SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேபி ஃப்ரெண்ட்லி தீபாவளி ஸ்பெஷல் உடைகள்!

2022-10-19@ 17:17:32

நன்றி குங்குமம் தோழி

காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் கீர்த்தனா. பட்டுக்கு பெயர் போன காஞ்சிபுரத்தில் இருந்து சிறுவர், சிறுமிகளுக்கான மிருதுவான உடைகளை பட்ஜெட்டில் வடிவமைத்து வருகிறார். பி.டெக் முடித்து ஐ.டி கம்பெனியில் ஐந்தாண்டுகள் வேலை செய்த இவர், கர்ப்பமானதும் குழந்தைக்காக வேலையில் இருந்து ப்ரேக் எடுத்துள்ளார். அந்த இடைப்பட்ட காலத்தில் தான் இந்த புதிய தொழில் ஆரம்பித்துள்ளது.  

‘‘எனக்கு பெண் குழந்தை பிறந்தது. இப்போது அவளுக்கு நான்கு வயதாகிறது. ஆனால் குழந்தையில் இருந்தே அவள் மிருதுவான உடைகளை தான் போடுவாள். கொஞ்சம் சொரசொரப்பான துணியாக இருந்தாலுமே அவள் அழ ஆரம்பித்துவிடுவாள். அதனால் ஆரம்பத்தில் என் குழந்தைக்காக நல்ல மிருதுவான அதே சமயம் நல்ல டிசைனுடன் ஃபேஷனாக இருக்கும் உடைகளை வாங்க வேண்டும் என தேடி அலைந்தேன். ஆனால் காட்டனில் சாதாரணமான டிசைன்களில்தான் பெண் குழந்தைகளுக்கான உடைகள் இருந்தது.

அவளை வெளியே நிகழ்ச்சிகளுக்கு அழைத்துப் போகும் போது, அவளுக்கு கம்ஃபர்டபிளான அதே சமயம் அழகான உடைகள் கிடைக்குமா என்று பார்த்த போது அந்த குறைந்தபட்ச நல்ல உடைகளும் என் பட்ஜெட்டை தாண்டி விலையுயர்ந்த விலையில் தான் கிடைத்தது. அதனால் முதலில் என் குழந்தைக்காக நல்ல மிருதுவான தரமான துணியில் உடைகள் தைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

நான் டிசைன் செய்த உடைகளை அணிய ஆரம்பித்ததும், எல்லா நிகழ்ச்சிகளிலும் அவள் எந்த அசௌகரியமும் இல்லாமல் மகிழ்ச்சியாக மற்ற குழந்தைகளோடு விளையாடினாள். இதைப் பார்த்தவர்கள், தங்கள் குழந்தைக்கும் இதே மாதிரி நல்ல தரமான உடைகளை டிசைன் செய்து தைக்க முடியுமா என்று கேட்க ஆரம்பித்தார்கள். அப்படி உருவானதுதான் இந்த ‘பட்டர்கப்ஸ் க்ளோசெட்’ (ButterCubs Closet). இதை நானும் என் தோழி பவித்ராவும் 2020ல் சேர்ந்து ஆரம்பித்தோம். நடுவில் அவர் வெளிநாடு சென்றுவிட்டதால், இப்போது நான் மட்டுமே இதை நிர்வகிக்கிறேன்.  

ஆரம்பத்தில் காட்டன் ஆடைகளை மட்டுமே வடிவமைத்து விற்பனை செய்து வந்தோம். ஆனால் நாள் போக்கில் பண்டிகைகால உடைகளும் வேண்டும் என்று வாடிக்கையாளர்களே கோரிக்கை வைத்தனர். அதனால் காஞ்சிபுரப் பட்டு பாவடைகள், கவுன்களையும் அறிமுகப்படுத்தினோம். கொஞ்சம் கொஞ்சமாக ஆண் குழந்தைகளின் உடைகளையும் வடிவமைத்தோம். பின் மாம்-டாடர் காம்போ, சிப்ளிங்ஸ் காம்போ (சகோதரன் - சகோதரி காம்போ) என வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப எங்கள் ஐடியாவையும் டிசைனையும் விரிவுப்படுத்தியுள்ளோம்.

எங்களுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் சில கைத்தறி நெசவாளர்களுடன் தொடர்பு இருக்கிறது. அதனால் அவர்களிடம் இருந்தே நல்ல தரமான உயர் ரக துணிகளை வாங்கி இங்கே எங்கள் தையல் மையத்தில் டிசைன் செய்து உடையாக மாற்றுவோம். அதே மாதிரி பனாரஸ் சில்க், பனாரஸ் காட்டன் துணிகளை வட நாட்டு கைத்தறி மையங்களில்  வாங்குவேன். இதை தாண்டி, என் தையல் மையத்தில் உருவான உடைகளை மார்கெட்டிங் செய்து, ஆன்லைனில் விற்பனை செய்வது எல்லாமே என் பொறுப்பு தான். ஆரம்பத்தில் நாங்களே உடைகளை வடிவமைத்தோம்.

