SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாலை நேரத்து மயக்கமென உலவியவர்!

2022-10-15@ 16:40:47

நன்றி குங்குமம் தோழி

செல்லுலாய்ட் பெண்கள்-107

ஆஷா (எ) சைலஸ்ரீ

அழகிய வட்ட முகம், கூர்மையான கண்கள், தமிழ் மொழியை எந்த அளவுக்குத் தெளிவாகப் பேசுவாரோ அதேபோல் கன்னடமும் அவர் நாவில் களி நடனமாடும். அசாத்தியமான நடனத்திறன், இனிய குரல் வளம், இனிமையாகப் பாடுவதிலும், வீணை இசைப்பதிலும் வல்லவர்; இசை, நடனம் என்னும் அற்புதமானதோர் கலைச்சூழலில் பிறந்து வளர்ந்தவர். சற்றே நடிகை சந்திரகாந்தாவை நினைவூட்டும் சாயலில் அமைந்த முகம். ஆனால், அவருக்கும் இவருக்கும் எந்தத் தொடர்புமில்லை. அசல் தமிழ்ப் பெண்ணான இவருக்குத் தமிழில் தொடர்ந்து நடிக்கக் கொடுத்து வைக்கவில்லை. தெலுங்கு, மலையாளம், இந்தியில் சில படங்களில் நடித்திருந்தபோதும் முழுக்க முழுக்கக் கன்னட நடிகையாகவே மாறி கர்நாடகத்துக்குப் போனவர். அவர் ஆஷா என்னும் பெயரில் அறிமுகமாகி சைலஸ்ரீ என்று தொடர்ந்தவர்.  

இயக்குநர் ஸ்ரீதரின் அறிமுகங்கள் எப்போதும் சோடை போனதில்லை. சைலஸ்ரீயும் அப்படித்தான். 1965 ஆம் ஆண்டு வெளியான ‘வெண்ணிற ஆடை’ வண்ணத் திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், மூர்த்தி, ஜெயலலிதா, நிர்மலா, ஆஷா என ஐந்து புதுமுகங்கள் அறிமுகம் செய்யப்பட்டார்கள். மூர்த்தியும் நிர்மலாவும் தாங்கள் அறிமுகமான படமான ‘வெண்ணிற ஆடை’ என்ற முன்னொட்டுப் பெயருடனே இப்போது வரை வலம் வருகிறார்கள். மூர்த்தி ஆரம்பம் முதல் எப்போதுமே நகைச்சுவை நடிப்பைத் தேர்ந்து கொண்டவர்.

நிர்மலா கதாநாயகி, இரண்டாம் நிலை நாயகி என்று நிலை பெற்றவர். ஸ்ரீகாந்த், திரைப்படங்களுக்கு வருவதற்கு முன்னதாக அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர்; பின்னர் திரையில் நாயகன், நகைச்சுவை, வில்லன், குணச்சித்திரம் என பலதரப்பட்ட பண்பட்ட நடிப்பை வழங்கியவர். ஜெயலலிதா கன்னடத் திரைப்படங்களில்குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் நாயகியாகவும் மாறி இறுதிவரை இதர மொழிகளான தெலுங்கு, தமிழில் நாயகியாகவே தொடர்ந்து அதன் உச்சம் தொட்டு, பின்னர் அரசியலிலும் களம் கண்டு, தமிழகத்தின் முதலமைச்சராக ஆட்சி செய்து நிறைவடைந்தவர். ஆஷா, புதுமுகமாக அறிமுகமாகி ‘வெண்ணிற ஆடை’ யில் துணைக் கதாபாத்திரமாக, நகைச்சுவை நாயகனுக்கு இணையாக நடித்தவர்.

பொறுப்பு மிக்கதோர் சேடியாக, செவிலியாக...

‘வெண்ணிற ஆடை’ யில் மனநலம் பாதிக்கப்பட்ட டீன் ஏஜ் நாயகி ஷோபாவுக்கு (ஜெயலலிதா) உற்ற துணையாக, எப்போதும் அவளை உடன் இருந்து கவனித்துக் கொள்ளும் உறவுக்காரப் பெண்ணாக, தோழியாக ஆஷா நடித்திருப்பார். திரைப்படக் கதாபாத்திரத்தின் பெயரும் ஆஷா. அளவற்ற செல்வம் இருந்தபோதிலும், பெற்ற தாய் தந்தையாலேயே கவனித்துக் கொள்ள முடியாத நிலையில் இருக்கும் ஒரு மனநோயாளிப் பெண்ணை டாக்டர், நர்ஸ் தவிர்த்து அக்கறையுடன் வேறொருவர் கவனித்துக் கொள்வதென்பது அவ்வளவு எளிதான காரியமும் அல்ல. அப்படி பொறுப்பு மிக்கதொரு பெண்ணை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார் ஆஷா.

