SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பயணங்களை உல்லாசமாக்கும் கேம்பர்வேன்!

2022-10-06@ 17:41:52

நன்றி குங்குமம் தோழி

பயணம் செய்வது ஒரு சுவாரஸ்யமான அனுபவம். அவ்வாறு போகும் போது நம்மை அறியாமல், நம் மனதில் என்றும் நீங்கா நினைவான சம்பவங்கள் இடம் பெறும். ஆனால் அந்த அனுபவங்களை நாம் ரசிக்க நம்முடைய பயணமும் ரசிக்கும் படியாக இருக்க வேண்டும். அப்படி ஒரு பயணத்தைதான் தமிழ்நாடு முழுக்க சென்னை மக்களுக்காக வழங்கி வருகிறார் சென்னையை சேர்ந்த சித்தார்த். இவரின் ரோட் ஹவுஸ் - கேம்பர்வேன் மூலம் நம் ஒவ்வொரு பயணத்தையும் காலத்திற்கும் நீங்காத நினைவுகளாக  மனதில் பதிய வைத்து வருகிறார். அது என்ன கேம்பர்வேன்? என்ற நம்முடைய கேள்விக்கு சித்தார்த் வர்மன் விளக்கம் அளித்தார்.

‘‘என்னோட சொந்த ஊர் சென்னை தான். நான் ஷிப்பங் துறை சார்ந்த தொழில் செய்து வருகிறேன். இது எங்களின் குடும்ப தொழில் என்பதால், இப்போது அதை நான் நிர்வகித்து வருகிறேன். எனக்கு ஆஃப் ரோட்ஸ் எக்ஸ்பெடிஷன் செய்ய பிடிக்கும். அதாவது சாலைகளில் இல்லாமல் பள்ளத்தாக்கு மற்றும் காடு மேடு பகுதிகளில் வண்டியில் பயணம் செய்ய பிடிக்கும். அதற்கு நாம் பயன்படுத்தும் கார் எல்லாம் சவுகரியமாக இருக்காது. ஜீப் தான் பெஸ்ட். இந்த பயணத்திற்காகவே ஒரு குழு இயங்கி வருகிறது அதில் இணைந்து நான் என் ஜீப்பினை எடுத்துக் கொண்டு பல இடங்களுக்கு பயணம் செய்திருக்கேன். கிட்டதட்ட இந்த எக்ஸ்பெடிஷனை நான் 15 வருடமாக செய்து வருகிறேன்.

அப்படி போகும் போது இரவு நேரங்களில், சில நாட்கள் காட்டில் எல்லாம் டென்ட் அடித்து படுத்திருக்கிறோம். சில சமயம் ஜீப்பிலேயே இரவு தங்கிடுவோம். மேலும் நாங்க தங்கி இருக்கும் இடத்தில் எந்த வித அடிப்படை வசதிகளும் இருக்காது. ஒரு இரவினை கழிக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கும். அப்பதான் எனக்கு ஒரு யோசனை தோணுச்சு. ஒரு பெரிய வேனில் அதில் உள்ள சீட்களை எல்லாம் நீக்கி அதை மினி வீடு போல் அமைத்தால் பயணம் மட்டுமல்ல, இரவு தங்கவும் வசதியாக இருக்குமேன்னு யோசித்தேன். ஒரு சிலர் யோசிப்பார்கள்... ஆனால் அதில் முழுமையாக செயல்பட மாட்டார்கள். நான் அப்படி இல்லாமல், இந்த வேன் வீடு குறித்து முழுமையான தகவல்களை சேகரிக்க ஆரம்பித்தேன்.  

அதனால் அது குறித்து ஆய்வில் இறங்கினேன். பொதுவாக இது போன்ற கேம்பர் வேன்கள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் பிரபலம். அங்கு இதனை வாடகைக்கும் விடுவது வழக்கமாக இருந்து வருகிறது. சிலர் இதனை சொந்தமாகவும் வைத்திருக்கிறார்கள். குடும்பமாக பயணம் செய்யும் போது மட்டும் இதை பயன்படுத்துவார்கள். அவர்களிடம் இது குறித்து பேசினேன். அவர்கள் அதை எவ்வாறு வடிவமைத்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். ஒரு வேனில் வீட்டின் அடிப்படை வசதிகளை அமைக்கும் போது அதில் ஏற்படும் பிரச்னைகள் எல்லாம் ஆய்வு செய்தேன். அப்படித்தான் என்னுடைய கேம்பர்வேன் பேண்டமிக் காலமான 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உருவாச்சு’’ என்று கூறும் சித்தார்த், தமிழ்நாட்டில் முதன்முறையாக இந்த கேம்பர் வேன்களை அறிமுகம் செய்துள்ளார்.

‘‘கேம்பர் வேன் கிட்டத்தட்ட  கேரவன் போன்று தான். கேரவனின் சைஸ் பெரியது ஆடம்பரமானது. கேம்பர்வேன்... நம்முடைய வீடு போன்ற அமைப்பில் எளிமையாக இருக்கும். ஒரு சாதாரண டெம்போ வண்டியினை வாங்கி.. அதை மாற்றி அமைத்திருக்கேன். காரணம் இந்த வேனில் தான் பயணம் செய்யப் போகிறோம். அதனால் பெரிய பஸ் ேபால் அமைத்தால், அதை ஓட்டிச் செல்வது அவ்வளவு சுலபமாக இருக்காது. டெம்போ டிராவலர்... எஸ்.யு.வி காரைவிட கொஞ்சம் ெபரிய சைஸ் என்பதால், காரை செலுத்துவது போன்ற உணர்வு தான் இருக்குமே தவிர கஷ்டமாக இருக்காது. மேலும் இதில் பயணம் செய்யும் போதோ அல்லது ஒரு இடத்தில் தங்கும் போதோ எந்த ஒரு இடையூறும் ஏற்படாமல் இருக்கவும் வசதி செய்திருக்கிறேன்.

