SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிஜிபியிடம் குட் வாங்கிய கோவை மாவட்ட பெண் காவலர்கள்

2022-10-06@ 17:33:40

நன்றி குங்குமம் தோழி

சவக்கிடங்குகளில் கேட்பாரற்று கிடக்கும் உடல்களுக்கு கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் காவலர்கள் அமீனா மற்றும் பிரவீனா இறுதிச்சடங்குகள் செய்து நல்லடக்கம் செய்து வருகிறார்கள். இவர்களின் தன்னலமற்ற சேவையை பாராட்டி தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு, மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
உரிமை கோரப்படாத உடல்களை நல்லடக்கம் செய்யும் பணியில் தொடர்ந்து இயங்கும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பெண் காவலர் அமீனாவிடம்  பேசியபோது...

கடந்த 5 ஆண்டுகளில் மேட்டுப்பாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத உடல்களைப் பெற்று உடற்கூராய்வு செய்து நல்லடக்கம் செய்துள்ளேன் என்ற அமீனா, 2010ல் தமிழகக் காவல் துறையில் பணியில் சேர்ந்தேன். எனக்கு அப்போது திருமணமாகிவிட்டது. காவல் துறையில்தான் நான் பணியாற்ற வேண்டும் என்பது என் அப்பாவின் விருப்பமாக இருந்தது.

இறந்தவர்கள் உடலை உடற்கூராய்வு (postmortem) செய்வதைக் கவனிக்கும் பணி காவல்துறையில் எனக்கு வழங்கப்பட்டது. இது சவால்கள் நிறைந்த பணிதான் என்றாலும் துணிந்தே மன உறுதியோடு இந்தப் பணியினை ஏற்றுக் கொண்டேன். எனது பணி குறித்து சுருக்கமாகச் சொல்வதென்றால், வழக்கமாக காவல் நிலையங்களில் பதிவாகும் கொலை, தற்கொலை போன்ற மரணங்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு, உடற்கூராய்வு  முக்கியம்.

எனவே காவல்துறை சார்பில் இறந்தவர்களின் சடலங்களைப் பெற்று பிரேத பரிசோதனை செய்யும் நடைமுறைகளைச் செய்வது, பிரேத பரிசோதனை சான்றிதழ்களை வாங்கிச் சரிபார்ப்பது, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சட்ட செயல்முறைகளில் உதவுவது போன்ற பணிகள் எனக்கு இருக்கும். இதுவே அடையாளம் தெரியாத உடல் என்றால் கூடுதலாகக் கவனம் செலுத்த வேண்டும்.

யாருமே உரிமை கோராத உடல் என்றால், அதனை நல்லடக்கம் செய்ய முதலில் நகராட்சியில் ஒப்புதல் கடிதம் பெற வேண்டும். அதன் பின்னரே நகராட்சி ஊழியர்களின் உதவியுடன், நல்லடக்கத்திற்கான இடத்தை தேர்வு செய்து, இறந்தவரின் மத முறைப்படியான இறுதிச்சடங்கு மற்றும் சம்பிரதாயங்களைச் செய்வோம் என்கிற அமீனா, மற்ற காவல்துறை அதிகாரிகளின் பங்களிப்புடன், தனது ஊதியத்தில் ஒரு பகுதியையும் ஆதரவற்ற சடலங்களின் நல்லடக்கத்திற்கு செலவு செய்வதுடன், இதற்கென பலரும் ஆதரவுக்கரம் நீட்டுகிறார்கள் என்கிறார். மேலும் ஆதரவற்றவர்களின் உடல் நல்லடக்கத்திற்கு கோவையை சேர்ந்த ஜீவசாந்தி அமைப்பினரின் உதவியும் தொடர்ந்து கிடைப்பதையும் அழுத்தமாகக் குறிப்பிடுகிறார்.

ஆதரவற்ற மற்றும் அடையாளம் தெரியாதவர்களின் உடல்களைப் பெற்று நான் நல்லடக்கம் செய்யும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி, ஊடகங்களில் செய்தியானது. அது டிஜிபி சைலேந்திரபாபு சார் அவர்களின் கவனத்தைப்பெற, அவரும் என்னை அழைத்து வெகுவாகப் பாராட்டினார். காவல்துறையில் நான் ஒரு கடைநிலை ஊழியர்தான். என்னுடையது மிகவும் கடினமான பணி. என்றாலும்  ‘மிகவும் சிறப்பாக செயல்படுகிறீர்கள், உங்கள் சேவை தொடரட்டும்’ என டி.ஜி.பி சார் என்னைப் பாராட்டினார் என்றவர், டி.ஜி.பி சார் தான் எங்களுக்கு எல்லாமே. அவர் என்னை அழைத்து நேரில் வாழ்த்துவார் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. டிஜிபி சாரிடம்  பாராட்டு பெற்றது பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது என்கிறார் புன்னகை மாறாமல்.

காவல்துறை பணியில் குழந்தைகள் குடும்பத்தைப் பிரிந்து நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்கிற அழுத்தம் எங்கள் மனதில் இருந்தாலும், ஆதரவற்ற உடல்களை நல்லடக்கம் செய்துவிட்டு வீடு திரும்பும்போது மனசுக்கு ஒரு நிறைவு கிடைக்கும். அதை வேறு எதிலும் சம்பாதித்துவிட முடியாது என்கிறார் தீர்க்கமாக.

