SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சத்தான சுண்டல்

2022-10-15@ 17:06:52

நன்றி குங்குமம் தோழி

நவராத்திரி என்றாலே நமக்கு ஞாபகம் வருவது கொலுவும், தினமும் நைவேத்தியம் படைக்கும் சுண்டல்கள்தான். வழக்கம் போல் இல்லாமல் இந்த நவராத்திரிக்கு சத்தான, ருசியான, எல்லோருக்கும் பிடித்தமான சுண்டல் வகைகளை படைத்துள்ளார் சமையல் கலைஞர் குப்பம்மாள்.

பார்லி வேர்க்கடலை சுண்டல்

தேவையானவை:

ஊறவைத்த பார்லி - 1 கப்,
வறுத்த வேர்க்கடலை - ½ கப்,
சீரகம்,
சோம்பு தலா - ¼ டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது),
கொத்தமல்லி - சிறிதளவு,
இஞ்சி துருவல் - ½ டீஸ்பூன்,
உப்பு,
எண்ணெய் - தேவைக்கேற்ப,
தேங்காய் துருவல் - ½ கப்.

செய்முறை:

ஊறவைத்த பார்லி, வேர்க்கடலையை சிறிது உப்பு சேர்த்து ஆவியில் 10 நிமிடம் வேக வைக்கவும். அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், பச்சைமிளகாய், சோம்பு, இஞ்சித் துருவல் போட்டு தாளித்து பின் வெந்த பார்லி, வேர்க்கடலை போட்டு உப்புச் சேர்த்துக் கிளறவும். பின் நறுக்கிய கொத்தமல்லி, தேங்காய் துருவலைச் சேர்த்து ஒன்றாக கலக்கி இறக்கவும். பார்லி வேர்க்கடலைச் சுண்டல் ரெடி.

குறிப்பு:  கர்ப்பிணிப் பெண்களுக்கும் நீர் பிரியாமல் சிரமப்படுபவர்களுக்கும் ஏற்ற சுண்டல் இது.

தக்காளி சோயா பீன்ஸ் சுண்டல்


தேவையானவை:

ஊறவைத்த சோயா பீன்ஸ் - 1 கப்,
தக்காளி சாறு - ¼ கப்,
மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்.
சீரகம் - ¼ டீஸ்பூன்,
கறிவேப்பிலை,
புதினா - சிறிதளவு,
தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்,
எண்ணெய்,
உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை:

ஊறவைத்த சோயா பீன்ஸை குக்கரில் வேகவைத்து இறக்கி, ஆறவிடவும். அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் விட்டுச் சூடானதும் சீரகம், கறிவேப்பிலை, புதினா தாளிக்கவும். தக்காளி சாறு, மிளகாய்த் தூள் சேர்த்துக் கொதிக்க விடவும். பின் வெந்த சோயா பீன்ஸ், உப்புச் சேர்த்து சிறு தீயில் கொஞ்சம் ட்ரை ஆகும் வரை கிளறவும். நன்கு கலந்த பின் தேங்காய் துருவல் தூவி இறக்கவும். தக்காளி சுவையுடன் வித்தியாசமான சுண்டல் தயார்.

குறிப்பு: சோயா பீன்ஸை குறைந்தது 10 மணி நேரம் ஊறவைக்கவும். நன்றாக வெந்துவிடும்.

முளைக்கட்டிய வெந்தய சுண்டல்

தேவையானவை:

முளைக்கட்டிய வெந்தயம் - 1 கப்,
காய்ந்த மிளகாய் - 2,
கடுகு,
உளுத்தம் பருப்பு - ¼ டீஸ்பூன்,
கறிவேப்பிலை,
பொடித்த வெல்லம் - 2 டேபிள்ஸ்பூன்,
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய்,
உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை:

முளைக்கட்டிய வெந்தயத்தை 15 நிமிடம் ஆவியில் வேகவைத்து இறக்கி ஆறவிடவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து, வேகவைத்த வெந்தயம், உப்பு சேர்த்து கலக்கவும். பின் தேங்காய்  துருவல், பொடித்த வெல்லம் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: சுகர் பிராப்ளம் இருப்பவர்களுக்கு ஏற்ற சுண்டல் இது.

