்ன பண்ணுறது..செத்து தொலையறா விடு.. என அலுத்த ஜோஷ்னாவிடம்.. இன்னைக்காவது ஒழுங்கா பண்ணுடீ..அவன் பேயிருக்குன்னு இனிமே இந்த பங்களாவுக்கே வரக்கூடாது.. தலைதெறிக்க ஓடணும்.....நானும் எதையாவது பண்ணி மயக்கி கையெழுத்து வாங்க பாக்குறேன்...பிள்ளையில்லா சொத்து...ஜ்வால்யாவை கட்டிகிட்ட பாவத்துக்கு இவனுக்கு போகணுமா..சரி சீக்கிரம் கெளம்பு  அவன் வந்திரப்போறான் என அவசரப்படுத்தினாள்.

இரவு உணவிற்கு பின் ரூமிற்குள் வந்த சிபிக்கு குழப்பமாக இருந்தது..ஜ்வால்யாவாவது திரும்ப வருவதாவது...என யோசித்தவன் மந்த்ராவை கண்டதும் இளித்தான். நேற்று தான் தப்பி விட்டாள். இன்று எப்படியாவது முடித்து விட வேண்டும் என... நெருங்கினான்.... விளக்கோடு சேர்த்து மந்த்ராவை அணைத்தபடி.. வெளியே ....வீல் என்ற அலறல் சத்தம்...கலவையாக வந்தது... இருட்டில் ஓடியவன் வழியில் எதுவோ இடற மாரிச்சாமி ரத்த வெள்ளத்தில் கிடக்க...டார்ச்சை தேடி உயிர்பித்து ஒளியை பாய்ச்ச....பக்கென இதயம் துடிக்க டார்ச்சை தவறவிட்டான்..தூரத்தில் தெரியும்... அ..வ..ள்.. ஜ்வால்யா... அவளே தான்...என பதறியபடி பயத்தில் ‘‘வீல்”லென அலறி மயக்கமானான்.

சத்தம் கேட்டு சாவகாசமாய் வெளியே வந்த மந்த்ரா...ரத்த வெள்ளத்தில் மாரிச்சாமியை பார்த்து திடுக்கிட்டவள்... இது என்ன புது பிரச்சனை...சிபியை பார்த்தாள்.. மயங்கி கிடந்தான்.. ஜோஷ்னாவின் மேல் ஆத்திரமாக வந்தது..அட அறிவுகெட்டவளே என கத்தியபடி..கோபத்துடன் வெளியே வந்தவள்...

ஜோஷ்னா... மாரிச்சாமியை ஏண்டி கொன்ன நாம நல்லா மாட்டிக்க போறோம் என வெளியே நின்றிருந்த ஜோஷ்னாவின் தோளை தொட..அவள் தலை மட்டும் அப்படியே பின்புறமாக திரும்பியது..பயத்தில் மூச்சடைத்து போனாள்...பயமுறுத்தாதடி ஜோ..ஷ்..னா...என நடுங்கியவளை...நான் ஜ்வால்யா என பயங்கரமாக சிரித்தாள்..அங்க பாரு என கைகாட்டிய இடத்தில்... ரத்தவெள்ளத்தில் ஜோஷ்னா...மயக்கம் தெளிந்து பயத்தில் உறைந்த சிபியை  உற்றுப் பார்த்த ஜ்வால்யா... அவனை விடுத்து... பயத்தில் ஓடிய மந்த்ராவை தன் நீண்ட..ட..ட..ட கைகளில் தலையை திருகினாள்...ஒரே திருகு மந்த்ரா உயிரை விட்டிருந்தாள்.

நடுக்கத்தில் உறைந்திருந்த சிபியை..பயப்படாத உன்னை ஒரேடியாக கொல்லமாட்டேன்...உன்னை உண்மையா காதலிச்ச என்னை பல கோடி ரூபாய் பணத்துக்காகவும் சொத்துக்காகவும் கொல்ல நினைச்ச...போனமுறை எவ்வளவு ஆசையா நாம இங்க வந்தோம்...எவ்வளவு நம்பினேன்.. உன்னை போலவே...மந்த்ராவும், ஜோஷ்னாவும் ..மாரிச்சாமி சொர்ணாவை கைக்குள்ள போட்டு...நம்மை கொல்ல திட்டம் போட்டிருந்தாங்க. ஆனா நீ வேற திட்டம் போட்டு அவங்களை முந்திக்கிட்ட. கொலையை விபத்துன்னு மாத்தி வெளியுலகத்தை நம்ப வைச்சி தப்பிசிட்ட.. அவங்களையும் உன்னையும் சேர்த்து பழிவாங்க தான் இவ்வளவுநாளாக காத்திக்கிட்டிருந்தேன்.

ஆனா நீ இப்ப செய்யாத கொலைகளுக்கு...பேர், புகழ் சொத்தை இழந்து அவமானப்பட்டு தண்டனையை அனுபவிக்கப்போற... இப்ப இதை நீ செய்யலைன்னு நிரூபிச்சிடு பாக்கலாம் என பயங்கரமா சிரித்தபடியே காற்றில் கரைய.... கரும்புகை மேலேறி கிளம்பி சென்றது... மறுநாள்....பேய் பிசாசுன்னு டைரக்டர் நல்லா கதை பின்னுறாருப்பா என நக்கலாக தங்களுக்குள் பேசி கலாய்த்தபடி சிபியை கைது செய்தனர் போலீஸ்காரர்கள்.. கைகளில் விலங்கு பூட்டப்பட்டு....கைது செய்யப்பட்ட புகைப்படம் நாளிதழ்களில் தலைப்பு செய்தியாகியது... சோஷியல் மீடியாக்களுக்கு ஏராளமான தீனிகளை அள்ளி கொடுத்த சிபி சக்ரவர்த்தி நீதிமன்றத்தில் தண்டனை உறுதி செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-dmk-votes-2

  அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!

 • scotland-bonfire-festival

  ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி

 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்