மூர்த்தியுடன் இணைந்து காதலும் களியாட்டமும், அவர் சொல்லும் பொய்களுக்கெல்லாம் வளைந்து கொடுத்து செல்வந்தர் வீட்டுப் பெண்ணாகவும் மெத்தப் படித்த பெண் போலும் மூர்த்தியின் தந்தையிடம் ஸ்டைலாகப் பேசுவதும் நடந்து கொள்வதும் என சிறப்பாகவே நடித்தார். அத்துடன் இந்த நகைச்சுவை ஜோடிக்கு ‘அல்லித்தண்டு கால்களெடுத்து ஆட்டம் ஆடிடவோ....’ என்று ஒரு டூயட் பாடல் காட்சியும் உண்டு.

மோட்டார் சுந்தரம் பிள்ளையின் செல்ல மகள்களில் ஒருவர்

அடுத்து ஆஷாவுக்குக் கிடைத்த வாய்ப்பு ஜெமினி நிறுவனத்தின் தயாரிப்பு. மிகப் பிரமாண்டமான படங்களை அதிகப் பொருட் செலவில், ஏராளமான விளம்பரங்களுடன் மிகப் பெரும் நட்சத்திரங்களை வைத்து தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் திரைப்படங்களைத் தயாரித்தளித்த எஸ்.எஸ்.வாசன்,  சிவாஜி கணேசன், பண்டரிபாய், சௌகார் ஜானகி, சித்தூர் நாகையா, ‘அய்யா தெரியாதய்யா’ ராமாராவ், நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், ரவிச்சந்திரன், சிவகுமார், மணிமாலா, குமாரி சச்சு, காஞ்சனா, ஜெயலலிதா, ஆஷா, குழந்தை நட்சத்திரங்கள் சாவித்திரி, குட்டி பத்மினி, கௌசல்யா என ஏராளமான நட்சத்திரப் பட்டாளங்களுடன் தங்களின் ஜெமினி பிக்சர்ஸ் மூலம் தயாரித்த ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ படத்தில் கதாநாயகன் சுந்தரம் பிள்ளைக்கு (சிவாஜி கணேசன்) ஏழு மகள்களும் ஒரு மகனுமாக எட்டு பிள்ளைகள். அவர்களோடு கைம்பெண்ணான அக்காள் (பண்டரிபாய்), அவரது ஒரே மகன் (நாகேஷ்) இவர்களையும் சேர்த்து குடும்பத்தின் எண்ணிக்கை இன்னமும் கூடுதல்.

இத்தனை பிள்ளைகளுக்குப் பின்னரும் மீண்டும் தாய்மை அடைகிறார் அவர் மனைவி மீனாட்சி (சௌகார் ஜானகி). இந்தக் குடும்பம் மட்டுமல்லாமல், ஊருக்கும் சொந்த வீட்டுக்கும் தெரியாமல் இன்னொரு மனைவியும் (மணிமாலா) அவர்களுக்கு இரு மகள்கள், இரு மகன்கள் என நான்கு பிள்ளைகளும் என மற்றொரு குடும்பமும் சுந்தரம் பிள்ளைக்கு (சிவாஜி கணேசன்) உண்டு. இந்த உண்மை யாரும் எதிர்பாராத ஒரு தருணத்தில் வெளிவருகிறது. இதுதான் இந்தப் படத்தின் திருப்புமுனையும் கூட. அது ஃபிளாஷ்பேக் காட்சிகளாகத் திரையில் விரிகிறது.

ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளே சுந்தரம் பிள்ளைக்கு அதிகம். ஆனால், அத்தனை குழந்தைகளையும் ஒரே மாதிரி மிகவும் செல்லமாகவும் சுதந்திரமாகவும் வளர்க்கிறார். அந்தக் குழந்தைகளில் இரண்டாவது மகள் விமலாவாக ஆஷா நடித்திருந்தார். நடிப்புடன் ஆடல், பாடல்களும் உண்டு. சச்சு, ஜெயலலிதா, ஆஷா மூவரும் தாங்கள் விரும்பியவரையே தங்கள் வாழ்க்கைத் துணையாகக் குடும்பத்தின் பெரியவர்கள் பேசி முடித்த பின் மன நிறைவுடனும் மகிழ்ச்சித் துள்ளலுடனும் ஆடிப் பாடும் அந்தக் காட்சியில் அமைந்த,

‘துள்ளித் துள்ளி விளையாடத் துடிக்குது மனசு
தோழி! மணமாலை காதலின் பரிசு....’


என்ற இனிமையான பாடலும் ஆடலும் கண்களுக்கும் காதுகளுக்கும் மனதுக்கும் நல்ல சுகானுபவம்.  

தமிழ்ப் படங்களில் கிடைக்காத வரவேற்பும் பெயர் மாற்றமும்

மிகப் பிரபலமான இயக்குநர்ஸ்ரீதர், மிகப்பெரும் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசன் இவர்கள் இருவரின் படங்களில் நடித்ததற்குப் பின்னரும் தமிழில் அவருக்கு நாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் அமையாதது துயரம் தான். இவருடன் சேர்ந்து தமிழில் அறிமுகமான ஜெயலலிதா தமிழ், தெலுங்கு என உச்ச நட்சத்திரங்களுடன் நாயகியாக நடித்து மிக உச்ச நிலையை எட்டிப் பிடித்து விட்டார்.

ஆஷா என்ற பெயர் ராசி சரியில்லையோ என நினைத்து அவர் தன் பெயரையும் கூட சைலஸ்ரீ என மாற்றி வைத்துக் கொண்டார். ஆனால், தமிழில் அவருக்கு அமைந்த படங்களில் துணைக் கதாபாத்திரங்களாக, கிளப் டான்ஸராக, வில்லியாக (Vamp), குணச்சித்திரப் பாத்திரங்களாக மட்டுமே வேடங்கள் அமைந்தன. 25 அல்லது 30 படங்களுக்கு மேல் தமிழில் அவர் நடிக்கவில்லை. 1965ல் திரைத்துறைக்கு அறிமுகமான இவரை தமிழ்த் திரையுலகம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. அதனாலேயே அவர் கன்னடப் படங்களின் பக்கம் நகர்ந்தார். அதன் பின் முழுமையாக கன்னடத் திரையுலகிலேயே நிலைத்திருக்க வேண்டிய சூழலும்
அவருக்கு ஏற்பட்டது.

பிரபல இசைக் குடும்பத்தின் வாரிசாகப் பிறந்தவர்...

குழந்தை இசை மேதை, வாய்ப்பாட்டுக் கலைஞர், வீணை இசைக் கலைஞர், சங்கீத பூஷணம் வீணை ஞானாம்பாளின் மகள்கள் மூவரில் இரண்டாமவர் வசந்தா. ஆம்! அதுதான் சைலஸ்ரீயின் இயற்பெயர். ஞானாம்பாளின் மூன்று மகள்களுமே முறையாக சாஸ்திரீய இசையையும் வீணை வாசிப்பையும் தங்கள் தாயாரிடம் பயின்றவர்கள். அத்துடன் பரத நாட்டியமும் கற்றவர்கள். வீணை ஞானாம்பாள் திருச்சி வானொலி நிலையக் கலைஞராகப் பணியாற்றியவர். பின்னர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வீணை மற்றும் இசைப் பேராசிரியராய்ப் பணியாற்றி பல்வேறு இசைக்கலைஞர்களை உருவாக்கிய குரு. 90 வயது வரை வாழ்ந்து 2010 ஆம் ஆண்டு மறைந்தவர். ஞானாம்பாள் பெயரில் சிறந்த இசைக்கலைஞர்களுக்கான விருதும்
வழங்கப்படுகிறது.

சைலஸ்ரீயின் தந்தையார் எல்.பாலகிருஷ்ணன், பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் விங் கமாண்டராகப் (Wing Commander) பணியாற்றியவர். ஹார்மோனியம், தபலா, மிருதங்கம் போன்ற இசைக்கருவிகளை நன்கு வாசிக்கக்கூடிய சிறந்த இசை விற்பன்னர். இவர்,  நடிகர் ஜெமினி கணேசனின் பள்ளித் தோழரும் கூட. மற்றொரு கலைக் குடும்பத்தின் மருமகளானார்...