கோதுமை சுண்டல்

தேவையானவை:

முளைக்கட்டிய கோதுமை - 1 கப்,
கடுகு,
உளுத்தம் பருப்பு,
சீரகம் - தலா ¼ டீஸ்பூன்,
இஞ்சித் துருவல் - 1 டீஸ்பூன்,
சிறிய பச்சை மிளகாய் - 3,
தக்காளி,
வெங்காயம் - தலா 1(பொடியாக நறுக்கியது),
கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு,
எண்ணெய் - தேவைக்கேற்ப,
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு.

செய்முறை:

முளைக்கட்டிய  கோதுமையை குக்கரில் வேகவைத்து, தண்ணீர் வடித்தபின் ஆறவைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் தாளித்த பின் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி துருவல், கறிவேப்பிலைச் சேர்த்து சிறு தீயில் நன்றாக வதக்கவும். வதங்கியபின் வேகவைத்துள்ள கோதுமை, உப்பு,
தேங்காய் துருவல் சேர்த்து ஒன்றாக சேரும்படி நன்றாக வதக்கி இறக்கும்போது கொத்தமல்லி தழைத் தூவி இறக்கவும்.

ஸ்வீட் கார்ன் சுண்டல்

தேவையானவை:


சிறு துண்டாக நறுக்கி வேகவைத்த ஸ்வீட் கார்ன் - 2 கப்,
பச்சை மிளகாய் - 2,
புதினா,
கொத்தமல்லி - சிறிதளவு,
சோம்பு - ¼ டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்,
உப்பு,
எண்ணெய் - தேவைக்கேற்ப.

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, நறுக்கிய பச்சைமிளகாய் தாளித்து பின் வெந்த கார்ன் சேர்த்துக் கிளறவும். பிறகு நறுக்கிய கொத்தமல்லி, புதினா, தேங்காய் துருவல், உப்புச் சேர்த்து கிளறி இறக்கினால் டேஸ்டி கார்ன் சுண்டல் தயார்.

கொண்டைக்கடலை ஃப்ரூட் சுண்டல்

தேவையானவை:


முளைக்கட்டிய கொண்டைக்கடலை - 1 கப்,
சிறிய துண்டுகளாக நறுக்கிய ஆப்பிள் - 1 கப்,
மாதுளை முத்துகள் - 4 டேபிள்ஸ்பூன்,
திராட்சைப் பழம் - 20,
வாழைப்பழம் - 1 (நறுக்கியது),
சாட் மசாலா - 1 டீஸ்பூன்,
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்,
தேன் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

முளைக்கட்டிய கொண்டைக் கடலையை சிறிதளவு உப்புச் சேர்த்து தண்ணீர் தெளித்து ஆவியில் வேக வைத்து, வெந்தபின் இறக்கி ஆறவிடவும். ஒரு பாத்திரத்தில் வெந்தக் கொண்டைக்கடலை, நறுக்கிய ஆப்பிள் துண்டுகள், வாழைப்பழம், மாதுளை முத்துக்கள், திராட்சை, சாட்மசாலா, எலுமிச்சை சாறு, தேன் சேர்த்து நன்றாக கலக்கினால் டேஸ்டி ‘கொண்டைக் கடலை ஃப்ரூட் சுண்டல்’ ரெடி. இது டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்ற உணவு.

பச்சைப்பயறு பனீர் சுண்டல்

தேவையானவை:

முளைக்கட்டிய பச்சைப்பயறு - 2 கப்,
கரம் மசாலா - 1 டீஸ்பூன்,
பனீர் துருவல் - 1 கப்,
இஞ்சி துருவல் - 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2 (கிள்ளியது),
சீரகம் - ¼ டீஸ்பூன்,
உப்பு,
எண்ணெய் - தேவைக்கேற்ப.

செய்முறை:

முளைக்கட்டிய பச்சைப் பயறை ஆவியில் வேகவைத்து, வெந்தபின் இறக்கி ஆறவிடவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் காய்ந்த மிளகாய், இஞ்சி துருவல் தாளித்து பின் வெந்த பச்சைப்பயறு, உப்பு, கரம் மசாலா சேர்த்து வதக்கவும். வதக்கிய பின் பன்னீர் துருவல் சேர்த்து நன்குக் கிளறி இறக்கவும்.