இந்த வேனில் சோலார் பேனல் இணைக்கப்பட்டு இருப்பதால், அதன் மூலம் லைட் மற்றும் மின்விசிறி இயங்க செய்ய முடியும். சோஃபா கம் பெட் கான்செப்ட்டில் பெட் அமைத்திருக்கிறேன். காலையில் சோஃபாவாகவும், இரவு படுக்கும் போது அதை கட்டிலாகவும் பயன்படுத்தலாம். அடுத்து வண்டி ஓட்டுனர் சீட்டை நீக்கினால் அங்கும் ஒரு சின்ன கட்டில் போன்ற அமைப்புள்ளது. சின்னதாக போர்டபிள் கேஸ் ஸ்டவ் மற்றும் சமைக்க தேவையான அடிப்படை பாத்திரங்கள்.

ஒரு மினி கோல்ட் ஸ்டோரேஜ், அசைவ உணவுகள் மற்றும் காய்கறிகளை நான்கு நாட்கள் வரை கெடாமல் வைத்துக் கொள்ள உதவும். எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியமானது, கழிவறை. இது  ரசாயன முறைப்படி டிரீட்மென்ட் செய்யப்பட்டு இருப்பதால், கெட்ட வாடையோ அல்லது தண்ணீர் கசிவோ ஏற்படாது. அடுப்பு மற்றும் கேஸ் சிலிண்டர் போர்டபிள் என்பதால் வேனிற்கு வெளியே வைத்தும் சமைக்கலாம்.

இந்த கேம்பர்வேன் பொறுத்தவரை ஒரு மினி வீடு போன்ற அமைப்பு என்பதால், பெரும்பாலும் பயணம் செய்பவர்கள் அதிலேயே தங்கிக் கொள்கிறார்கள். ஒரு சிலர் மட்டும் ஓட்டலில் தங்குகிறார்கள். அவ்வாறு ஓட்டலில் தங்கினாலும் சரி அல்லது வேனிலேயே தங்கினாலும்... அதனை நிறுத்தும் இடம் பாதுகாப்பான இடமாக இருக்கவேண்டும் அல்லது அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட இடமாக இருக்க வேண்டும். சிலர் அவர்கள் விரும்பும் இடங்களுக்கு பயணம் செய்ய இதை வாடகைக்கு எடுப்பார்கள். ஒரு சிலருக்கு பயணம் செய்ய வேண்டும் ஆனால் எங்கே போவதுன்னு குழப்பமாக இருக்கும். அவர்களுக்கு நாங்களே பேக்கேஜ் அமைத்து தருகிறோம்.

அதில் வண்டிக்கான டீசல் மற்றும் டோல் கட்டணம் மட்டும் அவர்கள் தனிப்பட்ட செலவில் பார்த்துக் கொள்ளணும். மற்றபடி உணவு எல்லாம் எங்களின் பேக்கேஜில் அடங்கிடும். இதில் அவர்கள் தங்கும் இடம், உணவு மற்றும் பயணம் செய்பவர்களை என்டர்டெயின் செய்ய கேம்பயர், விளையாட்டு, டிரக்கிங் போன்றவை அமைத்து தருவோம். அப்படி வேண்டாம் என்று விரும்புபவர்களுக்கு அவர்கள் எவ்வளவு நாள் வண்டியினை எடுத்து செல்கிறார்களோ அதற்கென தனிப்பட்ட கட்டணம் உண்டு. சிலர் அவர்களே வண்டியை டிரைவ் செய்வார்கள். சிலர் டிரைவர் வேண்டும் என்பார்கள். அந்த வசதியும் நாங்க செய்து தருகிறோம். மேலும் ஒரு நாள் பேக்கேஜும் உண்டு. அதாவது இன்று காலை பத்து மணி முதல் மறுநாள் காலை பத்து மணி வரை என ஒன் டே டிரிப்பிற்காகவும் எடுத்து செல்லலாம்.

தற்போது தமிழ்நாடு முழுக்க மட்டுமே நாங்க செயல்பட்டு வருகிறோம். பிற மாநிலங்களிலும் செயல்படும் திட்டம் உள்ளது. காரணம் ஒவ்ெவாரு மாநிலத்திற்கும் கேம்பர்வேன் அங்கு இயங்க தனிப்பட்ட பாலிசியுண்டு. அது தற்போது மாற்றியமைக்கப்படுவதால், அதன் பிறகு பிற மாநிலங்களிலும் எங்களின் சேவையை தொடங்க இருக்கிறோம். தற்போது சென்னை தான் எங்க நிறுவனத்தின் முக்கிய மையமாக இயங்கி வருகிறது. மற்ற மாநிலங்களில் இயங்க ஆரம்பித்தவுடன் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மையம் அமைக்கும் எண்ணம் உள்ளது. இதற்கு வண்டியின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்க வேண்டும் என்பதால் அதற்கான வேலையும் நடந்து கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் இந்தியா முழுக்க எங்களின் ‘ரோட் ஹவுஸ்’ செயல்பட ஆரம்பிக்கும்’’ என்றார் சித்தார்த் வர்மன்.

தொகுப்பு: ஷன்மதி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • om-mathan-kark

  சாதனை படைக்க வயசு தடை இல்லை: எவரெஸ்ட் அடிவாரத்துக்கு நடந்தே சென்று சாதித்த 6 வயது சிறுவனின் சாகச பயணம்..!

 • landslide-colombia

  கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

 • tirupati-murmu-5

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்