தேர்ந்த இசைக்குடும்பத்தின் வாரிசாகப் பிறந்து கலைகளை நன்கு கற்றுத் தேர்ந்தவரான சைல தன் வாழ்க்கைத் துணையாகத் தேர்வு செய்த சுதர்சனும் ஒரு பிரபல கலைக்குடும்பத்தின் வாரிசு.  சுதர்சனின் தந்தையார் பழம்பெரும் நாடக, திரைப்பட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமை வாய்ந்தவர். மௌனப் பட காலம்தொட்டு நடித்து வரும் முன்னோடி கலைஞர். அவருடைய மகன்கள் நால்வரில் ஆர்.என்.கே. பிரசாத், ஆர்.என்.கே. ஜெயகோபால், ஆர்.என். கே. சுதர்சன் மூவரும் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், பாடலாசிரியர், பாடகர், கேமராமேன் என திரைத்துறை சார்ந்து பன்முகத்திறன் பெற்று விளங்கியவர்கள்.  

கன்னடப் படங்களில் கதாநாயகன், வில்லன் என நடித்துக் கொண்டிருந்த சுதர்சனும் தென்னிந்திய மொழிகள், இந்தி என அனைத்து மொழி நடிகர். 1968ல் ஏற்பட்ட இவர்களின் காதலுக்கு சிறு சிறு எதிர்ப்புகள் இருந்தபோதும், அதை எல்லாம் கடந்து இந்தக் காதல் ஐந்தாண்டுகள் வரை நீடித்தது. பின்னர் அனைவரின் ஒப்புதலுடன் 1973 ஆம் ஆண்டு சுதர்சன் - சைலஸ்ரீதிருமணம் சிறப்பாக நடைபெற்றது.

கன்னடத் திரையுலகம் அளித்த வரவேற்புமுன்னதாக 1966ல் ‘சந்தியா ராகம்’ கன்னடப் படத்தில் சிறு வேடத்தில் மிகக் குறைந்த நேரமே தோன்றினார் சைலஸ்ரீ பின்னர் கன்னடத் திரையுலகில் பல புதுமைகளையும் புகுத்தியவர் சைலஸ்ரீ. மேற்கத்திய நடனங்கள் ஆடுவதை அறிமுகம் செய்து வைத்தவர் இவரே. முதன்முதலாக ஜீன்ஸ் அணிந்து திரையில் தோன்றியவரும் இவர்தான். சைலஸ்ரீ ஸ்டைல் என பல புதிய புதிய ஹேர் டிரெஸ்ஸிங் (கூந்தல் அலங்காரம்) முறைகளையும் பரவலாக அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

1970க்குப் பின் சைலஸ்ரீ தமிழ்ப் படங்களில் நடிப்பதை முற்றிலும் விடுத்து, கன்னடப் படங்களில் மட்டுமே முழு கவனம் செலுத்தினார். அவர்கள் குடும்பத் தயாரிப்பாகச் சில படங்கள் தயாரிக்கப்பட்டபோது, குடும்ப உறுப்பினர்களே இயக்கம், பாடல், கதை, திரைக்கதை என பங்கேற்றார்கள். 1971ல் வெளியான ‘நகுவ ஹூவு’ (சிரிக்கும் மலர்) படத்தில் சுதர்சன், சைலஸ்ரீ இருவரும் நாயக, நாயகியாய் இணைந்து நடித்தார்கள். இப்படத்தின் கதாசிரியர் சைலஸ்ரீஎன்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த படத்துக்கான தேசிய விருதினையும் இப்படம் பெற்றது.

இது தவிர காடின ரஹஸ்யா, கள்ளர கள்ளா, மாலதி மாதவா போன்ற படங்களிலும் இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள். திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம், கேமரா என அனைத்தையும் ஏற்றுப் பங்களித்தவர் சுதர்சனின் சகோதரர் கிருஷ்ண பிரசாத். (இவர் ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் கமலின் தந்தையாக, சற்றே மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்தவர் என்றால் அனைவருக்கும் நன்கு தெரியும்).