ஆனால் நாள் போக்கில், வாடிக்கையாளர்கள் அவர்களின் ஐடியாவை எங்களுக்கு சொல்வார்கள். தன் குழந்தை இந்த மாதிரி உடை அணிய வேண்டும் என பெற்றோர்களுக்கு பல கனவுகள் இருக்கும். அது நிஜமாகும் போது அவர்களுக்குள் ஒரு சின்ன சந்தோஷமும் பெருமையும் உண்டாகும். அதனால் வாடிக்கையாளர்கள் விரும்பும் டிசைனிலும் உடைகளை
வடிவமைக்கிறோம்.

இந்த உடைகள் எல்லாம் சிறுவர், சிறுமிகளுக்கு என்பதால் ஒவ்வொரு தையலுமே மிகுந்த கவனத்துடன் குழந்தைகளின் தோலுக்கு ஏதுவான விதத்தில் தான் தயாரிக்கிறோம். பார்ட்டி உடைகள் வடிவமைக்கும் போது, உள்ளே மிருதுவான காட்டன் லைனிங் இருக்கும். இதனால் குழந்தைகளின் சருமத்தை அந்த உடைகள் பாதிக்காது. பண்டிகை காலம், பருவ காலத்திற்கு ஏற்ற மாதிரி எங்கள் டிசைன்களும் மாறிக்கொண்டே இருக்கும். அதே போல எங்கள் உடைகளும் பட்ஜெட்டுக்குள் இருப்பதால் வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் எங்கள் உடைகளை தேர்வு செய்கிறார்கள். காட்டன் உடைகள் எல்லாம் 500 ரூபாயில் ஆரம்பிக்கிறது.

பட்டுப்பாவாடை எல்லாம் 1200ல் இருந்து ஆரம்பிக்கிறது. குழந்தைகள் மட்டும் இல்லாமல் பெரியவர்களுக்கும் கூட நாங்கள் ஆடை வடிவமைக்கிறோம். எனக்கு பெண் குழந்தை என்பதால் பெரும்பாலும் நான் பெண் குழந்தைகளுக்கான உடைகளில் தான் அதிக கவனம் செலுத்தி வந்தேன். ஆனால் இப்போது எனக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்து இருக்கிறான். அதனால் இனி கொஞ்சம் கொஞ்சமாக பட்டர்கப்ஸ் க்ளோசெட்டில் ஆண் குழந்தைகளுக்கான உடைகளையும் அதிகம் பார்க்கலாம். இந்த தீபாவளிக்கு ஆண் குழந்தைகளுக்கான குர்தா ஜிப்பா வகைகள், வேஷ்டி சட்டைகள் அறிமுகமாகஉள்ளன.

நாங்கள் வடிவமைக்கும் ஆடைகளை முதலில் என் மகள்தான் டெஸ்ட் செய்வாள். அவளுக்கு அந்த துணி சவுகரியமாக இருக்கிறதா என்பதை சோதித்து பார்த்த பின் தான் அதை வாடிக்கையாளர்களுக்கு தயாரிப்போம். அதே போல அவள் தனக்கு பிடித்த டிசைன்களை, நிறங்களை கூட சில சமயம் தேர்வு செய்வாள். பொதுவாக குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான விஷயங்கள் பிடிக்கும் என்பதால், அவளின் கருத்துகளையும் நாங்கள் முக்கியமாக எடுத்துக்கொள்வோம். சமீபத்தில் நவராத்திரியை முன்னிட்டு வெளியிட்ட ஒன்பது நிறங்களில் ஒன்பது வகையான உடைகள், வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது” என்கிறார் கீர்த்தனா.

தொடர்ந்து வரும் இந்த பண்டிகை நாட்களில், குழந்தைகள் வெறும் பொம்மை போல ஒரே இடத்தில் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு அந்த உடையை மறுபடியும் அணியவே முடியாமல் இருக்கக் கூடாது என, அவர்களுக்கு சில்க் காட்டன், சுங்குடி காட்டன் போன்ற மிகவும் மிருதுவான துணிகளில் ஆடைகளை கீர்த்தனா வடிவமைத்துள்ளார். இதனால், உங்கள் வீட்டு குட்டிச் செல்லம் பண்டிகை நாட்களில் கனமான உடைகளுடன் கஷ்டப்படாமல், சந்தோஷமாக வீடு எங்கும் சுற்றித்திரிந்து மகிழ்ச்சியாக தீபாவளி பண்டிகையை கொண்டாடலாம்.  

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்