அடுத்ததாக கோவை பேரூர் காவல்நிலையத்தில் பணியாற்றிய நிலையில், உடல்களை நல்லடக்கம் செய்யும் பணியில் இருக்கும் பெண் காவலர் பிரவீனாவிடம் பேசியபோது...
கைவிடப்பட்டு, பெயர், முகவரி தெரியாமல் உயிரிழப்பவர்களின் நிலை பரிதாபத்துக்குரியது. பிரேத பரிசோதனை முடிந்து இறந்தவர்களின் உடல்களை குடும்பத்தினரிடம் நாங்கள் ஒப்படைப்பது வழக்கம். சில உடல்களை பெற யாருமே முன்வராதபோது மனதிற்கு  ரொம்பவே வருத்தமாக இருக்கும்.

அது 2016ம் ஆண்டு. பேரூர் கோயில் அருகே ஆதரவற்ற நபர் ஒருவர் இறந்த நிலையில் கிடக்க, வழக்குப் பதிவு செய்து, உடற்கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு  உடலை எடுத்துச் சென்றேன். எனக்கு அதுதான் முதல் உடற்கூராய்வு வழக்கு.  உடற்கூராய்வு முடிந்து மருத்துவமனை நிர்வாகம் உடலை என்னிடம் ஒப்படைக்க.. அடுத்து அந்த உடலை  என்ன செய்வதெனத் தெரியாமல் ஒன்றும் புரியாமல் அப்படியே நின்றுகொண்டிருந்தேன். இறந்தவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்பதுதான் இதற்குக் காரணம்.

அப்போது அங்குவந்த ஜீவசாந்தி அறக்கட்டளை நண்பர்கள் என்னை அணுகி விசாரித்தார்கள். ஆதரவற்ற உடல்களுக்கான நடைமுறை நிகழ்வுகளான, எஃப்ஐஆர், உடற்கூராய்வு சான்றிதழ் என அனைத்தையும் பெற்று, தன்னுடைய சொந்த உறவினர்களை அடக்கம் செய்வது போல வெள்ளை காட்டன் துணியில் உடலை கவர் செய்து, மாலை அணிவித்து, இறந்தவரின் மதவழிப்பாட்டு முறையில் மரியாதையோடு மிகவும் சிறப்பாக நல்லடக்கம் செய்தார்கள்.

அவர்களின் செயல் எனக்கு  ஆச்சர்யத்தைக் கொடுக்க, அந்த நிகழ்வு என் மனதை நெகிழச் செய்தது. என் உயரதிகாரிகளின் அனுமதி பெற்று, என் பணிக்கு இடையில் நானும் ஜீவசாந்தி அமைப்புடன் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு, ஆதரவற்ற உடல்களை நல்லடக்கம் செய்யும் பணியில் களம் இறங்கினேன். அடையாளம் தெரியாத உடலைப் பார்த்தால் அழையுங்கள் என்று என்னுடைய அலைபேசி எண்களை பலரிடத்தில் கொடுக்கத் தொடங்கினேன்.

காவல்துறையில் எனக்கு பணி வாய்ப்பு கிடைத்தபோது என் கணவரின் குடும்பம் இது பெண்களுக்கு பொருந்தாத சவாலான வேலை, வேண்டாம் என்றே மறுத்தார்கள். கண்டிப்பாக என்னால் சிறப்பாகவே இந்தப் பணியினை செய்ய முடியும் என்கிற என் மன உறுதியை அவர்களுக்கு வெளிப்படுத்தி, பணியில் சேர்ந்தேன். அதேபோல் ஆதரவற்ற உடல்களை நல்லடக்கம் செய்யும் பணியையும் என்னால் சிறப்பாக செய்ய முடியும் என்ற நம்பிக்கையை குடும்பத்தினருக்கு கொடுத்தபோது எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டனர் என்று புன்னகைக்கிறார் பிரவீனா.

மரணம் என்பது எல்லோருக்கும் ஒரு நாள் வரத்தான் போகிறது. இருக்கும்வரை ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற பிரவீனா இதுவரை 650க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்திருக்கிறார். என்றாலும், குழந்தைகள் உடல் வந்தால் எனக்கு அன்று தூக்கம் தொலைந்து போகும். ஒரு நாள் ஒரே நேரத்தில் 5 குழந்தைகளின் உடலை நல்லடக்கம் செய்ய நேர்ந்தது. அன்று முழுவதும் தூக்கம் வராமல் ரொம்பவே தவித்துப் போனேன் என்றவாறு நம்மிடம் விடைபெற்றார்.

உயிர்களிடம் அன்பை காட்டும் அனைவரும் பேரழகானவர்களே! குடும்பம், குழந்தைகள், காவல் பணி ஆகியவற்றைக் கடந்து அடையாளம் தெரியாத, ஆதரவற்றவர்களின் உடல்களை தங்களது உறவுகளாக எண்ணி நல்லடக்கம் செய்யும் கோவை பெண் காவலர்களின் சேவை பாராட்டுக்குரியது மட்டுமல்ல மகத்தானது. இந்தப் பேரழகிகளை வாழ்த்துவோம்!

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

 • mauna-loa

  உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

 • london-vertical-farm-29

  நிலத்தில் இருந்து 100 அடிக்குக் கீழே விவசாயம்!: லண்டனில் பிரபலமாகி வரும் "வெர்டிக்கல் ஃபார்மிங்"

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்