சைலஸ்ரீயின் திறமைகளை நன்கு வெளிப்படுத்தும் வாய்ப்பாக அமைந்த மற்றொரு திரைப்படம் 1981ல் வெளியான ‘மரீயாத ஹாடு (மறக்க முடியாத பாட்டு). இப்படத்தின் இரு நடன இயக்குநர்களில் சைலயும் ஒருவர் என்பதும் குறிப்பிடப்பட வேண்டியதாகும். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் அனைத்தையும் ஏற்றவர் சுதர்சனின் மற்றொரு சகோதரர் ஆர்.என்.ஜெயகோபால். (இவரும் ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தின் வில்லன்களில் ஒருவராகவும், நாசரின் தந்தையாகவும் நடித்தவர்.‘நாயகன்’ படத்திலும் கூட வில்லன் கோலியாக நடித்தார்) கேமராமேனாகப் பணியாற்றியவர் கிருஷ்ண பிரசாத்.

பாடல்களால் நினைவில் நிற்பவர்

இப்போதும் தமிழில் சைலஸ்ரீயை நினைவூட்டிக் கொண்டிருப்பவை அவர் நடித்த சில படங்களின் மறக்க முடியாத பாடல்கள். ‘தரிசனம்’ படத்தில் சிறு வேடம் என்றாலும் கண்ணதாசனின் தத்துவப் பாடலாக, சூலமங்கலம் ராஜலட்சுமி இசையில் டி.எம்.சௌந்தர்ராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி குரல்களில் ஒலிக்கும் அற்புதமான ‘இது மாலை நேரத்து மயக்கம்; பூமாலை போல் உடல் மணக்கும்’ பாடல் என்றால் மிகையில்லை.

‘திருமலை தென்குமரி’ படத்தின் ‘மதுரை அரசாளும் மீனாட்சி’ மற்றும் ‘நீலக்கடல் வேகத்திலே நிலம் கொண்டு செல்லாமல்..’ பாடல் காட்சிகளிலும் குமாரி பத்மினி, சி.ஐ.டி. சகுந்தலா இவர்களுடன் இணைந்து நடனமாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் 100 படங்களுக்குள்தான் நடித்தார். 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சைலஸ்ரீ கன்னடப் படங்களில் நடிப்பதையும் குறைத்துக் கொண்டார். கன்னடத் திரைப்படங்களில் அவர் ஆற்றிய பங்களிப்புக்கான வாழ்நாள் சாதனை விருதான ‘ராஜ்யோத்ஸவா
விருது’ 2019 ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்டது.

உற்ற துணையாக விளங்கிய கணவர் சுதர்சன் 2017 ஆம் ஆண்டு சிறுநீரகக் கோளாறு காரணமாக மறைந்தார். கணவரின் மறைவுக்குப் பின் சைல கற்ற இசை ஆத்மார்த்தமான துணையாக விளங்குகிறது. தற்போது அவர் பெங்களூருவில் வசித்து வருகிறார்.   ஒரு சிறு இடைவெளிக்குப் பின் மீண்டும்செல்லுலாய்ட் பெண்கள் வருவார்கள்... தொடர்வார்கள்.

சைலஸ்ரீ நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

வெண்ணிற ஆடை, மோட்டார் சுந்தரம் பிள்ளை, பந்தயம், பெண்ணே நீ வாழ்க, செல்வ மகள், முத்துச்சிப்பி, நீயும் நானும், அத்தை மகள், ஆயிரம் பொய், பெண்ணை வாழ விடுங்கள், வா ராஜா வா, சுப தினம், ஐந்து லட்சம், திருமலை தென்குமரி, தரிசனம், தபால்காரன் தங்கை, ஆதி பராசக்தி, குறத்தி மகன்.

‘செல்லுலாய்ட் பெண்கள்’ தொடரில் இடம் பெறும் கட்டுரைகள் காப்பிரைட் உரிமை பெற்றவை. இக்கட்டுரைகளிலிருந்து எந்த ஒரு பகுதியும் கட்டுரை ஆசிரியரின் ஒப்புதல் பெறாமல் அச்சு வடிவிலோ, யூ டியூப் சானல்களிலோ எடுத்தாளப்பட்டால் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


படங்கள்: ஸ்டில்ஸ் ஞானம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-senthilbalaji-8

  சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!

 • athisayangal

  நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்

 • perunad

  பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!

 • turkeydeath11

  துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!

 • lantern-festival-china

  உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்