காராமணி சுண்டல்

தேவையானவை:

வெந்த காராமணி - 2 கப்,
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2,
உரித்த பூண்டுப் பல் - 8,
பெருங்காயத் தூள் - ¼ டீஸ்பூன்,
கொத்தமல்லி,
உப்பு,
எண்ணெய் - தேவைக்கேற்ப,
தேங்காய் துருவல் - ½ கப்,
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்.

செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பச்சை மிளகாய், வெங்காயம், நசுக்கிய பூண்டு  (ஒன்றிரண்டாக நசுக்கவும்), மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பூண்டு, வெங்காயம் வதங்கியதும் வெந்த காராமணி, உப்பு, பெருங்காயத்தூள், தேங்காய் துருவல் சேர்த்து ஒன்றாகச் சேரும்படி நன்றாக வதக்கி கொத்தமல்லி தூவி இறக்கவும்.

குறிப்பு: காராமணியை ஊறவைக்காமல் குக்கரில் போட்டு வேகவைக்கலாம். பூண்டு பல், பெருங்காயத்தூள் சேர்ப்பதால் வாயுத் தொல்லை வராது. பெரியவர்களும் சாப்பிடலாம்.

கொள்ளு சுண்டல்

தேவையானவை:

வேகவைத்த கொள்ளு - 2 கப்,
பச்சை மிளகாய் - 3,
பெரிய வெங்காயம் - 1(நறுக்கியது),
இஞ்சி,
பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்,
கொத்தமல்லி,
கறிவேப்பிலை - தேவைக்கேற்ப,
உப்பு,
எண்ணெய் - தேவையான அளவு.
தேங்காய் துருவல் - ½ கப்,
கடுகு - ¼ டீஸ்பூன்.

செய்முறை:


முதலில் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை தாளித்து பின் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு சிறு தீயில் வதக்கவும். வதங்கியதும் வெந்த கொள்ளு, உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி, கொத்தமல்லி தழைத் தூவி இறக்கவும். சத்தான கொள்ளு சுண்டல் ரெடி.

குறிப்பு: கொள்ளு கொலஸ்ட்ராலைக் குறைக்கக்கூடியது. குறைந்தபட்சம் கொள்ளுவை 8 மணி நேரம் ஊறவைத்து வேகவைத்தால் சீக்கிரம் நன்றாக மெத்தென்று வெந்துவிடும். வேகவைத்த  கொள்ளு தண்ணீரில் ரசம் வைத்தால் சூப்பராக இருக்கும்.

சிறுதானிய சுண்டல்

தேவையானவை:

வரகு,
சாமை,
தினை,
கம்பு,
குதிரைவாலி குருணைகள் - 3 கப் (எல்லாம் கலந்தது),
காய்ந்த மிளகாய் - 3,
பெரிய வெங்காயம் - 1,
வறுத்து பொடித்த வேர்க்கடலை - ½ கப்,
தேங்காய் துருவல் - ¼ கப்,
உப்பு,
எண்ணெய்,
கொத்தமல்லி தழை தேவைக்கேற்ப.

செய்முறை:

சிறு தானிய குருணைகளை ஒன்றாகக் கலந்து சுமார் 4 அல்லது 5 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய பின் குருணைகளை உப்பு தண்ணீர் லேசாக தெளித்து ஆவியில் வேக வைத்து, வெந்தபின் நன்றாக உதிர்த்து ஆறவைக்கவும். அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் காய்ந்த மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, வதங்கிய பின் வெந்த சிறுதானிய குருணைகள், உப்பு, தேங்காய் துருவல், வேர்க்கடலைப் பொடி சேர்த்து நன்றாக கிளறி இறக்கும் முன் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சத்தான சிறுதானிய சுண்டல் தயார்.

தொகுப்பு: ப்ரியா

தொகுப்பு: உஷா நாராயணன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • stalin-corp-31

    மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

  • long-whale-newyork

    35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

  • pak-blast-30

    பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

  • china-spring-festival

    சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!

  • orange-tree-wishes-27

    ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்